Showing posts with label தமிழ் / Tamil. Show all posts
Showing posts with label தமிழ் / Tamil. Show all posts

Monday, November 10, 2008

தாய்மொழிவழிக் கல்வி : தமிழால் இயலாது என்பது தவறு.

ஒவ்வொருவருக்குமான முதன்மையான அடையாளம் என்பது அவரவர் தாய்மொழியால் பெறப்படுவதே ஆகும். குழந்தை தாயின் கருப்பையி லிருக்கும்போதே மொழியைக் கற்கத் தொடங்கி விடு கிறது. எனவே உலகின் அறிவுத் துறைகள் யாவற்றை யும் எந்தெந்த மொழிகளின் வழியாகப் பெற்றாலும் சிந்தனை என்பது தம் தாய்மொழி வழியாகவே அமையும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவேதான் உளவியலறிஞர்களும் மானுடவியலாளர் களும் கல்வி என்பது அவரவர் தாய்மொழியில் அமைந் தால் மட்டுமே கல்வியின் முதன்மை நோக்கமாகிய சிந்தனைத்திறன் வளர்ச்சியும் படைப்பாற்றல் மேம் பாடும் நிகழும் என்கின்றனர். சிந்திப்பது ஒரு மொழி யிலும், கல்வி கற்றலென்பது ஒரு மொழியிலுமாக அமைவது அறிவியல் அடிப்படையிலேயே தவறானது.

குறிப்பாகத் தமிழகத்தின் பெரும்பான்மைப் பெற்றோர்கள், தாம் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் சிறப்பான முறையில் கல்வி பெற்றுயர்ந்ததை உணர்ந்தும் கூட, ஆங்கிலமோகம் கொண்டவர்களாகவே இருப்பது தமிழகத்தின் அவலச் சூழல்.

ஆங்கிலம் பயிலல் என்பது வேறு. ஆங்கிலத்தின் வழியாகப் பயிலுதல் என்பது வேறு. பிற மொழிகளைக் கற்றுக் கொள்வது என்ற நோக்கில் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் வயது, கற்றல் வேகம், சூழல் சார்ந்து கற்றுக் கொள்வதென்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் அடிப்படையான அறிவு வளர்ச்சிக்கான பாடங்கள் யாவற்றையும் எந்தக் காரணகாரியங்களும் இன்றி ஆங்கில வழியாகவே (ஆநனரைஅ டிக நுபேடiளா) பயின்றால் தான் அறிவு வளரும் என்பதான பெற்றோர்களின் எண்ணம் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. ஆங்கிலம் என்பதனை அறிவின் மொழியாகவும் உலகின் அறிவுப்புலங்களுக்கெல்லாம் அதுவே வாயி லாகவும் எண்ணிக்கொள்கிற பல பெற்றோர்கள், தன் குழந்தை குறித்து ‘பிற பாடங்களெல்லாம் நன்றாகப் படிப்பான். ஆங்கில வழியிலேயே படித்ததால் தமிழ் தான் சரியாக வருவதில்லை’ என்று சொல்லிக் கொள்வ தில் பெருமையடைகிறார்கள்.

இன்றைக்கும் பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, கியூபா, சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆங்கிலேயர் ஆண்டு விடுதலை வழங்கிய பல நாடுகளிலும் அவரவர் தாய்மொழியில்தான் ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை வழங்கப்படுகிறது. இன்று உலகையே தன் தொழில்நுட்ப அறிவால் ஆளுகிற ஜப்பானிய விஞ்ஞானி கள் பலருக்கும் ஆங்கிலம் தெரியாது என்பது நாம் அறிய வேண்டியது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் அளப்பரிய சாதனைகள் செய்து நோபல் பரிசு பெற்ற பல அறிஞர்களில்கூட ஆங்கிலம் தெரியாதவர் உள்ளனர். எனவே, ஆங்கிலப் புலமை என்பது அறிவின் அடையாளம் என்ற தவறான மனப்போக்கு மாற வேண்டும்.

நுண்ணிய நூல் பல கற்பினும் தத்தம்
உண்மை அறிவே மிகும்.
- என்ற வள்ளுவர் வாக்கை இப்போக்கில்கூடப் பார்க்கலாம்.

ஒரு குழந்தை இரண்டாவது மொழியாக ஆங்கி லத்தை மட்டுமல்ல வேறு எந்த மொழியைக் கற்க வேண்டுமானாலும் அது முதலில், தன் தாய்மொழியைச் சரியாகக் கற்று வளம் பெற்றால்தான் அந்த இரண்டா வது மொழியறிவையும் வெற்றிகரமாகப் பெறமுடியும். எனவேதான் உளவியல் மற்றும் மொழியியல் அறிஞர் கள் ஒரு குழந்தை தன் தாய்மொழியில் ஓரளவிற்குப் பயிற்சி பெற்ற பின்னர் பிறமொழி அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென்கின்றனர். ஆனால் இங்கோ அ, ஆவிற்கு முன் ஹ, க்ஷ, ஊ, னு அறிமுகப் படுத்தப் படுவதே கௌரவமாகக் கருதப்படும் சூழல். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பு வதைத் தடை செய்ய வேண்டும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வளர்ச்சியடையாத ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எழுதுவது, படிப்பது, கணக்கு சொல்லிக்கொடுப்பது தடை செய்யப்பட வேண்டும். பள்ளிப் பைகளின் எடை குழந்தையின் எடையில் பத்து சதவீதம் (10சதவீதம்) அதாவது 1 முதல் 1 1 /2 கிலோ வரை இருக்க வேண்டும் என்று இந்திய குழந்தைகள் மருத்துவக்கழகம் அறிவுறுத்துகிறது.

தட்பவெப்பச்சூழலுக்கு முற்றிலும் முரணான வகையில் கழுத்தில் இறுகும் பட்டையையும் (டை) காலுறையையும் (சாக்ஸ்) புதையடியையும் (ஷு) இறுக்கிக் கட்டி குழந்தையின் பிஞ்சு உடலும் மனமும் அரைவேக் காடாகும் வண்ணம் விலங்குகளை அடைப்பதுபோல் அள்ளிக்கொண்டு செல்லும் ஊர்திகளில் ஏற்றி ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்புவதில் அலாதி இன்பம் காண்கின்றனர் கற்றறிந்த பெற்றோர்கள்கூட.

பெரும்பாலும் தமிழ்வழிக்கல்வி என்பது கிராமப் புற ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கானது என்பது போலவும் ஆங்கில வழிக்கல்வி மேல்தட்டு மக்களுக் கானது என்பது போன்றதுமான மாயைச் சூழலைக் களையத் தற்போது சமச்சீர்க்கல்விக்கான முன்வைப்பு கள் மகிழ்ச்சி தருகிறன. பாமரனும்கூட தன் பிள்ளை ஆங்கில வழியில்தான் பயில வேண்டும் என்று முனைப்பு காட்டுவதுதான் தமிழ்ச்சமூகம் ஆங்கில மோகத்தின் வழி, மெக்காலே கண்ட கனவின் வழி மீண்டும் ஓர் அடிமைத்தனத்திற்குத் தயாராகிறது என்பதன் அடையாள மாகும்.

பல்லாண்டுகளுக்கு முன்பே கல்லணை கட்டிய சோழனின் தொழில்நுட்ப அறிவு இன்றைய பொறியியல் கல்லூரிகள் தந்ததா? கப்பல் கட்டிய அறிவு இங்கிலாந் தில் பெற்றதா? ஒவ்வொரு மொழியும் அவ்வினமும் அறிவுத் தோற்றவியல்( நுயீளைவநஅடிடடிபல) சார்ந்து தனக்கான அறிவுத்தேடலின் பயணப் பதிவை தத்தம் மொழியில் செய்திருக்கின்றன. அம்மொழியில் இன்றைய நவீனத் திற்கும் அதற்கு மேலுமான தொழில்நுட்ப அறிவு புதைந்திருக்கிறது.

அவ்வகையில் நம் செம்மொழித் தமிழால் மருத்துவம், அறிவியல், சட்டம், பொறியியல் கற்பிக்க இயலாது என்பது முற்றிலும் தவறானது. உயர்கல்வி யினைச் சிறப்பாகத் தமிழில் தர முடியும். கல்லூரிப் பாடங்களெல்லாம் ஆங்கிலத்தில் உள்ளன. எனவே தான் எங்கள் குழந்தைகளை ஆங்கில வழிப்பள்ளியில் படிக்க வைக்கிறோம் எனும் பெற்றோர்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். படித்த, சென்ற தலைமுறைப் பெற் றோர்களின் ஆங்கிலப் புலமை இத் தலைமுறையினரை விடச் சிறப்பாகத்தான் இருக்கிறது. அவர்கள் ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தவர்களில்லை. ஒரு மொழிப் பாடமாக மட்டும் ஆங்கிலத்தைப் பயின்றவர்கள்தான்.

உயர்கல்வி பெறும் பருவ வயதிற்கான கேட்டல், எழுதுதல், படித்தல், புரிதல் நிலை வளர்ச்சிவேறு.

“கல்விக்கு சரியான அடிப்படை ஒழுக்கத்தைக் கற்பிப்பதே. ஆங்கிலத்தில் எல்லா பாடங்களையும் போதிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு என் பிள்ளைகளை ஆப்பிரிக்காவில்கூட அனுப்பவில்லை. தாய்மொழி யில்தான் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும். எங்களோடு டால்ஸ்டாய் பண்ணையில் வாழ்ந்த குழந்தைகளுக்கு தமிழும், உருதும் சொல்லிக் கொடுப் பதை நான் ஏற்றுக்கொண்டேன்” (சத்தியசோதனை - 238) என்ற மகாத்மா காந்தியடிகளின் கூற்றிற்கேற்ப குழந்தைகளின் வாழ்வு செப்பமானதாக்க தாய்மொழி வழிக்கல்வியை நாடுவோம்.

மன்னார்குடி இரெ.இராசகணேசன்

Thursday, October 30, 2008

உலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள் 2

"வரலாற்று நூல்களே நமது கருவிகள்"
முனைவர் த. செயராமன் ஆய்வுரை


எழுத்தாளர்களின் சமூகக் கடமை கள் - வரலாற்று நோக்கில் என்ற தலைப் பில் - முனைவர் த.செயராமன் அவர்கள் ஆற்றிய உரையில் -

"எழுத்தாளர்கனின் சமூகக் கடமைகள் - வரலாற்று நோக்கில்" என்று பார்க்கும்போது வரலாற்று ஆய்வாளர்கள் தான் அந்த எழுத்தாளர்கள் என்று கூறி வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒரு பெரிய கடமை இந்த சமூகத்தில் காத்திருக்கிறது. வரலாற்று ஆய்வாளர்கள் தவறினால் இந்த சமூகம் அல்லல்படும்; ஒரு எழுத்தாளன் தனக்காக எழுதக் கூடாது என்றும் சமூகத்திற்காகத் தான் எழுத வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.

மனித சமூகத்தில் இந்த பதிவுகள் அடைந்து விட்ட மாற்றங்கள் தான் வரலாறாகப் பரிணமிக்கின்றன. வரலாறு என்பது ஒரு சமூகத்தின் கடந்த காலம், சமூகம் நடந்து வந்த பாதை. வளர்ச்சி-வீழ்ச்சி-அடைந்த காயங்கள் இவற்றை தான் வரலாறு காட்டுகிறது. வரலாறு தவறாகப் - பொய்யாகப் பதிவு செய்யப்பட்டு விட்டால் - அந்தச் சமூகம் என்றாவது ஒரு நாள் விழித்து எழும்/ தமிழினம் தேய்ந்து கொண்டிருக்கிற ஒரு இனம். அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிற இனம். வரலாறு என்பது இப்போது புறக்கணிக்கப்பட்டிக்கிறது.. தங்கள் கடமைகளிலிருந்து வரலாற்று ஆய்வாளர்கள் தவறி இருக்கிறார்கள் வரலாற்றை ஆட்சியாளர்களின் விருப் பத்திற்கேற்ப எழுதுவதும் - வீணான ஆய்வுகளிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்வதுமாக வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் பங்கை புறக்கணித்துக் கொண்டிருக் கிறார்கள்.

வரலாற்றை மாற்றி அமைத்தவர்கள் வரலாற்று ஆய்வாளர்களாகவே இருந் திருக்கிறார்கள் ஒருகாலத்தில் தெய்வீக உறவுகளில் நம்பிக்கை இருந்தது. மன்னன் என்பவன் இறைவழி வந்தவன் என்ற காலகட்டம் இருந்தது. அந்த வரம்பில்லா முடிமன்னர்களுக்கு சாவுமணி அடித்தவன் கூட ஒரு வரலாற்று அரசியல் ஆய்வாளன் தான். சான் லாக் என்கிற இங்கிலாந்தின் அரசியல் ஆய்வாளன். அரசுகள் பற்றிய ஆய்வுகள் என்ற நூலை 1889இல் எழுதி னான். அந்த நூலில் அரசன் என்பவன் வேலைக்காரன் தான். இந்த மக்கள் ஒரு சமூக ஒப்பந்தத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த மக்கள் அரசிடம் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறார்கள். அரசு என்பது வேலைக்காரன் தான். எசமானன் அல்ல, எப்போது இந்த அரசு மக்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யவில்லையோ அப்போது இந்த மக்கள் புரட்சி செய்யலாம் என்று புரட்சிக்கான உரிமையைப் பதிவு செய்து மக்களைச் சரியான திசையில் வழி நடத்தியவன் சான் லாக். அரசாங்கம் என் பது ஒரு இரவுக் காவல்காரன் போன்றவன். அவன் எசமானன் அல்லன். உங்களுக் கான நலன்களை உங்களால் தேர்ந்தெடுக்ப் பட்ட அரசு செய்யாவிட்டால் அந்த மக்க ளுக்குப் புரட்சி செய்யும் அதிகாரம் உண்டு.

சான் லாக் 17ஆம் நூற்றாண்டில் எழுதியதை நூறு ஆண்டு கழித்து சான் சபர்சன் என்பவன் அமெரிக்க விடுதலைப் போருக்கான புரட்சியைத் தன் எழுத்தினால் செய்தான். ரூசோ எழுதிய சோசியல் காண்ட்ராக்ட் என்ற நூலில் எல்லா மக்களும் தங்கள் பொது விருப்பத்தினை அளித்திருக்கிறார்கள். ஆகவே, எல்லா அரசாங்கங்களும் மக்களுக்குக் கீழ்ப்பட்டது தான் என்பதை எடுத்து வைத்தார். காட்டு மிராண்டிக் காலம் முதல் நிகழ்காலம் வரை அந்த சோசியல் காண்ட்ராக்ட் என்ற நூல் விளக்குகிறது. அதன் விளைவாகத் தான் பிரஞ்சுப் புரட்சி வெடித்தது என்றும் காரல் மார்க்சு எழுதியதும் ஒரு வரலாறு தான் அது அரசியல்-பொருளியல் ஆய்வு மட்டுமல்ல - வரலாற்றைப் பேசும் நூல், காரல் மார்க்சும் ஏங்கல்சும் அளித்த அந்த கம்யூனிச அறிக்கை ஒரு பெரும் வர லாற்றைப் பேசுவதாகவும் மனித சமுதாயம் சில விதிகளுக்கு உட்பட்டு வளர்வதாகவும் வர்க்கப் போராட்டமே சமூக மாறுதல் களுக்கு அடிப்படைக் காரணம் என்பதை காரல் மார்க்சு உணர்த்தினார் என்று கூறி சமூகம் தோன்றிய காலம் தொட்டு வரலாறு இருந்தது. வரலாறு வரலாறு என்று கடந்த காலத்தைச் சுட்டிக் காட்டுவதன் மூலமாக நிகழ்காலத்தை எதிர்காலத்தை நோக்கி நடத்திச் சென்று இருக்கிறார்கள் நமது முன்னோர்கள். ஆகவே வரலாறு என்பது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. இலெனின் கூறியது போல ஒரு புதிய உலக கண்ணோட்டத்தை வழங்கியது என்றார்.

கடந்த காலத்தில் சான் லாக், ரூசோ, ஏங்கல்சு, காரல் மார்க்சு ஆகியோர் எல்லாம் ஒரு வரலாற்றைத் தான் தங்கள் நூல்கள் மூலம் தந்திருக்கிறார்கள், அது தான் அந்த மக்களைத் தட்டி எழுப்பி அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்துச் சென்றது.

தமிழினம் என்பது ஒரு தேய்ந்த இனம். உலகினுடைய மூத்த குடி. தொன் மையான மொழி. சுமேரிய-எகிப்திய நாகரி கத்தை உருவாக்கிய மக்கள். நெசவு செய்ய - கப்பல் கட்ட கற்றுக் கொடுத்த மக்கள். இன்று உலகெங்கும் அகதிகளாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பதை நாம் கொஞ்சம் ஆலோசிக்க வேண்டும். இந்த நாட்டிலே பிரச்னைகளை வரலாற்று ஆய்வாளர்கள் தொட்டு மக்களுக்குக் காட்ட வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் இந்து-இந்துத்துவம்-பார்ப்பனியம், மூடத்தனம் இவற்றை எல்லாம் கண்டனம் செய்யவில்லை நாம். இது தான் நமது பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கிறது.

அப்படித் தான் இதுவரை நாம் எழுச்சி பெற்று வந்திருக்கிறோம். திடீர் என்று திராவிட இயக்கம் வந்துவிட வில்லை திடீரென தமிழினம் பீறிட்டு விடவில்லை. 1856இலே கால்டுவெல் என்கிற பாதிரியார் இங்கு வந்து ஒரு நூலை எழுதி அந்த நூலிலே அதுவரை அறியாத பல செய்திகளை அள்ளித் தந்ததன் விளைவாக திராவிட இயக்கம் துளிர்விட்டது, திராவிட மொழிகள் - வடமொழிக்கே அது மூலம் - திராவிடர்கள் சூத்திரர்கள் ஆக்கப்பட்ட வரலாறு இவற்றை எல்லாம் அறிஞர் கால்டுவெல் நமக்கு அவரது நூல் மூலம் கொடுத் துள்ளார். இந்த புதிய உணர்வு சினத்தோடு கூடிய போராட்ட உணர்வோடு தமிழினத் தின் கையிலே ஒரு புதிய கருவியாக வந்தது அதன் விளைவாகத் தான் சமூகத் தளத்தில் - அரசியல் தளத்தில் தமிழகம் முன்னேறியது. கால்டுவெல்லின் கருத்தை மக்களிடையே கொண்டு சென்றவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை.

வரலாற்றைத் தெற்கிலிருந்து தொடங்க வேண்டும் என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளை வலியுறுத்தினார் அவர் கள் எல்லாம் மொழியியல் ஆய்வாளர்கள். தொல்லியல் இதைவிடச் சிறந்தது. இவர் களின் அடியொட்டி அரப்பா, மொகஞ்ச தரோ ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சி நடந்து தோண்டி எடுக்கப்பட்டன. அப்போது தான் தமிழ் தான் மூலம் என்பதும் தமிழர்கள் தான் முன்னோடிகள் என்பதும் தெரிந்தது. 1926 முதல் பி.டி.சீனிவாச அய்யங்கார் என்ற அந்த வரலாற்று அறிஞர் அருமையான நூல்கள் பலவற்றை வழங்கினார். அதன் விளை வாகத் தான் இந்தத் தமிழினம் விழித்துப் பார்த்தது. மொழியியல் ஆய்வாளர்களைத் தொடர்ந்து வரலாற்று ஆய்வாளர்கள் சில செய்திகளை அகழ்வாய்வுத் துணையோடு நமக்கு அளித்த அடிப்படையில் ஆரிய - திராவிட இனங்கள் என்று இரண்டு மானிட இனங்கள் இங்கே இருந்தன என் றாலும் இந்தியத் துணைக்கண்டத்திற்கு அடிப்படை தமிழ்ப்பண்பாடு தான்; ஆரியர்கள் தான் தெற்கு நோக்கிப் பரவினர் என்றும் முதலில் தோன்றி சிறந்தது தமிழ்நாடு என்ற கருத்து எல்லாம் இதன் மூலம் வலியுறுத்தப்பட்டது. தென்னிந்தியாவின் பூர்வ குடிகள் தமிழர்கள். இவர்கள் தான் இங்கிருந்து வடக்கு நோக்கி நகர்ந்தார்கள் என்று பி.டிசீனிவாச அய்யங்கார் தான் முதலில் வெளிப்படுத்தினார் என்றாலும் கார்த்திகேய முதலியார் இதே கருத்தையும் பின்னர் சேஷ அய்யங்காரும் இதே கருத்தை வலியுறுத்தினார்கள். மத்திய தரைக்கடல் பகுதிக்குத் தமிழன் தான் பண்பாட்டை எடுத்துச் சென்றான் என்ற கருத்தை அவர் எடுத்துரைத்தார். அப்பொழுது ஏனைய அறிஞர்கள் என்ன கூறிக் கொண்டிருந்தார் கள் என்றால் மத்திய தரைக் கடல் பகுதி யிலிருந்து தமிழர்கள் இங்கே வந்து குடியேறினார்கள் - ஆரியர்கள் பின்னால் வந்த வந்தேறிகள் - தமிழர்கள் அதற்கு முன்னால் வந்தவர்கள் என்று பாடம் படித் துக் கொண்டிருந்தார்கள். அந்த கருத்தாக் கத்தைத் தகர்த்தவர்கள் தான் பி.டி.சீனிவாச அய்யங்கார், சேஷ அய்யங்கார், இராம சந்திர தீட்சிதர் அவர்களும். மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து தான் எல் லோரும் இங்கே வந்தார்கள் என்று அதற்கு முன்பு பாடம் படித்துக் கொண்டிருந்தபோது சேஷ அய்யங்கார் தான் ஏன் தமிழர்கள் இங்கே இருந்து அங்கே போய் பரவி இருக் கக் கூடாதா என்று கேட்டார். அது போலவே இராமச்சந்திர தீட்சிதர் தென் னாட்டு பழங்குடிகள் பற்றி ஆய்வு நூலை எழுதினார். அதில் இந்த மண்ணின் மைந் தர்கள் தமிழர்கள் என்பதை நிறுவினார் எனவும் தமிழர்கள் தெற்கிலிருந்து வட மேற்கு நோக்கி நகர்ந்து உலகின் பல பாகங்களிலும் பரவினர் என்றும் எழுதினார். இப்படிப்பட்ட வரலாறு என்பது சுயசரிதை அல்ல. வாழ்வின் பாற்பட்டது. மாந்தவியல் பற்றியது. மொழியின் அடிப்படையில் கட் டப்பட்டது. இந்த வரலாறு தான் தமிழ் உணர்வாளர்களுக்கும் திராவிட இயக்க உணர்வாளர்களுக்கும் வலுவான கருவி களைக் கையிலே தந்தன எனக் கூறி ஆரி யத்தையும் பார்ப்பனீயத்தையும் எதிர்த்துப் போராடுகிறோம் என்றால் வரலாற்று ஆய்வாளர்கள் தந்த இந்த கருவிகள் தான் அதற்குக் காரணம் என்றார்.

அதற்குப் பிறகு தேவநேயப் பாவாணர் மொழியைப் பற்றிய கருத்து களை நமக்கு போதித்தார். 35 நூல்கள் எழுதிய தேவநேயப் பாவாணர் மாந்தர் இனம் தோன்றியது குமரிக் கண்டம் - ஞால முதல் மொழி தமிழே - திராவிட மொழி களுக்குத் தாய் - வடமொழிக்கு அது தான் மூலம் என்பதைத் தெளிவாகத் தன் ஆய்வு மூலம் வெளிக் கொணர்ந்தார். அதைத் தொடரவில்லை - அந்த மரபைத் தொடர வில்லை நாம். தமிழ் மொழிக்காக இயற்றிய அந்தத் தலைமுறை அதோடு நின்று போனது.

இந்த தலைமுறை - இந்த வர லாற்று அறிஞர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சொன்னால் பட்டத்திற்காக பதவி களைக் குறி வைத்து ஆட்சியாளர்களின் மனத் திருப்திக்காக எழுதுகிறார்கள் இது தான் இன்றைய போக்கு; கடமை தவறக் கூடிய வரலாற்று அறிஞர்கள் வரலாற்றில் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் இவ்வளவு போராட்டங்களுக்கு இடையில் தான் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் வர லாற்று நூல்களை எழுதிக் கொண்டிருக் கிறார்கள் என்று கூறி தமிழர் பரவிய நாடுகள், தமிழன் இழந்த மண், உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்துமத பாசிசமும் போன்றவை எல்லாம் முழுமை யான வரலாற்று நூல்கள் என்று கூறினார். இப்படிப்பட்ட வரலாற்று நூல்கள் தான் நிலைக்கும்.

