Friday, February 25, 2022

பூச்சிகளை அழிக்க விஷப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மலேசிய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனர்.

 பூச்சிகளை அழிக்க விஷப் பூச்சிக்கொல்லிக்குளின் பயன்பாட்டை நிறுத்துமாறு மலேசிய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனர். பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பூச்சி விரட்டியைகளை  பயன்படுத்துவதால் நல்ல விளைச்சலை அதிகரிக்கும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

மலேசிய விவசாயிகள் தங்கள் விவசாய பண்ணையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பூச்சி விரட்டியைகளைப்  பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு ஒவ்வொரு பண்ணையிலும் மிகவும் முக்கியமான நன்மை பயக்கும் பூச்சிகளைக் குறைக்கிறது அல்லது அழிக்கிறது என பி.ப.சங்கத்தின் இயற்கை விவசாய பயிற்றுனர் என்.வி.சுப்பாராவ் கூறினார்.

பயிர் சூழலில் நன்மை செய்யும் பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயற்கை விவசாய முறைக்கு திரும்பினால் வயலில் நல்ல பூச்சிகள் அதிகரிக்கும். பூச்சிக்கொல்லிகள் பண்ணையில் வாழும் 60% நன்மை பயக்கும் அல்லது நல்ல பூச்சிகளைக் கொன்றுவிடுவதாக அவர் எடுத்துரைத்தார்.

அதிக விலை கொடுத்து இரசாயனங்களை வாங்கி, பிறகு லாபம் பெறாமல் பணத்தை இழக்கும் விவசாயிகள் அதிகரித்து வருகின்றனர். விவசாயிகள் அதிக லாபம் பெற வேண்டுமென்றால், அவர்கள் இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும் என்றார் சுப்பாராவ்.

எல்லா பூச்சிகளும் வில்லன்கள் அல்ல. பயிர்களில் பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார் அவர்.

வயல்களில் பயிர்களை தின்று மகசூல் இழப்பை ஏற்படுத்தும் பூச்சிகளால் விவசாயிகளுக்கு சிக்கல் உள்ளது.

இவற்றை தீங்கிழைக்கும் பூச்சிகள் என்கிறோம். அதே சமயம் சிலந்தி, குளவி, வண்டு, அந்துப்பூச்சி எனப் பல பூச்சிகள் நம் பயிரை உண்ணாமல் நமக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை மட்டும் பிடித்து உண்ணும்.

இவை அனைத்தும் நமக்கு நன்மை செய்யும் பூச்சிகள். நமது பயிரை உண்ணும் பூச்சிகள் இலையை சுருட்டிவிடும் அல்லது தண்டை கடிக்கும். அந்துப்பூச்சிகள், குளவிகள் மற்றும் சிலந்திகள் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் பயிருக்கு வெளியே சுற்றித் திரிகின்றன.

இச்சூழலில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வயல்களில் அடிக்கும் போது முதலில் நன்மை செய்யும் பூச்சிகள்தான் கொல்லப்படுகின்றன என சுப்பாராவ் எடுத்துரைத்தார்.

இது தவிர, உயிர்வாழ நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு ஏற்ற தன்மை பூச்சிகளுக்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு அதிகரித்துக் கொண்டே போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பூச்சிக்கொல்லிகள் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கின்றன, அவை, அனைத்தையும் உரமாக்கும் சிறப்பு திறன் கொண்டவை. இதனால், பூச்சிக்கொல்லிகளின் வீரியம் அதிகரிப்பதால், அந்த வயல்களில் விளையும் உணவை உண்ணும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பல புதிய நோய்கள் ஏற்படுகின்றன.

மறுபுறம் பயிர் பூச்சிகள் அதிகரித்து வருகின்றன. அப்படியானால் பூச்சிகளைக் கட்டுப்படுத்த என்ன வழி? முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்றார்கள். அதேபோல், பூச்சிகளை பூச்சிகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.

நமது வயல்களில் போதுமான அளவு பூச்சிகள் இருக்க வேண்டும். அப்போது, ​​பயிர்களை உண்ணும் பூச்சிகளை, நன்மை செய்யும் பூச்சிகள் பிடித்து உண்ணும். இதனால் பூச்சிகளின் இனப்பெருக்கம் இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படும்.

