Sunday, April 3, 2022

விவசாயிகளே! பூச்சிகளைக் கொல்லாதீர்கள்! தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி நன்மை செய்யும் பூச்சிகளை வளரவிடுங்கள்! பூச்சியியல் வல்லுநர் நீராவி செல்வம் ஆலோசனை


விவசாயிகளுக்கு பூச்சிகளின் தொல்லை மிகப் பெரிய தவைவலியாக உருவெடுத்திருப்ப தன் காரணமாக, பலதரப்பட்ட கொடிய விஷத்தன்மையுடைய பூச்சிக்கொல்லிகளை வாங்கி தங்களது விவசாய நிலங்களில் உள்ள அனைத்து பூச்சிகளின் மீது தெளித்து அவற்றைக் கொன்று விடுகின்றனர் என்கின்றார் பூச்சி நிர்வாக வல்லுநர் நீராவி செல்வம். 

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று இரண்டாவது முறையாக மலேசியா வந்த செல்வம், இங்குள்ள பலதரப்பட்ட விவசாயிகளை நேரிடையாக சந்தித்து உரையாடியதில், அதிகமான விவசாயிகள், பூச்சிகளின் உண்மையான நிலவரத்தை அறிந்துகொள்ளாமல் விஷத் தன்மையுடைய பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து நன்மை செய்யும் பூச்சிகளையும் அநியாயமாகக் கொன்று விடுகின்றனர் என தனது கவலையைத் தெரிவித்துக்கொண்டார். பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பணிமனையில் உள்ள இயற்கை விவசாயத் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது செல்வம் பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். நம் விவசாய தோட்டங்களில் குறிப்பாகக் காய்கறி தோட்டமாக இருந்தாலும் சரி, நெல் வயல் தோட்டமாக இருந்தாலும் சரி, அதில் வருகின்ற பூச்சிகளை அழிக்க பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லும் செல்வம் அனைத்து பூச்சிகளுமே விவசாயிகளின் நண்பர்களே என்கின்றார்.

வயல்களில் 25 சதவிகிதம்தான் தீமை செய்யும் பூச்சிகள் உள்ளன. மீதமுள்ள 75 சதவிகிதம் பூச்சிகள் நன்மை செய்யும் பூச்சிகள் ஆகும். ஆரம்ப கால விவசாயிகள் இயற்கையான பூச்சி விரட்டிகளை அதிகம் பயன்படுத்தி அதிக விளைச்சலை எடுத்தனர் என்று கூறும் செல்வம் இப்போது எதற்கெடுத்தாலும் விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளே நிவாரணம் என தவறாக நினைத்து ஆயிரக்கணக்கான வெள்ளியை பூச்சிகளுக்காக செலவு செய்து கடன்காரர்களாக ஆகிவிடுகின்றனர் என்றார். விவசாயிகள் இப்படி கண்மூடித் தனமாக பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதால் தீமை செய்யும் பூச்சிகள் மட்டும் சாகவில்லை.

மாறாக நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்ந்து கொல்லப்படுகின்றன என்றார். இதனால் நோய்களும் அதிகரிக்கின்றன, விளைச்சலும் குறைகிறது என்றார். விவசாயத் தோட்டத்தில் பயிரைத் தின்று மகசூல் இழப்பு ஏற்படுத்தும் பூச்சிகளால்தான் நமக்குப்

பிரச்னைகள். அதே நேரத்தில் நம் சாகுபடி பயிரைச் சாப்பிடாமல் நமக்கு தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் பிடித்து சாப்பிடக்கூடிய சிலந்தி, குளவி, பொறிவண்டு, தட்டான் என வேறு ஏராளமான நன்மை செய்யும் பூச்சிகள் உள்ளன. பூச்சிக்கொல்லிகளை வயல்களில் அடிக்கும்போது முதலில் நன்மை செய்யும் பூச்சிகள்தான் கொல்லப்படுகின்றன. விவசாயத்தில் இறங்குவது முக்கியமல்ல. ஆனால் விவசாயத்தில் உள்ள சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் செல்வம். விவசாயத்தில் இப்போது பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளைத் தாங்கி உயிர்வாழக்கூடிய தகவமைப்பு என்பது பூச்சிகளுக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளின் வீரியத்தையும் அதிகப்படுத்திக்கொண்டே செல்ல
வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக பூச்சிக்கொல்லியின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க அந்த வயல்களில் உற்பத்தியாகும் உணவுப்பொருள்களை சாப்பிடும் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும்தான் பல புதிய நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் பயிர்களை அழிக்கும் பூச்சிகளின் குடும்பமும் பெருகிக்கொண்டே செல்கின்றன என்றார் செல்வம். விவசாயத்தில் பூச்சிகள் இல்லையென்றால் விவசாயமே இல்லை என்று கூறும் இவர், பூச்சிகள் இல்லையென்றால் அயல் மகரந்தச் சேர்க்கையே நடக்காது என்கின்றார். ஆண் மலரிலிருந்து மகரந்தம் பெண் மலருக்குப் போகாது. அயல் மகரந்தச் சேர்க்கை இல்லையென்றால் அந்த விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்காது. பூச்சிகளில் எப்படி கெட்டது செய்யும் பூச்சிகள் இருக்கின்றதோ அதேபோல் கெட்ட பூச்சிகளை பிடித்துச்

