Friday, February 20, 2009

யுத்தவெற்றியில் தொங்கும் மகிந்த

சிறிலங்காவின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதில் இரண்டு விடயங்கள் தற்போது கவனத்தைக் கவர்ந்தவையாக உள்ளன. ஒன்று யுத்தத்திற்கான நிதி ஒதுக்கீடு, இது 17 ஆயிரம் கோடி ரூபாவைத் (17,000 கோடி) தாண்டி விட்டது. அத்துடன் இவ்வாறான பெருந்தொகை நிதி பாதுகாப்புக்கு ஒதுக்காவிட்டால் கல்விக்கு இப்போது ஒதுக்கப்படும் நிதியைப்போல் நான்கு மடங்கு நிதியை ஒதுக்கமுடியும் எனக் கூறப்படுகிறது. அடுத்தது தேர்தல் திணைக்களத்திற்கு ஒதுக்கப் பட்ட நிதி. இது 109.8 கோடி ரூபா எனத் தெரியவருகிறது.

இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதைப் போல் சுமார் நான்கு மடங்காகும். சிறிலங்காவின் ஐந்து மாகாணசபைகளின் ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைகின்றது. அவற்றுக்கான தேர்தலை நடத்துவதற்கு இவ்வளவு பெருந்தொகை நிதி தேவையில்லை என்பது அவ தானிகளின் கருத்தாகும். அத்துடன் அடுத்த ஆண்டை மகிந்த ராஜபக்ச தேர்தல் ஆண்டாகத் தமது ஆதரவாளர் மத்தியிலே - அமைப்பாளர்கள் மத்தியிலே பிரகடனப்படுத்தி யிருப்பதாகவும் தமது கட்சி தனியாகப் போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய நிலையை உருவாக்க அனை வரும் களத்தில் இறங்கிச் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இந்த நடவடிக்கை மாகாணசபைத் தேர்தலுக்கானதாக இருக்கமுடியாது. பாராளுமன்றத் தேர்தலுக்கானதாகவே இருக்கமுடியும் என எதிர்வு கூறப்படுகிறது. சிறிலங்காவின் இன்றைய பாராளு மன்றத்தின் ஆயுட்காலம் 2010 ஏப்ரல் வரை உள்ளது. அதேபோல சனாதிபதியின் பதவிக்காலம் 2011 நவம்பர் வரை உள்ளது.இருப்பினும் இன்றைய பாராளுமன்றத்தின் நிலைகுறித்து மகிழ்ச்சிகொள்பவராக மகிந்த இல்லை. ஏனெனில் இது கோமாளிகளின் ஒட்டுப் போட்ட சட்டைபோல பல வர்ணங்களில் பல்வேறு போக்குகளைக் கொண்ட கட்சிகளின் கட்சிதாவி களின் கூட்டாக உள்ளது. இதில் வேடிக்கை என்ன வென்றால் மகிந்தவின் அரசாங்கத்தில் குறிப்பிட்ட கட்சியினரும் உள்ளனர் அதிலிருந்து முன்னரே தாவியவர்களும் உள்ளனர். இவர்கள் பதவி ஆசை, பண ஆசை, பாது காப்புத் தொடர்பான அச்சுறுத்தல் என்பவை காரணமாக மகிந்தவிடம் உள்ள நிறைவேற்று அதிகாரத்தின் பலத்தினால் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களாக ஒட்டிக்கொண்டிருப்பவர்களாகவே உள்ளனர்.