இந்த வரலாற்று நூல்கள் தான் நமக்கான கருவிகள் என்று கூறிய அவர் தமிழ் இனத்திற்கு அநீதி செய்து கொண்டு நெஞ்சுக்கு நீதி பற்றி எழுதிப் பயனில்லை என்றார். அது பயன்படாது. தமிழுக்கு அநீதி. அது ஒரு காலத்திலும் மக்களால் ஏற்கப்படாது. வரலாற்றை எழுதப் போகிறவர்கள் பா. விசய்யோ வாலியோ அல்ல. அவர்கள் அல்ல வரலாற்றை எழு தப்போகிறவர்கள். வரலாற்றை எழுதக் கூடிய வரலாற்று அறிஞர்கள் இதைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். வரலாறு எழுதப்படும். வரலாற்றில் தமிழ் இனத்திற்குத் துரோகம் செய்தவர்களுக்கு எட்டப்பனுக்குக் கிடைத்த நிலை தான் கிடைக்கும். கட்டபொம்மனுக்கு கிடைத்த புகழ் கிடைக்காது. இது தான் யதார்த்தம். இந்திய தேசியம் பொய் என்று இந்தியா என்று ஒரு நாடு இருந்ததே இல்லை என்று சொல்வதற்கு - இப்போதுள்ள வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதற்கு அச்சப் படுகிறார்கள். 1773க்கு முன்பு மையப்பட்ட அரசு முறை என்பதே - ஒழுங்குமுறைச் சட்டம் என்பதே வாரன் ஏஸ்டிங்க்சு கொண்டு வந்த ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு மையப்பட்ட ஒரு அரசே கிடையாது என்பதை வர லாற்று அறிஞர்கள் சொல்ல அஞ்சு கிறார்கள். அதற்கு முன் தமிழகம் இந்த இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததே இல்லை என்ற உண்மையான உயரிய கருத்தைச் சொல்ல அஞ்சுகிறார்கள். முதுகு சொரிந்து விட்டாவது துணை வேந்தர் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்போது வரலாற்று அறிஞர்களின் பங்காக இது தான் இருக்கிறது. தமிழக வரலாறு என்று சொன்னால் இந்தியாவின் ஒரு பகுதி தமிழகம் என்று ஆரம்பிக்கிறார்கள். இந்தியாவின் ஒரு பகுதியாகத் தமிழ கத்தைக் கருதுகிறார்கள். காட்டுகிறார்கள். அல்ல. இந்தியா என்பது இப்பொழுது உருவானது. ஆங்கிலேயர்களின் வாய் நுனியால் உருவாக்கப்பட்டது. இந்தி என்று ஒரு மொழி வந்து 450 ஆண்டுகள் தான் ஆகின்றன. ஆனால் தமிழ் மொழியின் வயதை நம்மால் அளவிட்டுக் கூற முடிய வில்லை. வரலாறு எழுதப்பட வேண்டும். பி.டி.சீனிவாச அய்யங்காரின் பணி தொடரப்பட வேண்டும். உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும். இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாக அல்ல.

----------

"யாருக்கும் தமிழர்கள் அஞ்சத் தேவையில்லை"
பழ. நெடுமாறன் தலைமையுரை


மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை

இன்று காலை தொடங்கி இந்நேரம் வரையிலும் மிகப் பொறுமையுடன் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்னும் இறுதியாக வாழ்த்தரங்கம் ஒன்று உள்ளது. இங்கே பேசிய அத்தனை நண்பர்களும் வெவ்வெறு வகையான சொற்களால் பேசினாலும் உணர்ச்சி ஒன்றாகத் தான் இருந்தது. உலகப் பெருந் தமிழர் விருதினைப் பெற்றிருக்கக் கூடிய இந்த அறிஞர் கள் இதை விடச் சிறப்பான விருதுகளைப் பெற்றிருக் கிறார்கள் என்பது வேறு - அரசாங்க விருது கிடைத் திருக்கிறது என்பது வேறு - இது மக்களால் அளிக்கப் பட்ட விருது - தமிழர்களால் அளிக்கப்பட்ட விருது. இவர் களைப் பெருமைப்படுத்தியதன் மூலம் நாம் பெருமைப்பட இருக்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது.

முன்னாலே பேசிய நண்பர்கள் வெவ்வேறு தலைப்பிலே உங்களுக்குப் பல விஷயங்களை மிக அழுத்தமாகப் பதிய வைத்தார்கள். நாம் ஒன்றுபட வேண்டும் - தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதுதான் எல்லோர் பேச்சிலும் ஒலித்தது. இன்றைக்கு தமிழினம் முக்கியமான காலகட்டத்திற்கு வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

ஒருகாலத்தில் பாராண்ட இனமாகவும் - ஒருகாலத்தில் தென்கிழக்காசிய நாடுகளை அடக்கியாண்ட இனமாகவும் - மேற்கே உரோமாபுரி கிழக்கே சீனா வரையிலும் பல நாடுகளுடன் வணிகம் நடத்தி செழுமை அடைந்த இனமாகவும் - நம்முடைய இனம் இருந்தது.

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள் இப்படிப் பல இலக்கியச் செல்வத்தை நிறையப் பெற்ற ஓர் இனமாக நம் இனம் விளங்கி வந்திருக்கிறது. எல்லாம் பழம் பெருமை. ஆனால் இன்றைக்கு நம் தமிழ் உலக அரங்கில் இடம் பெறத்தக்க நிலையை அடைந்திருக்கிறது. தமிழர்கள் - உலகத்தில் இருக்கக்கூடிய சிறந்த இனங்களில் ஒன்றாக ஆகி இருக்கிறார்கள். உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இருக்கிறது. கணினித் துறையில் ஆங்கிலத்திற்கு இணையாகத் தமிழ் வளர்ந்து இருக்கிறது. இன்னும் கொஞ்சம் காலம் கடந்தால் ஆங்கிலத்தைத் தமிழ் விஞ்சும் என்னும் நிலை வரும்.

தமிழின் மதிப்பு கூடக்கூட அதற்கேற்றபடி தமிழர்களும் உயர வேண்டும். தமிழர்களின் நிலையும் உயரவேண்டும். தமிழும் தமிழர்களும் இணைந்து உயர்ந்தால் தான் நமக்கு வாழ்வு. ஒன்று உயர்ந்து ஒன்று உயரவில்லை என்றால் நமக்கு வாழ்வில்லை. உலகம் முழுவதிலும் தமிழர் எல்லா நாடுகளிலும் வாழ்கிறார்கள். இதற்கு முன் பேசிய நண்பர்கள் உலகின் பிற நாடுகளில் உள்ள தமிழர்கள் பற்றியும் ஈழத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சிகள் பற்றியும் - சொந்த மண்ணில் வாழ முடியாத அகதிகளாக வாழ்கிற புலம் பெயர்ந்த தமிழர்களைப் பற்றியும் பேசினார்கள்.

இப்படி ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் - நம்முடைய தமிழ்நாட்டிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலேயர் களால் அழைத்துச் செல்லப்பட்டு, அடிமைகளாக உழைப்புச் சுரண்டப்பட்டு அதனால் ஆங்கிலேய வர்க்கம் கொழித்தது - அந்த வர்க்கத்திற்கும் இவர்களுக்கும் வேறுபாடு உண்டு. அதிலும் ரொம்ப முக்கியமானது என்று சொன்னால் 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் நம் தமிழ் நாட்டிலிருந்தும், இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், அதே போல மொரீசியசு, ரீயூனியன், மற்றும் தென்ஆப்ரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் இப்படி பலவற் றிலும் நம் தமிழர்கள் கப்பல் கப்பலாகக் கொண்டு போகப்பட்டார்கள்.

அதிலும் யார் குறிப்பாக வெள்ளையர் விரித்த வலையில் சிக்கியவர்கள் என்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த வலையில் சிக்கினார்கள். அக்கறைச் சீமைக்குப் போனால் நாம் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசையைக் காட்டி அவர்கள் ஏமாற்றப்பட்டு அழைத்துக் கொண்டு செல்லப்பட்டார்கள். அது ஒரு காரணம். இன்னொரு காரணம் சாதி ஒடுக்குமுறைத் தொல்லையிலிருந்து தப்பினால் போதும் என்று ஒடுக்கப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் வெளியேறத் துணிந்தனர்.

மேற்கண்ட நாடுகளில் எல்லாம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் பரவினார்கள். தங்கள் உழைப்பினால் அந்நாடுகளை வளம் கொழிக்கச் செய்தார்கள் என்பது தான் உண்மை. ஆனால் அதற்கு ஏற்றவாறு வாழ்க்கைத்தரம் உயர்ந்ததா என்றால் இல்லை. இன்றைக்கும் அந்த நாடுகளில் அவர்கள் வாழ்விற்காகப் போராட வேண்டிய காலகட்டத்தில் வாழ்கிறார்கள். அந்த தமிழ் மக்கள் 5-6 தலைமுறைகளாக அன்னிய மண்ணில் வாழ நேர்ந்த காரணத்தினால் அந்த மக்கள் தமிழை இழந்து கொண்டிருக்கிறார்கள். தென்ஆப்பிக்காவில் ஏறத்தாழ ஏழரை இலட்சம் பேர் வாழ்கிறார்கள். சில ஆயிரம் பேருக்குத் தான் தமிழ் தெரியும். ஆங்கிலம் தாய் மொழி ஆகிவிட்டது. மோரிசியஸ் வாழ் தமிழர்கள் பிரஞ்சு, கிரியோலி போன்றவற்றையும் பேசுகிறார்கள். தாய்த் தமிழகத்தின் அரவணைப்பு இல்லாமல் அவர்கள் எல்லாம் அங்கே மொழியையும், பண்பாட்டையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் மொழியை இழந்து இன்னும் தமிழர் என்னும் அடையாளத்தை இழக்க வேண்டிய அந்தக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இதே நேரத்தில் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் தங்கள் மொழியை-பண்பாட்டை- கலை-இசை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கிறார்கள். அக்கறையாக இருக்கிறார்கள் ஐரோப்பிய நாடுகளில் வாழக்கூடிய ஈழத் தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தாலும் கடின உழைப்பின் காரணமாக ஓரளவிற்கு நல்ல வாழ்க்கையைப் பெற்ற பிறகு திருப்தி அடையவில்லை. மாறாக தங்கள் மொழி - தங்கள் பண்பாடு நிச்சயமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் - குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தரப்பட வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கிறார்கள். இன்று அந்த நாடுகளிலே தமிழர்களும் தமிழ்க் குழந்தைகளும் மொழி, பண்பாடு ஆகியவற்றுடன் வாழ்வதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

அதே காலகட்டத்தில் நம் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் புலம் பெயர்ந்த தமிழர்கள் கதி என்ன? இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து தங்கள் பண்பாட்டை, தங்கள் மொழியைக் காக்கவும் பாதுகாத்துத் தீர வேண்டும் என்றும் அந்தந்த நாடுகளில் போராடுகிறார்கள். ஆனால் நம்முடைய தாய்த் தமிழகத்திலிருந்து எந்த அரவ ணைப்பும் இல்லாததனால் மொழியை இழந்து பண்பாட்டை இழந்து எப்படியோ ஆகிவிட்டார்கள். இந்தப் போக்கு களை நாம் எவ்வளவு விரைவில் களைகிறோமோ அந்த அளவுக்கு உலக அரங்கில் தமிழர்கள் உயர்வார்கள் என்ப தில் சந்தேகம் இல்லை. அதை நாம் செய்தாக வேண்டும்.

