Sunday, August 29, 2010

ஏன் இந்த நிலை?

தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுள்ளனர்.



தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் இவ் ஒளிப்பதிவில் இளைஞர்களின் தகாத வார்த்தை பிரயோகம் காரணமாக சில வார்த்தை பிரயோகங்கள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Saturday, August 28, 2010

அனைத்துலக வர்த்தகத்தில் ரிங்கிட்டைப் பயன்படுத்துவது சரியான முடிவு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்பு!

அனைத்துலக வர்த்தகத்தில் ரிங்கிட்டை ஒரு நாணயமாக பயன்படுத்துவதற்கு வெளிநாட்டு நாணய மாற்று நிர்வாக விதிகளை தளர்த்துவதற்கு பேங் நெகாரா எடுத்துள்ள முடிவை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்கிறது.

இந்த முடிவு சரியான பொருளாதாரத்துக்குச் சாதகமானது என அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

முன்பதாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தால் உள்நாட்டு வியாபாரத்தின் பல இலட்சக்கணக்கான வெள்ளியை பாதுகாத்திருக்கலாம் என அவர் கூறினார்.

உண்மையில் இப்பிரச்னையை பேங் நெகாராவின் கவனத்திற்கும் நிதி அமைச்சின் கவனத்திற்கும் ஜனவரி 2008ல் பி.ப.சங்கம் கொண்டு வந்தது.

அச்சமயம் நாங்கள் அனுப்பிய கடிதத்தில் அமெரிக்க டாலரின் தொடர்ச்சியான பலவீனத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். உள்நாட்டு நிறுவனங்கள் தங்களின் ஏற்றுமதி கணக்கை ரிங்கிட் நாணயத்திலேயே குறிப்பிட்டிருந்திருந்தால் அதிக அளவு அவர்கள் நன்மை அடைந்திருப்பார்கள் என்றார் அவர். அனைத்துலக வர்த்தகத்தில் உள்ளூர் நாணயத்தைப் பயன்படுத்துவது இவ்வட்டாரத்தில் பிரபலப்படுத்தப்பட்டால் அமெரிக்க டாலரை சார்ந்திருப்பது குறையக்கூடும் என தாங்கள் நம்புவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Thursday, August 26, 2010

கண்ணனைத் தேடி



ஆசிரியர் : டி.கே.வி.ராஜன்
வெளியீடு :கற்பகம் புத்தகாலாயம்

பல தொல்பொருள் ஆராயச்சிகளில் பல ஆண்டுகளாக தன்னை ஈடுப்படுத்திருந்த டி.கே.வி.ராஜனின் "கண்ணனைத் தேடி" என்ற ஆய்வு நூலை வாங்கிப் படித்து பல அதிசய செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.

பூச்சிகள் தகவல் களஞ்சியம்


ஆசிரியர்: ஆர்.வி. பதி
வெளியீடு: குறிஞ்சி
(பக்கம்: 112).

பதினைந்து பூச்சிகளைப் பற்றி ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் பேசுவது போல் அமைக்கப்பட்டு உள் ளது. நகைச்சுவை ததும்பும் வகையில் பூச்சி விவரம் தெளிக்கப்பட்டுள்ளது. "சிக்கன் குனியா' என்பது தவறு, அது "சிக்குன் குனியா' என்பதே சரி. கரப்பானின் தலை துண்டானாலும் ஐந்து நாட்கள் உயிர் வாழும். பூச்சி புத்தகத்தில் ஏராளமான ஆச்சர்யமூட்டும் நெளியல்கள் உண்டு.

Tuesday, August 24, 2010

கண்ணனைத் தேடி புத்தகம்



டி.கே.வி.ராஜன் அவர்களின் கண்ணனைத் தேடி என்ற ஆய்வு நூலின் கட்டுரைகள், ஆசிரியர் விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரனின் ஆவிகள் உலகம் என்ற அமானுஷ்ய ஆன்மீக மாத இதழில் தொடர் கட்டுரையாக பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளை இங்கே PDF முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

1. ஜனவரி 2010
2. பிப்ரவரி 2010
3. மார்ச் 2010

Sunday, August 22, 2010

தேவையில்லாத, ஆபத்தான தடுப்பூசித் திட்டத்தை ரத்து செய்யுங்கள்!

