Tuesday, September 13, 2022

Imparting Traditional Knowledge Tirelessly Sanmargam, Lunas, Kedah



Sanmargam Kathiravan of Kulim, Kedah, has been instrumental in CAP’s efforts to promote natural farming. After attending natural farming training in Tamil Nadu, he applied the methods he had learned at his small garden and found it to be very effective and safe.

Over the years, Sanmargam mastered the art of making growth promoters and pest repellents and has imparted his knowledge successfully to thousands of farmers, agriculture officers, housewives and  students whom he met at CAP’s workshops and seminars.

It is not easy venturing into chemical free farming, as Sanmargam found out.In spite of his burning desire to do so, he had great difficulty in getting a piece of land. However, after a long struggle, Sanmargam managed to get one acre of land and has now started planting a variety of gooseberry (amla). 

This amla variety, said to have its originin India, was brought by Sanmargam from a remote area of Baling, Kedah. “Amla is extremely rich in vitamin C and abundant in medicinal values. Cultivating and popularising such fruits locally will lead to healthy fruit consumption, and at a much lower price,” says Sanmargam.

Thank you,
Consumers Association of Penang (CAP)

Minimising Exposure to Persistent Organic Pollutants (POPs) - Successful Initiatives in Malaysia


Sunday, April 3, 2022

விவசாயிகளே! பூச்சிகளைக் கொல்லாதீர்கள்! தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி நன்மை செய்யும் பூச்சிகளை வளரவிடுங்கள்! பூச்சியியல் வல்லுநர் நீராவி செல்வம் ஆலோசனை


விவசாயிகளுக்கு பூச்சிகளின் தொல்லை மிகப் பெரிய தவைவலியாக உருவெடுத்திருப்ப தன் காரணமாக, பலதரப்பட்ட கொடிய விஷத்தன்மையுடைய பூச்சிக்கொல்லிகளை வாங்கி தங்களது விவசாய நிலங்களில் உள்ள அனைத்து பூச்சிகளின் மீது தெளித்து அவற்றைக் கொன்று விடுகின்றனர் என்கின்றார் பூச்சி நிர்வாக வல்லுநர் நீராவி செல்வம். 

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று இரண்டாவது முறையாக மலேசியா வந்த செல்வம், இங்குள்ள பலதரப்பட்ட விவசாயிகளை நேரிடையாக சந்தித்து உரையாடியதில், அதிகமான விவசாயிகள், பூச்சிகளின் உண்மையான நிலவரத்தை அறிந்துகொள்ளாமல் விஷத் தன்மையுடைய பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து நன்மை செய்யும் பூச்சிகளையும் அநியாயமாகக் கொன்று விடுகின்றனர் என தனது கவலையைத் தெரிவித்துக்கொண்டார். பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பணிமனையில் உள்ள இயற்கை விவசாயத் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது செல்வம் பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். நம் விவசாய தோட்டங்களில் குறிப்பாகக் காய்கறி தோட்டமாக இருந்தாலும் சரி, நெல் வயல் தோட்டமாக இருந்தாலும் சரி, அதில் வருகின்ற பூச்சிகளை அழிக்க பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லும் செல்வம் அனைத்து பூச்சிகளுமே விவசாயிகளின் நண்பர்களே என்கின்றார்.

வயல்களில் 25 சதவிகிதம்தான் தீமை செய்யும் பூச்சிகள் உள்ளன. மீதமுள்ள 75 சதவிகிதம் பூச்சிகள் நன்மை செய்யும் பூச்சிகள் ஆகும். ஆரம்ப கால விவசாயிகள் இயற்கையான பூச்சி விரட்டிகளை அதிகம் பயன்படுத்தி அதிக விளைச்சலை எடுத்தனர் என்று கூறும் செல்வம் இப்போது எதற்கெடுத்தாலும் விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளே நிவாரணம் என தவறாக நினைத்து ஆயிரக்கணக்கான வெள்ளியை பூச்சிகளுக்காக செலவு செய்து கடன்காரர்களாக ஆகிவிடுகின்றனர் என்றார். விவசாயிகள் இப்படி கண்மூடித் தனமாக பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதால் தீமை செய்யும் பூச்சிகள் மட்டும் சாகவில்லை.

மாறாக நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்ந்து கொல்லப்படுகின்றன என்றார். இதனால் நோய்களும் அதிகரிக்கின்றன, விளைச்சலும் குறைகிறது என்றார். விவசாயத் தோட்டத்தில் பயிரைத் தின்று மகசூல் இழப்பு ஏற்படுத்தும் பூச்சிகளால்தான் நமக்குப்

பிரச்னைகள். அதே நேரத்தில் நம் சாகுபடி பயிரைச் சாப்பிடாமல் நமக்கு தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் பிடித்து சாப்பிடக்கூடிய சிலந்தி, குளவி, பொறிவண்டு, தட்டான் என வேறு ஏராளமான நன்மை செய்யும் பூச்சிகள் உள்ளன. பூச்சிக்கொல்லிகளை வயல்களில் அடிக்கும்போது முதலில் நன்மை செய்யும் பூச்சிகள்தான் கொல்லப்படுகின்றன. விவசாயத்தில் இறங்குவது முக்கியமல்ல. ஆனால் விவசாயத்தில் உள்ள சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் செல்வம். விவசாயத்தில் இப்போது பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளைத் தாங்கி உயிர்வாழக்கூடிய தகவமைப்பு என்பது பூச்சிகளுக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளின் வீரியத்தையும் அதிகப்படுத்திக்கொண்டே செல்ல
வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக பூச்சிக்கொல்லியின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க அந்த வயல்களில் உற்பத்தியாகும் உணவுப்பொருள்களை சாப்பிடும் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும்தான் பல புதிய நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் பயிர்களை அழிக்கும் பூச்சிகளின் குடும்பமும் பெருகிக்கொண்டே செல்கின்றன என்றார் செல்வம். விவசாயத்தில் பூச்சிகள் இல்லையென்றால் விவசாயமே இல்லை என்று கூறும் இவர், பூச்சிகள் இல்லையென்றால் அயல் மகரந்தச் சேர்க்கையே நடக்காது என்கின்றார். ஆண் மலரிலிருந்து மகரந்தம் பெண் மலருக்குப் போகாது. அயல் மகரந்தச் சேர்க்கை இல்லையென்றால் அந்த விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்காது. பூச்சிகளில் எப்படி கெட்டது செய்யும் பூச்சிகள் இருக்கின்றதோ அதேபோல் கெட்ட பூச்சிகளை பிடித்துச்

சாப்பிடும் நல்ல பூச்சிகளும் இருக்கின்றன. சிலந்தி, குளவி, பெருமாள் பூச்சி, ஒட்டுண்ணிகள் போன்ற நன்மை தரும் பூச்சிகளை விவசாயிகள் பூச்சிக்கொல்லி தெளித்து கொன்றுவிட்டார்கள். நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல வழிகள் உண்டு. மஞ்சள் நிறத்தில் பூ பூக்கக்கூடிய செண்டுப்பூ,  சாமந்திப்பூ, மக்காச் சோளம் போன்றவற்றை வயல் வரப்புகளில் வளர்ப்பதன் மூலம் நன்மை செய்யும் பல பூச்சிகளை நம் வயல்களில் வரவழைக்கலாம் என்றார் செல்வம். இதுபற்றிய முழு தகவல்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திடம் கிடைக்கும்.

நன்மை செய்யும் பூச்சிகள் வயல்களில் இருக்க வேண்டும் என்றால், தீமை செய்யும் பூச்சிகளும் வயலில் இருக்க வேண்டும். நன்மை செய்யும் பூச்சிகளுக்கு தீமை செய்யும் பூச்சிகள்தான் உணவு என்பதை விவசாயிகள் மறக்கக்கூடாது. மேலும் தீமை செய்யும் பூச்சிகளைக் கொல்வதைவிட அவற்றை விரட்டி அடிக்க வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும் என்கின்றார் செல்வம். அவற்றை விரட்டியடிக்கவும், கட்டுப்படுத்தவும் இயற்கையிலான பூச்சி விரட்டிகளை பயன்படுத்த விவசாயிகள் முன் வர வேண்டும். இது தொடர்பான விளக்கக் கையேடுகள் பி.ப.சங்கத்திடம் இருப்பதாகவும் செல்வம் கூறினார்.

மண் அடுத்த பத்தாண்டுகளுக்கு செழிப்பானதாக இருக்க வேண்டும் நல்ல விளைச்சல் வேண்டும் என நினைத்தால் அவர்கள் இயற்கை முறையைப் பின்பற்ற வேண்டும். பூச்சிக்கொல்லிகளுக்கு விவசாயத்தில் இடம் கொடுக்கக்கூடாது. இயற்கை சார்ந்த முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கான சாகுபடி செலவு குறைகிறது. மகசூல் இழப்பு தடுக்கப்படுகின்றது. இதனால் இயற்கை சார்ந்த நமது சூழலியலும் பாதுகாக்கப்படுகிறது என்றார் நீராவி செல்வம்.