இந்த போக்குக்குத் தாய்த் தமிழகத்தின் புறக்கணிப்பு மட்டும் காரணமா? அது ஒரு காரணம். மற்றொன்று முக்கியமானது. இந்திய அரசு தமிழர்களைப் புறக்கணிக்கிறது. இந்திய அரசு நம்முடைய வெளி நாடுகளில் வாழ்கிற தமிழ் மக்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. இந்தியாவில் வேறு எந்த தேசிய இனமும் வெளிநாடுகளில் இந்த அளவுக்குப் பெருந் தொகையாக வாழவில்லை. இலங்கை, மலேசியா, சிங் கப்பூர், மொரீசியஸ், ரீயூனியன், தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆறு நாடுகளில் நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்கள் தமிழர்களாக இருந்தால் நல்லது. ஆனால் இதுவரை ஒரு தமிழன் கூட நியமிக்கப்படவில்லை. இந்தியா சுதந் திரம் பெற்ற போது மலேசியாவுக்கான இந்தியத் தூதுவராக டாக்டர் சுப்பராயன் முதன் முதலாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு இன்றுவரை எந்த தமிழனுக்கும் அந்தப் பதவியைக் கொடுக்கவில்லை. மேற்கண்ட நாடுகளில் நாம் பெரும்பான்மையாக வெளிநாடுகளில் வாழ்கிறோம் - பெரும்பான்மையாக இருந்த போதிலும் கூட அவர் களுக்கு என்ன குறை? என்ன தேவை என்று அறிந்து அவற்றைச் செய்து கொடுப்பதற்கு மொழி அறியாத இந்தியத் தூதுவர்களால் முடியவில்லை. நேர்மாறான காரியங்களைத்தான் செய்கிறார்கள். இந்திய அரசு அதிலே மட்டும் அலட்சியப் போக்குக் காட்டவில்லை. கச்சத் தீவைத் தூக்கி இலங்கைக்குத் தாரை வார்த்தார்கள். அதனால் தமிழக மீனவர்கள் அங்கு செல்ல முடியாமல் அல்லற்படுகிறார்கள். ஏறத்தாழ 400 பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். எந்த ஒரு நாடும் ஒரு போதும் இப்படிப்பட்ட செயலைச் சகித்துக் கொள்ளாது. பதிலடி கொடுக்கும் - எச்சரிக்கை தரும் - இறந்த மீனவர்களுக்கு இழப்பீடு வாங்கும். தமிழக மீனவர்கள் சிங்கள வல்லரசால் சுடப்பட்டாலும் ஒரு தம்பிடி கூட நட்டஈடு வாங்கப் படவில்லை. இந்திய அரசு வாங்கவில்லை.

அதுமட்டுமல்ல - இலங்கையிலிருந்து ஈழத்தை எந்த ஒரு நாட்டின் உதவியும் இல்லாமல் எந்த ஒரு அரசாங்கத்தின் ஆதரவும் இல்லாமல் மண்ணின் பெரும் பகுதியை மீட்டு - முழுமையாக மீட்க வேண்டும் என்ற உறுதியுடன் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தை ஒடுக்குவதற்கு இந்திய அரசு துணை நிற்கிறது. இராசீவ் காந்தி காலத்தில் இந்தியப் படை அனுப்பப்பட்டது. இப்போது படைக் கலன்களை அனுப்புகிறார்கள். நம் தமிழர்களைக் கொல்வதற்குத் தான் ஆயுதங்கள் என்று தெரிந்தும் கூட தொடர்ந்து அந்த தவறைச் செய்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது ஒன்று தெளி வாகத் தெரிகிறது. தமிழர்களை இந்தியர்களாக - இந்தியக் குடிமக்களாக நாம் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆறு கோடி தமிழர்கள் இந்த உண்மையை உணர வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கர்நாடகமும் கேரளமும் வஞ்சிக்கின்றன. தண்ணீர் கொடுக்க முடியாது என்று சொல்லும் துணிவு வருகிறது. மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய விவசாயிகள் இங்கே வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று கேட்பதற்கு நாதி இல்லை. துணிவும் இல்லை. எங்கே போய் முடியுமோ இது? எந்த அரசையும் நம்பி எந்த அரசியல் கட்சியையும் நம்பி தமிழர்கள் எதையும் நிலைநாட்ட முடியாது என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். ஆறு கோடி தமிழ் மக்கள் கட்சி, மதம், சாதி இல்லாமல் ஒன்றுபட்டு நம் உரிமைகளை நாமே நிலைநாட்டிக்கொள்வது என்று முடிவு எடுத்தாலொழிய எதுவும் செய்ய முடியாது. அந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குத் தான் இந்த உலகத் தமிழர் பேரமைப்பு தொடர்ந்து பாடுபடுகிறது.

இது ஒன்றும் வேடிக்கைக்கான மாநாடு அல்ல. இவ்வளவு பேரை நாம் திரட்ட முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதற்கான மாநாடு அல்ல. லாரிகளிலும் பஸ்களிலும் கூட்டம் கூட்டமாகக் கொண்டு சேர்க்கப்பட்ட கூட்டமல்ல இது. இயற்கையான உணர்வு படைத்தவர்கள் அவரவர் களாகச் சொந்தச் செலவிலே ஏதாவது ஒன்றை அடகு வைத்து வந்து இருப்பார்கள் - எனக்குத் தெரியும். இந்த உணர்வு என்பது அவ்வளவு எளிதிலே வந்து விடாது. அதைக் கண்டு அச்சமாக இருக்கிறது. எப்படி கூட்டம் கூட்டுகிறார்கள். நாம் ஒரு மாநாடு போட வேண்டுமானால் பல இலட்சம் செலவழித்து மக்களைக் கூட்ட வேண்டி யிருக்கிறது என்று நினைக்கிறார்கள். உணர்வின் அடிப் படையில் நாம் திரட்டுகிறோம். மக்களைத் திரட்டினால் தான் மாற்றம். அதை நாம் செய்ய வேண்டும். உலக மொழியாக நம் மொழி உயர்ந்து இருக்கிற இந்த நேரத்தில் உலகத்தில் உள்ள குறிப்பான இனமாகவும் தமிழன் மாற வேண்டும்.

நாம் பலமாக - ஒற்றுமையாக இருந்தால்தான் உல கத்தில் உள்ள தமிழர்களுக்கு - ஈழத்தில் உள்ள தமிழர் களுக்கும்- மலேசியத் தமிழர்களுக்கும் நம்மால் உதவ முடியும். உலகத்தின் பிற நாடுகளிலும் வாழும் தமிழர் களுக்கு நம்மால் உதவ முடியும். நாம் வலிவு இல்லாமல் போனால் நம்மையும் காத்துக் கொள்ள முடியாது நம்மைச் சார்ந்து இருக்கிற மற்ற தமிழர்களையும் நாம் காப்பாற்ற முடியாது.

1949ஆம் ஆண்டு செஞ்சீனம் பிறந்தது. பர்மா முதல் - பிலிப்பைன்சு வரை உள்ள தென்கிழக்காசிய நாடுகளில் சீனர்கள் பெருந்தொகையாக வாழ்கிறார்கள். மலேசியாவில் இரண்டாவது பெரிய இனமாகவும், சிங்கப்பூர், இந்தோனேசியாவில் இரண்டாவது பெரிய இனமாகவும் சீனர்கள் இருக்கிறார்கள். அப்போது மாசேதுங் சொன்னார்கள். ஆசிய நாடுகளில் வாழக்கூடிய சீனர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று சொன்னார். இல்லையேல் செஞ்சீனா சும்மா இருக்காது என்றார். எனவே தான் இன்றளவும் சீனர்கள் என்றால் பயப்படுகிறார்கள். தமிழன் என்றால் அப்படிப்பட்ட நிலை இல்லை. வலிமையான செஞ்சீனம் தான் வெளிநாடுகளில் வாழும் சீனர்களைக் காக்கிறது.

வலிமை தான் நம் இனத்தைக் காக்க முடியும். அது தான் அத்தனை தமிழர்களுக்கும் பாதுகாப்பு. மறந்து விடாதீர்கள். இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழக்கூடிய தமிழர்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமானால் தமிழர்கள் வலிமையோடு மாறவேண்டும். இல்லாவிட்டால் அவர் களுக்கு எதுவும் நடக்காது. காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் - நடுவர் குழு தீர்ப்புகள் வந்தால் உடனடியாக கர்நாடகாவிலுள்ள தமிழர்கள் உதைக்கப்படுகிறார்கள். விரட்டி அடிக்கிறார்கள். நாமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது எப்படி சரியாக இருக்க முடியும்? நம்முடைய வலிமையை நாமே உணரவில்லை. நாம் எத்தகைய மக்கள்? நம் வலிமை என்ன? நம்மை நாமே உணர வேண்டும். உணர்ந்தாலொழிய வேறு வழியில்லை. மீண்டும் வலிமையோடு எழுந்து நிற்க முடியும். யாராவது திசைதிருப்ப நினைத்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நாம் தமிழர்கள் என்ற உணர்வோடு சகல பிரச்சினைகளைச் சந்திப்பதற்குத் தயாராக வேண்டுமென்று சொன்னால் தானாகவே திருந்தி விடுவார்கள்.. எவனும் வாலாட்டத் துணியமாட்டான். தமிழ்நாட்டு மீனவர்கள் 400 பேரை சிங்களப் படை கொல்லும் என்றால் - ஒரு இனம் வாழ்ந்து என்ன? போய் என்ன? நம்முடைய மீனவர்களை நம் கடல் பகுதியிலே வந்து அடிக்கிற துணிவு எப்படி வருகிறது? இந்திய அரசு தலையிடாது என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது. அப்படியானால் தில்லியைப் பணிய வைக்க வேண்டுமென்றால் - இப்படியெல்லாம் நடந்தால் தில்லியுடன் மோதுவோம் என்ற உணர்வை ஏற்படுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் நடக்காது.

அதுமட்டுமல்ல நண்பர்களே, இன்றைக்கு உலக அரங்கில் பெரிய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்கள் ஓரளவிற்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கின்றன என்பதை என்னால் உணர முடிகிறது. அதை விரைவு படுத்த நம் கிளர்ச்சிகளை விரைவுபடுத்த வேண்டும். போராட வேண்டும். எல்லாம் செய்ய வேண்டும். இலங்கையில் இருந்து இருபது கல் தொலைவில் ஆறு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் - அவர்கள் சிறுபான்மை அல்ல. ஆறு கோடி தமிழர்களும் கிளர்ந்து எழுந்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட வேண்டும்.

மேற்கு நாடுகளில் அரசாங்க போக்குகளில் முழுமையான மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது மாறும். மாறுவதற்கு அதை விரைவு படுத்த வேண்டுமானால் நாம் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கிளர்ச்சிகளை மேலும் மேலும் பெருக்க வேண்டும். அப்படி பெருக்கினால் தான் அந்த மாற்றங் களை விரைவில் கொண்டு வர முடியும். எந்த நாடாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் அதன் இனம் கொதித்து எழு வேண்டும். கொதிப்பு இல்லாமல் இருந்தால் என்ன பயன்? இன்றைக்கு இந்த மாநாட்டிலே எனக்கு முன்னாலே பேசிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேனாதிராசாவும் சிவாஜிலிங்கமும் என்ன சொன்னார்கள்? அவர்கள் பேச்சு நம் நெஞ்சத்தை உலுக்க வில்லையா? இவ்வளவு கொடுமை நடக்கிற பொழுது நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? என அவர்கள் கேட்டபோது நெஞ்சத்தை வாள் கொண்டு அறுப்பது போல் அல்லவா இருக்கிறது? அவர்கள் வேறு யாரிடம் போய் முறையிட முடியும்? நம்மிடம்தான் முறை யிட முடியும். நம் பதில் என்ன? நாம் என்ன செய்யப் போகிறோம்? தமிழ்நாட்டில் எழுச்சி மேலும் அதிகமாக வேண்டும். மேலும் மேலும் அதிகமாக வேண்டும். அச்சத்தைப் பயன்படுத்தி இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் நம்மை மிரட்டி வருகிறார்கள். அச்சமே இல்லை என்பதை நாம் காட்டினால் இந்த ஆட்சி என்பது எங்கே போகும் என்றே தெரியாது. மிரட்டுகிறவர்கள் எங்கே போவார்கள் என்று தெரியாது. தடா, பொடா, தேசிய பாதுகாப்பு சட்டம் இவற்றால் புரட்சியின் முனையை மழுங்க வைக்க முடியாது. யாரையும் எதுவும் செய்து விட முடியாது. நீங்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. ஆனந்தவிகடன் கருத்துக்கணிப்பு நடத்தியது. கருத்து கணிப்பு என்று வந்து பார்த்த போது நகரம்-கிராமம் இல்லாமல் மக்கள் எல்லோரும் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள் என்றுதான் கருத்துக் கணிப்பு நிரூபித்தது. மக்கள் எல்லாம் ஆதரவாக இருக்கக் கூடிய அந்த உணர்வு என்பது நீறு பூத்த நெருப்பு போல இருக்கும். ஊதினால் பற்றிக் கொள்ளும். உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக் கிறார்கள். ஆனந்த விகடனைப் பாராட்டுகிறேன். மக்களை ரொம்ப நாட்கள் யாரும் ஏமாற்ற முடியாது. புலிகள் புலிகள் என்று கூறிக்கொண்டு திடீர் வேட்டை நடக்கிறது. பொய்யான தகவல்களைத் தருகிறார்கள். தில்லியில் உள்ள எசமானர்கள் இவர்களை ஆட்டிப்படைக்கிறார் கள். மக்கள் துணிந்து எழுந்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது. யாரும் எதற்கும் பயப்பட வேண்டிய தேவை யில்லை. என்ன பெரிய வலிமையான அரசாங்கம் இந்த அரசாங்கம்? பதினான்காம் லூயி, ஜார் மன்னர்கள் என்ன ஆனார்கள்? மிரட்டுகிற வேலை வேண்டாம். ஏனென்றால் மிரட்டுவதற்குக் கூட துணிவு கிடையாது. எங்களுக்குத் தெரியும். தமிழ்ச் செல்வன் கொலை செய்யப்பட்டான் என்றால் தமிழக மக்கள் இரங்கல் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பிரச்சினையைத் திசை திருப்பு வதற்கு கவிதை எழுதுகிறார்கள். பிரச்சினையைத் திசை திருப்புவதை ரொம்ப நாளைக்குச் செய்ய முடியாது. திசை திருப்புவதால் தடம் புரண்டு விடுவார்கள். அவர்களுக்கு நெஞ்சில் உரம் இல்லை.

