Wednesday, December 11, 2013

சாலு மரத திம்மக்கா

"சாலு மரத திம்மக்கா" என்றால், கர்நாடகாவுக்கே தெரியும்
எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில்... இன்று சாலை நெடுக இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் சலசலக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுக்க வரிசையாக (சாலுத) நின்று, ஊருக்கே நிழலாற்றும் அம்மரங்களை நட்டு வளர்த்த திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது... 101!

இந்த பசுமைச் சேவைக்காக... சிறந்த தேசியக் குடிமகன் விருது, நான்கு குடியரசுத் தலைவர்களின் கையால் பெற்ற விருதுகள், மூன்று பிரதமர்களிடமிருந்து பெற்ற விருதுகள், பல முதலமைச்சர்கள் அதிசயித்து அளித்த மாநில விருதுகள், தன்னார்வ, பெண் நல நிறுவனங்கள் வழங்கிய விருதுகள், பட்டங்கள் என குவித்திருக்கும் திம்மக்கா பாட்டியின் கூதூர் கிராமம் இருப்பது... செல்போன்சிக்னல் கூட கிடைக்காத பெங்களூரு ஊரக மாவட்டமான மாகடி தாலுகாவில்!

பயணம் நெடுகிலும் திம்மக்கா பாட்டி வளர்த்திருக்கும் ஆலமரங்கள் தலையசைத்து வரவேற்கின்றன. வாசலில் நம்மைக் கண்டவுடன், முந்தானையில் முடிந்திருந்த கசங்கிய 10 ரூபாய் நோட்டைக் கொடுத்து, டீ வாங்கிவர ஆள் அனுப்புகிறார். உடனடியாகக் குளித்து, விபூதி பூசி, பளிச்சென அணிந்து சிரிக்கிறார்... ஐந்து நிமிடங்களுக்குள்!

"ஏழைக் குடும்பத்துல பிறந்தவ நான். 16 வயசுல, என் எசமான் சிக்கையா கையில புடிச்சுக் கொடுத்துட்டாங்க. பேகூர்ல இருந்து கூதூருக்கு வந்துட்டோம். கல்யாணமாகி 10 வருஷம் ஆகியும் குழந்தை எதுவும் உண்டாகல. ஏறாத கோயில் இல்லை. விரதம் இருந்தே உடம்பு வீணாப் போச்சு. அக்கம்பக்கம் ஜாடை மாடையா பேசின பேச்சு, உயிரை வதைச்சுது. காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் காட்டுல உழைச்சுட்டு வீடு வந்தா, சோறு இறங்காது... நிம்மதியான தூக்கமும் இருக்காது. ஒரு கட்டத்துல தூக்கு மாட்டிக்கலாம்னு நினைக்கற அளவுக்கு மனசு வெறுத்துட்டேன்.".

இதைச் சொல்லும்போது, இந்த 101 வயதிலும் கண்கள் இடுங்குகின்றன. "வயித்துல சுமந்து வளர்க்கறது மட்டும்தான் உசுரா...? ஆண்டவன் படைப்புல ஆடு, மாடு, மரம், செடினு எல்லாமே உயிருதான்ங்கிற உண்மையை, அப்போ என் மனசு தவிச்ச தவிப்பு மூலமா உணர்ந்தேன். "குழி பறிச்சு, கன்று நட்டு, தண்ணிவிட்டு... அந்தச் செடியையே புள்ளையா
வளர்ப்போம்.

ஊர்ல எல்லாரோட புள்ளைகளும் அவுங்கவங்க அப்பன், ஆத்தாவைத்தான் பார்த்துக்குவாங்க. ஆனா, என் புள்ளைங்க வளர்ந்து, இந்த ஆத்தாவுக்கு மட்டுமில்ல... ஊருக்கே நிழல் கொடுக்கும்"னு என் மனசுக்கு ஒரு தெளிவு கிடைச்சுது. இந்த கூதூர் முழுக்க பொட்டல் காடுதான். வெக்கையா திகிக்கும். ரோட்டோர சுமைதாங்கிக் கல் பக்கத்துல ஒரு ஆலங்கன்று நட்டு வளர்த்தேன். ஆரம்பத்துல, "இது என்னாடி கிறுக்குத்தனம்?"னு கோபப்பட்டார் என் எசமான். ஆனா... அந்தச் செடி வேர் பிடிச்சு, இலை துளிர்த்து வளர்ந்தப்போ... வயிறு குளிர்ந்து, மனசு குளிர்ந்து நான் அடைஞ்ச சந்தோஷத்தை ரசிச்சவர், அதுக்குப் பிறகு மரம் நடுற வேலைகள்ல எனக்கு உதவிகள் செய்ய ஆரம்பிச்சார்.

