Thursday, February 26, 2009

திருமணம் - ஓ.சரஸ்வதி தேவி

இரண்டு மனங்களின், இரண்டு சிந்தனைகளின் ஒன்றிணைந்த பிணைப்பே திருமணம். திருமணம் என்ற பந்தத்தின் வழி, ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ளும் இரு ஜீவன்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களை காலம் முழுவதும் பகிர்ந்து கொண்டு ஒருவர் மற்றொருவரை அனுசரித்துக் கொண்டு, நீண்ட வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வதே இல்வாழ்க்கையாகும்.ஆனால் இந்த திருணம் என்பது எப்பொழுதும் மலர்கள் நிறைந்த ஒரு பசுஞ்சோலையாகவே இருந்து விடுவதில்லை.

வறண்டு போன ஒரு பாலைவனமாகவும் கூட இது மாறிவிடுவதுண்டு.திருமண வாழ்க்கை பூத்துக் குலங்கும் ஒரு பசுஞ்சோலையாக இருப்பதும், வறண்டுப் போன பாலைவனமாக மாறுவதும் இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும், இல்லற ஜோடிகளின் கைகளில்தான் உள்ளது.காதல் திருமணமாகயிருந்தாலும் சரி, பெற்றோர்கள் பார்த்து முடிக்கும் திருமணமாகயிருந்தாலும் சரி, திருமணமானவர்களிடையே இருக்கும் பொறுமையும், புரிந்துணர்வுமே வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் இரகசியமாகும்.

இருசாரார் ஒன்று சேர்ந்து நடத்துவதுதான் திருமண வாழ்க்கை. ஆதலால் ஒரு காரியத்தை இருபாலரும் சேர்ந்து செய்வதும், தங்கள் எண்ணங்களை ஒருவர் மற்றொருவருடன் பரிமாறிக் கொள்வதும், வெளிப்படையான பேச்சும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு மிக மிக அவசியமான “டானிக்கு” களாகும்.

ஒருவர் மற்றொருவருடன் பேசும் முறை, தம்முடைய எண்ணங்களைப் பகிர்ந்து, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறைகள் ஆகியவை திருமண வாழ்வில் முக்கிய பங்காற்றுகின்றன.இல்லற வாழ்க்கையில் வெற்றி என்பது ஒருவர் தம்முடைய இல்லறத்துணையின் மதிப்பையும், உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் புரிந்து கொள்வதையும்இ விட்டு கொடுக்கும் மனப்பான்மையையும் பொறுத்துள்ளது.ஆனால் துரதிஷ்ட வசமாக தம்பதிகள் பலர் இதனை உணராமலே திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கின்றார்கள்.

இதனால்தான் திருமண முறிவுகளின் எண்ணிக்கைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. மேலும் சிலர் மேற்குறிப்பிடப்பட்ட எது ஒன்றும் இல்லா சூழ்நிலையில் அனைத்தையும் பெற்றுக் கொண்டு காலம் தள்ளி வருகின்றனர். இன்னும் சிலர் எதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் பிரிந்து வாழ முடிவு செய்கின்றனர்.அதிகரித்து வரும் திருமண முறிவுகளும், திருமண பிளவுகளும் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கையின் அறிகுறிகள் அல்ல! இந்நிலை சமூகத்தினரிடையே குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியும், எதிர்கால சந்ததியினரிடையே பாதுகாப்பற்ற ஒரு நிலையையும் ஏற்படுத்த நேரிடும்.

தொடரும்...

No comments:

Post a Comment