உலக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவது இறைவனுக்கு ஆற்றும் தொண்டிற்கு சமமாகும். உயிர்களின் இதயக் கோயிலே இறைவன் வாழும் கலைக்கோயிலாகும். அருள் நெறி என்று உயிர்களுக்கு அன்பு செய்ய சமய வாழ்வு வாழ்கிறோம் எனில் அது சமுதாய வாழ்வுடன் இணைந்ததாக அமையவேண்டும். இந்த வகையில் இல்லறத்தில் இருந்து கொண்டே இறைவனை அடையலாம் என்பதை வள்ளுவரும் வள்ளலாரும்கூறுகின்றனர்.
இல்வாழ்கையைநடத்துபவர்களுக்கும், ஆன்மீகவாழ்க்கையை மேற்கொள்பவர்களுக்கும் முறையே உலகியல் மற்றும் அருளியல் என்று திருவருட்பாவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால் சில பேர் மேம்போக்காக சில பாடல்களையும் , பேருபதேசத்தையும் படித்து விட்டு வள்ளலார் எல்லாவற்றையும் விட்ட விட சொல்லுகிறார் என்றும் மதத்தை வெறுக்க சொன்னார் என்றும் பல வழிகளில் மக்களின் மனதை புண்படுத்துகின்றனர்.திசை திருப்புகின்றனர்.
இல்லறத்தை நல்லறமாக மாற்றி வாழ வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை- என்கிறார் வள்ளுவர்.
இல்வாழ்க்கையின் பண்பு அன்புடமை. பயன் அறனுடையமையாகும். மனைவி சுற்றம் என்று விரியும் அன்பிலே வாழும் ஒருவன் உலகனைத்தின் பாலும் விரிந்த அன்பு பூணும் மனப்பக்குவம் அடைகிறான். மனைவியும் அதே அன்புசால் மனப்பக்குவம் அடைகிறாள்.
உலகனைத்தையும் அன்புக்கண்களிலே காணும் இந்த விரிந்த மனோபக்குவம் அடைய இல்லறம் வழிகாட்டுகிறது. அன்பும், அறனும் இல்வாழ்க்கையினை சிறப்பாக்குகிறது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேராதார் -வள்ளுவர்
மற்றுமொரு இடத்தில் இல்லறத்தை வலியுறுத்தி கீழ் காணும் தேவர் குறளை எடுத்து மேற்கோளிடுகிறார்.
தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
இல்லறம் நடத்தியே இறைவனை அடைந்தாகச் சொல்லப்படும் நாயன்மார்களுடைய கதைகளும், ஆழ்வார் கதைகளும் இதனை தான் சொல்கிறது.
"காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன?
கந்தை சுற்றி ஓடே எடுத்தென்ன?
உள்ளன்பில்லாதவர் ஓங்கு செல்லநாடேயிடை
மருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர்
பால் வீடேயிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுமே"
இங்கு இல்லறத்தானும் வீடுபேறு பெறமுடியுமென கூறப்படுகிறது
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
இதைதான் வள்ளலார் செய்து காண்பித்தார். மலைக்கும் ,குகைக்கும் செல்ல வில்லை.மனித சமுதாயத்தில் கடமைகளையும் ஜீவகாருண்யத்தையும் கடைபிடித்து மக்கள் உயர்நிலையை அடைய முடியும் என்றும் போதித்தார். மனித உடலை பிரணவ தேக மாக மாற்றி செய்து நிருபித்தார்.
No comments:
Post a Comment