ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம் எனில் அது மக்கள் வாழ்க்கை நலத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும். வள்ளலார் மக்கள் வாழ்க்கை நலத்துடன் மட்டும் இல்லாமல் எல்லா உயிர்களிடத்தும் அன்பு பூண்டார். எல்லா உயிர்களிடத்தும் இறையை கண்டார். தயவு என்ற தவம் வள்ளலாரை பெரிய நிலைக்கு ஏற்றிவிட்டது. ஆனால் இன்றோ நாகரீகம் மற்றும் கல்வி வளர்ச்சியில் பெரிதும் வளர்ச்சி அடைந்தாலும் மக்கள் புற பூஜை களில் தான் அதிகம் திருப்தி அடைகின்றனர்.
தன்னுடைய அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய மறுக்கும் முதலாளி வர்க்கத்தினர் பிரபல கோயில்களில் கோடி கணக்கில் தங்கம் மற்றும் வைரத்தில் வித விதமான பொருட்களை வாங்கி தருவதும் நடைமுறையில் யாவரும் அறிந்ததே.
மற்றும் சிலபேர் போலி சாமியார்களிடம் ஏமாறுகின்றனர். தெருவிற்கு தெரு இப்பொழுது உள்ள தியான மையங்களையும் கூறலாம்.அன்றே காக புஜண்டர் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்.
பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
பணம்பறிக்க உபதேசம் பகர்வோ என்பான்
பிரமநிலை காட்டா மற்றான்
காசப் பொய்களையும் அன்றோ சொல்வான்
நேரப்பா சீடனுக்குப் பாவமாச்சு
நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோடமாச்சு
வீரப்பா அடக்குகின்ற இடத்தைப் பாரான்
விதிபோல முடிந்ததென்று விளம்புவானே....
சித்தர் ஞானக்கோவை : காகசுண்டர் பாடல் :35.
மேலும் சிலர் தயவு மற்றும் கருணையைப்பற்றி மிக அதிக அளவில் விளக்கம் அளித்துக் கொண்டிருப்பார்கள், ஆனால் நிஜ வாழ்வில் யாருக்கும் உதவி செய்ய முன் வரமாட்டார்கள்.
ஜாதி, மதத்தைப் பற்றி மேடையில் வாதிடுவோர், நிஜ வாழ்க்கையில் தங்களுடைய மகன்/மகளுக்கு அதே இனத்தில் வரன்களை பார்ப்பவர்களாக இருக்கின்றனர்.
ஜீவகாருண்யத்தை நினைப்பவர்கள் வேறு-பிற இனத்தவர்கள் சாப்பிட அழைத்தால் செல்வதில்லை.
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு பிற மதங்களை இழி வாக பேசுவதும் , அடுத்தவர்களின் மனதை புண் படுத்துவதும் எவ்வாறு சன்மார்க்கத்திற்கும் பொருந்தும்.
எல்லாருடைய மனமும் இன்புற்றிருக்க வேண்டும் அல்லவா! அதுவும் செய்வதில்லை.
ஒரு சில தியான மையத்தில் இருக்கும் மூல விளக்கங்களைப் பார்க்கும் போது வள்ளலாருடைய கருத்துகள் தான் வியாபித்துருக்கின்றன. ஆனால் அவர்கள் அதை வெளிப்படையாக யாருக்கும் கூறுவதில்லை. (இங்கு மற்றவர்களை விமர்சனம் செய்வதற்காகவோ, அவதூறு செய்வதற்காகவோ எழுத வில்லை) பலரும் வியாபர ரீதியில் வள்ளாருடைய கருத்துகளை வேறு விதமாக மாற்றி தங்களுக்கு புகழை தேடுகின்றனர்.
அக பூஜையும் ஜீவகாருண்யமும் தான் இறை நிலையை உணர்த்தும் என்பதை பல சித்தர்கள் கூறியுள்ளனர்.
நட்ட க்கல் பேசுமோ நாதன் உள்ளிருக்கை யில்- ………
மற்றும்
"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே."
பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே! -சிவ வாக்கியர்
தவளையைப்போல வேதமெல்லாம் சாற்றுகின்றீர்
வந்தவழி அறியார்க்கு மந்தரமேது........ - ஞானவெட்டியான் 1500
உங்கள் தெய்வ உண்டெனவும் வேறு செய்து
அங்கங்கள் வேறுளதா யாகமங்களுற் பவித்தார்
பங்கமதாய் வேறு செய்யும் பாதகரே அங்குமிங்கும்
எங்கெங்குமாய் நிறைந்த ஈசனென்றறிகிலீரே "
- ஞானவெட்டியான் பாடல் 616
ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள்தாம் பூரணமே "
- பட்டினத்தார் பாடல் :30
நஞ்சுண்ண வேண்டாமே –அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்ச மலையாதே அகப்பேய்
நீ ஒன்றும் சொல்லாதே -------
-அகப்பேய் சித்தர்
தாம்திமித் திமி தந்தகோனாரே
தீந் திமித்திமி திந்த கோனாரே
ஆனந்த க்கோனாரே- அருள்
ஆனந்தக்கோனாரே!
