Wednesday, February 25, 2009

வானம் ஏன் நீலநிறமாக காட்சியளிக்கிறது?

இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் ஓர் அற்புதமே. நமது நெருங்கிய பழக்கம் காரணமாக நாம் அவற்றின் அற்புதத் தன்மையைக் காண்பதில்லை. "பூக்கள் பூக்கின்றன; மழை பொழிகின்றன; காற்று அடிக்கிறது; இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன;..." இவையெல்லாம் அன்றாடம் நடக்கும் வழக்கமான நிகழ்வுகளே. வானம் பகலில் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது. அதுவும் தெளிவான வானம் அப்பழுக்கற்ற நீல நிறமாகக் காட்சியளிப்பது எத்தனை அற்புதமான காட்சி.

விப்ஜியார் ( Vibgyor) - சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா என்னும் ஏழு வண்ணங்களில், மற்ற ஆறினை விட்டுவிட்டு வானம் ஏன் நீல நிறத்தைத் தன்மீது போர்த்திக் கொண்டது? இக்கேள்வி விடையை அண்ணாந்து பார்த்து இது குறித்துச் சிந்தனை செய்தால் போதும்.

சூரிய ஒளி வானத்தையும் வளிமண்டலத்தையும் பிரகாசிக்கச் செய்கிறது. இரவில் நம் கண்களுக்குப் புலப்படாத வளிமண்டலம் சூரிய ஓளியின் மூலம் நமக்குத் தெரிகிறது. பெளர்ணமியன்று தெளிவான வானத்தைப் பார்ப்போம். சந்திர ஒளி சூரிய ஒளியின் பிரதிபலிப்பே என்றும் அறிவீர்கள். சந்திர ஒளியில் பார்க்கும் போது வானம் நீலநிறமாகத் தெரிவதில்லை என்பது விசித்தரமாகத் தோன்றவில்லையா? சூரிய ஒளியில் நீலமாகத் தெரியும் வானம் சந்திர ஒளியில் அவ்வாறு தெரிவதில்லை. இதற்கான விடை சந்திர ஒளி சூரிய ஒளியைக் காட்டிலும் மிக மிகக் குறைவு என்பதே. கணக்கிட்டுப் பார்த்தால் சந்திர ஒளி, சூரிய ஒளியில் ஐந்து லட்சத்தில் ஒரு பங்கே என்று தெரிகிறது. இது மிகமிகக் குறைவான அளவு ஆகும்.


இருப்பினும் இரவில் நமக்கு இது பிரகாசமாகத் தெரிவதற்குக் காரணம் நம் கண்கள் குறைந்த ஒளிக்குப் பழகிக் கொண்டுவிடுவதனாலேயே. சூரிய ஒளி, சந்திர ஒளி இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மனிதர்களின் காட்சி ஆற்றலைப் பற்றிய ஒரு உண்மை விளங்கும். நிறங்களைக் கண்டுணர மனிதர்களுக்கு சூரிய ஒளி பிரகாசமாக இருப்பதனாலேயே வானத்தின் நீல நிறம் நமக்குத் தெரிகிறது. இவ்வாறு அதிகப் பிரகாசமான வெளிச்சத்தில் மட்டுமே நிறங்களை நாம் காணமுடியும். பிரகாசம் குறையக் குறைய நிறங்கள் மறைந்து போகும்.

சூரிய ஒளியின் நிறமாலையில் நீல நிறம் மிகமிகக் குறைந்த பிரகாசத்தைக் கொண்டது. மொத்த ஒளியில் நாற்பதில் ஒரு பங்கே (1/40) நீல நிறத்தின் பிரகாசம். வானத்தில் நாம் காண்பது இந்த நாற்பதில் ஒரு பங்கான நீல நிறத்தை மட்டுமே. அதிக பிரகாசமுள்ள மற்றநிறங்கள் காணாமல் போய்விடுகின்றன. நீல நிறம் மற்ற நிறங்களை மூடி மறைத்து விட்டது இது ஒரு குறிப்பிடத்தக்க உண்மை.