மண் புழு மக்களின் நண்பன்

நெளிந்து கொண்டு பார்க்கப் பலவீனமாக இருக்கும் மண்புழுக்களைக் காணும் பெரும்பாலான மனிதர்களும் நெளிவார்கள்; அல்லது அலறுவார்கள். ஆனால் அதன் தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து பயப்பட வேண்டாம்.

மண்ணின் வளத்தை பெருக்கும் அதி அற்புத ஆற்றல் படைத்தவை மண்புழுக்கள். மண் தழைத்தால் மற்ற உயிரினங்களும் தழைக்கும். மனித இனமும் தழைக்கும். மண்புழுக்கள் காய்ந்த இலைகளையும் மக்கிய

பொருட்களையும் உண்டு பிறகு வெளியாக்கும் கழிவுகளால் (எரு) மண்ணை காலங்காலமாக வளமாக்கி வருகின்றன. இந்த எருவை பயிர்கள் ஈர்த்துக் கொண்டு செழிப்பாக வளர்கின்றன. அந்தப் பயிரை மனிதர்கள் உண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்கின்றனர். 

மண்புழுக்கள் தன்னுடைய உடல் எடையைவிட 3லிருந்து 5 மடங்கு அதிகமான மக்குபொருட்களை ஒவ்வொரு நாளும் உண்ணும். மற்ற எல்லா உரங்களையும் விட மண்புழு எரு அதிக சத்துக்களை உடையது. மண்புழுவின் உடலிலிருந்து வெளிப்படும் கொழகொழப்பான திரவத்தில் நைட்ரோஜன் உள்ளது. இது தாவரங்களுக்குத் தேவையான சத்துப்பொருள் ஆகும். 

மண்புழு மண்ணைக் குடைந்து செல்லும்பொழுது மேல் மண்ணையும் கீழ் மண்ணையும் ஒன்றோடு ஒன்று கலக்கிறது. இதனால் மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. இதுவே பிறகு செடிகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

டாக்டர் சுல்தான் இஸ்மாயில் அனைத்துலக மண்புழு நிபுணர் ஆவார். உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநராகவும் இருக்கும் இவர் மண்புழு தொழில்நுட்பம் (vermitech) மண்புழு என்ற வார்த்தையை தன்னுடைய ஆராய்ச்சிகளின் மூலம் முதலில் புனைந்தவரும் ஆவார். "மண்புழு மண்ணின் உயிர்நாடி ஆகும். ஆகையால் மண்ணில் அதிகமான மண்புழு இருக்கும்பொழுது மண் ஆரோக்கியமாக இருக்கும்," என்கிறார் டாக்டர் சுல்தான் இஸ்மாயில்.

மண்புழு தொடர்பாக அவர் பகிர்ந்துகொண்ட விபரங்கள் வருமாறு:-

நம் தோட்டத்திலும் மற்றும் தொட்டிகளில் உள்ள பயிர்களிலும் எந்த மாதிரியான மண்புழுக்கள் இருக்க வேண்டும்?

அவரவர் வாழ்கின்ற இடத்தில் உள்ள மண்புழுவையே தோட்டத்தில்  பெருக்க வேண்டும். அவை தோட்டத்தில் நன்கு குடைந்து செல்லும். அந்தந்த மண்ணின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு அவை இருப்பதால் அவற்றின் வளர்ச்சியும் பெருக்கமும் நன்றாக இருக்கும். மேல்மட்டப் புழுவான பீரியனிக்ஸ் எக்ஸ்கெவட்டஸ் (Perionyx excavatus) மற்றும் இடைமட்டப் புழுவான லம்பிட்டோ மவுரிட்டி (Lampito mauritti) வகை மண்புழுக்கள் ஏற்றவை. 

மண்புழுக்கள் எங்கு கிடைக்கும்?

உங்கள் தோட்டத்திலேயே மண்புழுக்களைத் தேடிப் பார்க்கலாம். பாதி காய்ந்த நிலையில் உள்ள மாட்டுச்சாணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் புழுவின் முட்டைகள் இருக்கக்கூடும். மாட்டுச்சாணம் முற்றிலும் காய்ந்ததாகவோ அல்லது முற்றிலும் ஈரமாகவோ இருக்கக்கூடாது. 

மண்புழு வளர்க்க மண்ணைப் பண்படுத்துவது எப்படி?

மரத்திலிருந்து கொட்டும் காய்ந்த இலைகளை சருகுகளை அப்புறப்படுத்தக்கூடாது. இந்த காய்ந்த இலைகள், சருகுகள் மூடாக்கு போன்று செயல்பட்டு மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்கின்றன. இங்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் வளரும். இதுவே மண்புழுவை ஈர்க்கும். மண்ணில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க வேண்டும். ஆனால் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிக வறட்சியாக இருந்தால் தண்ணீர் தெளித்துவிடலாம். உள்நாட்டு மரங்கள் மண்புழுக்களை ஈர்க்கும். ஆகையால் அந்நிய மரங்களை விட உள்ளூர் மரங்களை வளருங்கள். மண்ணில் இருக்கும் கட்டுப்மானப்பணி கற்கள், குப்பைகளை அகற்றிவிடுங்கள். பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்காதீர்கள். அவை மண்புழுக்களைக் கொன்றுவிடும்.

மண்புழுக்களுக்கு மண்ணில் கொடுக்க  வேண்டிய உணவுகள் என்ன?இயற்கையாகவே காய்ந்து விழும் இலைக் குப்பைகள் மண்புழுவுக்கு நல்ல உணவு. அவ்வப்பொழுது பாதி மக்கிய சமையலறைக் கழிவுகளை மண்ணில் கலந்துவிடலாம். இது மண்புழுக்களின் உற்பத்தியைப் பெருக்கும்.

மண்புழுக்கள் ஏதாவது நோய்களை பரவச் செய்யுமா?

மண்புழுக்கள் தாவரங்களுக்கு எந்த வித நோயையும் ஏற்படுத்துவதில்லை. மனிதர்களுக்கு அதனால் எந்த வித தீங்கும் விளையாது. உண்மையில் மண்புழு சித்தவைத்தியத்திலும் பயன்படுத்தப்படுகிறது. 

சாடி அல்லது தொட்டில்களில் மண்புழுவை விடலாமா?

தாராளமாக விடலாம். ஆனால் அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கும் பொழுது அவற்றை பொறுக்கி எடுத்து வேறு இடத்தில் விட வேண்டும். செத்துப்போன மண்புழுக்களை வெளியே எடுத்துப் போடத்தேவையில்லை. அவை மண்ணிலேயே மக்கி எருவாகிவிடும். நிலத்திலிருந்தும் நம்முடைய பயிர்த் தொட்டிகளிலிருந்தும் மண்புழுக்கள் ஊர்ந்து நம் வீடுகளுக்கு வந்துவிடுமா? மண்புழுக்கள் அவற்றுக்கான மக்குபொருள் உள்ள, ஈரப்பதம் உள்ள மண்ணிலேயே இருக்கும். ஆகையால் நம் வீட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. 

மண்புழு உடலில் துண்டிக்கப் பட்ட பாகங்கள் மறுபடியும் வளர்ந்து விடும். மண்புழுவின் ஒரே உடலில் இரு பாலின உறுப்புக்களும் இருக்கும். மண்புழுக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யச் செய்ய அவை முடிவடையாது. சார்ல்ஸ் டார்வின் சுமார் 44 வருடங்களாக மண்புழுக்களை ஆராய்ந்து புத்தகம் எழுதினார். (‘The Formation of Vegetable Mould Through the Action of Worms, with Observations on Their Habits). இந்தப் புத்தகம் இன்றளவும் அதிக அளவு விற்பனையாகிறது.

நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தின் வித்து!

இயற்கை விவசாயம் என்கிற ஜெயபேரிகையைக் கையில் எடுத்து கடந்த நாற்பதாண்டுகளாக தமிழ் மண்ணில் முழங்கிக்கொண்டிருந்த "இயற்கை வேளாண் விஞ்ஞானி" கோ.நம்மாழ்வார், இயற்கையோடு இயற்கையாகக் கலந்துவிட்டார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த நம்மாழ்வார், இளங்கலை விவசாயம் பயின்று, கோவில்பட்டி அரசு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் சிறிது காலம் பணியாற்றினார். 