பூச்சிக்கொல்லிகளைத் தவிர்ப்பதன் மூலம் ஏற்கனவே வயல்களில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க முடியும். வயலில் மக்காச்சோளத்தை பயிரிடுவதன் மூலம் மஞ்சள் பூக்கள் கொண்ட சந்தன (மரிகோல்டு) செடியை நம் வயல்களுக்குள் பல நன்மை செய்யும் பூச்சிகளை ஈர்க்கலாம்.

தட்டையான பருப்பு வகைகளில் உள்ள அசுவினிகளை உண்பதற்காக ஏராளமான நன்மை செய்யும் பூச்சிகள் நம் வயல்களுக்குள் படையெடுக்கும். அசுவினியை சாப்பிட்ட பிறகு, நம் வயல்களில் பயிர்களில் மறைந்திருக்கும் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.

இதனால் நன்மை செய்யும் பூச்சிகள் எண்ணிக்கையை அதிகரித்து பயிர்களை அழிக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
வேப்பங்கொட்டை கரைசல், இயற்கை பூச்சி விரட்டி கரைசல் போன்றவற்றை பயிர்களின் மீது தெளிப்பதன் மூலம் பயிரின் இலைகளில் கசப்புத்தன்மையை உருவாக்கலாம். இதனால் கசப்புச் சுவையுள்ள பூச்சிகளை உண்ணாமல் தீங்கு செய்வது தவிர்க்கப்படும்.

இது மற்றொரு உத்தி. மேலும் மேடுகளில் ஜாதிக்காய் போன்ற செடிகளை வைப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் வயல்களுக்குள் வராமல் தடுக்கலாம்.

எனவே, நம் பயிர்களுக்குச் செல்லும் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

நன்மை செய்யும் பூச்சிகள் விவசாயிகளின் நண்பர்களாக இருந்தால் பரவாயில்லை. எனவே, பூச்சிகளும் நம் நண்பர்களே, ஏனென்றால் அவை நம் நண்பர்களான நல்ல பூச்சிகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை மிக அதிகமாக இருப்பதாக மலேசிய விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

இந்த விவசாயிகளுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அறிவுரை என்னவென்றால், நீங்கள் பணம் சம்பாதிக்க விரும்பினால், இயற்கை விவசாயத்திற்கு திரும்புங்கள்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை முறைகளைப் பயன்படுத்துவதால், விவசாயிகளுக்கு சாகுபடிச் செலவு குறைகிறது. மகசூல் இழப்பை தடுக்கலாம். வேம்புக் கரைசல், மூலிகைப் பூச்சிக்கொல்லிகள், ஐந்து இலைக் கரைசல், பச்சை மிளகாய்- இஞ்சிக் கரைசல் ஆகியவை பூச்சிகளை விரட்ட சோதனை செய்யப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளதாக சுப்பாராவ் கூறினார்.பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நூற்றுக்கணக்கானவிவசாயிகளுக்கு இந்த முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பூச்சி மேலாண்மை மூலம் வெற்றிகரமான விவசாயத்திற்குத் திரும்ப விரும்பும் விவசாயிகள் பி.ப.சங்கத்தின் இயற்கை விவசாயப் பயிற்சிகளில் பங்கேற்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நடைபெற்ற பூச்சி விரட்டி செயல் விளக்க பட்டறையில் மூன்று விதமான பூச்சி விரட்டி முறைகள் சொல்லித்தரப்பட்டன. இயற்கை வேளாண்மை பயிற்சியாளர்கள் மூலம் 3 வகையான பூச்சி விரட்டும் முறைகள் விவசாயிகளுக்கு செய்து காட்டப்பட்டது.

அவை 5 இலை கரைசல், இஞ்சி-பூண்டு கரைசல் மற்றும் இஞ்சி-பூண்டு, பெருங்காயம் கரைசல்.

இந்த முறைகள் அனைத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சியில், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் இயற்கை விவசாய பயிற்சியாளர்களான சரஸ்வதி தேஉடையார்,  தீபன் குணசேகரன் மற்றும் சிவானந்தன் ஆகியோர் இயற்கை பூச்சி விரட்டிகளைச் செயல் முறையில் செய்துக் காண்பித்தனர். பி.ப சங்கத்தின் சுங்கை சிப்புட் வட்டார பொறுப்பு அதிகாரி அ.மணிவேலு மற்றும் ஆறுமுகம் ஆகியோர் கலந்து சிற்ப்பித்தனர்.

நன்றி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Monday, February 14, 2022

கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்ற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அகல் விளக்குகளை ஏற்றங்கள். தெலுக் பஹாங் தெப்பத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள்.


எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படும் பினாங்கு தெப்பத்திருவிழாவின் போது பக்தர்களால் கடலில் விடப்படும்  மிதக்கும் அகல் விளக்குகளின் தட்டுக்கள், சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு இருக்க அங்கு வரும் பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என 4 பொது இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.  

பக்தர்கள் எந்தவிதமான செயற்கை நெகிழி தட்டுக்கள் அல்லது கடல் வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வர்ண தட்டுக்களும் பயன்படுத்த வேண்டாம் என 

பினாங்கு பயனீட்டாளர்  சங்கம், பினாங்கு மாநில பசுமைக் கவுன்சில், மலேசிய இந்து சங்கம் புக்கிட் பெண்டாரா பேரவை, மற்றும் ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் கோயில் நிர்வாகம், தெலுக் பகாங் ஆகியவை கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. 

மாசி மக தெப்ப திருவிழா இந்த ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி பினாங்கில் உள்ள தெலுக் பஹாங்கில் கொண்டாடப்படும் ஒரு மிதக்கும் தேர் திருவிழாவாகும்.

தெலுக் பகாங்கில் உள்ள 115 ஆண்டுகள் பழமையான சிங்கமுக காளியம்மன் கோவிலில் கொண்டாடப்படும் மிதக்கும் தேர் ஊர்வலம் ஒரு கடலோர திருவிழாவாகும், இது கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.

இத்திருவிழாவின் போது கோயில் தெய்வங்களை ஏற்றிக்கொண்டு விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மிதக்கும் தேர் கடலில் உலா செல்லும். 

இது இக்கோயிலின் பாரம்பரியமாக இருந்து வருகிறது; ரத யாத்திரையின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலங்காரம் செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவர்.

அலங்கரிக்கப்பட்ட அகல் கடலில் பக்தர்களால் விடப்படும். முன்பு இந்த அகல் விளக்குகள்  ஸ்டைரோஃபோம் மற்றும் பாலிஸ்டிரீன் போன்ற நெகிழியால் செய்யப்பட்டதாக இருந்தன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக நெகிழி தட்டுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்த காரணமாக நெகிழி தட்டுக்களின் பயன்பாடு குறைந்து உள்ளது என இந்த பிரச்சாரத்திற்கு பொருப்பு ஏற்றுள்ள என் வி சுப்பாராவ் தெரிவித்தார்.

மிதக்கும் ஸ்டைரோஃபோம் மற்றும் பாலிஸ்டிரீன் ஆகியவை கடல் நீரில் எளிதில் பயணிக்கின்றன. கடந்த காலங்களில், நூற்றுக்கணக்கான செயற்கை நுரை அடிப்படையிலான பொருட்கள் ஊர்வலம் முடிந்த மறுநாள் கடலில் மிதப்பதைக் காண முடிந்தது. நுரை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல் மாசுபடுத்தும் முக்கிய காரணிகளாக அறியப்படுகின்றன, அவை கடல் உயிர் இனங்களை அச்சுறுத்துகின்றன.

ஸ்டைரோஃபோம் மற்றும் பாலிஸ்டிரீன் ஆகியவை மக்கும் தன்மையற்றவை மற்றும் சிறிய துண்டுகளாக உடைந்துவிடும். இவை மீன் மற்றும் ஆமைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்களால் உணவாக தவறாக உட்கொள்ளப்படுகின்றன என்றார்  சுப்பாராவ்.

கடல் மாசுபாடு மற்றும் கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளின் விளைவாக பாலிஸ்டிரீன் மற்றும் பிளாஸ்டிக் அடிப்படை பொருட்களைத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றன. 

அகல் விளக்குகள் சுமார் இரண்டு முதல் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர்  வாழை மரத்தின் தண்டுகளின் அடுக்குகளில் பொருத்தப்பட்டன, அவை மிதக்கும் தன்மையைக் கொண்டுள்ளன, இறுதியில் அது கடலில் மக்கும். கோயில் நிர்வாகம் கடந்த ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளை ஊக்குவித்து வருகிறது,

ஆகவே, பினாங்கு பயனீட்டாளர் சங்கம், பினாங்கு மாநில பசுமை கவுன்சில்,  மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டாரா பேரவை  மற்றும் கோவில் நிர்வாகத்துடன் இணைந்து பாக்கு மரத்தட்டு, மற்றும் வாழை மரத்தின் தண்டுகள் போன்ற பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளுக்குச் செல்லுமாறு பக்தர்களை வலியுறுத்துகிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறைகளுடன் கூடிய பக்திச் செயல் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் அதே வேளையில், மிதக்கும் திருவிழா மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என அந்த 4 பொது இயக்கங்கள் கூட்டாக வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளன. 


பினாங்கு பயனீட்டாளர் சங்கம் | 
பினாங்கு பசுமை கவுன்சில் | 
பினாங்கு இந்து சங்கம் புக்கிட் பெண்டேரா பேரவை |               
ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் கோயில் தெலுக் பகாங்

Sunday, February 13, 2022

புறாக்களின் இறகுகளில் வானவில் சாயம் பூசுவதை நிறுத்துங்கள். பொதுமக்களும் அவற்றை வாங்ககூடாது. பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்.

 

கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் அருகே ஒரு வியாபாரி, தான் விற்கும் புறாக்களின் இறகுகளின் மீது வானவில் தோற்றத்தில் சாயங்களை பூசி விற்று வரும் செயலை பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது பிராணிகள் மீது காட்டப்படும் ஒரு வன்முறை என அந்த இயக்கத்தின் தலைவர் மீனாட்சி ராமன் அதிருப்தி தெரிவித்தார்.

புறாக்களுக்கு இயற்கையாகவே தனது உடல் முழுவதும் வர்ணங்கள் உள்ளன.

ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வியாபார நோக்கத்தில் அதனை விற்பனை செய்வோர் வானவில் தோற்றத்தில் ரசாயனங்கள் கொண்ட சாயங்களை புறாக்களின் இறகுகளில் பூசி விற்பது புறாக்களின் உரிமைகள் மீது மீறுகின்ற செயலாகும் என மீனாட்சி கூறினார்.

எதற்கு புறாக்களின் இறகுகளில் சாயம் பூச வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.

மனிதர்கள் தங்களின் முடி, மீசை அல்லது தாடிக்கு சாயங்களை பூசிக்கொள்ளலாம். ஆனால் புறாக்களின் இறகுகளின் மீது சாயங்கள் பூச இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது.

இயற்கையான சூழலில் பறந்து சுற்றித்திரியும் புறாக்களின் மீது செயற்கையான சாயங்களை பூசி அவற்றின் வாழ்வை நாம் கொன்று விடுகின்றோம் என்றார் அவர்.

செயற்கை வர்ணங்களை அவற்றின் இறகுகளில் பூசுவதால் சாயம் பூசப்படாத மற்ற புறாக்களுக்கும் இவற்றிர்க்கும் இடையே உள்ள இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது. சாயம் பூசப்பட்ட புறாக்கள் மற்ற புறாக்களோடு சேருவதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

புறாக்களின் மீது ரசாயனம் கொண்ட சாயங்களை பூசுவது என்பது ஒரு துன்புறுத்தும் செயலாகும்.

டிவிஎஸ் எனப்படும் கால்நடை சேவை இலாகா இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்ல பிராணிகளை வளர்ப்போர், மிருக நலச் சட்டம் 2015(விதி 722) கீழ் தாங்கள் வளர்க்கும் பிராணிகள் நலமுடன் இருக்க பொருப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கால்நடை இலாகாவிற்கு உரிமை உண்டு என மீனாட்சி தெரிவித்தார்.

இப்படி பலதரப்பட்ட வர்ணங்களில் புறாக்களின் இறகுகள் மீது சாயங்களை பூசி விற்பதை வியாபாரிகள் நிறுத்தி கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் புறாக்களை தங்களின் செல்லப் பிராணிகளாக வளர்க்க விரும்புவோர், வானவில் தோற்றத்தில் பூசப்பட்ட புறாக்களை வாங்க வேண்டாம் எனவும் புறாக்களை இயற்கையோடு வாழ வழி விட வேண்டும் எனவும் மீனாட்சி ராமன் கேட்டுக்கொண்டார்.

நன்றி
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்
பினாங்கு

மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க போடப்பட்டுள்ள் கற்களால் அதிக சிரமம்!

 

பினாங்கு கடற்கரையில் நடப்போருக்கு ஆபத்து. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை.

பினாங்கு பத்து பிரிங்கி கடற்கரையோரத்தில் அதி வேகமாக வரும் கடல் நீரின் சீற்றத்தால் பல விடுதிகளுக்கு அருகிலுள்ள, மண் சுவரில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பெரிய அளவிலான பாராங் கற்கள் மண் சரிவு ஏற்படாமல் இருக்க பயன் படுத்தப் பட்டு வருகிறது

ஆனால் வேகமாக வரும் கடல் அலையால் அந்த கற்கள் மீண்டும் கரைக்கு வந்து சேர்ந்து விடுவதால், கடற்கரையில் நடப்போருக்கும், குளிப்போருக்கும் அதிக ஆபத்தை தருகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி ஆய்வுப் பிரிவு அதிகாரி என் வி சுப்பாராவ் கூறினார்.

கடந்த சில மாதங்களாக இந்த மண் அரிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது.

பருவ நிலை மாற்றத்தின் காரணமாக கடல் நீரின் அளவு உலகெங்கிலும் உயர்ந்து கொண்டே வருகிறது என்றார் சுப்பாராவ்.

இதன் காரணமாக பத்து பெரிங்கின் கடலின் நீர் அதிகரித்து வரும் வேளையில், கடல் அலையும் வேகமாக உள்ளது.

இதனால் கடற்கரை ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. பத்து பெரிங்கி கடற்கரை ஓரத்தில் இருந்த ஏறக்குறைய 20 தென்னை மரங்கள் கடல் நீரின் அதி வேகத்தால் சாய்ந்து விட்டதாகவும் சுப்பாராவ் தெரிவித்தார்.

மண் அரிப்பு மேலும் ஏற்படாமல் இருக்க சில தங்கும் விடுதிகள் மிகப் பெரிய பாரங்கற்களை கொண்டு வந்து வைகின்றார்கள்.

ஆனால் கடலிலிருந்து வரும் நீர் இந்த கற்களின் மீது பாய்ந்து, அக்கற்களை மீண்டும் கடலுக்கு இலுத்து சென்று விடுகிறது. கடலுக்கு செல்ல முடியாத கற்கள், நடைபாதயில் தங்கி விடுவதாக சுப்பாராவ் கூறினார்.

இதன் காரணமாக, கடற்கரை ஓரம் நடப்பவர்களுக்கும், காலை மாலையில் உடற் பயிற்சி செய்வோருக்கும் நட பாதையில் இருக்கும் கற்கள் ஆபத்தை தருகின்றன.

பலர் இது குறித்து தங்களிடம் புகார் செய்திருப்பதாக அவர் கூறினார்.

ஆகவே மண் அரிப்பு மேலும் தொடராமல் இருக்க பாராங் கற்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மாற்று வழிகளை பின்பற்ற வேண்டும்.
மண் சுவர்களில் இரும்பு கம்பிகளால் தடுப்பு சுவர் எழுப்பலாம் என அவர் சிபாரிசு செய்தார்.

இன்னும் பல நூறு தென்னை மரங்கள் கடலோரம் இருக்கின்றது. மேலும் மண் அரிப்பு ஏற்பட்டால் இவையும் சாய்ந்துவிடும்.

ஆகவே பொதுமக்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் அதிக எண்ணிக்கையில் வரும் பத்து பெரிங்கியில் நிகழும் மண் அரிப்பு சம்பவங்கள் தொடராமல் இருக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சுப்பாராவ் கூறினார்.

நன்றி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Sunday, February 6, 2022

நச்சு புகையின் எதிரொலி 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம் 10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.

பத்திரிகை செய்தி. 18.2.21

நச்சு புகையின் எதிரொலி - 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம்
10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. 10 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் முககவரி அணிவது அவசியம்.

300 மீட்டர் பூமிக்கு அடியில் இன்னும் தீ எறிந்து கொண்டுள்ளது. அவசர பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும்படி பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்!

நிபோங் திபால் அருகே உள்ள பூலாவ் பூரோங் குப்பை கிடங்கில் ஏற்பட்ட மிக மோசமான தீ இன்னும் அணைக்கப்படாமலிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கவலை தெரிவித்துள்ளது.

குப்பைகிடங்கிலிருந்து எறியும் தீயினால் வெளியாகும் நச்சு புகை ஆபத்தை கொடுக்கும் என்ற காரணத்தால் அந்த பூலாவ் பூரோங் பகுதியை சுற்றியுள்ள 3 தமிழ் பள்ளிகள் உட்பட 10 பள்ளிக்கூடங்கள் வெள்ளிக்கிழமை வரையில் மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் என் வி சுப்பாராவ் தெரிவித்தார்.


இந்த நச்சு புகை சிறார்களை கடுமையாக பாதிக்கும் என்ற காரணத்தால், நிபோங் திபால் தமிழ் பள்ளி, ஜங்காட் தோட்ட தமிழ் பள்ளி மற்றும் பைராம் தோட்ட தமிழ் பள்ளி உட்பட 10 பள்ளிக்கூடங்கள் வரும் வெள்ளிக்கிழமை வரையில் மூடும்படி மாநில 

இதிலிருந்து, குப்பை கிடங்கிலிருந்து வெளியாகும் புகை எவ்வளவு நச்சு வாய்ந்தது என தெளிவாக தெரிகிறது என்றார் சுப்பாராவ்.

கடுமையான காற்றின் வெளிப்பாடு வழிகாட்டின் நிலை குறித்து கண்டறியப்பட்ட விபரத்தில் இப்பகுதியில் வெளியாகும் காற்றின் அளவு 3யை எட்டியுள்ளது.

இங்கு சுற்றி வசிப்போரின் ஆரோக்கியத்திற்கும்,உயிருக்கும் இது ஆபத்தை தரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுமார் 400 பேர் இவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்த ப்பட்டுள்ளனர் என்பதை சுப்பாராவ் சுட்டிகாட்டினார்.

பூலாவ் பூரோங் குப்பைகிடங்கின் மொத்த அளவு 16 எக்டர். தீ ஏற்பட்ட பகுதியின் அளவு 6.5 ஏக்டர். அங்கு கொட்டப்பட்ட குப்பைகள் 15 லிருந்து 20 மீட்டர் ஆழத்திற்கு சென்றுள்ளது. ஏற்பட்ட தீயும் அந்த ஆழத்திற்கு சென்றுள்ளதால், தீயணைப்பு வீரர்கள் கடுமையான சவாலை எதிர்நோக்கி வருகின்றனர்.

தீயணைப்பு இலாகா 25 க்கும் மேற்பட்ட இயந்திரங்களை இங்கே பயன்படுத்தி வருகின்றனர். இங்கே நச்சு உமிழப்படுகின்றது. இது நிறுத்தப் பட வேண்டும்.

புலாவ் பூருங் குப்பைக் கிடங்கில் தீ இன்னும் நிலத்தடியில் எரிந்து கொண்டிருப்பது கவலை தருகிறது.  இருப்பினும் மேற்பரப்பில் உள்ள தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த குப்பை கிடங்கு கடந்த ஆண்டு பலமுறை தீப்பிடித்து எரிந்ததாகவும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் குப்பை கிடங்கில் இருந்து சாயக்கழிவுகள் பெருக்கெடுத்து ஓடுவதாக புகார்கள் வந்ததாகவும், இதனால் இங்குள்ள நீர்நிலைகள் மாசுபடுவதுடன் அருகில் உள்ள சதுப்புநிலக் காடுகளுக்கும் சேதம் ஏற்பட்டது என்பதை சுப்பாராவ் சுட்டிகாட்டினார்.

நாட்டிலேயே அதிக மறுசுழற்சி விகிதங்களைக் கொண்ட மாநிலமாக பினாங்கு விளங்குகிறது. நச்சுத்தன்மை கொண்ட பறக்கும் சாம்பல் அபாயகரமான கழிவுகள் என வகைப்படுத்தப்படுகிறது என்பதையும் சுப்பாராவ் தெரிவித்தார்.

அலட்சிய போக்கை கடைபிடித்த குப்பைகளை கையாளும் நிறுனத்தின் உரிமம் பரிக்கப்பட வேண்டும் என சுப்பாராவ் மாநில அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறினார்.

என் வி சுப்பாராவ்
துணை பொதுச்செயலாளர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்
பினாங்கு