Monday, April 13, 2009

காமெடியாகிப் போன சீரியஸ் வசனங்கள்

வசனங்களுக்காகவே ஓடிய படங்கள் உண்டு. வசனங்களாலயே, தியேட்டரை விட்டு ஓடிய படங்களும் உண்டு. அதேப்போல், வழி மாறிய வசனங்களும் உண்டு. சீரியஸாக வெளிவந்து, பின்னால் நகைச்சுவையாக பேசப்படும்.

சில வசனங்கள் நன்றாக ரசிக்கப்பட்டு, பிரபலமடைந்து, பலரால் பல இடங்களில் பேசப்பட்டு, பின்பு சிரிப்பிற்குரியதாக ஆக்கப்படும். சில வசனங்கள் சரியாக கையாளப்படாததால், சுட சுட கிண்டலுக்குள்ளாக்கப்படும்.

அப்படி என் நினைவுக்கு வந்த சில வசனங்கள். இதெல்லாம் அந்தந்த படங்களில் சீரியஸ் வசனங்கள். இப்படி காமெடி செய்வார்கள் என்று வசனமெழுதும்போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.


பாச மலர் - என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல ஆனந்தக் கண்ணீரை மட்டும் தான் நான் பார்க்கணும்.

உணர்ச்சிமயமான வசனம். கால ஓட்டத்தில், இன்று இதை இயல்பாக சொன்னாலும் சிரிக்கத்தான் செய்வார்கள்.

முதல் மரியாதை - ஐயா! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

சொன்னவருக்கு நல்ல ஸ்டைல். சிலர், எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்ன்னு சாதாரணமாக ஆரம்பித்தாலும் முடிக்கும்போது அவர் ஸ்டைலில் முடித்து விடுவார்கள்.

நாயகன் - நீங்க நல்லவரா? கெட்டவரா?

மணிரத்னம் பட வசனங்களில் ஒரு தனித்தன்மை உண்டு. அதனாலயே, அதிகம் கிண்டலுக்கு உள்ளாக்கப்படும். சின்னி ஜெயந்த், விவேக் இதை படங்களில் காமெடி செய்தார்கள்.

அஞ்சலி - அஞ்சலி ஏந்துமா

இந்த வசனத்தால் அந்த சோக காட்சியை பல ஷோக்களில் காமெடி ஆக்கினார்கள்.

தேவர் மகன் - ஒரு பாட்டு பட்றி

யாரையாவது பாட்டு பாட சொல்லும்போது, கிண்டலாக இப்படித்தான் சொல்லுவார்கள். கவுண்டமணி ஏதோவொரு படத்தில் நக்கல் செய்திருப்பார்.

நாட்டமை - நாட்டாமை! தீர்ப்பை மாத்தி சொல்லு

கல்லூரி மாணவர்களால் பல இடங்களில் ரீ-மிக்ஸ் செய்யப்படும் வசனம். தியேட்டரில் படம் போடலையா? ஆபரேட்டர், படத்தை போடு. கரண்டு போச்சா? லைட்டை போடு. இப்படி.

ரெட் - அது...

ஹி... ஹி... இந்த ரெண்டு எழுத்து சாதாரணமான வார்த்தை, இவ்வளவு ஸ்பெஷல் ட்ரிட்மெண்ட் கொடுக்கும்ன்னு யாரும் நினைச்சு இருக்க மாட்டாங்க.

ரமணா - தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை, மன்னிப்பு

விவேக்கால் பல படங்களில் கிண்டல் செய்யப்பட்ட வசனம். மக்களும் அவரவர் வசதிக்கேற்ப வார்த்தைகளை போட்டு பிரபலமான வசனம்.

அந்நியன் -
அஞ்சு கோடி பேரு அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடுனா தப்பா?

சுஜாதாவால் சுவையாக கருத்து சொல்லப்பட்ட வசனம். படம் வெளிவந்த பிறகு டரியல் செய்யப்பட்டது.

சந்திரமுகி - என்ன கொடுமை சரவணன்...

பஞ்ச் டயலாக்கும் இல்லை. உணர்ச்சிமயமா எழுதப்பட்டு பேசப்பட்ட வசனமும் இல்லை. பின்ன, எப்படி இவ்ளோ பிரபலம்? எல்லா புகழும் பிரபுக்கே! பிளஸ் வெங்கட் பிரபு.


இந்த வசனங்களை இப்ப படங்களில் கேட்கும்போது காட்சியை மீறி சிரிக்க வைத்து விடுகிறது.

உங்களுக்கு தோணுறதையும் சொல்லுங்க..

Friday, April 10, 2009

பசை நுகரும் பழக்கத்தால் பாழாகும் இளையோர்களின் வாழ்க்கை

இளைஞர்களின் நலன் கருதி போதையூட்டும் வஸ்துக்கள் சட்டத்தை (Intoxicating Substances Act) விரைவில் அமலுக்குக் கொண்டு வருமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார். மலேசிய இளைஞர்களிடையே பரவலாகியிருக்கும் பசை நுகரும் பழக்கமே இதற்குக் காரணமாகும்.

