Wednesday, July 27, 2011

நச்சு இரசாயனங்கள் அற்ற இயற்கை விவசாயத்தை நோக்கிச் செல்வோம் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

நவீன விவசாய முறையில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் நோய்களும் பெருகிவிட்ட காரணத்தால் அதனைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவும் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டும், நிறைய இரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நவீன விவசாய முறையில் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களும் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளும் குறைந்துபோவதற்கு எந்த வித சாத்தியக்கூறுகளும் தென்படாத நிலையில், இந்தப் பிரச்னையிலிருந்து நம்மை விடுவிக்கும் ஒரு நீடித்த நிலையான விவசாய முறையை நாம் நாட வேண்டிய அவசியம் உண்டாகிவிட்டது. அதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில், நம்முடைய இயற்றை வளங்கள் அழிந்து சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு மட்டுமல்லாமல் மனித ஆரோக்கியத்துக்கே கேடாக இது முடியும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

பூச்சிக்கொல்லி என்பது ஒரு நஞ்சாகும். அது சுற்றுச்சூலுக்கு மட்டுமல்லாமல் மனித ஆரோக்கியத்திற்குப் பல விதமான கேடுகளை உண்டாக்குகிறது. பயிர்களுக்குத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள், பயிர்களை உட்கொள்ளும் பட்சத்தில் நம்முடைய உடலுக்குள் சேமித்து வைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வருடமும் 20,000லிருந்து 40,000 பேர் வரைக்கும் பூச்சிக்கொல்லி நச்சத்தன்மையால் இறந்து போவதாக ஐக்கிய நாட்டு சபையின் பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைக் குழு கூறுகிறது. பூச்சிக்கொல்லிகளில் உள்ள 426 சேர்வைகளில் 164 சேர்வைகள் புற்றுநோய், மரபணுக்கோளாறுகள், மலட்டுத்தன்மை மற்றும் பிறப்புக் கோளாறுகள் போன்ற இன விருத்தி பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

நெற்பயிரை தாக்கும் நத்தைகளிலிருந்து வளத்தை பாதுகாப்பதற்கான பாரம்பரிய வழிமுறையை, இந்திய மருத்துவர் இராமு விளக்கமளிக்கிறார்.

பூச்சிக்கொல்லிகள், பயிர்களை நாசப்படுத்தும் பூச்சிகளைக் கொல்லுவதற்காகவே பயன்படுத்தப்பட்டாலும் இவை சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே கொன்றுவிடுகின்றன. பயிர்களுக்குத் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள் விவசாயிகளையும் சேர்த்தே கொன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நிறைய நடந்துள்ளன. மலேசியாவில் உள்ள ஆறுகளில் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் நிறைய இருப்பதாகவும், இவற்றில் சில தசாப்தங்களுக்கு முன்பே தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள விளை நிலங்களில் 77% மேலான நிலங்கள் செம்பனை, ரப்பர், கொக்கொ, அன்னாசி, மிளகு போன்ற விளைச்சலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எஞ்சியுள்ள நிலங்களில்தான் நெல், காய்கறிகள், பழங்கள் நடப்படுகின்றன.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில், விவசாயிகள் தங்களுடைய பயிர்களில் ஒரே பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தாமல், வெவ்வேறு விதமான தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளை கலந்து அவற்றின் வீரியத்தை அதிகரித்துப் பயிர்களுக்குத் தெளிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

பயனீட்டாளர்களுக்கு நஞ்சில்லாத காய்கறிகள் போய்ச் சேர வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பல காலமாகப் போராடி வருகிறது. அந்த வகையில் பூச்சிக்கொல்லிகளின் துணை அல்லாமல் இயற்கையான முறையில் பயிர்களை விளைவிக்கும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருக்கும், இந்தியாவின் நீடித்த விவசாய மையத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜி.வி.ராமு அவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு வருகை புரிந்தார். இவர் குழுவினரின் உழைப்பால் ஆந்திராவில் உள்ள ஓரிரு கிராமங்கள் அறவே பூச்சிக்கொல்லி இல்லாமல் விவசாயம் செய்கின்றன. இயற்கை முறை செலவுகளைக் குறைத்த அதே வேளையில் உற்பத்தியையும் பெருக்கியுள்ளது என்கிறார் டாக்டர் ராமு. பூச்சிக்கொல்லியற்ற வளர்ப்பு முறையை இப்பொழுது ஆந்திராவில் 1.5 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பில் மேற்கொள்கிறார்கள். இப்பொழுது இந்த பூச்சிக்கொல்லியற்ற முறையை இந்தியா முழுக்க 159 மாவட்டங்களில் மேற்கொள்கிறார்கள்.

டாக்டர் ராமு மலேசியாவில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கள், விவசாய இலாக்காக்களின் அதிகாரிகளோடு கலந்துரையாடல்களை மேற்கொண்டு பூச்சிக்கொல்லியற்ற மாற்று வழிகளைப் பற்றி எடுத்துரைத்தார். மலேசியாவில் செம்பனை, ரப்பர் மற்றும் நெல் வளர்ப்பில் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பூச்சித் தொல்லையிலிருந்து விடுபட விவசாயிகள் பாதுகாப்பான மாற்று வழிகளைத் தெரிந்து வைத்திருக்கவில்லை.

பூச்சிக்கொல்லியற்ற இயற்கையான பயிர் பாதுகாப்பு முறைகளை மலேசிய விவசாயிகள் கற்றுக்கொள்ள வேண்டும். பூச்சிகளின் வாழ்க்கை வட்டம், பயிர் நோய்கள், பூச்சி தாக்கும் காலம் போன்றவற்றைப் பற்றிய ஒரு முழுமையான அறிவை விவசாயிகள் பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல், எப்படி உள்நாட்டிலேயே கிடைக்கும் தாவரங்களைக் கொண்டு பூச்சி விரட்டிகளைத் தயாரிப்பது என்பதைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

செம்பனை, ரப்பர் பயிர்கள் நிறைய கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. நெல்வயலிலும் நிறைய வைக்கோல்கள் எரிக்கப்படுகின்றன. இப்படிச் செய்வதைத் தவிர்த்து இவற்றையெல்லாம் எருவாக மாற்றி இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்க முடியும்.

ஆக, மலேசியர்களின் நலன் காக்கும் பொருட்டு, பூச்சிக்கொல்லியற்ற இரசாயன உரங்கள் அற்ற இயற்கை விவசாய முறையினை விவசாயிகள் கற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மலேசிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.