உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு, தினந்தோறும் அமுத சுரபியாய் தமிழ் நிகழ்ச்சிகளை வாரி வழங்குகின்ற, தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மக்கள் தொலைக்காட்சிக்கு மதம் பிடித்த இலங்கை இராணுவத்தினர் விதித்துள்ள தடை ஒரு மதிகெட்ட செயலாகும்.
உலகத் தமிழர்களின் உரிமைக் குரலாக, எழுச்சிக் குரலாக அனைத்து தகவல்களையும் உண்மையாக, நடுநிலயாக யாருக்கும் அஞ்சாது அள்ளித் தருகின்ற ஒரு ஊடகத்திற்குத் தடை விதித்திருப்பது இராணுவத்தின் அட்டூழிய குணத்தையே காட்டுகின்றது.
இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை உலகம் முழுவதும் உள்ள தன்மானமுள்ள தமிழர்கள் எதிர்த்து வருகின்றனர். இது பற்றிய முழுமையான தகவல்களைத் தருகின்ற ஒரே தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சிதான்.
மனசாட்சியின்றி, காட்டுமிராண்டித்தனமாக சிறுவர்களையும், தாய்மார்களையும், பத்திரிகை செய்த¢யாளர்களையும் கொன்று குவிக்கின்ற இலங்கை இராணுவத்தின் மதிகெட்ட செயலை முறியடிக்க வேண்டும் என்றால், மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உலகம் முழுவதும் தடையின்றி போக வேண்டும்.
இலங்கை இராணுவம் விதித்துள்ள இந்தத் தடைக்கெதிராக, அனைத்துலக பத்திரிகையாளர் சங்கமோ அல்லது ஊடகப் பொறுப்பாளர்களோ மௌனமாக இருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.
சிறிலங்கா அரசு படைகளால் மேற்கொள்ளப்படும் இனத் தாக்குதல், எறிகணைத் தாக்குதல், பச்சிளங் குழந்தைகள் மீதான கொலைத் தாக்குதல் ஆகியவற்றைக் கண்டும் காணாதது போல் மேற்கத்திய ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்த செய்தியை, பிபிசி போன்ற நிறுவனங்கள் மணிக்கு ஒரு முறை முதன்மைச் செய்தியாகச் சொல்லி வந்தன.
ஆனால் ஒரு கிழமைக்குள்ளே 500க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்படும் செய்தியை மேற்கத்திய தகவல் ஊடகங்கள் கண்டு கொள்ளவேயில்லை.
ஆகவே, உலகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு உண்மையான தகவல்களை, துணிச்சலோடு கூறி வருகின்ற மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சேவை தொடரப்பட வேண்டும்.
மக்களின் மக்கள் தொலைக்காட்சியை தடை செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை.
No comments:
Post a Comment