இங்கு செய்யப்படும் ஆய்வுகள் எல்லாம் விவசாயிகளுக்குப் பலன் தராதவை என வெளிப்படையாக அறிவித்துவிட்டு, அரசுப் பணியை உதறித்தள்ளிவிட்டு முழுமையாக இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இரசாயனத்தில் விளைவிக்கப்படும் உணவுகள் அனைத்திலுமே நஞ்சு கலந்திருக்கிறது. இந்த உணவுகளை உட்கொள்வதால்தான் மக்கள் நோயாளிகளாகி சீக்கிரமே வாழ்வை இழக்கிறார்கள். இயற்கை விவசாயம்தான் ஆரோக்கியமான வாழ்வுக்குஉத்தரவாதம் அளிக்கும்" என்று நாடு கடந்தும் குரல் கொடுத்து வந்தவர் நம்மாழ்வார்.

விவசாயத்தை விவசாயிகளே வேண்டா வெறுப்பாக பார்த்த நிலையில் கணினி துறையில் பணியாற்றும் இளைஞர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகள்... என பல தரப்பினரையும் விவசாயத்தை நோக்கி μடி வரச் செய்தவர் நம்மாழ்வார். தமிழகம் மட்டுமன்றி உலக அளவில் பயணித்திருக்கும் நம்மாழ்வார், பல்வேறு பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள், போராட்டங்கள் என்று பலவற்றையும் முன்னெடுத்திருக்கிறார். குறிப்பாக, மரபணு மாற்றப்பட்ட விதைகள், பூச்சிக்கொல்லி நச்சுக்களை தயாரித்து சந்தைப்படுத்தும் அசுர பலமிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக விவசாயிகளைத் திரட்டி போராடியிருக்கிறார்.

இறப்பதற்கு முன்பாகக் கூட களத்தில்தான் நின்றிருந்தார் இந்தப் பசுமைப் போராளி! காவிரி பாசனப் பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. "இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், இங்குள்ள விளை நிலங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறிவிடும்" என பதைபதைத்து கொட்டும் பனியிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் கனமழையிலும் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தபோதுதான், பட்டுக்கோட்டை அருகே உள்ள பிச்சினிக்காடு கிராமத்தில் டிசம்பர் 30ம்தேதி இயற்கையோடு கலந்தார் நம்மாழ்வார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு பெண்மணி,  "அடி காட்டுல, நடு மாட்டுல, நுனி வீட்டுல... அது என்ன?" என்று நம்மாழ்வாரிடம் ஒரு விடுகதை போட்டாராம். இவருக்கு விடை தெரியவில்லை. "நெல்லுஅறுக்கும்போது அடிக்கட்டையை வயக்காட்டுலேயே விட்டுறோம். நடுவுல இருக்குற வைக்கோலை மாட்டுக்கு கொடுக்கிறோம். நுனியில இருக்குற நெல்லை வீட்டுக்கு எடுத்துட்டு போறோம்" என்று அந்தப் பெண் விடையைச்சொன்னபோது, நம்மாழ்வாருக்குள் இருந்த "இயற்கை விஞ்ஞானி" விழித்துக்கொண்டார். தனது இறுதிக்காலம் வரையிலும் இந்த "அடி, நடு, நுனி" தத்துவத்தை அவர் பரப்பினார்.

"யூரியா போட்டாத்தான் பயிர் வளரும்னு நம்ம விவசாயிகளிடம் மூட நம்பிக்கையை உருவாக்கிட்டாங்க. யூரியா மூட்டையில் '46 சதவிகிதம் நைட்ரஜன்'னு (தழைச்சத்து) எழுதியிருக்கான். ஆனால் நாம் பள்ளிக்கூடத்துல என்ன படிக்கிறோம்? வீசுற காற்றில் 78 சதவிகிதம் நைட்ரஜன் இருக்கு. காற்றுலயேஅவ்ளோ இருக்கும்போது எதுக்கு பொண்டாட்டி தாலிய அடகு வைச்சு யூரியா வாங்கிப்போடணும்? காற்றில் இருக்கிற தழைச்சத்தை இழுத்து மண்ணுக்குக் கொடுக்கிற தட்டைப்பயறு, உளுந்து, துவரை மாதிரியான பயறு வகைகளையும் நுண்ணுயிர்களையும் வளர்த்தாலே போதும்" - இப்படித்தான் இயற்கை விவசாயம் குறித்த பாடங்களை மிகவும் எளிமையாக நடைமுறை உதாரணங்களுடன் விளக்குவார். 

இயற்கை விவசாயம் உடனடிப் பயன் தராது. மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இரசாயன உரம் காரணமாக சீரழிந்து கிடக்கும் மண், பழைய பக்குவத்தை அடையவே பல ஆண்டுகள் ஆகும்" என்ற பிரச்சாரம் 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்தது. அப்போது வட இந்தியாவில் நடைபெற்ற இயற்கை விவசாயக் கருத்தரங்கில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த ஸ்ரீ பாத தபோல்கர் என்கிற கணிதப் பேராசிரியர் "அமிர்தபாணி" என்ற இயற்கை வளர்ச்சி ஊக்கியைப் பற்றி பரிந்துரைத்தார். அதாவது மாட்டுச் சாணம், மாட்டுக்கோமியம், வெல்லம் ஆகிய கலவையைத் தெளித்தால், பயிர்கள் மிக விரைவில் செழிப்புடன் வளரும் என்பதே அது. 

அதன் உபயோகம் பற்றி தபோல்கரிடம் மேலும் விசாரித்து தெரிந்துகொண்டு தமிழகம் திரும்பிய நம்மாழ்வார் 'அமிர்தபாணிக்கு' 'அமுதக்கரைசல்' என்று பெயர் சூட்டி தமிழ் நாட்டில் பரப்பினார். தமிழ்நாட்டின் மையத்தில், கரூர் மாவட்டம் கடவூரில், அவர் விரும்பி உருவாக்கி 'வானகம்' இயற்கைப் பண்ணையில்தான் விதைக்கப்பட்டிருக்கிறது நம்மாழ்வாரின் உடல்.

நன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Saturday, March 5, 2022

உணவுகளில் மனித முடியும் மிருக உரோமமும்


உங்கள் சாப்பிடும் உணவில் மனித முடியும் உரோமமும் இருந்தால் உங்களால் அந்த உணவை உட்கொள்ள முடியுமா? பார்க்கவே அருவருப்பு கொள்ளாது அல்லவா? ஆனால், நீங்கள் சாப்பிடும் உணவுகளில் மனித முடியும் மிருக உரோமமும் உங்கள் கண்ணுக்குத் தெரியாத

உருவங்களில் ஒளிந்திருக்கின்றன. அந்தக் கண்ணுக்குத் தெரியாத பொருளின் பெயர் எல்-சிஸ்டின். பயனீட்டாளர்கள் அவர்களை அறியாமலேயே எல்.சிஸ்டினை உட்கொண்டு வருகின்ற காரணத்தால் மிருகம் சார்ந்த எல்-சிஸ்டின் உபயோகத்தை தடை செய்ய வேண்டும். மலேசியாவில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் எல்-சிஸ்டின் இருக்கின்றதா என்பதை லேபலில் குறிப்பிட வேண்டும்.

உணவு சட்டம் 1985ன் 11வது பட்டியலில், கோதுமை மாவில் எல்-சிஸ்டின் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ரொட்டி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அதிக புரதம் அடங்கிய மாவுகளிலும் எல்-சிஸ்டின் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 

மலேசிய உணவுகளான ரொட்டி, ரொட்டி சானாய், ரொட்டி ஜாலா, பூரி, பாவ் எல்லாமும் கோதுமை மாவில் தயாரிக்கப்படுகின்ற காரணத்தால் இவற்றில் எல்-சிஸ்டின் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன. எல்-சிஸ்டின் என்பது மனித மற்றும் மிருகத்தின் முடி, இறகு மற்றும் குளம்புகளிலிருந்து பெறப்படும் உணவு சுவைகூட்டுப்பொருளாகும். முஸ்லிம்கள் மற்றும் சைவ உணவுக்காரர்களுக்கு இந்தப் பொருட்கள் ஒவ்வாததாகும். 

ஷரியா சட்டதிட்டங்களின் படி ஒரு மனிதனின் எந்த உடல் பாகத்தையும் உட்கொள்வது ஹராம் ஆகும். ஆகையால் எல்-சிஸ்டின் தயாரிப்பில் மனித முடி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற காரணத்தால் அதன் பயன்பாடு சந்தேகத்திற்கு உரியதாகும்.