சில சமயங்களில் ஆகாயத்தில் ஆங்காங்கே வெள்ளை மேகங்களைக் காணலாம். இத்தகைய வெள்ளை மேகங்கள் வானில் பவனி வரும் காட்சி மிக அற்புதமான ஒன்றாகும். இவ்வாறு வெள்ளை மேகங்கள் இருக்கும் போது வானம் பளீரென்று நீலநிறமாகக் காட்சியளிப்பதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்குக் காரணம், இந்த மேகக் கூட்டங்கள் உண்டாகும் போது அவை வளிமண்டலத்திலிருந்து தூசிப் படலத்தை தாங்கள் ஈர்த்துக் கொண்டு சுத்தம் செய்து விடுவதே.

பளீரென்ற வெள்ளை மேகங்களுக்கிடையே அற்புதமான நீலநிறத்துடன் வானம் காட்சியளிப்பது அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய ஒன்றாகும். உண்மையில் வெள்ளை மேகங்கள் நீர்த்துளிகளாலும் தூசியினாலும் ஆனவை. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தூசிகள் இல்லாவிட்டால் மேகங்களே உருவாக முடியாது என்பதே. இவ்வாறு மேகங்கள் உருவாகி வளிமண்டலத்தை ஒரளவிற்குச் சுத்தம் செய்துவிடுகிறது. உண்மையில் நாம் நீலவானத்தைப் பார்க்கும்போது, பூமியின் வளிமண்டலத்தைப் பார்க்கிறோம். அங்கு ஒளிச் சிதறல் ஏற்படுகிறது.

வானத்தில் பச்சை, மஞ்சள்,சிவப்பு ஆகிய நிறங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதுமட்டுமல்ல அவை நீலத்தைவிட பிரகாசமானவையாகவும் உள்ளன. ஆயினும் நாம் ஏன் அவற்றை காணாமல் நீல நிறத்தை மட்டும் காண்கிறோம்? இங்கு மனிதனின் காட்சி அமைப்பு(Vision) ஒரு காரணமாகிறது. நிற மாலையின் நீலப்பகுதி, பிரகாசம் குறைவாக மறைத்து அதுமட்டும் நம் கண்களுக்கு மட்டும் தெரியும். நிறமாலை முழுவதையும் இரண்டாகப் பிரிக்கலாம். நீலநிறம் முடியும் இடம் - அதாவது பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு இவை ஒரு பகுதி. மற்றவை நீலம், கருநீலம், ஊதா. முதல் பகுதியில் மற்ற நிறங்களிருப்பினும் மஞ்சள் நிறமே முதன்மையாக இருக்கும். அவ்வாறே இரண்டாவது பகுதியில் நீல நிறமே முக்கியத்துவம் பெறுகிறது. இதில் மஞ்சள் பகுதியை எடுத்துவிட்டால் நீல நிறமே தெரிகிறது. இதுவே வானம் நீலமாகக் காட்சியளிப்பதற்கான காரணம். மஞ்சளின் பிரகாசம் குறைக்கப்படுகிறதே அன்றி அது முழுவதுமாக நீக்கப்படுவதில்லை .

எனவே வானம் நீல நிறமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் வளிமண்டலத்தில் உள்ள திரண்மங்கள் ஏற்படுத்தும் ஒளிச்சிதறலே. பெரிய அலைகளைக் கொண்ட( Longwaves) மஞ்சள் நிறத்தின் சிதறல் குறைவாகவும் அடர்த்தியற்றும் இருப்பதால், அதிகமாகவும் அழுத்தமாகவும் உள்ள நீல நிறத்தின் சிதறல் மட்டுமே மிகவும் நன்றாகத் தெரிகிறது.

சுருங்கக் கூறின், வானம் நீலநிறமாக இருப்பதற்குக் காரணங்கள் பின்வருமாறு,

1. நிறங்களைக் கண்டுணர நமக்கு மிகவும் பிரகாசமான வெளிச்சம் தேவை என்பது நமது காட்சித்திறன் பற்றிய ஓர் அடிப்படை அம்சம். எனவே பகலில் சூரிய ஒளியில் மட்டுமே வானம் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது.

2. நமது காட்சித்திறன் பற்றிய மற்றொரு அம்சம் - நிறமாலையின் நீலப்பகுதி, அது பலவீனமாக இருப்பினும், மஞ்சள் நிறம் மிகக் குறைவாக இருக்கும் போது முக்கியத்துவம் பெறுகிறது.

No comments:

Post a Comment