சுங்கைப்பட்டாணியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 10 வயதுள்ள சிறார்கள் கூட பசை நுகரும் பழக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. செவன் எலெவன்(7-Eleven) போன்ற போன்ற கடைகளிலும் கூட பசையை டின்களில் விற்க ஆரம்பித்துவிட்டதால் அவை சிறார்களுக்கு எளிதில் கிட்டிவிடுகின்றன என்றார் இத்ரிஸ்.

இளைஞர்கள் எந்த வித பயமும் இல்லாமல் மிகவும் ஆயாசமாக பசை நுகர்வதை மேற்கொள்கிறார்கள். பாழடைந்த அடுக்குமாடி வீட்டில் பொழுதுபோக்காக பசை நுகரும் பழக்கத்தை இளைஞர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். பசையை நுகர்ந்த பின் அதற்குத் தேவைப்படும் உபகரணங்களை ஆங்காங்கே வீசி எறிந்து விட்டுச் செல்கிறார்கள் என்றார் இத்ரிஸ்.

கெடா மாநில தோட்டப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் உள்ள இளைஞர்கள் கூடும் இடமாக சுங்கைப்படாணி இருப்பதால் இந்த ஆய்வு அங்கு மேற்கொள்ளப்பட்டது. சுங்கைப்பட்டாணியில் மட்டுமல்லாமல் நாட்டின் பல மூலை முடுக்குகளிலும் இந்தப் பசை நுகரும் பழக்கம் ஊடுருவி வருகிறது.

நாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பசைஇ பெட்ரோல்இ பூச்சுஎண்ணெய் (lacquer) மற்றும் இதர கரைமங்கள் நுகரும் பழக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் பசை நுகரும் பழக்கம் ஒரு குற்றச்செயலாக சட்டத்தால் கருதப்படாத காரணத்தால் சரியான கணக்குகள் கிடைப்பது சிரமமாகும். போதைப்பொருள் உட்கொள்பவர்களுக்கு அகப்பட்டுவிடுவோமோ என்ற பயம் இருக்கும். ஆனால் பசை நுகர்பவர்களுக்கு அந்த பயமும் இல்லாமல் மிகவும் தைரியமாக நுகர்ந்து வருகிறார்கள் என்றார் இத்ரிஸ்.

மலேசியாவில் பசை நுகர்வதால் 2000ல் முதல் இறப்புச் சம்பவம் ஏற்பட்டது. 18லிருந்து 20 வயதுக்கு உட்பட்ட 3 இளைஞர்கள் கோலாலம்பூர்,செராஸில் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். அவர்கள் அருகில் 3 டின் பசை கண்டெடுக்கப்பட்டது.

உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தக்கூடிய போதைப்பொருட்களை விட பசை நுகர்வது இன்னும் மலிவானதாகும். போதை விரைவில் ஏறி ஒரு வித கனவுலகத்திற்குக் கொண்டு சென்றுவிடும். பசை நுகர்பவர்களுக்கு பசி எடுக்காது. கரைமங்களிலிருந்து வெளிப்படும் வாயு கண்களில் எரிச்சலை உண்டாக்கி உடலை வறட்சியடையச் செய்யும். அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு வாயில் நுரை வருவதுடன், பேசும்பொழுது மூக்கிலிருந்து நீர் வடியும் என்றார் இத்ரிஸ்.

மருத்துவ ஆய்வின்படி பசை நுகர்வது மூளை, ஈரல், சிறுநீரகம் மற்றும் இருதயக் கோளாறுகளை ஏற்படுத்தும். தொடர்ந்து 6 மாதங்களுக்கு பசை நுகர்பவர்களுக்கு மூளைச் சேதம் ஏற்படும். மன நிலை பாதிப்புக்களுக்கு உள்ளாவார்கள்.

பசை நுகரும் பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள் படிப்பில் ஆர்வம் இழந்து வகுப்புக்களையும் புறக்கணிக்கும் நிலை ஏற்படும். திருட்டுப் பழக்கமும் ஏற்படும். போதைப் பொருளுக்கு அடிமையாகும் பழக்கத்திற்குப் பசை நுகரும் பழக்கம் அடித்தளமாக அமைந்துவிடுகிறது.

மலேசியாவில் இளைஞர்களிடையே பசை நுகரும் பழக்கம் பரவி வருகின்ற காரணத்தால் கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

-போதையூட்டும் வஸ்துக்களுக்கான சட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும். இந்தச் சட்டத்தின் மூலம் பசை நுகர்பவர்களையும் இளையோர்களுக்கு பசை விற்பவர்களையும் கைது செய்ய முடியும்.

-இளைஞர்களிடையே பரவி வரும் பழை நுகரும் பழக்கத்தைத் துடைத்தொழிப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

-சிறிய டப்பாக்களில் பசை விற்கப்படுவதைத் தடை செய்ய வேண்டும்.

இளைஞர்களின் அளப்பறிய ஆற்றல் இந்தப் பசை நுகரும் பழக்கத்தால் பாழ்படாமல் இருக்க விரைவு நடவடிக்கையில் இறங்க வேண்டியது அவசியம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்