உணவு, மருந்து மற்றும் அழகு சாதனத் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அமினோ அமிலங்களில் எல்-சிஸ்டினும் ஒன்றாகும். உணவு தொழிற்துறையில் மாவைப் பதப்படுத்துவதற்காகவும், சுவையைக் கூட்டுவதற்காகவும் எல்-சிஸ்டின் பயன்படுத்தப்படுகிறது. மாவில் உள்ள

குளுட்டனை பிரித்தெடுப்பதற்காகவும் எல்-சிஸ்டின் பயன்படுத்தப்படுகிறது. இப்படிச் செய்யும்பொழுது மாவின் ஒட்டுத்தன்மை குறைந்து மாவு பிசையும் வேலை எளிதாகிறது. ரொட்டி தயாரிப்பின்பொழுது, மாவு பிசையும் நேரத்தைக் குறைப்பதற்காகவும், பிஸ்ஸா சுருங்கிப் போவதைத் தடுப்பதற்கும் எல்-சிஸ்டின் பயன்படுத்தப்படுகிறது. அதோடு சில வகை உணவுத் தயாரிப்புக்களில் இறைச்சி சுவையைக்கொண்டு வருவதற்காகவும் எல்-சிஸ்டின் பயன்படுத்தப்படுகிறது. எல்-சிஸ்டின் பலதரப்பட்ட உணவுப் பொருட்களில் இருந்தாலும் கூட, அவற்றை லேபலில் குறிப்பிடாத காரணத்தால் பயனீட்டாளர்களுக்கு எல்-சிஸ்டின் இருப்பதே தெரிவதில்லை. ஏனெனில் உணவு தொழிற்துறையினர். 

எல்-சிஸ்டினை உணவு சுவை கூட்டுப்பொருளாகப் பார்ப்பதில்லை. உணவுத் தயாரிப்பில் உதவும் துணை பொருளாகவே அதைப் பார்க்கின்றனர். உணவுத் தயாரிப்பில் உதவும் துணை பொருட்களை லேபலில் குறிப்பிட வேண்டியதில்லை என்று நம்முடைய உணவு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. 

உலகிலேயே ஆக அதிகமான எல்-சிஸ்டினை தயாரிக்கும் நாடு சீனா ஆகும். அதற்கு அனைத்துலக சந்தையில் அதிக கிராக்கி உள்ளது. 2012ல் மட்டும் சீனா 7,700 டன் எல்-சிஸ்டினை தயாரித்துள்ளது. இதில் 85 விழுக்காட்டினை தென்கிழக்கு ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்தது சீனா. சீனாவில் எல்-சிஸ்டின் மனித முடியிலிருந்தும் கோழிகளின் இறகுகளிலிருந்தும் பெறப்படுகிறது. 

எல்-சிஸ்டின் தயாரிக்கப் பயன்படுத்தப்படும்  பெரும்பாலான முடிகள் சீனாவின் முடி திருத்தும் நிலையங்களிலிருந்தும் சேகரிக்கப்படுகின்றன. இந்த முடிகள் உணவுகளில் மனித முடியும் மிருக உரோமமும் அமிலங்களில் கரைக்கப்பட்டு,குறிப்பிட்ட இரசாயனங்களின்துணை கொண்டு எல்-சிஸ்டினாகப் பிரித்தெடுக்கப் படுகின்றன. ஒரு டன் முடியிலிருந்து 100 கிலோகிராம் எல்-சிஸ்டினை உருவாக்க முடியும்.

1 கிலோகிராம் முடியிலிருந்து எல்-சிஸ்டினை பிரித்தெடுப்பதற்கு 27 கிலோகிராம் ஹைட்ரோகுளோரிக் அமிலம் தேவைப்படுகிறது. மனித முடியைத் தவிர்த்து, கோழி, வாத்து இறகுகள், மாட்டுக்கொம்பு மற்றும் பெட்ரோலியக் கழிவுகளிலிருந்தும் எல்-சிஸ்டின் பெறப்படுகிறது. 
இருப்பினும் இறகுகளிலிருந்தே எளிதில் எல்-சிஸ்டின் பெறப்படுகிறது.

எல்-சிஸ்டின் தயாரிப்பில் முக்கியம் இடம் வகிப்பது பன்றி முடி என்றுμர் அறிக்கை கூறுகிறது. சீன எல்-சிஸ்டின் விநியோகத்தில் 90% பன்றி முடியே மூலப்பொருளாக உபயோகிக்கப்படுகிறது. இதனோடு சேர்த்து இப்பொழுது சந்தையில் செயற்கை முறையிலான எல்-சிஸ்டின்களும் வர ஆரம்பித்துவிட்டன. 

மொத்த எல்-சிஸ்டினில் இவை 10% இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளன. மேற்குறிப்பிட்ட விபரங்களை வைத்துப் பார்க்கும்பொழுது எல்-சிஸ்டின் உபயோகம் முஸ்லிம்களுக்கும், சைவ உணவுக்காரர்களுக்கும் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். ஆகையால் மிருகம் சார்ந்த எல்-சிஸ்டினை தடை செய்யும் அதே வேளையில், உணவுகளில், மருந்துகளில், அழகு சாதனங்களில் இவை இருப்பதை லேபல்களில் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.

நன்றி
பினாங்கு பயனீட்டார் சங்கம்

"இந்த உலகத்தில் அமைதி மலர வேண்டும் என்று கேட்பேன்"



எழுத்தாளர் ஹெலன் கெல்லரால் பார்க்கவும் கேட்கவும் முடியாது. அவரைச் சந்திக்க ஒருவர் வந்தார். ஹெலன் கெல்லரிடம், "உங்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்று தரப்படுகிறது என்றால் அது என்னவாக இருக்க வேண்டும்?" என்று கேட்டார். கேள்வி கேட்டவரோ, பார்க்கும் திறனும் கேட்கும் திறனும் தனக்குத் தேவை என்று ஹெலன் கெல்லர் சொல்லுவார் என்று எதிர்ப்பார்த்தார். ஆனால் ஹெலன் கெல்லரோ, "இந்த உலகத்தில் அமைதி மலர வேண்டும் என்று கேட்பேன்" என பதில் சொன்னார்.

Friday, February 25, 2022

பூச்சிகளை அழிக்க விஷப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மலேசிய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனர்.

 பூச்சிகளை அழிக்க விஷப் பூச்சிக்கொல்லிக்குளின் பயன்பாட்டை நிறுத்துமாறு மலேசிய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனர். பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பூச்சி விரட்டியைகளை  பயன்படுத்துவதால் நல்ல விளைச்சலை அதிகரிக்கும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

மலேசிய விவசாயிகள் தங்கள் விவசாய பண்ணையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பூச்சி விரட்டியைகளைப்  பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு ஒவ்வொரு பண்ணையிலும் மிகவும் முக்கியமான நன்மை பயக்கும் பூச்சிகளைக் குறைக்கிறது அல்லது அழிக்கிறது என பி.ப.சங்கத்தின் இயற்கை விவசாய பயிற்றுனர் என்.வி.சுப்பாராவ் கூறினார்.

பயிர் சூழலில் நன்மை செய்யும் பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயற்கை விவசாய முறைக்கு திரும்பினால் வயலில் நல்ல பூச்சிகள் அதிகரிக்கும். பூச்சிக்கொல்லிகள் பண்ணையில் வாழும் 60% நன்மை பயக்கும் அல்லது நல்ல பூச்சிகளைக் கொன்றுவிடுவதாக அவர் எடுத்துரைத்தார்.

அதிக விலை கொடுத்து இரசாயனங்களை வாங்கி, பிறகு லாபம் பெறாமல் பணத்தை இழக்கும் விவசாயிகள் அதிகரித்து வருகின்றனர். விவசாயிகள் அதிக லாபம் பெற வேண்டுமென்றால், அவர்கள் இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும் என்றார் சுப்பாராவ்.

எல்லா பூச்சிகளும் வில்லன்கள் அல்ல. பயிர்களில் பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார் அவர்.

வயல்களில் பயிர்களை தின்று மகசூல் இழப்பை ஏற்படுத்தும் பூச்சிகளால் விவசாயிகளுக்கு சிக்கல் உள்ளது.

இவற்றை தீங்கிழைக்கும் பூச்சிகள் என்கிறோம். அதே சமயம் சிலந்தி, குளவி, வண்டு, அந்துப்பூச்சி எனப் பல பூச்சிகள் நம் பயிரை உண்ணாமல் நமக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை மட்டும் பிடித்து உண்ணும்.

இவை அனைத்தும் நமக்கு நன்மை செய்யும் பூச்சிகள். நமது பயிரை உண்ணும் பூச்சிகள் இலையை சுருட்டிவிடும் அல்லது தண்டை கடிக்கும். அந்துப்பூச்சிகள், குளவிகள் மற்றும் சிலந்திகள் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் பயிருக்கு வெளியே சுற்றித் திரிகின்றன.

இச்சூழலில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வயல்களில் அடிக்கும் போது முதலில் நன்மை செய்யும் பூச்சிகள்தான் கொல்லப்படுகின்றன என சுப்பாராவ் எடுத்துரைத்தார்.