சாப்பிடும் நல்ல பூச்சிகளும் இருக்கின்றன. சிலந்தி, குளவி, பெருமாள் பூச்சி, ஒட்டுண்ணிகள் போன்ற நன்மை தரும் பூச்சிகளை விவசாயிகள் பூச்சிக்கொல்லி தெளித்து கொன்றுவிட்டார்கள். நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல வழிகள் உண்டு. மஞ்சள் நிறத்தில் பூ பூக்கக்கூடிய செண்டுப்பூ,  சாமந்திப்பூ, மக்காச் சோளம் போன்றவற்றை வயல் வரப்புகளில் வளர்ப்பதன் மூலம் நன்மை செய்யும் பல பூச்சிகளை நம் வயல்களில் வரவழைக்கலாம் என்றார் செல்வம். இதுபற்றிய முழு தகவல்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திடம் கிடைக்கும்.

நன்மை செய்யும் பூச்சிகள் வயல்களில் இருக்க வேண்டும் என்றால், தீமை செய்யும் பூச்சிகளும் வயலில் இருக்க வேண்டும். நன்மை செய்யும் பூச்சிகளுக்கு தீமை செய்யும் பூச்சிகள்தான் உணவு என்பதை விவசாயிகள் மறக்கக்கூடாது. மேலும் தீமை செய்யும் பூச்சிகளைக் கொல்வதைவிட அவற்றை விரட்டி அடிக்க வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும் என்கின்றார் செல்வம். அவற்றை விரட்டியடிக்கவும், கட்டுப்படுத்தவும் இயற்கையிலான பூச்சி விரட்டிகளை பயன்படுத்த விவசாயிகள் முன் வர வேண்டும். இது தொடர்பான விளக்கக் கையேடுகள் பி.ப.சங்கத்திடம் இருப்பதாகவும் செல்வம் கூறினார்.

மண் அடுத்த பத்தாண்டுகளுக்கு செழிப்பானதாக இருக்க வேண்டும் நல்ல விளைச்சல் வேண்டும் என நினைத்தால் அவர்கள் இயற்கை முறையைப் பின்பற்ற வேண்டும். பூச்சிக்கொல்லிகளுக்கு விவசாயத்தில் இடம் கொடுக்கக்கூடாது. இயற்கை சார்ந்த முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கான சாகுபடி செலவு குறைகிறது. மகசூல் இழப்பு தடுக்கப்படுகின்றது. இதனால் இயற்கை சார்ந்த நமது சூழலியலும் பாதுகாக்கப்படுகிறது என்றார் நீராவி செல்வம்.

மண் புழு மக்களின் நண்பன்

நெளிந்து கொண்டு பார்க்கப் பலவீனமாக இருக்கும் மண்புழுக்களைக் காணும் பெரும்பாலான மனிதர்களும் நெளிவார்கள்; அல்லது அலறுவார்கள். ஆனால் அதன் தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து பயப்பட வேண்டாம்.

மண்ணின் வளத்தை பெருக்கும் அதி அற்புத ஆற்றல் படைத்தவை மண்புழுக்கள். மண் தழைத்தால் மற்ற உயிரினங்களும் தழைக்கும். மனித இனமும் தழைக்கும். மண்புழுக்கள் காய்ந்த இலைகளையும் மக்கிய

பொருட்களையும் உண்டு பிறகு வெளியாக்கும் கழிவுகளால் (எரு) மண்ணை காலங்காலமாக வளமாக்கி வருகின்றன. இந்த எருவை பயிர்கள் ஈர்த்துக் கொண்டு செழிப்பாக வளர்கின்றன. அந்தப் பயிரை மனிதர்கள் உண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்கின்றனர். 