மக்களை ஒன்று திரட்டவும் மகத்தான மாற்றம் கொண்டு வரவும் ஈழத் தமிழர்களுக்கு உதவவும் உலகத் தமிழர்களால் முடியும் என்று கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.


மேற்கு நாடுகளில் உருவாகிவரும் மாற்றம்

அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு நான் சென்றிருந்தபோது, பிரிட்டனின் தலைநகரமான இலண்டனில் போய் இறங்கியபோது நான்கு பெரிய
போலிஸ் அதிகாரிகள் என்னை எதிர்கொண்டு அழைத்துக் கொண்டுபோனார்கள். ஏதோ விசாரிக்கவேண்டும் என்று கூறினார்கள். ஒரு அறையில் உட்காரவைத்து மாறி மாறி கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டிருந்தார்கள். எனது வருகை அவர் களுக்கு பிடிக்காமலிருந்தால் அடுத்த விமானத்திலேயே என்னைத் திருப்பி அனுப்பியிருக்கவேண்டும். இல்லையென்றால் சென்னையில் நான் புறப்படும்போதே விசா அளித்திருக்க மறுத்திருக்க வேண்டும். இவற்றில் எதாவது ஒன்றைச் செய்யாமல் இலண்டனில் என்னை உட்காரவைத்துக்கொண்டு முழுக்க முழுக்க அரசியல் தொடர்பான கேள்விகளையே கேட்டார்கள்.

"நீங்கள் இந்தியாவைச் சேர்ந்த தமிழர், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இவ்வளவு ஈடுபாடு காட்டுவது ஏன்? என்பது அவர்களின் முதலாவது கேள்வி. அதற்குப் பதில் அளிக்கும் வகையில் "இரண்டு உலகப்போர்கள் நடைபெற்றபோது செர்மனி நாடு பிரிட்டன் மீது மட்டுமே போர் தொடுத்தது. ஆனால் அமெரிக்கா, கனடா, ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் மீது செர்மனி போர் தொடுக்கவில்லை. அப்படியிருந்தும் மேற்கண்ட நான்கு நாடுகளும் பிரிட்டனுக்கு ஆதரவாகப் போரில் இறங்கின. இது ஏன்? என எதிர் கேள்வி கேட்டேன்.

"எங்களுக்குள் இயற்கையாக இருக்கக்கூடிய உறவும் பாசமும் ஆகும்." என்று அவர்கள் பதில் கூறினார்கள்.
"அதே உறவும் பாசமும் எங்களுக்கும் ஈழத்தமிழர் களுக்கும் இடையே உள்ளது" என நான் பதில் கூறினேன்.

"இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ளக்கூடாதா? இவ்வளவு பேர் சாகவேண்டுமா? என அடுத்த கேள்வியைக் கேட்டார்கள்".
"இலங்கையில் இன்று இரத்த வெள்ளம் பாய்ந்தோடுவதற்கு பிரிட்டன் தானே பொறுப்பு" என்று நான் பதில் கூறியபோது. ஒரு கணம் திகைத்தார்கள். நான் எனது பேச்சைத் தொடர்ந்தேன். "இலங்கையை நீங்கள் கைப்பற்றுவதற்கு முன்னாள் தமிழர்களுக்கு என்று தனி அரசு இருந்தது. சிங்களர்களுக்கு என்று தனி அரசு இருந்தது. இருதரப்பினரையும் அடக்கி இலங்கையை நீங்கள் ஆண்டீர்கள். சரி, நீங்கள் வெளியேறுவது என முடிவு செய்தபோது தமிழர்களுக்கு உரிய நாட்டை அவர்களிடம் ஒப்படைத்து இருந்தால் இந்தப் போரே வந்திருக்காதே" என்று நான் கூறினேன்.

"அது எங்கள் வேலையல்ல" என வேகமாகப் பதில் கூறினார்கள்.
"அப்படியானால் இந்தியாவிலிருந்து வெளியேறும் போது முஸ்லிம்களுக்கு என்று பாகிஸ்தானை உருவாக்கிக் கொடுத்துவிட்டுதானே வெளியேறினீர்கள். அதுமட்டும் உங்கள் வேலையா?" என்று திருப்பிக்கேட்டபோது. ஒருகணம் திகைத்தவர்கள் மறுகணம் சிரித்துக் கொண்டார்கள்.
"சமாதானத் தீர்வு எதையும் பிரபாகரன் ஏற்றுக்கொள்வாரா?" என்று கேட்டார்கள்.

"அவர் மக்களுக்கு நல்லது என்று தோன்றினால் ஏற்றுக்கொள்வார் இல்லை என்றால் மறுத்துவிடுவார்" என்று நான் கூறினேன்.

"நீங்கள் ஏன் பிரபாகரனுக்கு அறிவுரை வழங்கக்கூடாது?" என்று கேட்டார்கள்.
"அது எங்கள் வேலையல்ல அவர்கள் நாட்டுக்கு எது நல்லதோ அதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். அவர்கள் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாகத் துணை நிற்போம்" என்று நான் கூறினேன்.
"இல்லை. இல்லை பிரபகரன் உங்கள் இல்லத் திலேயே 7 மாதங்கள் தங்கியிருந்திருக்கிறார். நீங்கள் சொல் லுவதற்கு அவர் செவி சாய்ப்பார்" என்று கூறினார்கள்.

நம்மைப் பற்றி எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டுதான் பேசுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனாலும் இறுதி முடிவை பிரபாகரன்தான் எடுக்க முடியும் வேறு யாரும் எடுக்கமுடியாது என்பதை அவர்களுக்கு விளக்கிக் கூறினேன்.

சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த உரையாடலின் விளைவாக ஒரு உண்மை எனக்குப் புரிந்தது. மேற்கு நாடுகள் இப்பிரச்சினையில் விடுதலைப்புலிகளை ஒதுக்கிவைத்துவிட முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே தங்களின் தீர்வுத் திட்டத்திற்கு அவரின் ஒத்துழைப்பு தேவை என்பதை மிகவும் எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிந்தது.
- பழ. நெடுமாறன் உரையிலிருந்து

உலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள்

"பச்சோந்தி தலைவர்களால் தமிழ் வாழாது"
மூத்தத் தமிழறிஞர் தமிழண்ணல் கருத்துரை

எழுத்தாளர்களின் சமூகக் கடமை கள் என்ற கருத்தரங்கத்தில் தொடக்கவுரை ஆற்றிய தமிழண்ணல் அவர்களின் உரை

தான் நேசிக்கும் பல தலைவர்களில் நூற்றுக்கு நூறு தான் நேசிக்கும் தலைவர் பழ.நெடுமாறன் எனவும் இதை தான் முகமனாகப் பேசவில்லை எனவும், நம்முடைய காலத்தில் ஏதேனும் ஒரு வெற்றி கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருக்கின்ற நிலைமையில் தான் இருப்ப தாகவும் கூறி தன் உரையைத் துவக்கினார்.

இரண்டு திங்களுக்கு முன்னால் திரு.நெடுமாறன் அவர்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரையை - எந்த ஒரு துறையிலும் நாம் வெற்றி பெறவில்லை என்பதைப் பட்டியல் இட்டிருந்தாகச் சுட்டிக்காட்டி, நாம் ஆட்சிக்கட்டிலிலும் வெற்றி பெற வில்லை - தமிழைக் கல்விமொழியாக ஆக்குவதிலும் வெற்றி பெறவில்லை. வழிபாட்டு மொழியாக ஆக்குவதிலும் வெற்றிபெறவில்லை என்று வரிசையாகப் பட்டியல் இட்டிருந்ததாகவும், நாம் எதி லுமே இன்னும் சிறிதும் வெற்றி என்ற அந்த திசை நோக்கி முழுமையாகச் செல் லவில்லை என்று கூறி வருத்தப்பட்டார்.

தெலுங்கும் கன்னடமும் செம் மொழி ஆகப்போகின்றன என்பதைக் கூறி, நம்முடைய செம்மொழியோ நகர மறுத்து இருந்த இடத்திலேயே இருந்து கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டினார். மொழியைப் பொறுத்த மட்டில் நாம் உண்மையானவர்களாக வாழவில்லை என்பதைத் தெரிவித்துக் கொண்டார்.

பின்னர், நம்மை ஆதரிப்பவர் களை நமக்காக கடமை செய்பவர்களை நாம் போற்றுவதில்லை எனவும், அவர் களை ஆதரித்து நாம் உண்மையாக நடந்து கொள்வதில்லை எனவும் சுட்டிக் காட்டி மொழியைப் பற்றி வெறுமனே பேசிப் பயனில்லை என்று கூறினார்.

தலைவர்களில் பலர் பச்சோந்தி களாக இருப்பதாகவும் அப்படியிருந்தால் தமிழ் எப்பொழுது வாழும்? அப்படிப்பட்ட வர்களை இனம் கண்டு கொள்வதற்குக் கூட நம்முடைய மக்களுக்கு இன்னும் புலனாகவில்லையே?, நமக்கு உண்மை யான தலைவன் யார் என்று கண்டு கொள் வதற்கு நாம் ஏதேனும் ஒன்று செய்தாக வேண்டும் என வலியுறுத்தி நம்முடைய பொதுமக்கள் அனைவரும் மூளைச் சலவை செய்யப்பட்டிருப்பதால் உண்மையான தலை வர் யார் என்று தெரியாமல் தவிக்கிறார்கள் என்றார்.

தான் ஒரு முறை தினமணியில் - புலி வருகிறது புலி - என்று கட்டுரை எழுதி யதாகக் கூறி “திரும்பத்திரும்ப புலி வரு கிறது என்று நீங்கள் அச்சமூட்டிக் கொண்டி ருக்கிறீர்கள் நிச்சயமாக வெளிநாட்டில் மட்டுமல்ல - இலங்கையில் மட்டுமல்ல - தமிழீழத்தில் மட்டுமல்ல - தமிழகத்திலேயே புலி வந்தாலும் வந்துவிடும் என்று அதிலே நான் குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் தமிழகத்திலேயே புலி வந்தாலும் வந்து விடும் என்று அதிலே சொல்லியிருந்தேன். நான் மீண்டும் சொல்கிறேன். தமிழகத்திலும் புலிகள் வந்தால் தான் தமிழ் வாழும் என்று. மிக அழுத்தமாக இந்த அவையில் இந்த கருத்தை நான் சொல்கிறேன். ஏனென்றால் நம்முடைய குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும் என்று சொன்னால் உண்மை யானவர்கள் வேண்டும். என அதில் குறிப்பிட்டிருந்ததாகவும் கூறினார்.

புலிகள் என்று சொன்னால் பல பேருக்கு கிலி ஏற்படலாம் எனவும் எனவே அந்த பேரை மாற்றி ஓர் அறப்போர்ப்படை அணிவகுப்பை நாம் தொடங்க வேண்டும் எனவும், கூட்டமாகப் பேசிப் பயனில்லை என்பதால்,- நூறு நூறு பேரை உட்கார வைத்துக் கொண்டு - நம் மாணவர்களுக் கும் இளைஞர்களுக்கும் அவர்களுக்கு வழிகாட்ட நூல்களை உருவாக்கி செய்தி களை அவர்களுக்குக் கொடுக்கின்ற திருவள்ளுவர் கழகம் போன்ற தமிழ் அமைப்புகள் - அரசியல் கலப்பில்லாத அமைப்புகள் - இலட்சக்கணக்கான அமைப்புகள் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.. தமிழமைப்புகளின் முகவரிகளை எல்லாம் சேர்த்து நூறு நூறு பேரை உட்கார வைத்துக் கொண்டு அவர்களிடம் நாம் யாரை நம்ப வேண்டும் - நம் தலைவர் யார் - நாம் எதற்காகப் போராடுகிறோம்? நம் குறிக்கோள் என்ன என்பதை அந்த இளைஞர்களின் நெஞ் சிலே பதிய வைக்க வேண்டும் அப்போது தான் மொழியைப் பொறுத்த வரையில் வெற்றி பெற முடியும் என தன் கருத்தை வலியுறுத்தி அப்படிப்பட்ட ஒரு அணி வகுப்பைத் தொடங்குவதானால் முதலாவ தாக சில நூல்களை எழுதி அவர்களுககு உணர்வூட்டுகின்ற பணியினை இந்த இயக்கத்தின் சார்பாக தான் ஈடுபடத் தயாராக இருப்பதாகக் கூறி தன் உரையை முடித்தார்.
----------
"மொழி இனம் காப்பது எழுத்தாளர் கடமை"
முனைவர் க. நெடுஞ்செழியன் அறைகூவல்

சீன எழுத்தாளன் நூசிங் என்பவ ரைப் பற்றி நாம் அறிவோம். சாதாரண வறிய குடும்பத்தில் பிறந்தவன். இளமை யில் தன் தந்தையை இழந்தவன். தாய் அண்டை வீடுகளில் பாத்திரம் கழுவி அதில் வரக்கூடிய வருமானத்தில் குடும் பத்தை நடத்திக் கொண்டிருக்கிற பொழுது தான் அவன் பல் மருத்துவத்தைப் படிப் பதற்காக சப்பானுக்குச் செல்கிறான். இளமைத் துடிப்பும் மற்ற இளைஞர்களைப் போல வாழ வேண்டும் என்கிற ஏக்கமும் இருந்தாலும்கூட தன் குடும்ப வறுமையைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த அந்த இளைஞன் ஒரு நாள் ஒரு ஓவியக் கண்காட்சிக்குச் செல்கிறான்.
அப்போது ஒரு குறிப்பிட்ட ஓவியத்தை மட்டும் சப்பானியர்கள் மிக்க ஆர்வத்தோடு பற்று தலுடன் கூட்டம் கூட்டமாகப் பார்ப்பதும் அதைப் பற்றிப் பேசுவதுமாக இருப்பதைப் பார்த்த அவன், இவர்களின் பெருமைக்கும் பாராட்டுதலுக்கும் உரிய ஓவியம் என்ன வாக இருக்கும் என்கிற ஆர்வத்தோடு அந்த ஓவியத்தைப் பார்க்கச் செல்கிறான்.
அப்படி சென்று பார்த்த போது அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சொல்லொணாத அதிர்ச்சி. இதயமே வெடித்து விடும் போல் ஒரு வேதனை. என்ன ஓவியம் என்றால் - அப்போது சீனத்திலே சன்-யாட்-சின் தலைமையிலே ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டி ருந்த காலம். அப்படிப்பட்ட போராட்டத் திலே கலந்து கொண்ட ஒரு இளைஞனை சப்பானிய இராணுவம் எப்படிச் சித்திர வதை செய்து கொண்டிருக்கிறது என்பதை சப்பானிய ஓவியர்கள் ஒரு ஓவியமாக வைத்திருந்தார்கள். அந்தக் காட்சியைப் பார்த்துத்தான் அந்த சப்பானிய மக்கள் அவ்வளவு ஆர்வத்துடன் அந்த ஓவிய ரைப் பாராட்டுகிற பொழுது நெஞ்சம் வலிக்கிறது அந்த சீன இளைஞனுக்கு. தன்னை ஒத்த இளைஞர்கள் தேசிய நலனுக்காக தங்கள் இளமையைத் தியாகம் செய்து - துறந்து அந்த இளைஞர்கள் போராடிக் கொண்டிருக்கிற பொழுது - அப்படிப் போராடிக் கொண்டிருக்கிற ஒரு இளைஞனை - அடக்குமுறை இராணுவம் கொடுமைப்படுத்துவது அந்த சப்பானிய மக்களுக்கு மிகவும் பிடித்தது என்று சொன்னால் - அந்தக் கொடுமையை உடைத்தெறிவதுதான் என் நோக்கம் என்று சொல்லி, தான் படித்த படிப்பையும் தன் நோக்கத்தையும் தூக்கி எறிந்து விட்டு - அவன் எழுதத் தொடங்கினான். அந்த எழுத்துதான் சீனத்திலே மிகப் பெரிய புரட்சியை உண்டாக்கியது.

எழுத்தாளர்களுக்கு இருக்கக் கூடிய சமூகக் கடமை என்பது ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் அடித்தளத்தை அமைப்பதுதான் எனக் கூறி அந்த அடித் தளம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டு விட்ட காரணத்தினால்தான் முனைவர் பர்வீன் சுல்தானா அம்மையார் குறிப்பிட்டது போல திரைப்படங்களில் இவ்வளவு அசிங்கமான - அதாவது தில்லையாடி வள்ளியம்மை என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத் தின் உயிர்நாடியாக இருந்தவர். வீர முழக் கத்தின் குறியீடு. இந்த வரலாறு எல்லாம் தெரியாதவன் கவிஞனாக கவிப்பேரரசனாக விளங்கக் கூடிய காரணத்தினால் தான் நமக்கு இப்படிப்பட்ட அவமானம் ஏற்பட்டு இருக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

நம் மொழியை - இனத்தைப் பாது காக்கக் கூடிய வகையிலே நம் எழுத்தாளர் கள் தங்கள் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறி வரலாற்று ஆசிரி யன் என்பவன் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த பிறகு - திரைப்படத்தில் வரக்கூடிய காவல் துறையைப் போல - நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த பிறகு - சொல்பவன் என்றும் ஒரு சமூகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நிகழ்காலத்திலிருந்து திட்டமிடக் கூடியவன் தான் எழுத்தாளன் என்றும் சுட்டிக் காட்டினார்.. எழுத்தாளர்கள் மொழி உணர்வு மிக்கவர்களாக - சமுதாயத்தில் அக்கறை உள்ளவர்களாக - இருந்தால்தான் அந்தச் சமுதாயம் விடிவு பெறும் என்று வலியுறுத்தினார்.

தன் இனத்தைக் காக்கப் புறப்பட்ட ஒரு போராளி சரித்திரமே இல்லாத ஒரு இனமாக இருப்பதை விட சரித்திரத்தைப் படைக்க வாழ்வதைத் தான் பெருமையாகக் கருதுவதாகத் தன் காதலியிடம் கூறுகிறான் என்று ஓர் உதாரணத்துடன் கூறி ஒவ் வொரு இளைஞனுக்கும் இப்படிப்பட்ட சூழல் தனக்கு நேரும் பொழுது தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எழுத்தாளன் பதிய வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்படிப்பட்ட நிலையைத் தான் இந்த நாட் டிலே எழுத்தாளர்கள் உருவாக்க வேண்டும் என்று கூறி ஆனால் தமிழகத் தில் எந்த இடத்திற்குப் போனாலும் அப் படிப்பட்ட சூழல் இல்லை என்பதைச் சொல்லி வருந்தினார்.

இன்றைக்கு பள்ளிக்குக் குழந் தையை அனுப்பும் ஒவ்வொரு பெற்றோ ரும் தன் குழந்தை அமெரிக்காவுக்குப் போவானா? ஆசுதிரேலியாவுக்குப் போவானா? இங்கிலாந்துக்குப் போவானா என்ற ஏக்கத்துடன் தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தற்போது படித்தவர் களிடையே மூடநம்பிக்கை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது என்றும் நேரத்திற்கொரு வழிபாட்டு முறையில் இருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டி இப் படிப்பட்ட சூழலில் எழுத்தாளரது கடமை என்பது மிக மிக இன்றியமையாதது என வும் எனவே எழுத்தாளர்களே இந்த இனத்தை மீட்பதற்கு இந்த இனத்தை எழுச்சி உள்ளதாகச் செய்வதற்கு தங்களு டைய எழுதுகோலைப் பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் எழுச்சி வேண்டும். அதற்கு எழுத்தாளர்களின் படைப்புகள் உதவ வேண்டும் என்று கூறி வாய்ப்பினை நல்கிய அனைவருக்கும் நன்றியைத் தெவித்துக் கொண்டார்.

பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா? - பகுதி 1

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், கி.பி.1862க்கும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் கி.பி. 1921க்கும், இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் சி.சுப்பிரமணிய பாரதி. இவர் வாழ்ந்த காலம் தீவிரமான இந்திய சுதந்திரப் போராட்டக் காலம். இக்கால கட்டத்தில் இவருடைய எழுத்தும் நடையும் சுதந்திரம், மொழி, சமூகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. அதனால் இவரை ‘மாபெருங்கவிஞர்’ என்றும் ‘தேசியக் கவிஞர்’ என்றும் மக்கள் அழைக்கலாயினர். இவர் எழுதிய மொழி மற்றும் சமூகத் தொடர்பான கவிதைகளிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் தமிழுணர்வை விட ஆரிய உணர்வே மேலோங்கியிருப்பதை அறிய முடிகிறது. ஆகவே “பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா?” என்பதைக் காய்தல் உவத்தல் இன்றி ஆராய முற்படுவோம்.இவருடைய எழுத்துப் பணி (மொழிபெயர்ப்பாளராக) 1904 இல் சுதேசமித்திரன் இதழில் தொடங்குகிறது. இவ்விதழில் “வந்தே மாதரம்” என்னும் தலைப்பில், இவர் எழுதின ஆரியச் சார்பான பாடல்களைக் காணலாம்.

“ஆரியமென்ற பெரும்பெயர் கொண்டஎம்
அன்னையின் மீது திகழ்
அன்பெனு மேன்கொடி வாடிய காலை
அதற்குயிர் தந்திருவான்
-----
வீரிய ஞானம் அரும்புகழ் மங்கிட
மேவிய நல் ஆரியரை
மிஞ்சி வளைத்திடு புன்மை..
-----
வாழிய நல்ஆரிய தேவியின் மந்திரம்
வந்தே மாதரமே” (1)
இவர், இதே சுதேசமித்திரனின் 1906ல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்” என்ற தலைப்பில்,
“ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே
-----
வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய்ப்பேதக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே” (2)
எனக் கூறி, இங்கு “ஆரியர்கள் வாழ்ந்த நாடு அற்புத நாடென்றும், அவர் எழுதிய வேத உபநிடதங்களெல்லாம் மறைந்து போயினவே” என்றும் மிகவும் வருத்தப்படுகிறார்.
இதே ஆண்டில், இவர் எழுதிய “சத்திரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது” என்ற பாடலில்,
“வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்.
-----
பிச்சை வாழ்வுதந்த பிறருடைய ஆட்சியில்
அச்சமுற் றிருப்போன் ஆரியன் அல்லன்,
புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு
அன்பிலா திருப்போன் ஆரியன் அல்லன்.
மாட்டுதீர் மிலேச்சர் மனப்படி ஆளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்
ஆரியத் தன்மை அற்றிடும் சிறியர்
யாரிவர் ஊர்அவர் யாண்டேனும் ஒழிக!” (3)
என்று சிவாஜி, தன் படைவீரர்களுக்கு இசுலாமியரின் கொடுமையைக் கூறியதாக, பாரதி எடுத்தியம்புகிறார். இங்கு, ‘அன்பிலாதிருப்போன் ஆரியன் அல்லன்’ என்று சிவாஜி கூறியதாகப் பாரதி கூறுகிறார். ஆனால் உண்மையிலேயே ஆரியர்கள் அன்புடையவர்களாக இருந்தால் சிவாஜிக்கு ஏன் முடிசூட்ட முன்வரவில்லை? அவர் சூத்திரன் என்பதால் தானே! சிவாஜி ‘போன்சலே’ என்ற சூத்திர சாதியில் பிறந்ததால், ஆரியப் பார்ப்பனர்கள் சிவாஜி முடிசூட்டிக் கொள்ளப் பெரும் தடையாயிருந்தனர். பிறகு சிவாஜியிடம் பெரும் தொகையாகப் பணமும் செல்வமும் பெற்றுக் கொண்டபின் சிவாஜி முடிசூட்டிக் கொள்ள ஒப்புதல் தந்தனர்.
(4) அப்படி இருக்கும்போது ஆரியர்கள் அன்புடையவர்கள் என்று சிவாஜி எப்படிக் கூறியிருப்பார்?
“ஆரிய பூமியில்
நாரியரும் நர
சூரியரும் சொலும்
வீரிய வாசகம் வந்தே மாதரம்”
என்று 1907 இல், சுதேசமித்திரனில் இவர் எழுதிய “வந்தே மாதரம்” பாடலில் கூறுகிறார். இங்கு இந்தியாவை ‘ஆரிய பூமி’ என்கிறார்.
“அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே
ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே
வெற்று தருந்துணை நின்னருள் அன்றோ?
-----
ஆரிய நீயும் நின்அற மறந்தாயோ?
வெஞ்செயல் அரக்கரை விரட்டிடுவோனே
வீரசிகாமணி, ஆரியர் கோனே” (5)
(இந்தியா, 1908)
என்று பாரதியார் “ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்” என்னும் பாடலில் கூறுகின்றார். இங்கு யாதவ குலத்தில் பிறந்த சூத்திரக் கடவுளை ஆரியர் கோன் என்கிறார்.
பாரதியார் தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பைச் “செந்தமிழ் நாடு”, “தமிழ்” ஆகிய தலைப்புகளில்
"செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே
-----
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு”
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்” (6)
என்று தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் புகழ்ந்து பாடியுள்ளார்.
இப்பாடல்களை இயல்பான தன்னுணர்ச்சியுடன் பாரதி பாடவிலை என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
1915இல் சுதேசமித்திரனில் ‘தமிழ், தமிழ்நாடு’ முதலியவற்றின் சிறப்பைக் குறித்து, எழுதும் சிறந்த கவிதைக்கு மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பில் பரிசளிக்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இதைப் பாரதியார் பார்த்தும் பார்க்காததுபோல் விட்டுவிட்டார். ஆனால் இதைப் பார்த்த பாரதியின் புதுவை நண்பரான வாத்தியார் சுப்பிரமணி அய்யரும் மற்றும் சில நண்பர்களும் விளம்பரத்தைக் கூறி, கவிதை எழுதும்படி வேண்டினர். அவர்களின் கட்டாயத்தின் பேரிலேயே இப்பாடல்களைப் பாரதியார் எழுதியதாக பாரதியின் நண்பர் எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு கூறியுள்ளார். (7)
இதே கருத்தைப் பாரதிதாசன் அவர்களும் கூறியுள்ளார்.
“தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப் பாக்கள் தந்தால்
அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று
சான்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் உரைத்தார்
தேன்போற் கவியொன்று செப்புகநீர் என்றுபல
நண்பர் வந்து பாரதியாரை நலமாகக் கேட்டார்
-----
செந்தமிழ் நாடெனும் போதினிலே யின்பத்தேன்வந்து பாயுது காதினிலே என்றெழுதித்தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால் எழுதி முடித்தார்” (8)
என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறுகிறார். இவ்வாறாகப் பாரதி நண்பர்களுடைய வேண்டுதலாலும், கட்டாயத்தாலும் தான், “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலையும், “யாமறிந்த மொழிகளிலே” என்ற பாடலையும் எழுதினார். இந்தப் பாடல்களுக்காக அவருக்கு மதுரைத் தமிழ்ச் சங்கம் பரிசாக ரூ.100 அளித்தது. (9)
பாரதியார் பரிசுப் போட்டிக்காக மேலே கண்ட பாடலை எழுதும்போது மட்டும் தமிழையும் தமிழ்நாட்டையும் மிகவும் உயர்வாக எழுதுகிறார். ஆனால் அதே ஆண்டில் தனிப்பட்ட முறையில் “சுதேச கீதங்கள்” என்னும் தலைப்பில் தமிழ்த்தாய் கூறுவதாக
“ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்து - நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்
மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்ட நல்அன்பொடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளினுள்ளே - உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” (10)
என்று பாரதி கூறுகிறார். இங்குத் தமிழுக்கு இலக்கணம் இல்லாதிருந்தது போலவும், ஆரியப் பார்ப்பனர்கள் தான் இலக்கணம் வகுத்துக் கொடுத்தது போலவும் பாரதி கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேலும் அவர் ஆரியம் தான் உயர்ந்த மொழி என்றும் கூறுகின்றார். தமிழ்த்தாய் பற்றி எழுத வந்த பாரதியாருக்குத் தமிழ்மொழி உயர்ந்த மொழி என எழுத மனம் வரவில்லை போலும்.
பாரதியார் எழுதிய கவிதைகளை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், கால வரிசைப்படியாகத் தொகுத்து 700 பக்கங்கள் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ், தமிழ்நாடு ஆகியவற்றைப் பற்றி 11 பக்கங்கள் மட்டுமே உள்ளன. (11). இந்தப் பதினோரு பக்கங்களிலும் கூடத் தமிழை, தமிழ்நாட்டை உயர்த்திச் சொல்ல மனம் வராமல் ஆரியத்தையே உயர்த்திக் கூறுகிறார் பாரதியார்.
பாரதியார் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த போதிலும் தன்னுடைய மூதாதையர்களின் மொழியாகிய ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை உயர்ந்த மொழி என்பதோடு அதைத் தெய்வ மொழியாகவும் கூறுகிறார்.
“நம் முன்னோர்கள் அவர்களைப் பின்பற்றி நாமுங் கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்.” (12)
இந்தியாவிலுள்ள மொழிகள் யாவும் சமசுகிருத மொழியோடு கலந்த பிறகே மேன்மை பெற்றதாகப் பாரதி கருதுகிறார். தமிழுக்கு முறையான இலக்கணம் இல்லாதிருந்ததாகவும், ஆரியர்கள் இலக்கணம் வகுத்ததாகவும் பாரதி கூறுவதாவது:
“தமிழ் பாஷைக்கோ, இலக்கணம் முதல் முதலாக அகஸ்தியராலும், அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்கி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதும் மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பதும் மெய்யே” (13) என்கிறார் பாரதியார்.
இந்தியாவிலுள்ள அனைத்துச் செல்வங்களையும் ‘ஆரிய ஸம்பத்து’ என்கிறார் பாரதியார். “நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில்முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய ஸம்பத்து. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலேயே துளஸிதாசர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி - இவையனைத்துக்கும் பொதுப்பெயராவது ஆர்ய ஸம்பத்து. தஞ்சாவூர்க் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகையர் கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக்கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் -இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய ஸம்பத்து. (14)
இதில் திருக்குறள், சிலப்பதிகாரம், ஆண்டாள் திருமொழி முதலிய தமிழ் இலக்கியங்களை ஆரியச் செல்வம் என்கிறார் பாரதி. மேலும் பவுத்தர்களின் எல்லோரா ஓவியங்கள், தஞ்சை மராட்டியர்களின் தஞ்சை மகால், சாஜகானின் தாஜ்மகால் முதலியவற்றையும் ‘ஆரியச் செல்வம்’ என்கிறார். மற்றவர்களின் உழைப்பில் விளைந்த கலை, இலக்கியம் முதலியவற்றை ஆரியச் செல்வமாகப் பாரதி உரிமை கொண்டாடுவது அவரின் அளவு கடந்த ஆரிய வெறியைக் காட்டுவதாகவே அமைகின்றது.
‘உலகில் உள்ள எல்லா நாகரிகங்களுக்கும் மூலமாக இருப்பது ஆரிய நாகரிகமே’ என்கிறார் பாரதியார்.“ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், பிற இடங்களிலும் காணப்படும் நாகரிகங்களுக்கெல்லாம் முந்தியதும் பெரும்பான்மை மூலாதாரமுமாக நிற்பது ஆரிய நாகரிகம். அதாவது பழைய சமஸ்கிருத நூல்களிலே சித்தரிக்கப்பட்டு விளங்குவது. இந்த ஆரிய நாகரிகத்துக்குச் சமமான பழமை கொண்டது தமிழருடைய நாகரிகம் என்று கருதுவதற்குப் பலவிதமான சாஷ்யங்களிருக்கின்றன” (15) என்கிறார் பாரதியார். ஆகவே தமிழர் நாகரிகம் ஆரியத்தை விட உயர்ந்த நாகரிகம் என்று கூறுவதற்கு இவருக்கு மனம் வரவில்லை.
தமிழர் நாகரிகம், ஆரிய நாகரிகத்திற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்தாகும். கால்டுவெல் அவர்களின் ஆய்வு நூலான ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் முதல் பதிப்பு 1856 ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது. அதன் இரண்டாம் பதிப்பும் பாரதியின் காலத்திலேயே 1915 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பாரதி கால்டுவெல் அவர்களின் நூலைப் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாரதி போன்ற சமஸ்கிருதப் பற்றுக் கொண்ட பார்ப்பனப் பண்டிதர்களைக் குறித்து கால்டுவெல் கூறுவதைப் பார்ப்போம்.