இது தவிர, உயிர்வாழ நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு ஏற்ற தன்மை பூச்சிகளுக்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு அதிகரித்துக் கொண்டே போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பூச்சிக்கொல்லிகள் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கின்றன, அவை, அனைத்தையும் உரமாக்கும் சிறப்பு திறன் கொண்டவை. இதனால், பூச்சிக்கொல்லிகளின் வீரியம் அதிகரிப்பதால், அந்த வயல்களில் விளையும் உணவை உண்ணும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பல புதிய நோய்கள் ஏற்படுகின்றன.

மறுபுறம் பயிர் பூச்சிகள் அதிகரித்து வருகின்றன. அப்படியானால் பூச்சிகளைக் கட்டுப்படுத்த என்ன வழி? முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்றார்கள். அதேபோல், பூச்சிகளை பூச்சிகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.

நமது வயல்களில் போதுமான அளவு பூச்சிகள் இருக்க வேண்டும். அப்போது, ​​பயிர்களை உண்ணும் பூச்சிகளை, நன்மை செய்யும் பூச்சிகள் பிடித்து உண்ணும். இதனால் பூச்சிகளின் இனப்பெருக்கம் இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படும்.

பூச்சிக்கொல்லிகளைத் தவிர்ப்பதன் மூலம் ஏற்கனவே வயல்களில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க முடியும். வயலில் மக்காச்சோளத்தை பயிரிடுவதன் மூலம் மஞ்சள் பூக்கள் கொண்ட சந்தன (மரிகோல்டு) செடியை நம் வயல்களுக்குள் பல நன்மை செய்யும் பூச்சிகளை ஈர்க்கலாம்.

தட்டையான பருப்பு வகைகளில் உள்ள அசுவினிகளை உண்பதற்காக ஏராளமான நன்மை செய்யும் பூச்சிகள் நம் வயல்களுக்குள் படையெடுக்கும். அசுவினியை சாப்பிட்ட பிறகு, நம் வயல்களில் பயிர்களில் மறைந்திருக்கும் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.

இதனால் நன்மை செய்யும் பூச்சிகள் எண்ணிக்கையை அதிகரித்து பயிர்களை அழிக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
வேப்பங்கொட்டை கரைசல், இயற்கை பூச்சி விரட்டி கரைசல் போன்றவற்றை பயிர்களின் மீது தெளிப்பதன் மூலம் பயிரின் இலைகளில் கசப்புத்தன்மையை உருவாக்கலாம். இதனால் கசப்புச் சுவையுள்ள பூச்சிகளை உண்ணாமல் தீங்கு செய்வது தவிர்க்கப்படும்.

இது மற்றொரு உத்தி. மேலும் மேடுகளில் ஜாதிக்காய் போன்ற செடிகளை வைப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் வயல்களுக்குள் வராமல் தடுக்கலாம்.

எனவே, நம் பயிர்களுக்குச் செல்லும் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

நன்மை செய்யும் பூச்சிகள் விவசாயிகளின் நண்பர்களாக இருந்தால் பரவாயில்லை. எனவே, பூச்சிகளும் நம் நண்பர்களே, ஏனென்றால் அவை நம் நண்பர்களான நல்ல பூச்சிகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை மிக அதிகமாக இருப்பதாக மலேசிய விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

இந்த விவசாயிகளுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அறிவுரை என்னவென்றால், நீங்கள் பணம் சம்பாதிக்க விரும்பினால், இயற்கை விவசாயத்திற்கு திரும்புங்கள்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை முறைகளைப் பயன்படுத்துவதால், விவசாயிகளுக்கு சாகுபடிச் செலவு குறைகிறது. மகசூல் இழப்பை தடுக்கலாம். வேம்புக் கரைசல், மூலிகைப் பூச்சிக்கொல்லிகள், ஐந்து இலைக் கரைசல், பச்சை மிளகாய்- இஞ்சிக் கரைசல் ஆகியவை பூச்சிகளை விரட்ட சோதனை செய்யப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளதாக சுப்பாராவ் கூறினார்.பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நூற்றுக்கணக்கானவிவசாயிகளுக்கு இந்த முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பூச்சி மேலாண்மை மூலம் வெற்றிகரமான விவசாயத்திற்குத் திரும்ப விரும்பும் விவசாயிகள் பி.ப.சங்கத்தின் இயற்கை விவசாயப் பயிற்சிகளில் பங்கேற்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நடைபெற்ற பூச்சி விரட்டி செயல் விளக்க பட்டறையில் மூன்று விதமான பூச்சி விரட்டி முறைகள் சொல்லித்தரப்பட்டன. இயற்கை வேளாண்மை பயிற்சியாளர்கள் மூலம் 3 வகையான பூச்சி விரட்டும் முறைகள் விவசாயிகளுக்கு செய்து காட்டப்பட்டது.

அவை 5 இலை கரைசல், இஞ்சி-பூண்டு கரைசல் மற்றும் இஞ்சி-பூண்டு, பெருங்காயம் கரைசல்.

இந்த முறைகள் அனைத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சியில், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் இயற்கை விவசாய பயிற்சியாளர்களான சரஸ்வதி தேஉடையார்,  தீபன் குணசேகரன் மற்றும் சிவானந்தன் ஆகியோர் இயற்கை பூச்சி விரட்டிகளைச் செயல் முறையில் செய்துக் காண்பித்தனர். பி.ப சங்கத்தின் சுங்கை சிப்புட் வட்டார பொறுப்பு அதிகாரி அ.மணிவேலு மற்றும் ஆறுமுகம் ஆகியோர் கலந்து சிற்ப்பித்தனர்.

நன்றி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Monday, February 14, 2022

கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்ற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அகல் விளக்குகளை ஏற்றங்கள். தெலுக் பஹாங் தெப்பத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள்.


எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படும் பினாங்கு தெப்பத்திருவிழாவின் போது பக்தர்களால் கடலில் விடப்படும்  மிதக்கும் அகல் விளக்குகளின் தட்டுக்கள், சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு இருக்க அங்கு வரும் பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என 4 பொது இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.  

பக்தர்கள் எந்தவிதமான செயற்கை நெகிழி தட்டுக்கள் அல்லது கடல் வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வர்ண தட்டுக்களும் பயன்படுத்த வேண்டாம் என 

பினாங்கு பயனீட்டாளர்  சங்கம், பினாங்கு மாநில பசுமைக் கவுன்சில், மலேசிய இந்து சங்கம் புக்கிட் பெண்டாரா பேரவை, மற்றும் ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் கோயில் நிர்வாகம், தெலுக் பகாங் ஆகியவை கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. 

மாசி மக தெப்ப திருவிழா இந்த ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி பினாங்கில் உள்ள தெலுக் பஹாங்கில் கொண்டாடப்படும் ஒரு மிதக்கும் தேர் திருவிழாவாகும்.

தெலுக் பகாங்கில் உள்ள 115 ஆண்டுகள் பழமையான சிங்கமுக காளியம்மன் கோவிலில் கொண்டாடப்படும் மிதக்கும் தேர் ஊர்வலம் ஒரு கடலோர திருவிழாவாகும், இது கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.

இத்திருவிழாவின் போது கோயில் தெய்வங்களை ஏற்றிக்கொண்டு விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மிதக்கும் தேர் கடலில் உலா செல்லும். 

இது இக்கோயிலின் பாரம்பரியமாக இருந்து வருகிறது; ரத யாத்திரையின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலங்காரம் செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவர்.

அலங்கரிக்கப்பட்ட அகல் கடலில் பக்தர்களால் விடப்படும். முன்பு இந்த அகல் விளக்குகள்  ஸ்டைரோஃபோம் மற்றும் பாலிஸ்டிரீன் போன்ற நெகிழியால் செய்யப்பட்டதாக இருந்தன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக நெகிழி தட்டுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்த காரணமாக நெகிழி தட்டுக்களின் பயன்பாடு குறைந்து உள்ளது என இந்த பிரச்சாரத்திற்கு பொருப்பு ஏற்றுள்ள என் வி சுப்பாராவ் தெரிவித்தார்.

மிதக்கும் ஸ்டைரோஃபோம் மற்றும் பாலிஸ்டிரீன் ஆகியவை கடல் நீரில் எளிதில் பயணிக்கின்றன. கடந்த காலங்களில், நூற்றுக்கணக்கான செயற்கை நுரை அடிப்படையிலான பொருட்கள் ஊர்வலம் முடிந்த மறுநாள் கடலில் மிதப்பதைக் காண முடிந்தது. நுரை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல் மாசுபடுத்தும் முக்கிய காரணிகளாக அறியப்படுகின்றன, அவை கடல் உயிர் இனங்களை அச்சுறுத்துகின்றன.