ஆயிரதெட்டு வட்டமுங்கண்டேன்
அந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன்
மாயிறு ஞாலத்து நூற்றெட்டும் பாத்தேன்
மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் (தாந்)
மெய்வாய்கண் மூக்குசெவியெனும் ஐந்தாட்டை
வீறுஞ் சுவையொளி ஊரோசையாம் காட்டை
எய்யாமல் ஒட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்
ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே
மேலும்,
மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவகோனே-முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவகோனே
சினமெனும் பாம்பிறந்தால் தாண்டவகோனே-யாவும்
சித்தி யென்றே நினையேடா தாண்டவகோனே............ - இடைக்காடர்
ஆசை என்னும் பசுவையும் , சினம் என்னும் விஷ பாம்பையும் அடக்கினால் இறை வனை உணர முடியும், இவர் பாடல்கள் பெரும்பாலும் தாண்டவகோனே என்றும் கோனாரே என்றும் முடிகிறது.
திருமூலர்,
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்தோம்புகின்றேனே
-திருமந்திரம்
கொல்லா விரதம் குளிர்பசி நீக்குதல்
நல்ல விரதமடி-குதம்பாய்
நல்ல விரதமடி................
என்று ஜீவகாருண்யம் மற்றும் உயிர்ப்பலியைத் தடுக்கும் இவரின் பாடல்கள் எல்லாமே, குதம்பாய் என்று தன்னை அழைத்துக் கொண்டே முடிகிறது.
இதுபோல் நிறைய பாடல்கள் உள்ளன. விரிவஞ்சி ஒரு சில பாடல்கள் மட்டுமே இங்கு தரப்படுகின்றன.
மேலே குறிப்பிட்ட பாடல்கள் மற்றும் பல்வேறு சித்தர் பாடல்களில் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், மற்றும் ஆன்ம ஒழுக்கங்கள் பற்றி மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் திருவருட்பாவில் வள்ளலார் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.
இதுவும் ஆண்டவன் திருவிளையாடல் போலும் இல்லையெனில் வள்ளலாருடைய பொக்கிஷம் நமக்கு கிடைத்திருக்காது அல்லவா! வள்ளலாரும் யார் என்றும் நமக்கு தெரிந்திருக்காது.
ஒரு கடை நிலை பாமர மக்களும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் மிக தெளிவாக மிக நுட்பமாக வள்ளலார் திருவருட்பா-பாடத்தை வடிவமைத்துள்ளார்கள். எனவே இதில் ஒப்பீடு என்பது தேவையில்லை. அனைவரும் சமுதாயத்தை செம்மைப்படுத்த ஆண்டவனாலே உருவாக்கப்பட்டவர்கள். அல்லது நெற்றிக்கண் திறக்கப்பட்டவர்கள். நாமும் ஆண்டவனால் ஆட்கொள்ளபட வேண்டுமெனில் - நம்முள் இருக்கும் இறைவனை காண வேண்டுமெனில் வள்ளலார் கூறிய அனைத்து ஒழுக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், மற்றும் ஆன்ம ஒழுக்கங்கள் இறையைப்பற்றி தெரிந்துக்கொள்ள உறுதுணை புரியும்.
இதெல்லாம் கடைப்பிடிக்காமல் நம்முள் கடவுள் உள்ளார் என்று சொல்வது வெளிப்படையான வார்த்தைக்கு மட்டுமே உதவுமே தவிர கடவுளை நம்மால் உணர முடியாது.
சாதனம், சாதனை, மற்றும் சாக்கியம் திருவருட்பாவில் கூறப்பட்டுள்ளது. சாதனம்: எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம்.
சாதனை: நான்கு வித ஒழுக்கங்களை கடைப்பிடித்தல் . இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், மற்றும் ஆன்ம ஒழுக்கம்
சாக்கியம்: புருஷார்த்தகங்களான ஏம சித்தி , சாகாக்கல்வி, தத்துவநிக்கிரம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்.
சாதனமும், சாதனையும் உலகியியலில் ஜீவகாருண்யம் மூலமும் பெரு நெறி ஒழுக்கங்கள் மூலமும் நிறைவேற்றினால் சாக்கியம் கூடும் - இறை நிலை வெளிப்படும் . எனவே எல்லாம் வல்ல ஸ்ரீ ராமலிங்க அடிகளை ஞான குருவாக ஏற்றுக்கொண்டு அருளியியல் உண்மையை உணருவோமாக.
முற்றிற்று.
நன்றி :
K.KUMARESAN
2/134, Middle Street
58,Alathur Post, Neravy via
Karaikal
Karaikal, Puducherry, India - 609604
Phone.9952327314
No comments:
Post a Comment