Wednesday, May 26, 2010

டி.வி. பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார்


நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடம் பிடித்த ஜாஸ்மின்
டி.வி. பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார்

பணம் இருந்தால்தான் படிக்க முடியும். தனியார் பள்ளியில் படித்தால்தான் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று ஒரு மாயை தமிழ்நாட்டில் உள்ளது.

அந்த மாயத்தோற்றத்தை இன்று உடைத்தெறிந்து இருக்கிறார் நெல்லை மாணவி ஜாஸ்மின்.

படிப்பில் முதன்மை பெறுவதற்கு, ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தாலே போதும் என்று ஜாஸ்மின் எடுத்துக்காட்டி உள்ளார்.

இவை மட்டுமின்றி தமிழக கல்வி வரலாற்றில் இன்னொரு அசாத்திய சாதனையையும் ஜாஸ்மின் புரிந்துள்ளார். மாநகராட்சிப்பள்ளி என்றாலே, கல்வித்தரம் இருக்காது என்று இளக்காரமாக நினைக்கும் மனோபாவம் உள்ளது. அதற்கு ஜாஸ்மின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜாஸ்மினின் தந்தை சேக் தாவூத் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவரது தாய் நூர்ஜஹான்.

மாணவி ஜாஸ்மினுக்கு இம்ரான் என்ற அண்ணனும், இர்பான் என்ற தம்பியும் உள்ளனர். இவர்களில் இம்ரான் கூலி வேலை செய்து வருகிறார். இர்பான் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஜாஸ்மினின் தந்தை ஷேக் தாவூத் மிகவும் கஷ்டப்பட்டே குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இருந்த போதிலும் தனது குழந்தைகள் படிப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். ஜாஸ்மின் சிறுவயதிலிருந்தே மிகவும் ஆர்வமாக படித்து வருகிறார்.

அவரது ஆர்வத்தை அறிந்து கொண்ட ஷேக் தாவூத்தனது மகளை அதிக செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் நெல்லை டவுணில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தனது குடும்ப நிலையை உணர்ந்த மாணவி ஜாஸ்மின் சிறந்த முறையில் படித்து அனைத்து வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.

மாணவி ஜாஸ்மின் முதல் வகுப்பிலிருந்து தற்போது வரை நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்து வந்தார். அந்த பள்ளியில் மொத்தம் 3,450 மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு படிக்கும் அனைத்து மாணவிகளும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பள்ளி தொடங்கியது முதல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மாநகராட்சி பள்ளி என்றாலும் நெல்லையில் உள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

மாநில அளவில் முதல் இடம் பிடித்தது குறித்து மாணவி ஜாஸ்மின் கூறியதாவது:-

மாநில அளவில் சாதனை படைக்க கடினமாக படித்தேன். 498 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர் பார்த்தேன். சமூக அறிவியலில் 2 மதிப்பெண்கள் குறைந்து விட்டதால் அதனை பெற முடியவில்லை.

பெரிய பள்ளியில் படித்தால்தான் சாதிக்க முடியும் என்றனர். ஆனால் எங்கள் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை கடவுளின் கிருபையால் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எனக்கு ஊக்கமளித்தார்கள். மற்ற பள்ளிகளை போல எங்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் போதே 10-ம் வகுப்பு பாடங்களை தொடங்குவது கிடையாது. தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பேன். அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்து விடுவேன். இரவு 1 மணி வரை படிப்பேன்.

10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பார்க்க மாட்டேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆசைபடுகிறேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் முடித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி ஜாஸ்மின் குறித்து அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் கூறியதாவது:-

எங்கள் பள்ளி தொடர்ந்து பல சாதனைகள் படைத்து வருகிறது. இந்த முறை மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. இதற்கு எங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பே முக்கிய காரணம். மாணவி ஜாஸ்மின் மிகவும் அமைதியானவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் மிகவும் கவனமாக படிப்பார். இதனால் வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.

கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் எங்களது பள்ளி நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தது. எங்கள் பள்ளி தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு முன்பிருந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் கடுமையான அடித்தளம் இட்டு சென்றதால் எங்கள் பள்ளி சாதித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி ஜாஸ்மினின் தந்தை ஷேக்தாவூத் கூறியதாவது:-

நான் கடந்த 17 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். எனது மகள் ஜாஸ்மின் எல்.கே.ஜி.யில் இருந்தே நன்கு படிப்பாள். முதலாம் வகுப்பில் இருந்து கல்லணை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறாள். மற்ற பள்ளிகளை விட இந்த பள்ளியில் சிறந்த முறையில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

நான் பெரிய அளவில் படிக்காததால் எனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வைத்து வருகிறேன். அதற்கு ஏற்றாற்போல் மகள் ஜாஸ்மின் சிறப்பாக படித்து வருகிறாள். அவள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதால் அவள் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம்.

தினமும் பள்ளி முடிந்து மாலையில் வீடு வந்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுவாள். அதிகமாக டி.வி. பார்க்க மாட்டாள். பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் டி.வி. பார்க்கும் பழக்கத்தை விட்டு விட்டாள். டியூஷனுக்கு எங்கும் செல்லவில்லை. அன்றைய பாடங்களை அன்றே படித்து வந்ததால் சாதனை படைத்துள்ளார். அவளது விருப்பப்படி படிக்க வைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்

http://www.maalaimalar.com/2010/05/26161455/sslc-exam-results.html

Friday, May 7, 2010

நவீனமயத்தால் அழிந்து வரும் சிட்டுக்குருவிகள்


" சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு.....தென்றலே உனக்கென்ன சொந்த வீடு...." என்ற பாடலுக்கு ஏற்ப, சுதந்திரமான சுற்றித்திரியும் பறவைகளில் சிட்டுக்குருவி முதலிடம் வகிக்கிறது. தொல்காப்பியம் உட்பட இலக்கியங்களில் அதிகம் பேசப்பட்டது பாரதியார் கவிதைகளில், சிட்டுக்குருவியின் பெருமைகளை குறிப்பி மறக்கவில்லை.

உருவத்தில் சிறியதாக அழகான தோற்றம் கொண்ட, சுறுசுறுப்பாக பறக்கும் சிட்டுக்குருவி, காகங்களைப்போல், மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு பழகும் அறிவுபூர்வமான உன்னத பறவை. கூரை வீடுகள், ஓடுகள் வேயப்பட்ட கூரைகளில் கூடு கட்டி முட்டையிடும் பெண் குருவிக்கு, பக்கபலமாக ஆண் குருவி கூடவே இருந்து குஞ்சு பொரிக்க உதவுகிறது.

வீட்டுத்தோட்டங்களில் பூச்சுகளை குருவிகள் உண்பதால், "விவசாயகளின் நண்பன்" என அழைக்கப்பட்டது. பலசரக்கு கடைகள் முன் சிதறிக்கிடக்கும் தானியங்களை கூட்டமாகச் சேர்ந்து உண்டு மகிழும். ஆட்கள் நடந்தால், நடப்பதற்கு வழி விடுவதற்காக சற்று நகர்ந்து கொண்டு தானியங்களை உண்ணும், சூரிய உதயத்திற்கு முன்பே குரல் எழுப்பும். அதன் அழகையும் குரலின் மென்மையையும் இரம்மியாக இரசிக்கலாம்.

அழியும் சிட்டுக்குருவிகள் :

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில்நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

- வெளிக்காற்று வீட்டிற்குள் வரமுடியாதபடி, வீடு முழுவதும், "ஏசி" செய்யப்பட்ட வீடுகளில், குருவிக்கு கூடுகட்டி குடியிருக்க இயலாமல் போனது.

- பெட்ரோலில் இருந்து வெளியேரும், "மீத்தைல் நைட்ரேட்" எனும் இராசாயனக் கழிவு புகையால், காற்று மோசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவு பற்றாக்குறையால்,நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.

