ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரையில் வழக்கறிஞர்கள் நேற்று திங்கட்கிழமை கண்டனப் பேரணி நடத்தினர். இப்பேரணியின் போது காங்கிரஸ் கொடி எரிக்கப்பட்டதுடன் அப்பகுதியில் உள்ள தந்தி அலுவலகத்தின் மீதும் கல் வீசப்பட்டது.
ஈழத் தமிழரை அந்நாட்டு இராணுவம் தொடர்ந்து தாக்கி வருவதைக் கண்டித்தும், மத்திய அரசு தலையிட்டு போர் நிறுத்தத்துக்கு வழி ஏற்படுத்தக் கோரியும், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நீதிமன்றம் முன்றலில் இருந்து பேரணி புறப்பட்டது.
தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன், மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கத்தினர் இதில் கலந்து கொண்டனர். தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற பதாகைகள் மற்றும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் படத்தையும் ஏந்தி வந்தனர்.
சிறிலங்கா, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பப்பட்டன. தல்லாகுளம் பெருமாள் கோயில் பகுதிக்கு பேரணி வந்தபோது அங்கிருந்த காங்கிரஸ் கொடிக் கம்பத்தை சாய்த்து அதிலிருந்த கொடியை சிலர் எரித்தனர்.
தமுக்கம் அருகே உள்ள தந்தி அலுவலகத்தை பேரணி அடைந்தபோது, அந்த அலுவலகத்தை நோக்கி சிலர் கற்களை வீசினர். தடியால் அலுவலக பெயர்ப் பலகையை தாக்கினர். தந்தி அலுவலகம் முன் உள்ள சாலையில் வழக்கறிஞர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மறுலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
No comments:
Post a Comment