‘சமஸ்கிருத துணை வேண்டாத திராவிடத் தனித்தன்மை’ என்ற தலைப்பில் கால்டுவெல் கூறுகிறார்: “திராவிட மொழிகள் வட இந்திய மொழிகளிலிருந்து பற்பல இயல்புகளில் வேறுபடுகின்றன. அவ்வாறிருந்தும் அத்திராவிட மொழிகள், வட இந்திய மொழிகளைப் போலவே, சமசுகிருதத்திலிருந்து பிறந்தவையாகச் சமசுகிருதப் பண்டிதர்களால் கருதப்பட்டன. தாங்கள் அறிந்த எப்பொருளுக்கும் பார்ப்பன மூலம் கற்பிக்கும் இயல்பினர் அப்பண்டிதர்கள்.” (16)
1915 இல் சூலைத் திங்களின் ‘ஞானபாநு’ என்னும் இதழில் பாரதியார் தமிழில் எழுத்துக் குறை என்னும் தலைப்பில் “சமஸ்கிருதத்தில் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களுக்கு வர்க்க - எழுத்துகள் இருப்பது போல், தமிழில் வர்க்க எழுத்துகள் இல்லாததால், தமிழில் எழுத்துக் குறையுள்ளது” (17) என்கிறார்.
ஒரு மொழியிலுள்ள ஒலிகள், அதற்குண்டான குறியீடுகள் மற்ற மொழியில் இல்லாதிருந்தால், அது அம்மொழியின் குறைபாடு ஆகாது. ஏனெனில் ஒலிப்பு, ஒலிக்குறியீடு என்பவை அம்மொழிக்கே உரிய இயற்கையான இயல்புகள் ஆகும். ஆகவே சமசுகிருத வர்க்க எழுத்துகள் தமிழில் இல்லை என்று பாரதியார் குறைப்பட்டுக் கொள்வது ஏற்புடையது ஆகாது.
பாரதியின் இக்கூற்றை அறிஞர் வ.உ.சி. அவர்கள் 1915 செப்டம்பர்த் திங்களில் அதே ‘ஞானபாநு’ ஏட்டில் கடுமையாக மறுத்துக் கூறியுள்ளார். “தமிழில் எழுத்துக் குறை என்று சொல்பவர்கள் பெரும்பாலும் சமசுகிருதத் சார்புடையவராகவும் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படிக்காதவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் தமிழுக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம் என்னும் உன்னத நூலையும், அதற்குப் பின் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, திருக்குறள் முதலிய இலக்கிய நூல்களையும் கட்டாயம் படிக்க வேண்டும்” என்கிறார். (18)
தமிழில் எழுத்துப் பற்றாக்குறை என்பதைக் காரணம் காட்டி, அதையே வாய்ப்பாகக் கருதி, வேண்டுமென்றே தமிழில் வடமொழிச் சொற்களை அளவுக்கு அதிகமாகக் கலந்து எழுத ஆரம்பித்தார் பாரதியார். இதை அவருடைய பிற்கால எழுத்துகளில் காணலாம்.
“மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பங்களூர், திருச்சினாப்பள்ளி, தஞ்சாவூர், புதுச்சேரி, கும்பகோணம் இத்யாதி ஷேத்ரங்களில் வஸிக்கும் இங்கிலீஷ் பிராமணர்களுக்குள்ளே ஸந்தியா வந்தனம் எவ்வளவு சொற்பம்? தீர்த்தபானம் கூட நடக்கத்தான் செய்கிறது. ராமராமா? இந்த ரிஷிகளெல்லாரும் என்ன பிராயச்சித்தம் பண்ணுகிறார்கள்? என மாப்பிள்ளை ரங்கூனில் நித்ய கர்மானுஷ்டங்கள் தவறாமல் நடத்தி வருகிறானென்று கேள்வி. அவன் வந்தால் ஜாதிப்ரஷ்டன் தானே? ப்ராயச்சித்தம் பண்ணினால் கூட நான் சேர்த்துக்கொள்ள மாட்டேன்.” (19)
இது 1917 சூன் 21 இல் சுதேசமித்திரன் ஏட்டில் ‘ப்ராயச் சித்தம்’ என்னும் தலைப்பில் பாரதியார் எழுதிய கதையில் ஒரு பகுதி. (பாரதியார் தன் பெயரைக் கூட ஸி.ஸுப்பிரமணிய பாரதி என்றே எழுதி உள்ளார்.)
இதுகுறித்து ஆய்வாளர் க.கைலாசபதி கூறுவதாவது:
“1949 இல் ஓமந்தூரார் அரசு பாரதி நூல்களின் பதிப்பு உரிமையை வாங்கியது. 1950 இல் அரசு பாரதி நூல்கள் பதிப்புக் குழு ஒன்றை உருவாக்கியது. அக்குழுவில் இருந்த ரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராசனார் போன்றோர் பாரதியின் கவிதைகளில் மூலப்படியில் இருந்த கிரந்த எழுத்துக்களை முழுமையாக நீக்கிவிட்டதாகவும், 1909 இல் வெளிவந்த ஜன்மபூமியில் ஸமர்ப்பணம் முகவுரை ஆகியவற்றின் கீழ் ஸி.ஸுப்பிரமணிய பாரதி என்றே கையொப்பமிட்டுள்ளார்” (20) என்றும் ஆய்வாளர் க.கைலாசபதி கூறியுள்ளார்.
பாரதியாருக்குத் தமிழ் இலக்கணத்தில் ஈடுபாடு இல்லை என்பதைப் பற்றி அவருடைய நண்பர் வ.ரா.குறிப்பிடுவதாவது : “தமிழ்ப் பண்டிதர் பதவிக்குப் பாரதியாரிடமிருந்த இலட்சணங்கள் விநோதமானவை. எட்டயபுர சமஸ்தான வித்வான்கள் அளித்த பாரதி என்ற பட்டமொன்றே முதல்தரமான இலட்சணம் என்றே எண்ணுகிறேன். தமிழ்ப் பண்டிதர்கள் நன்னூல் (இலக்கண) சூத்திரங்களைத் தலைகீழாய்ச் சொல்ல முடியுமே, அந்தச் சாமர்த்தியம் பாரதியாருக்குக் கொஞ்சங்கூடக் கிடையாது.
நன்னூலை அவர் பார்த்திருப்பார் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அதைப் படித்து நெட்டுருப் பண்ணியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.
தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம்
மூன்றும் மொழி மூவிடத்து மாகும்
இந்தச் சூத்திரத்தைப் பாரதியார் எப்படியெல்லாமோ கேலி செய்வார். நன்னூல் தற்போது இருக்கிற நிலையில் பாரதியாருக்குத் துளிக்கூடப் பிடித்தம் இருந்ததில்லை. நன்னூலிலே இவ்வளவு வெறுப்புக் கொண்ட பாரதியார் எவ்வாறு தமிழ்ப் பண்டிதர் உத்யோகம் பார்த்தார் என்பது குறித்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.” (21)
ஒருமுறை எட்டயபுரம் பள்ளியில் மாலை நேரத்தில் திருக்குறளைப் பற்றிப் பேச பாரதியாரை அழைத்திருந்தனர். பாரதியாரும் ஒப்புக்கொண்டு பேசவந்தார். அங்கு ‘உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி’ என்று மாரியைப் பற்றியே இருபது நிமிடங்கள் கையைக் காலை ஆட்டிப் பாடிக்கொண்டு இருந்தார். தலைமை வகித்தவர் திருக்குறளைக் குறித்துப் பேசும்படி கூறினார். “நான் குறள் படித்து வெகுகாலம் ஆகிவிட்டது. அது வெகு நல்ல நூல்.
இரண்டொரு அடி நினைப்பிருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாம். ஆகா எவ்வளவு உண்மை” (22) என்று கூறி விட்டு கூட்டம் முடிந்து விட்டதாகப் பாரதியே அறிவித்து விட்டு வெளியேறி விட்டார் என்று சுத்தானந்த பாரதி கூறியுள்ளார்.
இதே காலக்கட்டத்தில் திருக்குறளைப் பற்றி வ.உ.சி. என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதையும் நான் தெரிந்து கொள்ளல் நலம்.
“தமிழர்களெல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்தில்லாத தமிழர் முற்றுந் துறந்த முனிவரேயாயினும், என்னைப் பெற்ற தந்தையேயாயினும், யான் பெற்ற மக்களேயாயினும் யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை. நேசிப்பதுமில்லை” (23) கோயமுத்தூர் சிறையில் வ.உ.சி. தம்மைச் சந்தித்த பரலி சு.நெல்லையப்பரிடம் இவ்வாறு கூறியுள்ளார். இவருடைய தமிழ்ப் பற்றுதான் என்னே!
இந்தியாவின் பொதுமொழியாக இந்திதான் வரவேண்டும் என்று முதன்முதலில் சொன்னவர் பாரதியே! 1906லேயே இக்கருத்தை இவர் வலியுறுத்தியுள்ளார். 15.12.1906 இந்தியா வார ஏட்டில், ‘இந்தி பாஷைப் பக்கம்’ என்னும் தலைப்பில் இவர் கூறுவதாவது: “தமிழர்களாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் மிகவும் அவசியமாகும். தமிழ்ப் பாஷையே நமக்குப் பிரதானமாய் இருக்க ஹிந்திப் பாஷையை அப்பியஸிக்க என்ன அவசியம் இருக்கிறது என்று (என்பதை?) சொல்லுகின்றோம்.
இந்தியா பலவித பிரிவிகளுடையதாய் இருந்த போதிலும் உண்மையிலே ஒன்றாய் இருப்பதற்கிணங்க அதிலுள்ள வெவ்வேறு நாடுகளிலே வெவ்வேறு பாஷைகளிருந்த போதிலும் முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். தமிழர்கள் தமிழும் ஹிந்தியும், தெலுங்கர் தெலுங்கும் ஹிந்தியும், பெங்காளத்தார் பெங்காளியும் இந்தியும் என இவ்வாறே எல்லா வகுப்பினரும் அறிந்திருப்பார்களானால் நமக்குப் பொதுப்பாஷை ஒன்றிருக்கும். தமிழர், தெலுங்கர் முதலானவர்கள் கூடச் சிறிது பிரயாசையின் பேரில் ஹிந்தியைக் கற்றுக்கொள்ளலாம்.” (24)
இது அன்றைய காங்கிரசின் கொள்கை. திலகரின் பேச்சைக் கேட்டே பாரதி இவ்வாறு எழுதியுள்ளார். இந்தியைப் பொதுமொழி என்று 1906 இல் கூறிய பாரதி, 1920 இல் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டு, சமசுகிருதம்தான் இந்தியாவுக்கும் பொது மொழியாக வேண்டும் என்று கூறுகிறார். சுதேசமித்திரன் (11.1.1920) இதழில் ‘ஒளிர்மணிக் கோவை’ என்னும் தலைப்பில் பாரதி கூறுவதாவது:
“இந்தியாவுக்குப் பொது பாஷையாக ஹிந்தியை வழங்கலாமென்று ஸ்ரீமான் காந்தி முதலிய பல பெரியோர்கள் அபிப்ராயப்படுகிறார்கள். ஆனால் பாரத தேச பக்த சிரோ ரத்தினமென்று கூறத்தக்க ஸ்ரீமான் அரவிந்த கோஷ் முதலிய வேறு பலர் ஸமஸ்க்ருத பாஷையே இந்தியாவுக்குப் பொது பாஷையென்றும், நாம் அதைப் புதிதாக அங்ஙனம் சமைக்க வேண்டியதில்லையென்றும், ஏற்கனவே ஆதிகாலந் தொட்டு அதுவே பொதுபாஷையாக இயல் பெற்று வருகிறது என்றும் சொல்லுகிறார்கள்.
ஸம்ஸ்கிருத பாஷையில் படித்துத் தேர்ச்சி பெறுதல் கடினமானதால் அதைத் தேச முழுமைக்கும் பொதுப் பாஷையாகச் செய்தல் சவுகரியப்படாதென்று சிலர் சொல்லுகிறார்கள்.
பழைய வழிப்படி படிப்பதனால் இவர்கள் சொல்வது ஒருவாறு மெய் எனலாம். ஆனால் இக்காலத்தில் அந்நிலைமை கடந்து சென்று விட்டது. இப்போது பண்டாரகர் என்னும் பம்பாய்ப் பண்டிதர் உபாயத்தியாயர் இல்லாமலே ஸம்ஸ்கிருத பாஷையை ஏழெட்டு மாசங்களில் கற்றுக் கொள்ளும்படியான ஆரம்ப நூல்கள் எழுதியிருக்கிறார்.
இவற்றுள் முதல் புஸ்தகம் ஏற்கனவே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அவ்வழியை இன்னும் சுலபமாய்ச் செய்யலாம். பஞ்ச தந்திரத்தை அர்த்தத்துடன் மூன்று முறை உருப்போட்டால் எவனும் தடதடவென்று தட்டில்லாமல் ஸம்ஸ்க்ருதம் பேசக்கூடிய திறமை பெற்று விடுவான்” (25) எனப் பாரதியார் விளக்கம் தந்து சமசுகிருதம் பொதுமொழியாக வேண்டும் என்று கூறுகிறார்.
பாரதியார் சமசுகிருதத்தின் மீது கொண்ட வெறியினால் சப்பானில் சமசுகிருதம் எப்பொழுது எவ்வாறெல்லாம் பரவியது என்பதைத் தன்னுடைய ‘பருந்துப் பார்வை’ என்னும் கட்டுரையில் ஆய்வு செய்து எழுதியுள்ளார். (26) உலகில் சுமேரியா, சப்பான், கொரியா, அங்கேரி, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளின் மொழிகளில் தமிழ்மொழிக் கூறுகள் ஏராளமாகக் கலந்துள்ளன.
எங்கெல்லாம் தமிழ் பரவியிருக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், சமசுகிருதம் எங்கெல்லாம் பரவியுள்ளது என்பதை ஆய்வு செய்கிறார். அறிஞர் முனைவர் பொற்கோ அவர்கள் தமிழ் மொழியும் சப்பான் மொழியும் மரபு ரீதியாகவே உறவுள்ளவை என்பதைத் தம் ஆய்வின் (27) மூலம் நிறுவியுள்ளார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.
இதுகாறும் நாம் அறிந்தவற்றில் பாரதியினுடைய கவிதைகள், கட்டுரைகள், கதைகள் முதலானவை ஆரிய மொழி, ஆரிய நாகரிகம், ஆரியப் பண்பாடு போன்றவற்றை உயர்த்திப் பேசுவதாகவே உள்ளன.
இவருடைய தாய்மொழி தமிழாக இருந்தாலும், அதைப் பற்றி உயர்த்திப் பேசாமல் ஆரிய மொழியே சிறந்த மொழி, அம்மொழியே இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆகவே ‘பாரதியின் உயிர் மூச்சு தமிழல்ல, ஆரியமே’ என இவ்வாய்வின் மூலம் காண்கிறோம்.