- பல சரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு பதிலாக கடைகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு பிளாஸ்டிக் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுதால், சாலைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், சாலைகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.

- வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.

- இவையனத்துக்கும் மகுடம் சூட்டியதுபோல், கைத்தொலைப்பேசிகள் (தொல்லைபேசிகள்) வருகைக்குப் பின், குருவிகள் 90 சதவீதம் அழிந்து விட்டன. கைதொலைப்பேசிகளிலிருந்து வெளியேறும், கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.

- ஆண் குருவி - பெண் குருவி ரோமத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன. வீடுகளின் கட்டமைப்பு, நச்சுத்தன்மை வாயந்த உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளினால் இனம் அழிகிறது. இப்பறவை இனம் அழியாமல் இருக்க, இயற்கையை பாதுகாக்க சமூக ஆவலர்கள் முன்வர வேண்டும்.

Bookmark and Share

நினைவில் கொள்வோம்


மனிதன் இன்னொரு மனிதனோடும், மற்ற உயிரனங்களோடும், இயற்கையோடும் இயந்து சந்தோஷமாக வாழவே மதங்கள் வழிகாட்டுகின்றன.

சடங்குகள் மனித மனத்தை அமைதிப்படுத்தி மனமலர்ச்சியை உண்டு பண்ண ஒரு வடிகாலாகப் பயன்பட்டன.

விழாக்கள் நம்மை நம்முடைய கலைத்தன்மையை விஸ்தரித்து நம்மை சந்தோஷப்படுத்தும் ஒன்றாக இருக்கின்றன. அவற்றின் விதவிதமான வண்ணங்களின் பங்கு முக்கியமாக இருக்கின்றது. ஆனால் காலப்போக்கில் அவற்றில் சில திரிந்துபோய் மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு போயுள்ளன.


உலகின் பல பகுதிகளில் உள்ள இந்துக்கள் செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சிலைகளை ஆற்றில் அல்லது கடலில் கரைக்கப்படும் நிகழ்வு இந்தியா முழுவதும் பரவலாக இருக்கின்றது. இந்த விநாயகர் சிலைகள் களிமண்ணால் உருவாக்கப்பட்டு அவை கரைக்கப்படும் பொழுது பாதகமில்லை.
ஆனால் இப்பொழுது வண்ண வண்ண சாயக் கலவைகளைப் பூசி அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மக்கள் வாங்கி அலங்கரிக்கிறார்கள்.

விநாயகருக்கு பூசப்படும் சாயங்களில் காரீயம், குரோதியம் , கேட்மியம், ஆர்சினிக், சிலிக்கோன், மெக்னீஸியம், பொட்டேஸியம் போன்ற நச்சு இராசயனங்கள் நிறைந்துள்ளன. இவற்றை கடல்களில் கரைக்கும்பொழுது கடல் நீர் தூய்மைக்கேட்டுக்கு உள்ளாகி கடலில் வாழும் உயிரினங்களின் உயிரையும் மாய்த்து விடுகிறது. இவற்றில் காரீயம், பாதரசம் மற்றும் ஆர்சனிக் அதிக ஆபத்துக்கள் வாய்ந்தவை.


விநாயகரைக் கரைக்கும்பொழுது அவரோடு பிளாஸ்டிக் மற்றும் பெரிய பெரிய சாக்குகளையும் சேர்த்துக் கரைத்துவிடுகின்றனர்.
மும்பையில் ஒவ்வொரு வருடமும் பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட ( கை எழும்பு உடைந்துவிட்டால் போடப்படும் சிமென்ட் ) 70,000 – 80,000 சிலைகள் கடல்களில் கரைக்கப்பட்டன.


சாயங்கள் பூசப்படு, மினுமினுக்கும் துணிகள், நிறைய நகைகள் போன்றவற்றால் இந்தச் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு கடலில் வி்டப்படுகின்றன.


சில சிலைகள் ஓங்கி வைத்து தூக்கிக் கடலில் கரைக்கும் அளவுக்கு பெரிதானவை.

ஆந்திராவின் ஹட்ராபாட்டில் உள்ள 2500 ஏரிகள் குடிநீருக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் செப்டம்பர் மாத விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் இந்த எல்லா ஏரிகளிலும் கரைக்கப்படுகின்றார். கர்நாடகாவில் விதவிதமான வர்ண விநாயகர்கள் மிகவும் பிரபலம்.


ஒவ்வொரு வருடமும் 3,051 சி லைகள் சென்கி ஏரியிலும், 642 லால்பாக் ஏரியிலும், 962 சிலைகள் எடியூர் ஏரியிலும் கரைக்கப்படுகின்றன.
ஆரம்ப காலங்களில் விநாயகர் சிலைகள் களிமண்ணால் மட்டுமே செய்யப்பட்டன.
அவற்றுக்குச் சாயம் பூசப்படவில்லை.
அவை கரையும் பொழுது கடல்களை மாசுப்படுத்தியதி்ல்லை. அரிசி பதார்த்தங்களைச் சமைத்து வழிபாட்டுக்குப் பின் கடலில் விடுவார்கள். கடலில் உள்ள மீன்களுக்கு இவை நல்ல உணவாகிவிடும். விநாயகரை அலங்கரிக்கும் இலைகளுக்கும் மூலிகைக்கும் மருத்துவ குணம் இருந்தது.

ஆனால் இப்பொழுது நிலைமையே வேறு. மக்கள் சாயம் பூசப்படாத கணேசரை வாங்க விரும்புவதில்லை என்று சிலை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

இராசயன சாயத்திற்குப் பதிலாக மூலிகைகளால் ஆன சாயத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றுக்கு அதிக செலவு செய்ய வேண்டும்.

இன்னொரு கோணத்தில் மக்கள் இந்த சாயம் பூசப்பட்ட விநாயகரின் ஆபத்துக்களை உணரத் தொடங்கியும் இருக்கின்றனர். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகருக்கு நச்சு இரசாயனக் கலவைகள் அடங்கிய சாயங்கள் பூசப்படாத விநாயகரைப் பயன்படுத்துமாறு கர்நாடகாவின் கிராமப்புற தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் ஒன்று பிரச்சாரம் செய்து வருகிறது.


மும்பையிலும் காகிதக்கூழைப் பயன்படுத்தி விநாயகர் சிலைகளைச் செய்வதைப் பிரபலப்படுத்தி வருகின்றார்கள். சில இடங்களில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
மனிதனுக்கு எல்லா விதத்திலும் ஏற்படும் இடர்பாடுகளைக் களைத்து இன்புற்று வாழவே வழிப்பாடு ஏற்பட்டது. ஆனால் பிறப்பித்துக்கொள்ளும் அளவுக்கு மனிதனுடைய நடவடிக்கைகள் உருவெடுத்திருப்பது வேதனையான விஷயம்தான்.


மனிதன் சுமூகமாக வாழ இடையூறுகளை தகர்த்தெறியும் கணேசரே இந்தப் பிரச்சனையை விரைவில் களைய வழிகாட்டுவாராக.

Sunday, May 2, 2010

புவா பாலா கிராமத்தின் இரண்டாவது மாட்டுக் கொட்டகையும் உடைக்கப்பட்டுவிட்டது 50 ஆண்டு கால பசும்பால் தொழிலுக்கு முற்றுப்புள்ளி


சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பினாங்கு புவா பாலா கிராமத்தில் செயல்பட்டு வந்த மற்றொரு மாட்டுக் கொட்டகையும் மேம்பாட்டாளர்களால் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டது.

தனது தந்தையின் காலத்திலிருந்து மாடு மற்றும் ஆடுகளை வளர்த்து, தொழில் செய்து வரும் ஆர்.சுப்பிரமணியத்தின் மாட்டுக் கொட்டகையை மேம்பாட்டாளர்கள் உடைத்தெறிந்தனர்.

ஒன்றுமே செய்ய முடியாத சூழ்நிலையில் சுப்பிரமணியமும் அவரின் துணைவியாரும் தங்களுடைய மாட்டுக் கொட்டகை உடைபடுவதை கண்ணீரோடு பார்த்தனர்.

தன்னுடைய 100 மாடுகளும் 25 ஆடுகளும் தங்குவதற்கு ஏற்ற இடத்தை தேடிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் எவ்வித முன் அறிவிப்பின்றி தங்களின் மாட்டுக்கொட்டகை உடைக்கப்பட்டது துரோகச் செயல் என சுப்பிரமணியம் கூறினார்.

இந்த மாட்டுக் கொட்டகைக்காக இதுவரை 50 ஆயிரம் வெள்ளி வரை செலவு செய்துள்ளேன். தினமும் 200 வெள்ளி வரை பால் விற்பனை செய்து வருகின்றேன் என்று கூறிய சுப்பிரமணியம், இனி என்ன செய்வது என்று ஒன்றும் புரியாத நிலையில் குழம்பிப் போய் இருப்பதாகக் கூறினார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் எங்களுக்காகப் போராடியது. மாற்று இடம் கிடைக்கும் வரையில் உடைக்கப்படுவதை நிறுத்தி வைக்குமாறு மாநில அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனால், மாட்டுக் கொட்டகை உடைக்கப்படும் வரை யாருமே உதவிக்கு வராதது வருத்தமளிப்பதாக சுப்பிரமணியம் கூறினார்.

ஏற்கெனவே இதே புவா பலா கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த சிவானந்தம் என்பவருக்குரிய மாட்டுக் கொட்டகையும் உடைக்கப்பட்டது. அவருடைய 100 மாடுகள் நடுத்தெருவில் தூங்குகின்றன.


இப்பொழுது சுப்பிரமணியத்தின் 100 மாடுகளும் 25 ஆடுகளும் நடுத்தெருவில் தூங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

சுமார் 50 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்த ஒரு பாரம்பரிய பசும்பால் தொழில் ஒரு முற்றுப்புள்ளிக்கு வர வாய்ப்பிருப்பதாக பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

உடைபட்ட இந்த இரண்டு மாட்டுக் கொட்டகைகளை காப்பாற்றுவதற்கு யாருமே முன்வராதது வேதனையை தருவதாக சுப்பாராவ் கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு கனவுலக வாக்குறுதிகள் வேண்டாம் - என்.வி. சுப்பாராவ்!

மே மாதம் ஒன்றாம் தேதி காட்டையும் மேட்டையும் செல்வம் தரும் தங்க பூமியாக உயர்த்திக் காட்டிய தொழிலாளர் தினம்.

வெயில், மழை, மின்னல், இருள், பகல் என்று பாராமல் பல முதலாளிகளை தொழில் அதிபர்களாக உருவாக்கியவர்கள் தொழிலாளிகள்.

ரப்பர் தோட்டத் தொழிலாளியாக இருந்தாலும் சரி, செம்பனைத் தோட்டத் தொழிலாளியாக இருந்தாலும் சரி, கட்டுமானத் தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, உடல் உழைப்புத் தொழிலாளர்களாக இருந்தாலும் சரி இவர்கள் அனைவரும் தொழிலாளி என்ற வர்க்கத்தில் வாழ்ந்து கொண்டு வருபவர்கள்.

ஏதாவது ஒரு தொழிலாளர் வர்க்கம் வேலை நிறுத்தம் செய்தாலும் அது நாட்டின் நிதி பொருளாதாரத்தில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்திவிடக்கூடும். ஆகவேதான் உலகத்தில் உள்ள அரசாங்கங்களும் தங்கள் நாட்டுத் தொழிலாளர்களை மதித்து வருகின்றது. பாராட்டியும் வருகின்றது.


நமது மலேசிய நாட்டில் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கக்கூடியவர்கள் என பாராட்டப்படுகின்றவர்கள் தோட்டத் தொழிலாளர்கள்.

