Friday, September 23, 2011

மரம் எழுதும் மடல்!


"ஏதோ ஒரு நதிக்கரையி்ல், எப்போதோ ஓர் ஏகாந்த நாளில், உயிர்ப்பு நிறைந்த ஒரு விநாடியில் விதையாய் நான் விழுந்தேன்.

முளைத்தேன்; வளர்ந்தேன்; செடியானேன்: மலர்கள் தவழும் மடியானேன். எனது வேர்கள் நிலத்தை உழுதன. கிளைகள் வானத்தில் எழுந்தன.

என்னில் தவழ்ந்து, என்னை உறிஞ்சி, என்னால் வளர்ந்து, என்றும் என்னைச் சார்ந்து வாழும் ஒட்டுண்ணி மனிதன் இன்று என்னை வெட்டுவதற்கு வந்தான். அவனது உடலின் உரமும், மனத்தின் வெறியும் இதோ - என்னைத் துண்டாடிக் கொண்டிருக்கின்றன. மனித ஊனங்களுக்கெல்லாம் கைகொடுத்து உதவிய நான், இப்போது ஊனப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
தவணை முறையில் எனது உயிர் சிறிது சிறிதாகப் போய் கொண்டிருக்கிறது.

இந்த வேளையில், "எனது இரத்தத்தைப் பாருங்கள். இன்னுமா உங்களுக்கு இரக்கம் வரவில்லை?" என்று நான் இறைஞ்சமாட்டேன். எனக்குத் தெரியும் எனது இரத்தத்தில் இரப்பர் செய்ய ஏதேனும் வழியிருக்கிறதா என்று பார்ப்பவர்கள் நீங்கள். உங்களுக்குத் தெரியுமா? எனது மரணப் போராட்டத்தில் வெளிவரும் இறுதி மூச்சுகள்கூட உங்கள் சுவாசத்துக்காகத்தான்!

- உங்களில் ஒருவரால் வெட்டப்படும்.....ஒரு மரம்.

இந்திய இளைஞர்களின் அராஜகத்திற்கு முடிவே இல்லையா? இவர்களது பெற்றோர்கள் என்ன செய்கின்றார்கள்?

இந்திய இளைஞர்களின் அராஜகத்திற்கு முடிவே இருக்காதா என்பது ஒரு மிகப் பெரிய வினாவாக இருக்கின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகின்றது.

படுகொலை, கொலை, பாராங்கத்தியை காட்டி மிரட்டுவது, கொள்ளை என பலதரப்பட்ட இரத்த வெறி சம்பவங்கள் நமது இளைஞர்களுக்கு பாலும் பழமும் சாப்பிடுவது போல ஆகிவிட்டது என பி.ப.சங்க அல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

ஒவ்வொரு பொழுதும் விடியும்போது கொலை கொள்ளை சம்பவங்களையும், மிரட்டிச் செல்கின்ற அச்சுறுத்தல்களையும் படிக்கும்போது அன்றைய தினம் ஒரு பயமான தினமாகவே இருக்கின்றது.

இந்திய இளைஞர்களின் இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காவிடில், இன்னும் பலதரப்பட்ட கோரச் சம்பவங்கள் நிகழக்கூடும்.


இதற்கு அண்மைய காலமாக நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களே ஒரு உதாரணம் என்று சுப்பாராவ் கூறினார்.

கொலை, படுகொலை, கொள்ளை, பயமுறுத்துதல் என பலதரப்பட்ட சம்பவங்களில் ஈடுபடும் இந்திய இளைஞர்களின் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் உற்றார் உறவினர்கள் ஏன் இவர்களைக் கண்டிப்பது கிடையாது என்பதுதான் புரியாத புதிராக இருப்பதாக சுப்பாராவ் கூறினார்.

இளம் வயதிலேயே கொடூரமான செயல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இவர்களின் எதிர்காலம் சீரழிந்து போவதற்கு இவர்களது பெற்றோர்களே மூல காரணமாக திகழ்கின்றனர் என அவர் கூறினார்.

கொலை, படுகொலை, கொள்ளையடிப்பது என்பது இவர்களுக்கு சர்வசாதாரணமான செயலாகிவிட்டது. யாருக்கும் இவர்கள் பயப்படுவதும் கிடையாது. யாருடைய அறிவுரையையும் இவர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் இல்லை.