நாட்டில் உள்ள 13 வயதுடைய எல்லா சிறுமிகளுக்கும் யூமன் பப்பிலோமாவைரஸ் (எச்.பி.வி.) (Human papillomavirus) தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு பரிந்துரைத்து வருவதை பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கம் எதிர்ப்பதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

பாலியல் தொடர்புகளின் மூலம் பரவும் வைரஸ் தொற்றுக்காக போடப்படும் இந்தத் தடுப்பூசி தேவையில்லாதது, அறிவியல் பூர்வமாக நிருபீக்கப்படாதது. பாதுகாப்பற்றதும் கூட. பல தரப்பிலிருந்து இந்த தடுப்பூசிக்கு கடும் எதிர்ப்புக்கள் வந்திருந்தாலும் கூட, அரசாங்கம் சுமார் 300,000 சிறுமிகளுக்கு எச்.பி.வி. தடுப்பூசியைப் போடுவதற்கு வருடத்திற்கு மவெ. 150 மில்லியனை செலவு செய்யவிருக்கிறது. வைரஸ் தொற்றால் ஏற்படும் 40 விதமான புற்றுநோய்களில் இரண்டு வகையான புற்றுநோய்க்கு மட்டுமே இந்த தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கும் என்று இத்ரிஸ் கூறினார்.

பாலியில் தொடர்புகளினால் எச்.பி.வி. தொற்றுகிறது. பாலியல் தொடர்புகளினால் ஏற்படும் அபாயங்களை சமய மற்றும் நன்னெறிக் கல்வி மூலம் தடுப்பதை விட்டுவிட்டு தடுப்பூசி மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முயல்வது அறிவுப்பூர்வமாகப் படவில்லை என்று இத்ரிஸ் கூறினார். எச்.பி.வி. தடுப்பூசி பாலியல் தொடர்பு மூலமாக பரவும் எல்லா விதமான வைரஸ்களுக்கும் எதிராக பாதுகாப்பு கொடுக்கும் என்று சிறுமிகளுக்கு தப்பான அபிப்பிராயம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இது மிகவும் ஆபத்தானது.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலமாகவே இரண்டு வருட காலக்கட்டத்திற்குள் 90% எச்.பி.வி. தொற்றுநோயை விரட்டிவிட முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இது உண்மை என்றால் இந்த தொற்றுநோய் தடுப்பூசிக்கு தேவையே இல்லை.

எச்.பி.வி. தடுப்பூசி போடப்பட்ட பிறகு அமெரிக்காவில் ஒவ்வாமை காரணமாக 53 பேர் இறந்துபோயுள்ளனர். எச்.பி.வி. தடுப்பூசியால் ஏற்படும் பலன்களைவிட அது ஏற்படுத்தும் பக்க விளைவுகள் ஏராளம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகர் டாக்டர் டாயன் ஹாப்பர் கூறுகிறார்.

மெர்க் கம்பெனியின் கார்டாசில் (Gardasil) மற்றும் க்ளாக்சோஸ்மித்க்ளின் கம்பெனியின் செவாரிக்ஸ் (Cervarix) எச்.பி.வி. தடுப்பூசிகளே நம்முடைய குழந்தைகளுக்குப் போடப்படவிருக்கின்றன. கார்டாசில் பக்கவாதம், வலிப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. தடுப்பூசிக்கும் ஆட்டிசம் நோய்க்கும் அதிக தொடர்பிருப்பதாகவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறுகிறது. மயக்கம் மற்றும் இரத்தம் கட்டிக்கொள்ளுதல் போன்றவை கார்டாசில் வகை தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஏற்பட்டதாக 2008ன் ஆய்வு காட்டுகிறது. கார்டாசில் எச்.பி.வி. தடுப்பூசி போடப்பட்ட இரண்டு சிறுமிகள் மோசமான நோய்க்கு ஆளானதால் 2009ல் ஸ்பெயின் நாட்டின் சுகாதார அமைச்சு கார்டாசில் எச்.பி.வி. தடுப்பூசி போடுவதை நிறுத்தியது. செவாரிக்ஸ் எச்.பி.வி. தடுப்பூசி போடப்பட்ட பெண்களும் தலைவலி, குமட்டல் மற்றும் இறப்புக்கு ஆளானதாக இங்கிலாந்தில் ஆதாரங்கள் இருக்கின்றன.

ஆகையால் சுகாதார அமைச்சு 150 மில்லியனை எச்.பி.வி. தடுப்பூசி போடுவதற்காக செலவு செய்யாமல், அதே தொகையை, இளம் பிராய பாலியல் தொடர்புகளினால் ஏற்படும் ஆபத்துக்கள், எச்.பி.வி. தொற்றுநோய்க்கிருமிகளின் பாதிப்பு பற்றி கல்வி ஊட்டுவதற்கு பயன்படுத்துவது பலனளிக்கும். தடுப்பூசிகளை விட பெப் ஸ்மியர் சோதனையே கருப்பை புற்றுநோய் தடுப்புக்கு இன்னும் பாதுகாப்பானது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்றார் இத்ரிஸ்.

