Monday, February 16, 2009

மின்தூக்கிகளில் மாட்டிக்கொள்வது மலேசியாவில் அன்றாட நிகழ்வாகி வருகிறது

நம்முடைய பிரதமர் கடந்த 12.2.2009ல் உரையாற்றச் செல்லும் ஒரு நாளில் சுமார் 30 நிமிடங்களுக்கு மின்தூக்கியில் மாட்டிக்கொண்டதாக செய்திகள் வெளியாயின. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் அவர் மாட்டிக்கொண்டது புத்ராஜாயாவின் அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில்.

அடுக்கு மாடிக் கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு இது அன்றாட நிகழ்வாகி வருகிறது. சில இடங்களில் மின்தூக்கி வேலை செய்யாமல் போவது அடிக்கடி ஏற்படும் நிகழ்வாகி வருகிறது. இந்நிலையை மாற்றி அமைக்க ஏதும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமல்தான் இருக்கின்றன என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்பவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இப்படி மின்தூக்கி இயங்காமல் போகும் பிரச்னை மிகவும் அதிகமாகவே இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆய்வு செய்யப்பட்ட 25 மின்தூக்கிகளில் 7 ஆய்வுக்கு உட்பட்ட சமயத்தில் முறையாக வேலை செய்யவில்லை. நிறைய மின்தூக்கிகளில் விளக்கு ஒழுங்காக எரியவில்லை. பாதுகாப்பு அம்சங்களும் இருக்கவில்லை என்றார் இத்ரிஸ்.

15 மாடிகளைக் கொண்ட 180 யூனிட்டுக்கள் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வெறும் இரண்டே மின்தூக்கிகள்தான் இருந்தன. ஒரு மின்தூக்கி ஆறு மாதங்களாக இயங்கவில்லை. இன்னொன்று முதல் நாள்தான் வேலை செய்யாமல் போனது. மின்தூக்கி வேலை செய்யாமல் இருப்பதை அடுக்குமாடிக் குடியிருப்பின் நிர்வாகத்தினரிடம் புகார் செய்து செய்து அலுத்துப்போய்விட்டதாக அங்குள்ள குடியிருப்புவாசிகள் கூறினர். பல முறை புகார் செய்த பிறகுதான் நிர்வாகம் மின்தூக்கியைப் பழுது பார்க்கும். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மின்தூக்கி மறுபடியும் வேலை செய்யாமல் போகும். யாராவது உள்ளே மாட்டிக்கொள்வர். ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள மின்தூக்கிகளிலும் இதே நிலைதான் என்றார் இத்ரிஸ்.

கடந்த 20.3.2006ல் பழுதான மின்தூக்கி கதவியால் ஓர் ஆடவர் இறந்துபோனபொழுதுஇ மின்தூக்கி பாதுகாப்பு தொடர்பாக பிரத்தியேக நடவடிக்கைக் குழு ஒன்றை நிர்மாணிக்கவிருப்பதாக தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இலாகா (னுழுளுர்)இ அறிவித்திருந்தது. அப்படி இதுவரைக்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான் என்ன என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறிய விரும்புவதாக இத்ரிஸ் கூறினார்.

அடுக்குமாடி கட்டிட நிர்வாகிகளும், அடுக்குமாடி பராமரிப்பு கம்பெனிகளும் தங்களுடைய வேலையை முறையாகச் செய்கிறார்களா என்பதனைத் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இலாகா உறுதி செய்ய வேண்டும். கட்டிடங்களை 15 மாதங்களுக்கு ஒரு முறை சோதனையிடுவதை விட்டு விட்டு 10 மாதங்களுக்கு ஒரு முறையாவது சோதனையிட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

மின்தூக்கி கோளாறுகள் தொடர்பாக வந்த புகார்கள், எத்தனை முறை மின்தூக்கி பழுதாயிருக்கிறது என்பதை தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இலாகா ஆராய வேண்டும். மின்தூக்கி அடிக்கடி முறையாக இயங்காத இடங்களில் மின்தூக்கியை முழுமையாக மாற்றியமைக்கவோ அல்லது முழுப் சீரமைப்புப் பணியை மேற்கொள்ளவோ வேண்டும் என்றார் இத்ரிஸ்.

தூரத்திலிருந்தே மின்தூக்கிகளைக் கண்காணிக்கும் ஒரு முறையை தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இலாகா கொண்டு வர வேண்டும். இம்முறை மூலம் எந்த இடத்தில் மின்தூக்கி வேலை செய்யவில்லை என்பதை இனங்காண முடியும். இம்முறை நிறைய நாடுகளில் அமல்படுத்தப்படுகிறது என்றார் இத்ரிஸ்.

அடுக்குமாடி குடியிருப்புக்களில் மின்தூக்கிகளின் தரத்தை உறுதி செய்யவும்இ அவை முறையாக இயங்குகின்றனவா என்பதனைக் கண்காணிக்கும் பொருட்டும் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இலாகா முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் மின்தூக்கிகளை முறையாக இயக்குவதிலும் அவற்றைச் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment