Monday, December 11, 2023

அணில்களை வேட்டையாடுவது தேசியக் குற்றம்

அணில்கள் கொரித்து உண்ணும் இனத்தைச் சேர்ந்தவை. உலகெங்கிலும் 250 வகையான அணில்கள் உள்ளன. மர அணில், தரை அணில் மற்றும் பறக்கும் அணில் போன்றவை நாம் அன்றாடம் பார்க்கும் வகைகளில் சில.

பொதுவாக அணில்கள் தாவர உண்ணிகள் என அறியப்பட்டாலும் சிறு பூச்சிகள், வண்டுகள், முட்டைகள், சிறிய பாம்பு, போன்றவற்றையும் உண்ணுகின்றன.

அணில்கள் 3லிருந்து 6 வாரங்களில் குட்டி ஈனும். கால இடைவெளியும் குட்டிகளின் எண்ணிக்கையும் இனத்திற்கு இனம் வேறுபடும். பெண்ணே குட்டிகளைக் கவனித்துக்கொள்ளும். பிறந்தவுடன் குட்டிகளுக்குக் கண் தெரியாது. காதும் கேட்காது. தாயின் வெப்பத்தை தொடுதலின் மூலமே உணர்ந்துகொள்ளும். இவை தாயிடம் 7 வாரத்திற்குப் பால் குடிக்கும்.|

வளர்ச்சியின்போது தானியம், குருவிகளின் முட்டை போன்ற சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளும். ஒரு வருடம் ஆனதும் தாய் தனது குட்டிகளை விரட்டிவிடும். பிறகு குட்டி அணில் தன் சுய வாழ்வைத் தொடங்குகிறது. அணில்களின் தோல் மற்றும் மயிர்க்கால்கள் வெளிநாட்டவரின் நாகரிகத் தொப்பிகள் அங்கிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பகின்றன.

தென் அமெரிக்காவில் அணில்களைக் கொன்று நிறைய வருமானம் ஈட்டி வருகின்றனர். இதனால் அணில்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகின்றன. தற்பொழுது ஐ.நா. சபை, அணில்களை வேட்டையாடுவதைத் தேசியக் குற்றமாக அறிவித்துள்ளது.

நன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

அலையாத்திக் காடுகள்

வெப்ப மண்டலப் பகுதிகளில், கடலோரங்களில் அலை பரவும் பகுதிகளில் நிலைபெற்று வளரும் ரைசோபோரா, அவிசினியா, ஆகிய மரங்களும் பெரும் செடிகளும் சதுப்பு நிலக் காடுகள் எனப்படுகின்றன. இவை கடல் நீரிலேயே வளர்கின்றன. சீறிவரும் நீர¨லைகள் கரையைக் கடக்கும்பொழுது இவை பாதுகாப்பு அரண்கள் போன்று அலைகளின் வேகத்தைக் குறைத்து நிலப்பகுதியைக் காக்கின்றன. சுனாமி போன்ற பேரலைகளிலிருந்து நம்மைக் காக்க கடற்கரைதோறும் இக்காடுகள் வளர்ப்பது நல்லது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். 

மேலும் இக்காடுகள் கடல் அரிப்பைத் தடுக்கின்றன. சதுப்பு நிலப்பகுதி வளம் நிறைந்து இருப்பதால் நைட்ரேட், பாஸ்பேட் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம். அதனால் நுண்ணுயிர்த் தாவர வகைகளும், நீர்வாழ்வனவும், மீன் உற்பத்தியும் இந்த நீரில் அதிகம். 20 முதல் 30 மடங்கு வரை இந்நீரில் மீன்வளம் காணப்படுகிறது. கடல் மீன்களுக்கும் கடல் உணவைச் சார்ந்திருக்கும் நீர்நாய், முதலை போன்ற பல்வேறு நிலம் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கும், மீன் உணவை உண்ணும் பறவைகளுக்கும் இந்த

சதுப்பு நிலக்காடுகள் வீடுகளாக உள்ளன. ஏனெனில் இப்பறவை இனங்கள் இக்காடுகளில் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன. இக்காடுகள் இல்லாத பகுதிகள் பெரும்பாலும் கடலால் ஏற்படும் நில அரிப்பினால் பாதிக்கப்படுகின்றன.

நன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம் 2016


சிக்கிம் - இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலம்


சிக்கிமில் உள்ள 75,000 ஹெக்டர் விவசாய நிலங்களில் இப்பொழுது பூச்சிக்கொல்லிகளுக்கும் இரசாயன உரங்களுக்கும் இடமில்லை. இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக அது உருவெடுத்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது.



ஆறு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த மாநிலம் பூக்களின் மாநிலம் என்ற பெயரிலும் திகழ்கிறது. சென்ற ஆண்டு இறுதியில் இயற்கை விவசாயத்தை முழுமையாக அமல்படுத்தும் ஒரு மாநிலமாக சிக்கிம் உருவெடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிக்கிம் மாநிலத்திற்கு வருகை புரிந்து அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்துள்ளார். தேசிய இயற்கை விவசாயத் திட்டத்தின் கீழ் இந்த மாநிலம் படிப்படியாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு இப்பொழுது முழு இயற்கை விவசாய மாநிலமாக தன்னை முன்னிறுத்தியுள்ளது. 

சிக்கிமை முழு இயற்கை விவசாய மாநிலமாக மாற்ற வேண்டும் என்று 12 வருடங்களுக்கும் முன்பு 2003ல் நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்குப் பிறகு விவசாயப் பண்ணைகளில் இரசாயன உபயோகம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பூச்சிக்கொல்லி மற்றும் இரசாயன உரங்கள் விற்பனை தடை செய்யப்பட்டன. சிக்கிம் விவசாயிகள் இரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தாதவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் இயற்கை உரங்களைப் பயன்படுத்தியே வந்தனர்.

அரசாங்கம் எடுத்த முடிவுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் விவசாயிகள் இயற்கை விவசாய வழிமுறைகளுக்கு மாறினர். சிக்கிமில் பெரும்பாலும் ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், அந்தந்த பருவத்திற்கு ஏற்ற காய்கறிகள், ஆரஞ்சு, கிவி, கோதுமை, நெல், சோளம் மற்றும் தானியங்கள் பயிரிடப்படுகின்றன. கலிபோர்னியா, விஸ்கொன்ஸின் போன்ற இயற்கை விவசாயம் செய்யும் வெளிநாட்டு மாநிலங்களின் பட்டியலில் சிக்கிமும் சேர்ந்துவிட்டது. சிக்கிம் மாநிலத்தைப் பார்த்து இந்தியாவின் கேரளா, மிசோராம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இயற்கை விவசாயத்தை நோக்கி அடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கின்றன.

இயற்கை விவசாய முறையில் இரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளுக்கும் இடம் கிடையாது. இவற்றைப் பயன்படுத்தாத பட்சத்தில் சூழல் நச்சுத்தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. தொடர்ச்சியாக இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் பட்சத்தில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இது பல்லுயிர் செறிவுக்கு வித்திடுகிறது" என்று விவசாய செயலாளர் கோர்லோ பூத்தியா கூறினார். 


இயற்கை விவசாயம் மண் நலத்தைப் பெருக்கும். இதன் மூலம் விளைச்சலும் அதிகரிக்கும். சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலாத் துறை மேம்படவும் இது உதவும். நச்சுக் கலவாத இயற்கை உணவுகளை அளிக்கிறோம் என்று இப்பொழுதே சுற்றுலாத்துறை விடுதிகள் விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டன. சிக்கிமிற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளும் விஷமற்ற உணவை அருந்தி மகிழலாம்.

ந்ன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம் 2016