சென்ற வருடம் நவம்பர் மாதத்திலும் இந்த வருட மார்ச் மாதத்திலும் பி.ப.சங்கம் சுகாதார அமைச்சோடு நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் தேவையில்லாத இந்த எச்.பி.வி. தடுப்பூசித் திட்டத்தைத் துடைத்தொழிக்குமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் பினாங்கில் சுகாதார அமைச்சு நடத்திய சந்திப்புக் கூட்டத்தில், 13 வயது சிறுமிகளுக்கு எச்.பி.வி. தடுப்பூசி விளக்கங்களை அளித்து தடுப்பூசி தொடர்பான அவர்களுடைய பயத்தைப் போக்கவிருப்பதாக அறிவித்தது. பிறகு இந்த சிறுமிகள் தங்களுடைய பெற்றோர்களுக்கு இதன் நன்மையை எடுத்து விளக்கி தடுப்பூசி போட அனுமதி பெற வேண்டும்.

தடுப்பூசி தொடர்பாக பெற்றோர்களுக்கு விளக்கமளிக்காமல், அவர்களுடைய குழந்தைகளுக்கு மட்டும் விளக்கத்தை அளிப்பதன் மூலம் பிள்ளைகளின் நலனையும் ஆரோக்கியத்தையும் முடிவு செய்ய வேண்டிய பெற்றோர்களுக்கு தடுப்பூசி தொடர்பான முழு விபரங்களை அளிக்கும் பொறுப்பிலிருந்து இவர்கள் நழுவிக்கொள்ளப் பார்க்கிறார்கள் என்றே தெரிகிறது. இது பெற்றோர்களின் உரிமையை மீறும் செயலாகும். எச்.பி.வி. தடுப்பூசி போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை சுகாதார அமைச்சு பெற்றோர்களுக்கு அவசியம் விளக்கியாக வேண்டும் என்றார் இத்ரிஸ்.

அவசியமற்ற இந்த எச்.பி.வி. தடுப்பூசித் திட்டத்தை சுகாதார அமைச்சு அமல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் முதலில் 13 வயது சிறுமிகளின் எல்லா பெற்றோர்களையும் அழைத்து இந்தத் தடுப்பூசி தொடர்பான முழுமையான விபரங்களை அளிக்க வேண்டும்.

தேவையற்ற, ஆபத்தை விளைவிக்கும் இந்த தடுப்பூசித் திட்டத்தில் உள்ள பக்க விளைவுகளையும் ஆபத்துக்களையும், மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் சுகாதார அமைச்சு முழுமையாக எடுத்து விளக்க வேண்டியது அவசியமாகும். அதோடு எச்.பி.வி. தடுப்பூசி போடப்பட்ட எந்த சிறுமியாவது பக்க விளைவுகளால் பாதிக்கப்படுவாரானால் அதற்கு சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.

இந்து ஆலயங்களில் கைபேசியை உபயோகிப்பதற்கு தடை விதியுங்கள் விதவிதமான விரசமான சினிமா பாடல்களின் ரிங் டோன் கலாச்சார சீரிழிவுக்கு இட்டுச் செல்கிறது!

அண்மைய காலமாக இந்து ஆலயங்களில் வழிபாடுகள் நடைபெறும்போது கைப்பேசியை உபயோகிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது கவலையைத் தருகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகிறது.

கோயில்களில் அர்ச்சகர் பூஜை செய்யும்போதும், மந்திரம் உச்சரிக்கும்போதும், வரிசையில் இருக்கும் பக்தர்கள் பலரின் கைப்பேசியில் அழைப்புக்கள் வருவது என்பது இப்பொழுது ஒரு புதிய கலாச்சாரமாகிவிட்டது என பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

வருகின்ற அழைப்புக்கள் அமைதியாக வருவதில்லை அதற்கு மாறாக விரசமான சினிமா பாடல்களின் ரிங் டோனாக வருவதுதான் மற்ற பக்தர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றது என்கின்றார் சுப்பாராவ்.

ஒரு சிலர் அழைப்பு வந்தால் சாமி கும்பிடுவதையும் விட்டு விட்டு சற்று தூரம் சென்று பேசிவிட்டு வருகின்றனர். இறைவினைவிட, கைப்பேசியில் வந்த அழைப்பே இவர்களுக்கு மிக முக்கியமாகிவிட்டது. கோயிலுக்கு வராமல் வீட்டில் இருந்தே கைப்பேசிகளில் வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கலாமே.

வேறு சிலர் இருந்த இடத்திலேயே வரிசையில் நின்றவாறு ஆங்கிலத்தில் “பிறகு கூப்பிடு” என சத்தம் போட்டு சொல்வதும் நின்றுகொண்டிருக்கிற பக்தர்களை மதிக்காதது மட்டுமல்ல, இவர்களுக்கு உண்மையிலேயே இறை பக்தி உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது என்றார் சுப்பாராவ்.

வருகின்ற அழைப்புக்களின் ரிங்டோன், அர்ச்சகர்கள் மந்திரம் ஓதுவதைவிட மிக அதிக சத்தத்துடன் இருப்பதும் இப்பொழுது ஒரு கலாச்சாரமாகிவிட்டது.

இந்த நவீன கலாச்சாரம் ஆலயத்தின் புனிதத்தன்மையை இழிவுபடுத்துகின்ற ஒரு செயலாக மாறிவருகின்றது என்றார் சுப்பாராவ்.

ஆலயங்களில் அதிக அளவு கைப்பேசியைப் பயன்படுத்துவோர் இளைஞர்களாகவே இருக்கின்றனர். கை எடுத்து கும்பிடும்போது, கைப்பேசி உள்ளங்கைகளுக்கு நடுவே இருக்கும் அவல நிலை வெட்கித் தலை குனிய வைக்கும் ஒரு செயலாகும். இப்படியெல்லாமா கடவுள் வழிபாடு செய்வது?

அரை மணி நேரம் ஆலயத்தில் இருக்கும்போது 10 அழைப்புக்கள் வருவதும், அதற்கு ஈடாக அழைப்பதும் நாகரீகமாக செயல் அல்ல.

ஆலயங்களில் கைப்பேசியை பயன்படுத்துவதற்கு ஆலய நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.

அதையும் மீறி பயன்படுத்துவோரின் கைப்பேசியை பறிமுதல் செய்வதையும் நிர்வாகங்கள் ஆலோசிக்க வேண்டும் என என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.

மதுரை மீனாட்சியம்மன்


மதுரை மீனாட்சியம்மன்

Monday, August 9, 2010

37 வருட போராட்டத்திற்குப் பிறகு ரோடாமைன் பி இன்னும் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது!


எப்பொழுதோ தடை செய்யப்பட்ட ரோடாமைன் என்ற வர்ணம் இன்னும் உணவுப் பொருட்களில் வலம் வருவதைப் பார்க்கும்பொழுது சுகாதார அமைச்சு உணவு சட்டத்தை இன்னும் முறையாக அமல்படுத்தவில்லை என்றே தெரிகிறது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

பெலாச்சானில் ரோடாமைன் பி சேர்க்கப்பட்டிருப்பதாக 1973ல் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கண்டுபிடித்து அறிவித்தது. அதற்குப் பிறகு 1983, 1993, 1995, 1999, 2000, 2001, 2002, 2007 மற்றும் 2008 வருடங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் ரோடாமைன் பி பெலாச்சானோடு சேர்த்து இன்னும் நிறைய உணவுப் பொருட்களில் இருப்பது தெரிய வந்தது.

ஒவ்வொரு முறையும் உணவில் ரோடாமைன் பி இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் சோதனைகள் காட்டியபொழுது, சுகாதார அமைச்சுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவெல்லாம் பயனளித்ததாகத் தெரியவில்லை. இரு தசாப்தங்கள் கடந்தும் உணவில் ரோடாமைன் பி இன்னும் பயன்படுத்தப்படு வருகின்றது என்றார் இத்ரிஸ்.

புற்றுநோயை வரவழைக்கும் ரோடாமைன் பி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அதை உணவுக்கு வர்ணம் கொடுக்க அறவே பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களுக்கும் துணிக்கு வர்ணம் கொடுக்கவுமே இந்த வர்ணத்தைப் பயன்படுத்த வேண்டும்.

உணவு சட்டம் 1985 படி, ரோடாமைன் பியை உணவில் பயன்படுத்தக்கூடாது. அப்படிப் பயன்படுத்துபவர்களுக்கு மவெ. 5,000 அபராதம் அல்லது 2 வருடத்திற்கு மேற்போகாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றார் இத்ரிஸ்.

உணவு மற்றும் போதைப்பொருள் சட்டம் 1952ன் கீழ் ரோடாமைன் பி உணவில் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அப்படியானால் இந்த வர்ணத்தை உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கான தடை ஏற்படுத்தப்பட்டு 50 வருடங்கள் ஆகிவிட்டன.

ஆகக் கடைசியாக ஏப்ரல் 2010ல் பி.ப.சங்கம் மேற்கொண்ட சோதனையில், கோலாலம்பூரில் வாங்கப்பட்ட 2 பிளாச்சான் மாதிரிகளிலும் நொறுக்குத் தீனியிலும் ரோடாமைன் பி இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் சோதனைகள் காட்டியுள்ளன. ரோடாமைன் பியை உணவில் உபயோகிக்கத் தடை ஏற்படுத்தப்பட்டு 50 வருடங்கள் ஆகியும் இன்னும் உணவுப் பொருட்களில் ரோடாமைன் பி இருப்பது அதிர்ச்சியைத் தருவதாக இத்ரிஸ் கூறினார்.

ரோடாமைன் பியை உணவில் பயன்படுத்துபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத காரணத்திலேயே இந்நிலை நிலவுகிறது. மலேசியாவில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை பெருகி இருக்கிறது. உணவில் அதிகமாகச் சேர்க்கப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்களே இதற்குக் காரணமாகும் என்றார் இத்ரிஸ்.

ரோடாமைன் பி வர்ணம் கொண்டு வரும் ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உணவு சட்டம் 1985 முழுமையாக அமலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இரசாயன வர்ணங்களை உணவில் பயன்படுத்தும் நோக்கத்திற்காக விற்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும். வர்ணம் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை பயனீட்டாளர்கள் வாங்காமல் இருக்கும் பொருட்டு பயனீட்டாளர்களுக்கான கல்வித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். சந்தைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை அவ்வப்பொழுது சோதைனைக்கு அனுப்பி அவற்றில் ஆபத்தான வர்ணங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

சட்டத்திற்கு எதிராக உணவில் வர்ணங்களை சேர்த்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் அபகரிக்கப்பட வேண்டும். வர்ணங்கள் சேர்க்கப்பட்ட பார்ப்பதற்கு அழகாக இருக்கும் உணவுப் பொருட்கள் ஆபத்தானவை என்ற காரணத்தால் அவற்றைப் பயனீட்டாளர்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

சாலையில் சாவைச் சந்தித்தவர்களின் எண்ணிக்கை 62,323 சட்ட அமலாக்கம் முறையாக நடைபெற வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்


அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் மீது 2001ல் படையெடுத்ததிலிருந்து இன்று வரை சுமார் 28,778 பேர் போரில் பலியாகியுள்ளனர். அதே காலக்கட்டத்தில் மலேசியாவில் 62,323 பேர் சாலை விபத்தில் இறந்து போயுள்ளனர். சாலை விபத்துக்களில் மோசமான காயங்களுக்கு உள்ளானவர்கள் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்பொழுது போரினால் பாதிக்கப்படும் நாட்டை விட நிலைமை இன்னும் மோசமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. சில சமயங்களில் சாலை விபத்துக்களில் ஒட்டு மொத்த குடும்பமே மரணம் என்ற பெயரில் அப்படியே துடைத்தொழிக்கப்படுகிறது. இப்படி நடந்தாலும் கூட சாலை விபத்துக்களைப் பற்றி நாம் ஒன்றும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

2000ல் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 250,429 ஆக இருந்தது. சென்ற வருடத்தில் இது 397,268 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரி 18 பேர் சாலை விபத்துக்களினால் உயிர் இழக்கின்றனர். உலகிலேயே சாலை விபத்துக்களில் அதிகம் உயிரிழக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்று இத்ரிஸ் கூறினார்.

ஒவ்வொரு வருடமும் 9,081 பேர் மோசமான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களில் 4,540 பேர் நிரந்தர செயலிழப்புக்கு உள்ளாகின்றனர். சென்ற வருடம் மட்டும் சாலை விபத்துக்களினால் மவெ. 7.8 பில்லியன் செலவானது. ஆகையால் கூடிய வரையில் விபத்துக்களை தடுப்பது ஒரு நல்ல முதலீடாகும் என்றார் இத்ரிஸ்.

சாலையில் ஓடும் பெரும்பாலான கார்கள் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கின்றனவா என்பது கேள்விக்குறி. மிகவும் பிரபலமான விலை உயர்ந்த தோயோட்ட மற்றும் ஹோண்டா ரக கார்களில் கோளாறுகள் இருந்ததால் உலக சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

வாகனத்தை அதி வேகமாகச் செலுத்துவது, வாகனத்தை திறமையாகச் செலுத்துவது, வாகன நெரிசல், சாலை மோசமான நிலையில் இருத்தல், சட்டத்தை முறையாக அமல்படுத்தாமல் இருத்தல் போன்றவை சாலை விபத்துக்குக் காரணமாக இருக்கின்றன என்று இத்ரிஸ் கூறினார். பாதசாரிகளுக்கு பிரத்யேகமாக உள்ள வழிகளைப் பயன்படுத்தாமல் வாகனங்கள் ஓடும் சாலைகளையே கடக்கின்றனர். ஓய்வு இல்லாமல் சாலையில் வாகனங்களைச் செலுத்துதல், மோசமான சீதோஷ்ண நிலை போன்றவை அயர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது.

குடிபோதையில் வாகனமோட்டியதால் விபத்துக்குள்ளாகி 2,698 பேர் இறந்து போயுள்ளனர். வாகனமோட்டும்பொழுது சாப்பிடுவதாலும், கைபேசியில் குறுந்தகவல் அனுப்புவதாலும் 1,318 பேர் சாலை விபத்து ஏற்பட்டு இறந்து போயுள்ளனர். 16லிருந்து 25 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்களுடைய பெற்றோரின் வாகனங்களை அவர்கள் அனுமதி இல்லாமல் ஓட்டிச் சென்றதால் ஏற்படும் விபத்து மொத்த விபத்துக்களில் 41% ஆகும்.

லைசென்ஸ் மற்றும் அமுலாக்கத்தில் நிகழும் ஊழலும் விபத்துக்களுக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருக்கின்றன. வாகனமோட்டும் பயிற்சி பெறாமலும், சாலை விதிமுறைகளைக் கற்காமலும், வர்த்தக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அதற்குரிய தகுதி இல்லாமலே மருத்துவச் சான்றிதழ் வழங்குவதும் விபத்துக்களுக்கு இன்னொரு காரணமாக இருக்கிறது.

அமுலாக்க அதிகாரிகளும் வாகனமோட்டும் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதில் பாரபட்சத்தைக் காட்டுகிறார்கள். இருக்கை பெல்ட் போடாத அரசாங்க அதிகாரிகளைக் கண்டு கொள்ளவதில்லை ஆனால் மற்றவர்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் கோலாலம்பூர் வாசிகள் புகார் கூறியுள்ளனர் என்றார் இத்ரிஸ்.

எல்லாவற்றிற்கும் மேலாக சட்ட அமுலாக்கத்தில் உள்ள ஓட்டைகளே சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனைகள் கடுமையாக இருக்கும் பட்சத்தில், வாகனோமோட்டுனர்கள் தவறிழைக்கத் தயங்குவார்கள் என்றார் இத்ரிஸ்.

விபத்து தொடர்பாக போலீஸ் பதிவில் உள்ள விபரங்களை வைத்துப் பார்க்கும்பொழுது, வேகமாக வாகனத்தைச் செலுத்துவது, மற்ற வாகனங்களை முந்திச் செல்லுதல் ஆகியவற்றுக்கு அடுத்து, சாலையில் உள்ள குழிகளே சாலையில் ஏற்படும் மரணங்களுக்குக் காரணமாக அமைகின்றன என்றார் இத்ரிஸ்.

நிறைய சாலைகளை சம்பந்தப்பட்ட கம்பெனிகள் தோண்டிக் விட்டு அவற்றை மறுபடியும் புணர் நிலைக்குக் கொண்டு வருவதில்லை. கனரக வாகனங்களும் தங்கள் பங்குக்கு சாலைகளை சேதப்படுத்திவிடுகின்றன. இப்படிச் சாலைகளில் பழுது ஏற்படுத்தி மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இத்ரிஸ்.

வாகனமோட்டுனர்கள் சாலை விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றுகிறார்களா என்பதனை உறுதி செய்யும் அதே வேளையில், வாகனங்களும் மற்றும் வாகனங்களைச் செலுத்துவதற்கான சாலைகளும் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதனை உறுதி செய்ய சட்டத்தில் முறையான மாற்றங்களைக் கொண்டு அவற்றை உடனடியாக அமலாக்கம் செய்ய வேண்டியது அவசியமாகும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.