ஆகவே இவர்களை நல்வழிக்கு கொண்டு வருவதற்கு மிகப் பொருத்தமானவர்கள் இவர்களது பெற்றோர்கள்தான் என சுப்பாராவ் கூறினார்.

இவர்களது உற்றார் உறவினர்களும் இவர்கள் நல்ல திசையை நோக்கி செல்வதற்குரிய ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

“எனக்கென்ன! என் பிரச்னை இல்லை” என அனைவரும் சொல்ல ஆரம்பித்துவிட்டால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிடும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என என்.வி.சுப்பாராவ் கூறினார்.

தேவைக்கு மேற்பட்ட மருந்துகளை நோயாளிக்கு அள்ளிக்கொடுப்பதை நிறுத்துங்கள் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

உபயோகப்படுத்தாத அல்லது காலாவதியான மருந்துகளை அரசாங்க மருத்துவ மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் கொண்டு போய் கொடுத்துவிடுமாறு அமைச்சு கூறியுள்ளது சரியான அணுகுமுறை கிடையாது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

காலாவதியான மருந்துகளை ஒரு முறையில்லாமல் தூக்கி எறிவதைத் தவிர்க்கவும், மருந்துப் புட்டிகளின் மூடி கூட திறக்கப்படாமல் இருக்கின்ற மருந்துகளை, நல்ல நிலையில் உள்ள மருந்துகளை மறுபயனீடு செய்யவும் இந்த அணுகுமுறையை சென்ற வருடத்தில் அமைச்சு பரிந்துரை செய்தது.


முதல் அரை வருடத்தில் கோலாலம்பூர் மருந்துவமனையில் திருப்பிக் கொடுக்கப்பட்ட மருந்துகள் மவெ. 128,818 பெருமானமுள்ளவை. சென்ற வருடத்தில் மட்டும் செபிராங் ஜாயா மருத்துவமனையில் திருப்பிக் கொடுக்கப்பட்ட மருந்துகள் மவெ. 27,899 பெருமானமுள்ளவை. இருதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலெஸ்ட்ரோல் குறைப்பு மருந்துகளே பெரும்பாலும் திருப்பி கொடுக்கப்பட்ட மருந்துகளாகும் என்றார் இத்ரிஸ்.

நோயாளிகளுக்குத் தேவையில்லாத மருந்துகள் மற்றும் குறிப்பிட்ட நோய்க்கு தேவைப்பட்டதைவிட அதிகமான மருந்துகள் அளிக்கப்படுகின்றன. மலேசியாவில் உள்ள அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இப்படிக் கொடுப்பது வழக்கமாகிவிட்டது என்றார் இத்ரிஸ்.

ஒவ்வொரு முறையும் தேவைக்கு மேற்பட்ட மருந்துகளைக் கொடுத்து நோயாளியின் மருத்துவக் கட்டணத்தை ஏகத்துக்கு உயர்த்துவதும் வழக்கமாகிவிட்டது என்று பத்திரிகைகள் அம்பலப்படுத்தியுள்ளன. மருத்துவக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட நோயாளி பணி புரியும் கம்பெனி செலுத்தும் பட்சத்தில் இப்படி அதிகமாக விதிக்கப்படும் மருத்துவக் கட்டணம் நோயாளிக்கு பிரச்னையாக இருப்பதில்லை. மருந்துகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று, தேவையானதை பயன்படுத்திவிட்டு மிச்சத்தை குப்பையில் போடுகிறார்கள் என்றார் இத்ரிஸ்.

இல்லாத நோய்க்கான மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவமனைகளும் இருக்கின்றன. இருமல் இல்லாமலேயே இருமல் மருந்தும், காய்ச்சல் இல்லாமலேயே பாரசெட்டமோலும், தேவையில்லாத லோஷன் மற்றும் கிரீம்களையும் கொடுத்துவிடுகிறார்கள்.

இதற்கு நோயாளியின் அறியாமை, நோயை விரைவில் குணப்படுத்தும் மருந்து வேண்டும் என்று வலியுறுத்துவது, அல்லது கம்பெனிதான் கட்டணம் செலுத்துகிறது என்ற காரணத்திற்காக அதிக மருந்துகளை பெற்றுக்கொள்வது என்று நோயாளியே இந்நிலைக்குப் பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறார்.

ஆனால் இதற்கு உண்மையான காரணம் நோயாளி கிடையாது. மருந்துகளை விநியோகிக்கும் மருத்துவமனைகளுக்கும் மருந்துக் கம்பெனிகளுக்கும் உள்ள வியாபாரத் தொடர்பே இதற்குக் காரணமாகும் என்றார் இத்ரிஸ்.

சென்ற வருடத்தில் மட்டும் சுகாதார அமைச்சு மவெ. 1.6 பில்லியனை நாட்டில் உள்ள 135 மருத்துவமனைகளின் மருந்துத் தேவைக்காக செலவிட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 15% அதிகமாகும்.

ஒவ்வொரு முறையும் பினாங்கு பொது மருத்துவமனைக்குச் செல்லும்பொழுது புதிய மருந்துகளை கொடுப்பதாகவும் அவருக்குப் பை நிறைய மருந்துகள் குவிந்து கிடப்பதாகவும் ஒருவர் புகார் அளித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையின் மீது ஒருவர் புகார் கொடுத்திருந்தார். இருமல் மற்றும் தொண்டை வலிக்கு மருந்து வாங்கச் சென்றபொழுது அளவுக்கு அதிகமான பாரசெட்டமோல், மிகவும் வீரியமான இருமல் மருந்து மற்றும் என்டிபையோட்டிக்கை கொடுத்து அவருடைய மருத்துவக் கட்டணத்தை அளவுக்கு அதிகமான உயர்த்தியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

நோயாளியின் தேவைக்கு அதிகமான மருந்துகளைக் கொடுப்பதைப் பெரும்பாலான மருத்துவமனைகள் செய்து வருகின்றன. இவ்வாறு செய்து நோயாளிகளுக்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று இத்ரிஸ் கூறினார்.

இதற்கு முதலில் நோயாளியின் நோய் முழுமையாக சரியாகக் கண்டறியப்பட வேண்டும். சில சமயங்களில் மருந்தைவிட நோயாளிக்கு ஓய்வு, உடற்பயிற்சி, போதிய தூக்கம், உணவுப் பழக்கத்தில் சில மாறுதல்கள் போன்றவையே நோயைக் குணப்படுத்த போதுமானவையாக இருக்கும்.

மருந்துக் கம்பெனிகளின் ஆதிக்கத்தால் மருத்துமவனைகள் இலாபம் பார்க்கும் பொருட்டு நிறைய மருந்துகளையும் புதிய புதிய மருந்துகளையும் வாங்கி பின்பு அவற்றைத் தேவைக்கு மேற்பட்டு நோயாளிகளுக்குப் பரிந்துரைத்து இலாபம் சம்பாதிக்க முயல்கின்றன. இப்படி மருந்துக் கம்பெனிகளின் அளவுக்கு மீறிய மூக்கை நுழைக்கும் போக்குக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

எந்தெந்த மருந்துகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவை என்பதை அரசாங்கம் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படாத மருந்துகளை நோயாளிகள் உட்கொள்ளும்பொழுது அவர்கள் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம். சில சமயங்களில் இறப்பு கூட நிகழலாம்.

ஆகையால் நாட்டு மக்களின் சுகாதாரத்தைப் பேணும் பொருட்டு அளவுக்கு அதிகமான மருந்துகளை பரிந்துரை செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

Wednesday, September 21, 2011

பிபியின் நாச வேலை

கடந்த ஆண்டு (2010) ஏப்ரல் மாதம் 20ம் தேதி மெக்ஸிகோ வளைகுடாவில் பிபி எரிசக்தி நிறுவனத்தின் ஆழ்கடல் துளை இயந்திரம், எண்ணெய் கிணறு ஏதாவது கிடைக்கிறதா என்பதற்காகத் துளையிடும்பொழுது, கடலுக்கு அடியில் உள்ள எண்ணெய்க் கிணறு ஒன்று வெடித்துச் சிதறியது. உள்ளே இருந்த கச்சா எண்ணெய் பீய்ச்சி அடிக்கத் தொடங்கிவிட்டது. ஆழ்கடலில் நடந்த இந்த விபரீதத்தால் கடலெல்லாம் பிசுபிசுவென்று கச்சா எண்ணெய்.