ஸ்டைரோஃபோம் மற்றும் பாலிஸ்டிரீன் ஆகியவை மக்கும் தன்மையற்றவை மற்றும் சிறிய துண்டுகளாக உடைந்துவிடும். இவை மீன் மற்றும் ஆமைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்களால் உணவாக தவறாக உட்கொள்ளப்படுகின்றன என்றார்  சுப்பாராவ்.

கடல் மாசுபாடு மற்றும் கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளின் விளைவாக பாலிஸ்டிரீன் மற்றும் பிளாஸ்டிக் அடிப்படை பொருட்களைத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றன. 

அகல் விளக்குகள் சுமார் இரண்டு முதல் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர்  வாழை மரத்தின் தண்டுகளின் அடுக்குகளில் பொருத்தப்பட்டன, அவை மிதக்கும் தன்மையைக் கொண்டுள்ளன, இறுதியில் அது கடலில் மக்கும். கோயில் நிர்வாகம் கடந்த ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளை ஊக்குவித்து வருகிறது,

ஆகவே, பினாங்கு பயனீட்டாளர் சங்கம், பினாங்கு மாநில பசுமை கவுன்சில்,  மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டாரா பேரவை  மற்றும் கோவில் நிர்வாகத்துடன் இணைந்து பாக்கு மரத்தட்டு, மற்றும் வாழை மரத்தின் தண்டுகள் போன்ற பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளுக்குச் செல்லுமாறு பக்தர்களை வலியுறுத்துகிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறைகளுடன் கூடிய பக்திச் செயல் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் அதே வேளையில், மிதக்கும் திருவிழா மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என அந்த 4 பொது இயக்கங்கள் கூட்டாக வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளன. 


பினாங்கு பயனீட்டாளர் சங்கம் | 
பினாங்கு பசுமை கவுன்சில் | 
பினாங்கு இந்து சங்கம் புக்கிட் பெண்டேரா பேரவை |               
ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் கோயில் தெலுக் பகாங்

Sunday, February 13, 2022

புறாக்களின் இறகுகளில் வானவில் சாயம் பூசுவதை நிறுத்துங்கள். பொதுமக்களும் அவற்றை வாங்ககூடாது. பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்.

 

கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் அருகே ஒரு வியாபாரி, தான் விற்கும் புறாக்களின் இறகுகளின் மீது வானவில் தோற்றத்தில் சாயங்களை பூசி விற்று வரும் செயலை பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது பிராணிகள் மீது காட்டப்படும் ஒரு வன்முறை என அந்த இயக்கத்தின் தலைவர் மீனாட்சி ராமன் அதிருப்தி தெரிவித்தார்.

புறாக்களுக்கு இயற்கையாகவே தனது உடல் முழுவதும் வர்ணங்கள் உள்ளன.

ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வியாபார நோக்கத்தில் அதனை விற்பனை செய்வோர் வானவில் தோற்றத்தில் ரசாயனங்கள் கொண்ட சாயங்களை புறாக்களின் இறகுகளில் பூசி விற்பது புறாக்களின் உரிமைகள் மீது மீறுகின்ற செயலாகும் என மீனாட்சி கூறினார்.

எதற்கு புறாக்களின் இறகுகளில் சாயம் பூச வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.

மனிதர்கள் தங்களின் முடி, மீசை அல்லது தாடிக்கு சாயங்களை பூசிக்கொள்ளலாம். ஆனால் புறாக்களின் இறகுகளின் மீது சாயங்கள் பூச இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது.

இயற்கையான சூழலில் பறந்து சுற்றித்திரியும் புறாக்களின் மீது செயற்கையான சாயங்களை பூசி அவற்றின் வாழ்வை நாம் கொன்று விடுகின்றோம் என்றார் அவர்.

செயற்கை வர்ணங்களை அவற்றின் இறகுகளில் பூசுவதால் சாயம் பூசப்படாத மற்ற புறாக்களுக்கும் இவற்றிர்க்கும் இடையே உள்ள இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது. சாயம் பூசப்பட்ட புறாக்கள் மற்ற புறாக்களோடு சேருவதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

புறாக்களின் மீது ரசாயனம் கொண்ட சாயங்களை பூசுவது என்பது ஒரு துன்புறுத்தும் செயலாகும்.

டிவிஎஸ் எனப்படும் கால்நடை சேவை இலாகா இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்ல பிராணிகளை வளர்ப்போர், மிருக நலச் சட்டம் 2015(விதி 722) கீழ் தாங்கள் வளர்க்கும் பிராணிகள் நலமுடன் இருக்க பொருப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கால்நடை இலாகாவிற்கு உரிமை உண்டு என மீனாட்சி தெரிவித்தார்.

இப்படி பலதரப்பட்ட வர்ணங்களில் புறாக்களின் இறகுகள் மீது சாயங்களை பூசி விற்பதை வியாபாரிகள் நிறுத்தி கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் புறாக்களை தங்களின் செல்லப் பிராணிகளாக வளர்க்க விரும்புவோர், வானவில் தோற்றத்தில் பூசப்பட்ட புறாக்களை வாங்க வேண்டாம் எனவும் புறாக்களை இயற்கையோடு வாழ வழி விட வேண்டும் எனவும் மீனாட்சி ராமன் கேட்டுக்கொண்டார்.

நன்றி
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்
பினாங்கு

மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க போடப்பட்டுள்ள் கற்களால் அதிக சிரமம்!

 

பினாங்கு கடற்கரையில் நடப்போருக்கு ஆபத்து. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை.

பினாங்கு பத்து பிரிங்கி கடற்கரையோரத்தில் அதி வேகமாக வரும் கடல் நீரின் சீற்றத்தால் பல விடுதிகளுக்கு அருகிலுள்ள, மண் சுவரில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பெரிய அளவிலான பாராங் கற்கள் மண் சரிவு ஏற்படாமல் இருக்க பயன் படுத்தப் பட்டு வருகிறது

ஆனால் வேகமாக வரும் கடல் அலையால் அந்த கற்கள் மீண்டும் கரைக்கு வந்து சேர்ந்து விடுவதால், கடற்கரையில் நடப்போருக்கும், குளிப்போருக்கும் அதிக ஆபத்தை தருகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி ஆய்வுப் பிரிவு அதிகாரி என் வி சுப்பாராவ் கூறினார்.

கடந்த சில மாதங்களாக இந்த மண் அரிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது.

பருவ நிலை மாற்றத்தின் காரணமாக கடல் நீரின் அளவு உலகெங்கிலும் உயர்ந்து கொண்டே வருகிறது என்றார் சுப்பாராவ்.

இதன் காரணமாக பத்து பெரிங்கின் கடலின் நீர் அதிகரித்து வரும் வேளையில், கடல் அலையும் வேகமாக உள்ளது.

இதனால் கடற்கரை ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. பத்து பெரிங்கி கடற்கரை ஓரத்தில் இருந்த ஏறக்குறைய 20 தென்னை மரங்கள் கடல் நீரின் அதி வேகத்தால் சாய்ந்து விட்டதாகவும் சுப்பாராவ் தெரிவித்தார்.

மண் அரிப்பு மேலும் ஏற்படாமல் இருக்க சில தங்கும் விடுதிகள் மிகப் பெரிய பாரங்கற்களை கொண்டு வந்து வைகின்றார்கள்.

ஆனால் கடலிலிருந்து வரும் நீர் இந்த கற்களின் மீது பாய்ந்து, அக்கற்களை மீண்டும் கடலுக்கு இலுத்து சென்று விடுகிறது. கடலுக்கு செல்ல முடியாத கற்கள், நடைபாதயில் தங்கி விடுவதாக சுப்பாராவ் கூறினார்.

இதன் காரணமாக, கடற்கரை ஓரம் நடப்பவர்களுக்கும், காலை மாலையில் உடற் பயிற்சி செய்வோருக்கும் நட பாதையில் இருக்கும் கற்கள் ஆபத்தை தருகின்றன.

பலர் இது குறித்து தங்களிடம் புகார் செய்திருப்பதாக அவர் கூறினார்.

ஆகவே மண் அரிப்பு மேலும் தொடராமல் இருக்க பாராங் கற்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மாற்று வழிகளை பின்பற்ற வேண்டும்.
மண் சுவர்களில் இரும்பு கம்பிகளால் தடுப்பு சுவர் எழுப்பலாம் என அவர் சிபாரிசு செய்தார்.

இன்னும் பல நூறு தென்னை மரங்கள் கடலோரம் இருக்கின்றது. மேலும் மண் அரிப்பு ஏற்பட்டால் இவையும் சாய்ந்துவிடும்.

ஆகவே பொதுமக்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் அதிக எண்ணிக்கையில் வரும் பத்து பெரிங்கியில் நிகழும் மண் அரிப்பு சம்பவங்கள் தொடராமல் இருக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சுப்பாராவ் கூறினார்.