மண்புழுக்கள் தன்னுடைய உடல் எடையைவிட 3லிருந்து 5 மடங்கு அதிகமான மக்குபொருட்களை ஒவ்வொரு நாளும் உண்ணும். மற்ற எல்லா உரங்களையும் விட மண்புழு எரு அதிக சத்துக்களை உடையது. மண்புழுவின் உடலிலிருந்து வெளிப்படும் கொழகொழப்பான திரவத்தில் நைட்ரோஜன் உள்ளது. இது தாவரங்களுக்குத் தேவையான சத்துப்பொருள் ஆகும். 

மண்புழு மண்ணைக் குடைந்து செல்லும்பொழுது மேல் மண்ணையும் கீழ் மண்ணையும் ஒன்றோடு ஒன்று கலக்கிறது. இதனால் மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. இதுவே பிறகு செடிகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

டாக்டர் சுல்தான் இஸ்மாயில் அனைத்துலக மண்புழு நிபுணர் ஆவார். உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநராகவும் இருக்கும் இவர் மண்புழு தொழில்நுட்பம் (vermitech) மண்புழு என்ற வார்த்தையை தன்னுடைய ஆராய்ச்சிகளின் மூலம் முதலில் புனைந்தவரும் ஆவார். "மண்புழு மண்ணின் உயிர்நாடி ஆகும். ஆகையால் மண்ணில் அதிகமான மண்புழு இருக்கும்பொழுது மண் ஆரோக்கியமாக இருக்கும்," என்கிறார் டாக்டர் சுல்தான் இஸ்மாயில்.

மண்புழு தொடர்பாக அவர் பகிர்ந்துகொண்ட விபரங்கள் வருமாறு:-

நம் தோட்டத்திலும் மற்றும் தொட்டிகளில் உள்ள பயிர்களிலும் எந்த மாதிரியான மண்புழுக்கள் இருக்க வேண்டும்?

அவரவர் வாழ்கின்ற இடத்தில் உள்ள மண்புழுவையே தோட்டத்தில்  பெருக்க வேண்டும். அவை தோட்டத்தில் நன்கு குடைந்து செல்லும். அந்தந்த மண்ணின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு அவை இருப்பதால் அவற்றின் வளர்ச்சியும் பெருக்கமும் நன்றாக இருக்கும். மேல்மட்டப் புழுவான பீரியனிக்ஸ் எக்ஸ்கெவட்டஸ் (Perionyx excavatus) மற்றும் இடைமட்டப் புழுவான லம்பிட்டோ மவுரிட்டி (Lampito mauritti) வகை மண்புழுக்கள் ஏற்றவை. 

மண்புழுக்கள் எங்கு கிடைக்கும்?

உங்கள் தோட்டத்திலேயே மண்புழுக்களைத் தேடிப் பார்க்கலாம். பாதி காய்ந்த நிலையில் உள்ள மாட்டுச்சாணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் புழுவின் முட்டைகள் இருக்கக்கூடும். மாட்டுச்சாணம் முற்றிலும் காய்ந்ததாகவோ அல்லது முற்றிலும் ஈரமாகவோ இருக்கக்கூடாது. 

மண்புழு வளர்க்க மண்ணைப் பண்படுத்துவது எப்படி?

மரத்திலிருந்து கொட்டும் காய்ந்த இலைகளை சருகுகளை அப்புறப்படுத்தக்கூடாது. இந்த காய்ந்த இலைகள், சருகுகள் மூடாக்கு போன்று செயல்பட்டு மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்கின்றன. இங்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் வளரும். இதுவே மண்புழுவை ஈர்க்கும். மண்ணில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க வேண்டும். ஆனால் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிக வறட்சியாக இருந்தால் தண்ணீர் தெளித்துவிடலாம். உள்நாட்டு மரங்கள் மண்புழுக்களை ஈர்க்கும். ஆகையால் அந்நிய மரங்களை விட உள்ளூர் மரங்களை வளருங்கள். மண்ணில் இருக்கும் கட்டுப்மானப்பணி கற்கள், குப்பைகளை அகற்றிவிடுங்கள். பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்காதீர்கள். அவை மண்புழுக்களைக் கொன்றுவிடும்.

மண்புழுக்களுக்கு மண்ணில் கொடுக்க  வேண்டிய உணவுகள் என்ன?இயற்கையாகவே காய்ந்து விழும் இலைக் குப்பைகள் மண்புழுவுக்கு நல்ல உணவு. அவ்வப்பொழுது பாதி மக்கிய சமையலறைக் கழிவுகளை மண்ணில் கலந்துவிடலாம். இது மண்புழுக்களின் உற்பத்தியைப் பெருக்கும்.