நமது நாடு விவசாய நாடு என்பதை உருவாக்கித் தந்தவர்கள் இந்தத் தோட்டத் தொழிலாளர்கள். ஆரம்பத்தில் அதிக எண்ணிக்கையிலிருந்த தோட்டத் தொழிலாளர் வர்க்கம் இப்பொழுது குறைந்துகொண்டே போனாலும் அரசாங்கம் இன்னும் தோட்டத் தொழிலாளர்களின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

ஆனால் மற்றெல்லா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வீட்டுக்குச் செல்லும்பொழுது, உழைப்புக்கு ஏற்ற போதிய வருமானத்தை கொண்டு செல்லும்பொழுது தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் வீட்டுக்குச் செல்கின்ற வழியில் கடனை அடைத்துவிட்டு போகிற பழக்கம் இன்னும் தொடர்கிறது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் கிடைத்தாலும் அது இன்றைய சூழ்நிலைக்கு பூர்த்தியானதாகத் தெரியவில்லை.

மாபாவில் அங்கத்தினர் இல்லாத தோட்டங்களில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்கள் கூடிய பட்சம் எடுக்கின்ற சம்பளம் 500 வெள்ளிதான். மாபாவில் அங்கத்துவம் பெற்றுள்ள தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சுமார் 800 ரிங்கிட் வருமானமாம் பெறுகிறார்கள்.

கூடுதல் மரம் வெட்டினால் கூடுதலாகக் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு மாதமும் கூடுதல் மரம் வெட்ட கிடைக்குமா என்பது சந்தேகம்தான்?

அதிக ஊதியம் பெறுகின்ற நகர்ப்புற பயனீட்டாளர்களே இந்த விலை உயர்வினால் பலதரப்பட்ட பிரச்னைகளை எதிர்நோக்கும்போது, மிகக் குறைந்த ஊதியம் பெறுகின்ற தோட்டத் தொழிலாளர்கள் எந்த அளவுக்கு சிரமங்களை எதிர்நோக்குவார்கள் என்பதை நாம் மிக எளிதாக பட்டியலிட்டுக் காட்ட முடியும்.

ஏற்கெனவே குறைந்த ஊதியத்தில் மிகக் குறைவான சத்துணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிடுகின்ற தொழிலாளர் வர்க்கம் இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற விலை ஏற்றம் மற்றும் பண நெருக்கடியால் மேலும் பல இன்னல்களை எதிர்நோக்க நேரிடலாம்.

தோட்டத் தொழில் ஒரு எளிமையான தொழிலோ அல்லது பாதுகாப்பான தொழிலோ அல்ல. கடுமையான உழைப்பு, கவனம், பொறுப்பு, பாதுகாப்பு அனைத்தும் இந்த தொழிலுக்கு தேவைப்படுகின்றது.

ரப்பர் தொழிலைப் போல், செம்பனை தொழிற்துறையில் இன்னும் அதிகமான அக்கறையும் பாதுகாப்பும் தேவைப்படுகின்றது. செம்பனைத் தொழில் மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான தொழிலாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.

ரப்பர் தொழிற்துறைப்போல் 8 மணி நேர வேலை செய்து வீட்டுக்குத் திரும்ப முடியாது.

இன்னும் எத்தனையோ தோட்டங்களில் குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லை. குளிக்க அறை இல்லை. கழிவறைகள் கிடையாது. கழிவறைகள் இருந்தாலும் கதவுகள் கிடையாது. கதவுகள் இருந்தாலும் தாழ்ப்பாள் கிடையாது. இவையனைத்தும் இருந்தாலும் கழிவறைகளை சுத்தம் செய்ய தண்ணீர் கிடைக்காது.

இன்னும் எத்தனையோ தோட்டங்களில் தொழிலாளர்களும் அவர்களுடைய குழந்தைகளும் படிப்பதற்காக நூல் நிலையம் இல்லை. மக்கள் ஒன்று சேர்வதற்கு சந்திப்பு மையம் இல்லை.

கல்வி கற்ற எந்த சமூகமும் எல்லாத் துறையிலும் முன்னேற்றம் காணும் என்பதில் சந்தேகமில்லை.