நன்றி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Sunday, February 6, 2022

நச்சு புகையின் எதிரொலி 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம் 10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.

பத்திரிகை செய்தி. 18.2.21

நச்சு புகையின் எதிரொலி - 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம்
10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. 10 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் முககவரி அணிவது அவசியம்.

300 மீட்டர் பூமிக்கு அடியில் இன்னும் தீ எறிந்து கொண்டுள்ளது. அவசர பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும்படி பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்!

நிபோங் திபால் அருகே உள்ள பூலாவ் பூரோங் குப்பை கிடங்கில் ஏற்பட்ட மிக மோசமான தீ இன்னும் அணைக்கப்படாமலிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கவலை தெரிவித்துள்ளது.

குப்பைகிடங்கிலிருந்து எறியும் தீயினால் வெளியாகும் நச்சு புகை ஆபத்தை கொடுக்கும் என்ற காரணத்தால் அந்த பூலாவ் பூரோங் பகுதியை சுற்றியுள்ள 3 தமிழ் பள்ளிகள் உட்பட 10 பள்ளிக்கூடங்கள் வெள்ளிக்கிழமை வரையில் மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் என் வி சுப்பாராவ் தெரிவித்தார்.


இந்த நச்சு புகை சிறார்களை கடுமையாக பாதிக்கும் என்ற காரணத்தால், நிபோங் திபால் தமிழ் பள்ளி, ஜங்காட் தோட்ட தமிழ் பள்ளி மற்றும் பைராம் தோட்ட தமிழ் பள்ளி உட்பட 10 பள்ளிக்கூடங்கள் வரும் வெள்ளிக்கிழமை வரையில் மூடும்படி மாநில 

இதிலிருந்து, குப்பை கிடங்கிலிருந்து வெளியாகும் புகை எவ்வளவு நச்சு வாய்ந்தது என தெளிவாக தெரிகிறது என்றார் சுப்பாராவ்.

கடுமையான காற்றின் வெளிப்பாடு வழிகாட்டின் நிலை குறித்து கண்டறியப்பட்ட விபரத்தில் இப்பகுதியில் வெளியாகும் காற்றின் அளவு 3யை எட்டியுள்ளது.

இங்கு சுற்றி வசிப்போரின் ஆரோக்கியத்திற்கும்,உயிருக்கும் இது ஆபத்தை தரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுமார் 400 பேர் இவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்த ப்பட்டுள்ளனர் என்பதை சுப்பாராவ் சுட்டிகாட்டினார்.

பூலாவ் பூரோங் குப்பைகிடங்கின் மொத்த அளவு 16 எக்டர். தீ ஏற்பட்ட பகுதியின் அளவு 6.5 ஏக்டர். அங்கு கொட்டப்பட்ட குப்பைகள் 15 லிருந்து 20 மீட்டர் ஆழத்திற்கு சென்றுள்ளது. ஏற்பட்ட தீயும் அந்த ஆழத்திற்கு சென்றுள்ளதால், தீயணைப்பு வீரர்கள் கடுமையான சவாலை எதிர்நோக்கி வருகின்றனர்.

தீயணைப்பு இலாகா 25 க்கும் மேற்பட்ட இயந்திரங்களை இங்கே பயன்படுத்தி வருகின்றனர். இங்கே நச்சு உமிழப்படுகின்றது. இது நிறுத்தப் பட வேண்டும்.

புலாவ் பூருங் குப்பைக் கிடங்கில் தீ இன்னும் நிலத்தடியில் எரிந்து கொண்டிருப்பது கவலை தருகிறது.  இருப்பினும் மேற்பரப்பில் உள்ள தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த குப்பை கிடங்கு கடந்த ஆண்டு பலமுறை தீப்பிடித்து எரிந்ததாகவும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் குப்பை கிடங்கில் இருந்து சாயக்கழிவுகள் பெருக்கெடுத்து ஓடுவதாக புகார்கள் வந்ததாகவும், இதனால் இங்குள்ள நீர்நிலைகள் மாசுபடுவதுடன் அருகில் உள்ள சதுப்புநிலக் காடுகளுக்கும் சேதம் ஏற்பட்டது என்பதை சுப்பாராவ் சுட்டிகாட்டினார்.

நாட்டிலேயே அதிக மறுசுழற்சி விகிதங்களைக் கொண்ட மாநிலமாக பினாங்கு விளங்குகிறது. நச்சுத்தன்மை கொண்ட பறக்கும் சாம்பல் அபாயகரமான கழிவுகள் என வகைப்படுத்தப்படுகிறது என்பதையும் சுப்பாராவ் தெரிவித்தார்.

அலட்சிய போக்கை கடைபிடித்த குப்பைகளை கையாளும் நிறுனத்தின் உரிமம் பரிக்கப்பட வேண்டும் என சுப்பாராவ் மாநில அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறினார்.

என் வி சுப்பாராவ்
துணை பொதுச்செயலாளர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்
பினாங்கு

Saturday, January 15, 2022

நகர்புற விவசாயத்திற்கு அரசாங்கம் ஊக்குவிப்பு தர வேண்டும். நூருல் இசா அன்வார் வேண்டுகோள்.

 பத்திரிகை செய்தி 16.1.2022

பினாங்கு பயனீட்டாளர் சங்க பணிமனையில் செயல்படும் இரசாயனமற்ற நகர்புற விவசாயத்திற்கு அரசாங்கம் மேலும் ஊக்குவிப்பு தர வேண்டும் என பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா அன்வார் வேண்டுகோள் விடுத்தார்.

அதே நேரத்தில் பொதுமக்களும் இயன்ற வரையில் சுயமாக காய்கறிகள் நடுவதற்கு ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் நூருல் பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் முயற்சியில் செயல்படும் இரசானமற்ற நகர் புற விவசாய தோட்டத்திற்கு வருகை புரிந்து, நடைபெற்ற விவசாய பயிற்சியை தொடக்கிவைத்தபின் நூருல் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்

நாளுக்கு நாள் காய்கறிகளின் விலைகள் உயர்ந்து கொண்டே போகிறது. மலேசியர்கள் இந்த விலை உயர்வை சமாளிக்க முடியவில்லை.

அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறிய காரணமாக அவரவர் தங்கள் விருப்பம்போல் விலையை உயர்த்தி பயனீட்டாளர்களுக்கு மேலும் சுமையை தந்துவிடுகின்றனர் என்றார் அவர்.

மலேசியர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு சுயமாக சிறிய அளவில் காய்கறிகள் மற்றும் மூலிகைகளை நட வேண்டும் என நூருல் ஆலோசனை கூறினார்.

இதற்கிடையே இதே நிகழ்வில் பேசிய பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் நமது தற்போதைய விவசாயம் இரசாயன உள்ளீடுகளை பெரிதும் நம்பியுள்ளது என்றார். குறைந்த அளவிலான வெளிப்பாடுகளில் கூட, இந்த இரசாயனங்கள் பல மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அறிவியல் காட்டுகிறது. குறிப்பாக குழந்தைகளின் வளரும் மனம் மற்றும் உடல் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது என்றார்.

விவசாயத்திற்கான இரசாயனமற்ற அணுகுமுறைகள் சாத்தியமானவை மட்டுமல்ல, விவசாய உற்பத்தியின் பின்னடைவை வலுப்படுத்தும் என்பது தெளிவாகிறது.

இயற்கை மற்றும் இரசாயனமற்ற விவசாயம் விளைச்சலை நிலையான முறையில் அதிகரிக்கும், உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் என்றார். இதனை நாங்கள் நிரூபித்து உள்ளோம் என்றார்.

எளிய கொள்கலன்களில் வளர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் மூலிகைகள், இரசாயன எச்சங்கள் இல்லாத புதிய மற்றும் சத்தான விளைபொருட்களுக்கான குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதோடு அவர்களின் உணவுச் செலவுகளையும் குறைக்கும்.

இதை மழைநீர் சேகரிப்பு மற்றும் தோட்டம் மற்றும் சமையலறை கரிம கழிவுகளை உரமாக்குதல் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்க முடியும்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பள்ளித் தோட்டத் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. உணவு உற்பத்தியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், அவர்களுக்கு விவசாயம், நடைமுறை ஊட்டச்சத்துக் கல்வி மற்றும் அவர்களின் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் பயிற்சியும் அளித்துள்ளது என்றார் முகைதீன்.

விவசாயம் ஒரு சாத்தியமான வாழ்க்கைப் பாதை என்பதை குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே விதைப்பதே எங்கள் நோக்கம் என்று அவர் சுட்டிகாட்டினார்.
நாட்டின் விவசாய முறையை 100 சதவீதம் கரிமமாக மாற்றுவதற்கான இலக்கை 2011 இல் அறிவித்த சிறிய மலை நாடான பூட்டான் அதில் வெற்றி கண்டுள்ளது.