மண்புழுக்கள் ஏதாவது நோய்களை பரவச் செய்யுமா?

மண்புழுக்கள் தாவரங்களுக்கு எந்த வித நோயையும் ஏற்படுத்துவதில்லை. மனிதர்களுக்கு அதனால் எந்த வித தீங்கும் விளையாது. உண்மையில் மண்புழு சித்தவைத்தியத்திலும் பயன்படுத்தப்படுகிறது. 

சாடி அல்லது தொட்டில்களில் மண்புழுவை விடலாமா?

தாராளமாக விடலாம். ஆனால் அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கும் பொழுது அவற்றை பொறுக்கி எடுத்து வேறு இடத்தில் விட வேண்டும். செத்துப்போன மண்புழுக்களை வெளியே எடுத்துப் போடத்தேவையில்லை. அவை மண்ணிலேயே மக்கி எருவாகிவிடும். நிலத்திலிருந்தும் நம்முடைய பயிர்த் தொட்டிகளிலிருந்தும் மண்புழுக்கள் ஊர்ந்து நம் வீடுகளுக்கு வந்துவிடுமா? மண்புழுக்கள் அவற்றுக்கான மக்குபொருள் உள்ள, ஈரப்பதம் உள்ள மண்ணிலேயே இருக்கும். ஆகையால் நம் வீட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. 

மண்புழு உடலில் துண்டிக்கப் பட்ட பாகங்கள் மறுபடியும் வளர்ந்து விடும். மண்புழுவின் ஒரே உடலில் இரு பாலின உறுப்புக்களும் இருக்கும். மண்புழுக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யச் செய்ய அவை முடிவடையாது. சார்ல்ஸ் டார்வின் சுமார் 44 வருடங்களாக மண்புழுக்களை ஆராய்ந்து புத்தகம் எழுதினார். (‘The Formation of Vegetable Mould Through the Action of Worms, with Observations on Their Habits). இந்தப் புத்தகம் இன்றளவும் அதிக அளவு விற்பனையாகிறது.

நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தின் வித்து!

இயற்கை விவசாயம் என்கிற ஜெயபேரிகையைக் கையில் எடுத்து கடந்த நாற்பதாண்டுகளாக தமிழ் மண்ணில் முழங்கிக்கொண்டிருந்த "இயற்கை வேளாண் விஞ்ஞானி" கோ.நம்மாழ்வார், இயற்கையோடு இயற்கையாகக் கலந்துவிட்டார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த நம்மாழ்வார், இளங்கலை விவசாயம் பயின்று, கோவில்பட்டி அரசு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் சிறிது காலம் பணியாற்றினார். 

இங்கு செய்யப்படும் ஆய்வுகள் எல்லாம் விவசாயிகளுக்குப் பலன் தராதவை என வெளிப்படையாக அறிவித்துவிட்டு, அரசுப் பணியை உதறித்தள்ளிவிட்டு முழுமையாக இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இரசாயனத்தில் விளைவிக்கப்படும் உணவுகள் அனைத்திலுமே நஞ்சு கலந்திருக்கிறது. இந்த உணவுகளை உட்கொள்வதால்தான் மக்கள் நோயாளிகளாகி சீக்கிரமே வாழ்வை இழக்கிறார்கள். இயற்கை விவசாயம்தான் ஆரோக்கியமான வாழ்வுக்குஉத்தரவாதம் அளிக்கும்" என்று நாடு கடந்தும் குரல் கொடுத்து வந்தவர் நம்மாழ்வார்.

விவசாயத்தை விவசாயிகளே வேண்டா வெறுப்பாக பார்த்த நிலையில் கணினி துறையில் பணியாற்றும் இளைஞர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகள்... என பல தரப்பினரையும் விவசாயத்தை நோக்கி μடி வரச் செய்தவர் நம்மாழ்வார். தமிழகம் மட்டுமன்றி உலக அளவில் பயணித்திருக்கும் நம்மாழ்வார், பல்வேறு பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள், போராட்டங்கள் என்று பலவற்றையும் முன்னெடுத்திருக்கிறார். குறிப்பாக, மரபணு மாற்றப்பட்ட விதைகள், பூச்சிக்கொல்லி நச்சுக்களை தயாரித்து சந்தைப்படுத்தும் அசுர பலமிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக விவசாயிகளைத் திரட்டி போராடியிருக்கிறார்.