நாளொன்றுக்கு 10 லட்சம் கேலன்கள் கச்சா எண்ணெய் அந்தக் கிணற்றிலிருந்து கடலில் கலந்துகொண்டிருக்கிறது. கடல் மட்டத்திற்கு 1500 மீட்டர் கீழே வெடித்துச் சிதறியிருக்கும் அந்த எண்ணெய்க் கிணற்றிலிருந்து கலந்து கொண்டிருக்கின்றது. கச்சா எண்ணெய் கடல் மீது படர்ந்து, கரை நோக்கி நகர்ந்து, ஒரு கச்சா எண்ணெய்க் கம்பளமே விரிந்துவிட்டிருக்கிறது.


இவ்வளவு சம்பவத்திற்கும் காரணமாக இருக்கும் உலகத்தின் 4வது பெரிய நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் (BP) கொடூர நடவடிக்கைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்பது பிபி நிறுவனத்திற்கு ஒன்றும் தெரியாத விஷயமல்ல. எண்ணெய் தோண்டுவதற்கு மட்டுமே தன்னுடைய பணத்தைச் செலவு செய்யும் பிபி, எண்ணெய் கசிவைத் தடுப்பதற்கோ, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கோ பணத்தை இது வரைக்கும் செலவு செய்ததில்லை. ஒவ்வொரு நாளும் கடல் நீரை மாசுபடுத்திக் கொண்டிருக்கும்.

எண்ணெய்க் கசிவை நிறுத்துவதற்கு வழி கோளாமல், தன்னுடைய நல்ல பெயரை தற்காத்துக்
கொள்வதற்காக மட்டும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடங்களில் செத்துக்கிடக்கும் உயிரினங்களைப் படம் பிடிக்கச் செல்லும் பத்திரிகையாளர்களை அமெரிக்க தேசிய காவலர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள்.

கச்சா எண்ணெய் கடலில் கலந்து வரும் வேகம் உண்மையிலேயே கவலை அளிக்கக்கூடியது. இந்தக் கழிவு ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் அபாயமிருக்கிறது. எண்ணெய் நீருடன் கலக்கும்பொழுது அது வேதிய மாற்றத்திற்கு உட்பட்டு பிசுபிசுப்பான நிலையை அடைந்துவிடுகிறது. கடலில் கலந்துவிடும் எண்ணெயினால் மீன் வளங்களும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் பெருமளவிற்குப் பாதிக்கப்படுகின்றன.



எண்ணெய் கசிவு தொடங்கி 40 நாட்களில், வனவிலங்குத் துறை அதிகாரிகள் அமெரிக்க வளைகுடா கடற்பகுதிகளிலிருந்து பறவைகள், ஆமைகள் மற்றும் பல்வேறு பாலூட்டிகளின் சடலங்களைக் கைப்பற்றியுள்ளனர். பிபி அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய்க் கம்பெனியாகும். இரு சாராரும் ஒருவரை ஒருவர் எதிர்பார்த்து இருப்பதால் பிபிக்கு எதிர்காலம் பிரகாசமானதாகவே இருக்கிறது, பிபி மிகப்பெரிய சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டுக்கு வித்திட்டு இருந்தாலும் கூட அமெரிக்க அரசாங்கம் பிபி நிறுவனத்தை தற்காத்தே தீரும்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக, கச்சா எண்ணெய் உற்பத்தித் துறையே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஒன்றாகும். தற்போது நிகழ்ந்து வரும் மிகவும் மோசமான சீதோஷ்ண நிலை மாறுதல்களுக்கும் எண்ணெய் நிறுவனங்களும் முக்கிய காரணமாகும்.

எத்தனை உறிஞ்சினாலும் தீராத நம் எண்ணெய் தாகம்தான் இத்தனை அவலங்களுக்கும் அடிப்படை. இயற்கையை நாங்கள் நன்றாக அறிந்துகொண்டுவிட்டோம் என்ற ஆணவம். இனி அதை இஷ்டத்திற்கு உபயோகித்துக்கொள்ள வேண்டியதுதான் என்ற பேராசை. ஆனால் இயற்கையோ நம்முடைய அறிவைப் புரட்டிப்போட்டு சிரித்துக்
கொண்டிருக்கிறது.