டேனிஷ் அரசாங்கம் முழு நாட்டின் விவசாயத்தையும் இயற்கை மற்றும் நிலையான விவசாயமாக மாற்ற பல வழிகளில் செயல்படுகிறது. 2015 ஆம் ஆண்டில், இயற்கை விவசாயத்தை இரட்டிப்பாக்குவதற்கும், 2020 க்குள் நாட்டின் பொது நிறுவனங்களில் அதிக இயற்கை உணவுகளை வழங்குவதற்கும் அவர்கள் ஒரு லட்சியத் திட்டத்தை வெளியிட்டனர்.

இந்தியாவில் சிக்கிம் இப்போது 100% கரிம மாநிலமாக உள்ளது, இரசாயன பூச்சிக்கொல்லிகள் அல்லது உரங்கள் இல்லை. ஒரு முழு பிராந்தியத்திலும் கரிம உணவு சாத்தியம் என்பதை இது காட்டுகிறது.

எனவே ரசாயனமற்ற நிலையான விவசாயத்திற்கான வலுவான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்த மலேசிய அரசாங்கத்தை பி.ப.சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் நூரூல் இசா அன்வார் இரசாயனமற்ற வெண்டைகாயை அறுவடை செய்ததோடு வருகை புரிந்ததற்கான அடையாளமாக தக்காளி செடியையும் நடவு செய்து நடை பெற்ற விவசாய பயிற்சியை தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பங்குகொண்ட சுமார் 40 பேருக்கு, பி.ப சங்கத்தின் என். வி . சுப்பாராவ், ஓ.சரஸ்வதி தேவி மற்றும் தீபன் குணசேகரன் ஆகிய மூவரும் பயிற்சி கொடுத்தனர்.

நன்றி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Wednesday, January 12, 2022

“வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்” வழிகாட்டிப் புத்தகத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியீடு செய்கிறது


 
வருடாந்திர பசுமை வாரத்தை அனுசரிக்கும் விதமாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இன்று 
“வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்” என்ற வழிகாட்டிப் புத்தகத்தை வெளியீடு செய்துள்ளது. இருபது பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம் முழு வண்ணத்தில் தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம் என்று 4 மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.

கோவிட் 19 பெருந்தொற்றின் காரணமாக வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில் பெரும்பாலானோர் சொந்தமாகக் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.  அரசாங்கம் மக்களைத் தங்கள் வீட்டுக்கு அருகாமையிலும் பயிர்களை வளர்க்கத் தூண்டுவதோடு நகர்ப்புற பயிர் வளர்ப்புத் திட்டத்தையும் ஊக்குவித்து வருகிறது.  

பயிர்களைப் பூச்சிகள் தாக்குவது இயற்கையே.  இதனைக் கையாளும் முறைகளை அறிந்திராத பயனீட்டாளர்கள், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண்பது எப்படி என்று தொடர்ந்து ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர். இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், பூச்சிகளை அழிப்பதற்காகப் பயனீட்டாளர்கள் நச்சு இரசாயனங்களை உபயோகிப்பதைத் தடுக்கும் பொருட்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இந்த  வழிகாட்டிப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.  பசுமை நடவடிக்கை வாரத்திற்கான கருப்பொருளும் இதுவேயாகும்.

நம் தோட்டத்திற்குள் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகள் மற்றும் இவற்றைப் பிடித்துத் தின்னும் நன்மை செய்யும் பூச்சிகள் ஆகியவற்றின் பங்கு பற்றி இந்த வழிகாட்டி விவரிக்கிறது.  அதோடு, பூச்சிகளை விரட்டுவதற்காக நாமாகவே எப்படிச் சொந்தமாக பூச்சி விரட்டி கரைசல்களைத் தயாரிப்பது, நன்மை செய்யும் பூச்சிகளை எப்படி நம்முடைய தோட்டத்திற்குள் வரவழைப்பது என்றும் இந்த வழிகாட்டியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம், நிலைபேறான வாழ்க்கை முறை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் கூட்டாக இணைந்து செயல்படுதல் ஆகியவற்றை ஆதரிக்கும் பொருட்டும், விதைகளைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் தோட்டம் போடுதல் குழுமங்களை உருவாக்கி இயங்கி வருகிறது.  இதனோடு நின்றுவிடாமல், நச்சுத்தன்மையுள்ள, ஆபத்தான பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்யுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.  நம் எதிர்கால சந்ததியினர் நச்சுப் பாதிப்புகளுக்கு ஆளாகிவிடாமல் இருப்பதற்கு இது அவசியமாகும் என்றார் முகைதீன்.

உலகம் முழுக்க பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிளைபோசேட் மற்றும் கிளைபோசேட் சார்ந்த களைக்கொல்லிகளைத் தடை செய்யுமாறு கடந்த வாரம் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை மனு ஒன்றினைச் சமர்ப்பித்தது. இந்த வேளாண்-இரசாயனங்கள் யாவும் உயிரினங்களையும், சுற்றுச்சூழலையும் தொடர்ந்து நச்சுத்தன்மைக்கு உள்ளாக்கி வருகின்றன.  இந்த நச்சுகளைப் பயன்படுத்துவதை நாம் நிறுத்த வேண்டும்.  அதனோடு இவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதற்கும் கோரிக்கைகளை விடுக்க வேண்டும்.

உலகில், பெரும்பாலான பயிர்களுக்கான மகரந்தச் சேர்க்கை இயற்கை முறையில் பூச்சிகளாலேயே செய்யப்படுகின்றன. பூச்சிக்கொல்லிகள் தொடர்ந்து பயன்படுத்தப் படுமேயானால், நாம் நன்மை செய்யும் பூச்சிகளையும் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளையும் கொன்று நம்முடைய உணவுத் தேவைக்கு நாமே உலை வைத்துவிடுவோம்.

உணவுப் பாதுகாப்பும், தங்குத் தடையின்றி உணவு கிடைப்பதும் நம் வாழ்வின் தேவையாகும்.  நமக்குத் தேவையான பயிர்களைச் சொந்தமாக வளர்ப்பதே இதனை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளும் வழியாகும்.  பகிர்ந்து வாழ்ந்த நம்முடைய பாரம்பரிய வாழ்க்கை முறையை திரும்பக் கொணரவும், நம் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள நாமே பயிர் செய்யவும், நாம் உற்பத்தி செய்யும் காய்கறிகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும், பயிரிடுதல் தொடர்பாக நம்மிடமுள்ள தகவல்களைப் பகிரவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தோடு இணைந்து செயல்படுங்கள்.  



தொடர்புக்கு : CAP MARKETING SECTION :  04-8283511
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்


Attachments area

Saturday, January 1, 2022

 

அவரும் நானும்....

ஒத்தநாடி உடம்பு,  வைரம் பாய்ந்த உறுதி, கடல் அளவு அறிவும் மண் போன்ற எளிமையும், விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை என வாழ்நாள் முழுதும் பாடுபட்ட இயற்கை மைந்தர் கோ.நம்மாழ்வாரின் நினைவு நாள் இன்று.  

இந்தப் பச்சை மனிதருடன் பயணித்த பேறு இன்றளவும் பசுமையாய் உள்ளது. நம்மாழ்வார் அவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு முதன் முறையாக வருகை  புரிந்த போது அவரைக் கண்டு நெகிழ்ந்த தருணங்களின் ஈரம் நித்தியமானவை. இங்கு அவர் வழங்கிய பயிற்சி பட்டறைகளின் வழி பெற்ற அனுபவமும் அறிவும் ஈடு அற்றவை. 

மேலும்,  2012-ல் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின்  ஏற்பாட்டில்  தமிழகப் பயணத்தின் போது இயற்கை நாயகனுடன் மீண்டும்  ஒரு பொன்னான நாள். அவருடன் கழிந்த பொழுதுகள் எங்களின்  வேளாண்மைக்கான தேடலுக்குப் பதில்களாய் அமைந்தன. ஆனால், அதுவே எங்களின் இறுதி சந்திப்பாக அமைந்தது. 8 ஆண்டுகள் கழிந்திருந்தாலும் அவரின் வழிகாட்டலும் அவரது குழந்தைச் சிரிப்பும் அழகு பேச்சும் என்றும் மனம் விட்டு நீங்காதவை.

இயற்கையை நேசிக்கும்  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நாம்மாழ்வார் வாழ்கிறார். இயற்கைக்கு இயற்கையே உரம்.  அவரது எளிய புன்னகையின் புள்ளி மண்ணின் நலத்திலும் வளத்திலும் காண்போம்.

தீபன் குணசேகரன்
Theeban Gunasekaran