இறப்பதற்கு முன்பாகக் கூட களத்தில்தான் நின்றிருந்தார் இந்தப் பசுமைப் போராளி! காவிரி பாசனப் பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. "இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், இங்குள்ள விளை நிலங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறிவிடும்" என பதைபதைத்து கொட்டும் பனியிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் கனமழையிலும் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தபோதுதான், பட்டுக்கோட்டை அருகே உள்ள பிச்சினிக்காடு கிராமத்தில் டிசம்பர் 30ம்தேதி இயற்கையோடு கலந்தார் நம்மாழ்வார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு பெண்மணி,  "அடி காட்டுல, நடு மாட்டுல, நுனி வீட்டுல... அது என்ன?" என்று நம்மாழ்வாரிடம் ஒரு விடுகதை போட்டாராம். இவருக்கு விடை தெரியவில்லை. "நெல்லுஅறுக்கும்போது அடிக்கட்டையை வயக்காட்டுலேயே விட்டுறோம். நடுவுல இருக்குற வைக்கோலை மாட்டுக்கு கொடுக்கிறோம். நுனியில இருக்குற நெல்லை வீட்டுக்கு எடுத்துட்டு போறோம்" என்று அந்தப் பெண் விடையைச்சொன்னபோது, நம்மாழ்வாருக்குள் இருந்த "இயற்கை விஞ்ஞானி" விழித்துக்கொண்டார். தனது இறுதிக்காலம் வரையிலும் இந்த "அடி, நடு, நுனி" தத்துவத்தை அவர் பரப்பினார்.

"யூரியா போட்டாத்தான் பயிர் வளரும்னு நம்ம விவசாயிகளிடம் மூட நம்பிக்கையை உருவாக்கிட்டாங்க. யூரியா மூட்டையில் '46 சதவிகிதம் நைட்ரஜன்'னு (தழைச்சத்து) எழுதியிருக்கான். ஆனால் நாம் பள்ளிக்கூடத்துல என்ன படிக்கிறோம்? வீசுற காற்றில் 78 சதவிகிதம் நைட்ரஜன் இருக்கு. காற்றுலயேஅவ்ளோ இருக்கும்போது எதுக்கு பொண்டாட்டி தாலிய அடகு வைச்சு யூரியா வாங்கிப்போடணும்? காற்றில் இருக்கிற தழைச்சத்தை இழுத்து மண்ணுக்குக் கொடுக்கிற தட்டைப்பயறு, உளுந்து, துவரை மாதிரியான பயறு வகைகளையும் நுண்ணுயிர்களையும் வளர்த்தாலே போதும்" - இப்படித்தான் இயற்கை விவசாயம் குறித்த பாடங்களை மிகவும் எளிமையாக நடைமுறை உதாரணங்களுடன் விளக்குவார். 

இயற்கை விவசாயம் உடனடிப் பயன் தராது. மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இரசாயன உரம் காரணமாக சீரழிந்து கிடக்கும் மண், பழைய பக்குவத்தை அடையவே பல ஆண்டுகள் ஆகும்" என்ற பிரச்சாரம் 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்தது. அப்போது வட இந்தியாவில் நடைபெற்ற இயற்கை விவசாயக் கருத்தரங்கில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த ஸ்ரீ பாத தபோல்கர் என்கிற கணிதப் பேராசிரியர் "அமிர்தபாணி" என்ற இயற்கை வளர்ச்சி ஊக்கியைப் பற்றி பரிந்துரைத்தார். அதாவது மாட்டுச் சாணம், மாட்டுக்கோமியம், வெல்லம் ஆகிய கலவையைத் தெளித்தால், பயிர்கள் மிக விரைவில் செழிப்புடன் வளரும் என்பதே அது. 

அதன் உபயோகம் பற்றி தபோல்கரிடம் மேலும் விசாரித்து தெரிந்துகொண்டு தமிழகம் திரும்பிய நம்மாழ்வார் 'அமிர்தபாணிக்கு' 'அமுதக்கரைசல்' என்று பெயர் சூட்டி தமிழ் நாட்டில் பரப்பினார். தமிழ்நாட்டின் மையத்தில், கரூர் மாவட்டம் கடவூரில், அவர் விரும்பி உருவாக்கி 'வானகம்' இயற்கைப் பண்ணையில்தான் விதைக்கப்பட்டிருக்கிறது நம்மாழ்வாரின் உடல்.

நன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம்