Tuesday, February 17, 2009

காவல்துறையினரை வெளியே போக சொல்லிவிட்டு நீதிமன்றத்திற்குள் வைத்து சுப்பிரமணியசுவாமி மீது கடும் தாக்குதல்

சென்னை உயர்நீதி்மன்றத்தில், நீதிபதி முன்னிலையில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியை வழக்கறிஞர்கள் சிலர் அடித்து உதைத்தனர். மேலும் அவர் மீது அழுகிய முட்டைகளையும் வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோவிலை, தீட்சிதர்கள் பிடியிலிருந்து மீட்கும் வகையில் கோவில் நிர்வாகத்தை அரசே ஏற்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது.தீட்சிதர்களால் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களைப் பாட முடியாத நிலையும் இருந்து வந்தது.


இது தொடர்பாக சிவனடியார் ஆறுமுகச்சாமி தலைமையில் நீண்ட காலமாக போராட்டமும் நடைபெற்று வந்தன.இந் நிலையில், சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு அரசு கொண்டு வந்தது.

இதை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது.இந்த நிலையில் அரசின் முடிவை எதிர்த்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இன்று மனு தாக்கல் செய்வதற்காக உயர் நீதிமன்றத்திற்கு வந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பி.கே. மிஸ்ரா, நீதிபதி கே.சந்துரு ஆகியோர் விசாரித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களது விசாரணை அறைக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள் அங்கிருந்த காவல்துறையினரை வெளியே போக சொல்லிவிட்டு கதவை உள்பக்கமாகப் பூட்டினர்.

பின்னர் நீதிபதிகளின் கண் முன்பாகவே சுப்பிரமணியம் சுவாமியை வழக்கறிஞர்கள் சரமாரியாக அடித்து உதைக்க ஆரமிபித்தனர். அடி வாங்கிய வெளியே போக முடியாத நிலையில் உள்ளேயே சுற்றி வந்தார். ஆனாலும் விடாமல் அவரை அறைந்தும், குத்தியும் வழக்கறிஞர்கள் தாக்கினர்.

சுவாமியின் பாதுகாப்புக்கு வந்த சிஆர்பிஎப் படையினரையும் உள்ளே வழக்கறிஞர்கள் அனுமதிக்கவில்லை. அழுகிய முட்டைகளை எடுத்து சுவாமியின் முகத்தில் வீசியடித்தனர். அழுகிய தக்காளிகளையும் வீசினர்.

இதனால் உயர் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேறு சில வக்கீல்கள் விரைந்து வந்து சுவாமியை மீட்டு அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவாமி இவ்வாறு நீதிமன்றத்தி்ல் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரானபோது அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகளைத் தொடர்ந்த சுவாமியை அதிமுகவினர் எல்லா இடங்களிலும் தாக்க முயன்றனர்.

உயர் நீதிமன்றத்தில் வைத்துக் கூட தாக்கும் முயற்சி நடந்தது. அப்போது அவரை வட சென்னை திமுகவினர் தான் காப்பாற்றினர்

No comments:

Post a Comment