ஆகவே தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலம் மகிழ்ச்சிகரமானதாகவும் பிரச்னை இல்லாததாகவும் மற்றும் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்குரிய வாய்ப்புக்களை அக்கறையுடையவர்கள் செய்து தர வேண்டும்.

இனியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கனவுலக வாக்குறுதிகளை வழங்காமல் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கக்கூடிய வசதிகளை வாய்ப்புக்களை செய்து கொடுக்க வேண்டும்.

மாட்டுக் கொட்டகையை உடைக்கப்பட்டது 100 மாடுகள் அநாதை- 30,000 ரிங்கிட் சேதம் கம்போங் புவா பலாவில் முடிவில்லாத மனிதநேயமற்ற செயல்!

பினாங்கில் உள்ள கம்போங் புவா பலா என்ற கிராமத்தில் பிரச்னைக்கு மேல் பிரச்னை தொடர்கதையாக இருந்து வருகின்றது.

முன்பு அங்கே குடியிருந்தவர்கள் வீட்டுப் பிரச்னை மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது. ஆனால் இப்பொழுது அந்த கிராமத்தில் நூற்றாண்டு காலமாக இருந்த இரண்டு மாட்டுக் கொட்டகைகளுக்கு பிரச்னை ஏற்பட்டிருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறியது.

கடந்த புதன்கிழமை காலை 11.00 மணிக்கு திரு கே.சிவானந்தம் என்பவருடைய மாட்டுக்கொட்டகை உடைக்கப்பட்டது. இதனால் அவருக்குச் சொந்தமான 100 மாடுகளும் 15 கன்றுக்குட்டிகளும் தங்குவதற்கு இடமில்லாமல் அநாதையாக, அகதிகளாக அக்கிராமத்தைச் சுற்றி வருகின்றன என்றார் பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ்.

திடீரென தன்னுடைய மாட்டுக் கொட்டகைக்கு வந்த சிலர் எந்த வித கடிதத்தையும் காட்டாமல், முன்னறிவிப்பின்றி மாட்டுக் கொட்டகையை உடைத்துவிட்டனர் என சிவாநந்தம் கூறினார்.

தினமும் ஏறக்குறைய 200 ரிங்கிட்டிலிருந்து 300 வெள்ளி வரை பால் கறந்து விற்று வந்தேன். ஆனால் இப்பொழுது கடந்த இரண்டு நாட்களாக அதுவும் செய்ய முடியாமல் தடை பட்டுவிட்டது என கண்ணீர் மல்கக் கூறினார்.


இவருடைய சகோதரர் சுப்பிரமணியம் என்பவருக்கும் இதே கம்போங் புவா பாலா கிராமத்தில் மாட்டுக் கொட்டகை இருக்கின்றது. அவருடைய மாட்டுக்கொட்டகையும் இன்னும் சில தினங்களில் தாங்கள் உடைக்கவிருப்பதாக மேம்பாட்டாளர் கூறியதாக சுப்பிரமணியம் கூறினார்.

இந்த இருவரும் மாட்டுக் கொட்டகை வைத்திருப்பது அரசாங்க நிலத்தில். ஆக அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் எவ்வாறு மேம்பாட்டாளர் மாட்டுக் கொட்டகையை உடைத்தார் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது என சுப்பாராவ் கூறினார்.

இது தொடர்பாக பினாங்கு மாநில துணை முதல்வர் டாக்டர் ராமசாமியிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது தனக்கும் முதலமைச்சருக்கும் மாட்டுக் கொட்டகை உடைபடும் பிரச்னை பற்றி தெரியாது என்றும் மாநில அரசாங்கம் மாட்டுக் கொட்டகை உடைப்பதற்கு அனுமதி தரவில்லை என்றும் தன்னிடம் கூறியதாக சுப்பாராவ் கூறினார்.


ஆக, யாருடைய உத்தரவின் பேரில் மேம்பாட்டாளர் சிவானந்தமுடைய மாட்டுக் கொட்டகையை உடைத்தார் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. சிவானந்தத்திற்கு சொந்தமான 100 மாடுகள் தங்குவதற்கு இடம் அவசியமாகத் தேவைப்படுகின்றது. இருக்கின்ற கன்றுக்குட்டிகள் நிழலில் தங்க வைக்கப்படாமல் இருந்தால் நிச்சயம் அவை இறந்துவிடும். இதற்கு மாநில அரசாங்கம் உடனடியாக உதவி செய்ய வேண்டும் என சிவானந்தமும் சுப்பிரமணியமும் கேட்டுக்கொள்கின்றனர்.


இந்த இருவரும் பிரிதொரு இடத்தில் மாட்டுக்கொட்டகையை அமைத்துக்கொள்வதற்கு ஏற்ற ஓர் இடத்தை மாநில அரசாங்கம் செய்து தர வேண்டும் பி.ப.சங்கம் கேட்டுக்கொள்கிறது.

ஏற்கெனவே அங்கிருந்த குடியிருப்பாளர்கள் தாங்கள் தேர்வு செய்த வீடுகளுக்குச் சென்று விட்டனர். ஆனால் வாயில்லா ஜீவன்களான மாடுகளுக்கு ஏற்ற ஓர் இடத்தை அடையாளங்காண முடியாமல் அவற்றை அநாதையாக விட்டிருப்பது வருந்ததத்தக்க ஒரு செயல் என சுப்பாராவ் கூறினார்.

“எந்நாடுடைய இயற்கையே போற்றி” இயற்கையே எங்கள் ஜீவநாடி பினாங்கு மாணவர்களின் பசுமைப் புரட்சி!

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் முழு ஆதரவில் நாட்டிலுள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள் பூமியைக் காப்பதற்கும், மனிதர்களிடையே ஆரோக்கியத்தை வளர்ப்பதற்கும் பசுமைப் புரட்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இருக்கின்ற காலியான இடங்களில் மூலிகைத் தோட்டமும் இயற்கை வேளாண்மையும் தொடங்குவதற்கு பி.ப.சங்கம் கடுமையான முயற்சிகளை எடுத்து வருவதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

இயற்கை விவசாயத்தைப் பற்றி பேசும்பொழுது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதன் முழு அவசியத்தையும் அதன் பலன்களையும் விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். பசுமைப் புரட்சி பள்ளிகளில்தான் தொடங்கப்பட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

அந்த வகையில் பினாங்கு மாநிலத்தில் உள்ள துங்கு புவான் அப்சா இடைநிலைப்பள்ளியில் மூலிகைத் தோட்டத்தையும் இயற்கை விவசாயத்தையும் பி.ப.சங்கம் தொடக்கி வைத்ததாக இத்ரிஸ் கூறினார்.

பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் தலைமையில் சென்ற அதிகாரிகள் அப்பள்ளியில் 15 மூலிகைகளை வழங்கி நட்டு வைத்தனர்.

ஒவ்வொரு மூலிகையையும் ஒரு மாணவி தத்தெடுத்து பள்ளியில் படிக்கும் வரையில் பராமரித்து வருவார் என சுப்பாராவ் கூறினார்.

இம்மூலிகைச் செடிகளுக்குத் தேவையான இயற்கை உரம் மற்றும் இயற்கை ஊக்கிகளை பி.ப.சங்கம் வழங்கும் என்றார்.

அதே போல், பள்ளியைச் சுற்றிலும் இருக்கின்ற குப்பைகளை வைத்து அதை மக்க வைத்து உரமாக்கும் செயல்பாட்டையும் பி.ப.சங்கம் மாணவர்களுக்கு சொல்லித் தந்தது.

வலையத் தோட்டம், விதை நடுதல், செடிகளை பராமரிப்பது போன்ற முறைகளும் சொல்லித் தரப்படுகின்றன என்றார் சுப்பாராவ்.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இப்பள்ளியைச் சேர்ந்த சுமார் 200 மாணவிகள் மிக ஆர்வத்தோடு கலந்து கொண்டனர் என சுப்பாராவ் கூறினார்.