Thursday, February 5, 2009

ஒரு தேங்காய் போதும்! பொருளாதார வீழ்ச்சியையும் வேலை இழப்பையும்! கூடுதல் தேங்காய்கள் குப்பைக்குத்தான் போகின்றன!

ஒரு தேங்காய் உடையுங்கள்! இதுதான் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தைப்பூசத்திற்குத் தேங்காய் உடைக்கும் பக்தர்களுக்கு விடுக்கின்ற வேண்டுகோள்.

உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியின் காரணமாக தெய்வீக அம்சம் கொண்ட தைப்பூசத்தினத்தன்று விரயத்தையும் குறைத்துக்கொண்டு,சேமிப்பை அதிகரிக்க பக்தர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

விரயம் என்று சொல்லும்போது, உணவுப் பொருளான தேங்காயும், பாலும் அதிக அளவில் செலவிடப்படுவதை குறைக்க வேண்டும் என அதன் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.


ஒரு தேங்காய் உடைத்து நமது வேண்டுதலை நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் நூறிலிருந்து ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்பட்டு யாருக்குமே பயனில்லாமல் குப்பை மேட்டுக்குச் செல்வதை நாம் கட்டாயமாக நிறுத்த வேண்டும்.

உணவுக்காக ஓடி அலையும் மக்கள் இருக்கும்போது நாம் அந்த உணவை யாருக்கும் பயன் தராமல் குப்பை மேட்டுக்கு அனுப்புவது சரியான செயல் அல்ல என சுப்பாராவ் சுட்டிக் காட்டினார்.

இப்பொழுதுள்ள பொருளாதார மற்றும் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை கருத்தில் கொண்டு விரயத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு தேங்காயின் விலை மவெ. 1.50 என விற்கப்படுகிறது. ஆயிரம் தேங்காய்களை வாங்கி உடைப்பதால் யாருக்கு என்ன பயன்? அதுவும் வேண்டிக்கொள்பவர் ஒரு தேங்காயை மட்டும்தான் உடைப்பார். வேண்டுதல் செய்யாதவர்களும் நடந்து செல்பவர்களும் ஏதோ தேங்காய் உடைக்கும் போட்டியில் கலந்துகொள்வது போல தேங்காய்களை உடைக்கின்றனர். அப்படி உடைக்கப்படும் தேங்காய்களில் ஏறக்குறைய 25 விழுக்காடு தேங்காய்கள் கெட்டுப்போனவையாக இருப்பதும் தெரிய வந்திருப்பதாக சுப்பாராவ் கூறினார்.

வாங்கும் தேங்காய்களிலும் ஏமாந்து, அவற்றை யாருக்குமே பயனில்லாமல் செலவழிப்பதை பக்தர்கள் அறிவுப்பூர்வமாக சிந்திப்பார்கள் என தாங்கள் நம்புவதாக சுப்பாராவ் கூறினார்.

தேங்காய் உடைப்பது அவரவர் உரிமையும், சுதந்திரமாக இருந்தாலும் அது கேளிக்கையாகவும் வரம்பு மீறியும் இருக்கக்கூடாது என்றார் அவர்.

ஒரு தேங்காய் உடைத்து நமது வேண்டுதலை நிவர்த்தி செய்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை என்று கூலிம் தியான ஆசிரமத்தின் நிறுவனர் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களும் கூறியிருக்கிறார்.

அதேப்போன்று குறிப்பிட்ட நிறுவனங்களின் பால் போத்தல், பேக்கட்டுக்களை வாங்கி பாலையும் அதிக அளவில் வீணடிக்கிறோம் என்றார் சுப்பாராவ். போதாததற்கு பால் உற்பத்தி நிறுவனங்கள் தைப்பூச நல்வாழ்த்துக்கள் எனக் கூறி இல்லாத ஒன்றை தோற்றுவித்திருக்கின்றார்கள். சமயத் திருநாள் ஒரு வர்த்தக நாளாக மாறிவருவது வேதனையை அளிக்கிறது.


ஆகவே ஆயிரக்கணக்கான தேங்காய்களுக்கும் பல லிட்டர் பாலுக்கும் செலவழிக்கும் பணத்தை, பொருளாதார நெருக்கடியால் நிதி நெருக்கடியை எதிர்நோக்கிக் கொண்டு வரும் அனாதை ஆசிரமங்கள், ஊனமுற்றோர் இல்லங்கள், அபலைப் பெண் நிலையங்கள், முதியோர் இல்லங்கள், தனித்து வாழும் தாய்மார் இல்லங்கள் போன்றவற்றில் தங்கியிருக்கும் நமது இந்தியர்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்ய முன் வர வேண்டும் என சுப்பாராவ் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இப்படிப்பட்ட இல்லங்களில் தங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த இல்லங்களை நடத்துவோர் பணத்துக்காகப் பலரிடம் கையேந்தி நிற்கின்றார்கள். அவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமையாகும்.

மக்கள் சேவையே மகேசன் சேவை. இப்படிப்பட்ட ஆதரவற்றோர்களுக்கு நாம் செய்கின்ற சேவைதான் நாம் இறைவனுக்குச் செய்கின்ற சேவை.

ஆகவே தைப்பூசத்திற்குக் கூடுதலாக தேங்காய்களை உடைக்க எண்ணியிருக்கின்ற பக்தர்கள் இந்தக் கருத்தை மனத்தில் கொண்டு ஆதரவற்றிருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கும் அவர்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தைத் தந்துகொண்டிருக்கிற இந்திய தொண்டூழிய அமைப்புக்களுக்கும் இந்தத் தைப்பூசத் தினத்தின்போது நிதி உதவி தர முன் வருமாறு பி.ப.சங்கம் கேட்டுக்கொள்வதாக என்.வி.சுப்பாராவ் கூறினார்.

1 comment:

  1. வணக்கம்,
    நல்லதொரு கட்டுரை. ஒவ்வொரு வருடமும் இதே நிலைதான். யார் என்ன கூறினாலும் சம்பந்தப்பட்டோருக்கு அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கின்றது. எப்போதுதான் உணரப் போகிறார்களோ தெரியவில்லை!

    ReplyDelete