காடு, மேடுனு அலைஞ்சி, திரிஞ்சி நிறைய ஆலமரக் கன்றுகளா கொண்டு வந்து, பதியம் போட்டு வளர்த்து, கொஞ்சம் பெருசானதும், ரோட்டோரத்துல குழி தோண்டி நட்டோம். இப்படி ஆலமரக் கன்றுகளா நட்டுட்டே இருந்தோம். மழை வரும்போதே குழிவெட்டி சேமிச்சாதான் தண்ணி. அப்படி சேர்ந்த தண்ணியை கிணத்துல, குளத்துல இருந்து எடுத்துட்டு வந்து நானும் எசமானும் கஷ்டம் பார்க்காம ஊத்தி ஊத்தி வளர்த்தோம்.

ஒரு தடவை குடிக்கக்கூட தண்ணி இல்லாத அளவுக்குப் பஞ்சம். பக்கத்து ஊர்ல இருந்து ஆளுக்கு ரெண்டு மண்பானையில தண்ணி எடுத்துட்டு வந்து செடிகளுக்கு ஊத்தினோம். சுடுவெயில்ல தலையில ஒண்ணு, இடுப்புல ஒண்ணுனு ரெண்டு பானையோட வரும்போது, கல் தடுக்கி விழுந்து, முட்டியில ரத்தம். கீழ கிடந்து அழ ஆரம்பிச்சுட்டேன். "சரியாயிடும்"னு என் எசமான் பதறிக் கட்டுப்போட, "தண்ணியெல்லாம் கொட்டிப் போச்சேனுதான் அழுவறேன்"னு நான் சொல்ல, கண் கலங்கிட்டார்!" - நாமும் கலங்கித்தான் போனோம்.

"அப்படி நாங்க அரும்பாடுபட்டு வளர்த்த ஆயிரம் மரங்கள்தான், இன்னிக்கு உயர வளர்ந்து ஒய்யாரமா நிக்குது. இந்தப் பொட்டல் காட்டுக்கு வர்ற சாலையைச் சோலையாக்கித் தந்திருக்கு. தன் காலடியில கிடக்கிற அத்தனை பேருக்கும் நிழல் தருது. ஊரோட வெம்மையைத் தணிச்சு, குளிர்ந்த காத்தைக் கடத்துது. "மரத்தை வெச்ச மகராசி, நீ நல்ல இருக்கணும்!"னு சனங்க எல்லாம் சொல்லும்போது, நல்ல புள்ளையைப் பெத்த புண்ணியவதி மனசு குளிர்ற மாதிரி, என் மனசும் குளிர்ந்து போகுது!" - திம்மக்காவின் வார்த்தைகளை,

சுற்றி நின்ற ஊர்க்கூட்டம் நன்றியும், நெகிழ்ச்சியுமாக ஆமோதித்தது! திம்மக்கா பாட்டியின் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, இப்போது முதுமையில், தனிமையில் இருக்கிறார் பாட்டி. ஆனால்... சர்க்கரை, இரத்த அழுத்தம் என எந்த நோயும் இல்லை. கண் பார்வை அத்தனை துல்லியம். தொலைபேசியில் பேசுமளவுக்கு கேட்கும் ஆற்றல். அவருடன் நடந்தால் மூச்சு வாங்குகிறது நமக்கு. அரசாங்கம் வழங்கும் முதியோர் நலத்திட்டத் தொகையான 500 ரூபாய் மட்டுமே ஆதார வருமானம். வாசலில் சாணி தெளிப்பது முதல் சமையல் வரை வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார் இந்த 101 வயதிலும்.

"ஊர்ல இருந்து டவுன் ரொம்ப தூரம்ங்கறதால, அவசர ஆபத்துக்கு மருத்துவ உதவி இல்ல; பிரசவத்துக்குப் போற பொண்ணுங்க ரொம்ப சிரமப்படுறாங்க. எனக்கு பெங்களூருல, கவர்மென்ட் வீடு கொடுத்துருக்கு. ஆனா, அதை நான் பார்த்தது கூட கிடையாது. அதெல்லாம் எனக்கு தேவையில்ல... எங்க ஊருல ஆஸ்பத்திரி கட்டிக் கொடுத்தா போதும்!" என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் இந்த "செஞ்சுரி" பாட்டி... ஆச்சரியக்குறிதான்.

நன்றி : அவள் விகடன், 25.10.2011


Sunday, October 27, 2013

தூக்கு போடும் விழா - பெய்ஜிங்


சீனாவில் உள்ள மாயோவ் யோவ் டான் டோங் சிறுபான்மையினர் நாவோயூ, என்னும் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

தென் சீனாவில் உள்ள சுய ஆட்சி பிரதேசமான இப்பகுதியில் நடைபெறும் இந்தத் திருநாளின் போது, கம்பத்து மக்கள் ஒன்று கூடி தங்களது விவாசயம் செழிக்கவும், செல்வம் பெருகவும் பிரார்த்தித்து மாட்டை கயிற்றால் கட்டி மரத்தில் தொங்கவிட்டு கொன்று பின்னர் அதன் இறைச்சியை அனைவரும் பங்கிட்டுக் கொள்வர்.