இதன் காரணமாகப் பாரிய அமைச்சரவை ஒன்றை மகிந்த அரசாங்கம் கொண்டிருக்கிறது. இது குறித்து மகிந்த கவலை கொள்ளாவிடினும் அதனால் ஏற்படக் கூடிய செலவீனம் இவர்களைக் கட்டுப் பாட்டில் தொடர்ந்தும் வைத்திருப்பது குறித்து மகிந்த கவனத்தில் கொள்ளாது இருக்க முடியாது.அத்துடன் அவரது பதவியில் அல்லது அதிகாரத்தில் ஏற்படக் கூடிய சிறிய சரிவும் இவர் கள் அனைவரையும் கலைந்தோடச் செய்துவிடும் என்பதும் மகிந்தவுக்குத் தெரியும். எனவே பாராளு மன்ற அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள அவர் திட்டமிட்டு வருகின்றார். அதற்கு 2010 ஆம் ஆண்டு வரை பொறுத்திருந்தால் நிலைமைகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகிறார். 2011 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலின் போது உறுதியானதொரு பாராளுமன்றத்தைக் கையில் வைத்திருப்பதன் மூலம் தில்லுமுல்லுகள் செய்தாவது அத்தேர்தலில் வெற்றி பெற இந்தப் பாராளுமன்ற அதிகாரம் அவருக்கு அவசியமானதாகவே இருக்கும்.

அதேவேளை இப்போதே சனாதிபதித் தேர்தலை நடத்தி 12 வருட சனாதிபதி பதவிக்காலத்தைக் குறைத்துக் கொள்ளவும் அவர் விரும்பவில்லை.எனவே இன்றுள்ள சூழலில் பொதுத்தேர்தலை நடத்தி பாராளுமன்றத்தை உறுதியாகத் தமது பிடிக் குள் கொண்டுவர அதாவது தனது கட்சியின் முற்று முழுதான அதிகாரத்தின் கீழ் கொண்டுவர அவர் எண்ணுகிறார். ஆனால் இப்பொதுத் தேர்தலானது எத்தகைய சூழ்நிலையில் நடக்கும் என்றால் அவரது படைகள் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிய பின்னரே எனத் திட்டமிடுகிறார். அவ்வாறே யுத்தத்தில் வெற்றிமேல் வெற்றியைக் குவித்து எல்லாத் தேர்தல்களையும் நடத்தி அதிகாரத்தை நீண்டகாலத்திற்குத் தக்க வைத்துக் கொள்வதே அவரது திட்டமாகும். ஆக அவர் தமிழ் மக்கள் மீது மனிதாபிமானம் பொங்கி எழுகின்ற இராணுவ நடவடிக்கையின் நோக் கம் என்ன? அது அடுத்த ஆண்டில் மேலும் தீவிரமாகத் தொடரும் என்பதையே யுத்தத்திற்கும் தேர்தல் திணைக்களத்திற்கும் ஒதுக்கிய பெருமளவு நிதி வெளிக்காட்டுகின்றது.

அவர் தமிழ் மக்கள் மீதான மனிதாபிமானம் காரணமாகவோ அல்லது சிறிலங்காவின் இறைமை யைக் காக்க அல்லது தேசப்பற்றுக் காரணமாகவோ யுத்தத்தை நடத்துவாராயின் தேர்தலைப்பற்றி சிந்தித் திருக்கக்கூடாது. இதனைப் புரிந்து கொள்ளமாலோ அல்லது புரிந்துகொண்டும் இனவாதம் தலைக்கேறிய நிலை யிலோ சிங்கள மக்களும் மகிந்தவின் யுத்த வெறிக்குப் பின்னால் இழுபட்டுச் செல்கின்றனர். இன்று உலகத்தின் வல்லரசுகளே பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. ஆனால் சிறிலங்காவின் பொருளாதாரம் உறுதியான நிலை யில் தான் இருக்கிறது என்று நிதியமைச்சும் மத்திய வங்கியும் கூறுகின்றன. நாட்டை அடகுவைத்து மகிந்த புரியும் யுத்தத் தினால் ராஜபக்ச குடும்பமும் அதனைச் சர்ந்தவர் களும் பெரும் பயனடைந்துகொண்டு செல்கின்றனர். யுத்தம் வெற்றிபெற்றால் அவர்கள் தமது பதவியில் நீடிக்க முடியும்.

தோல்வியுற்றால் அவர்கள் அதுவரை காலமும் சுரண்டிய பணம் அவர்களுக்குப் போதும்.ஆனால் வெற்றிபெற்றாலென்ன தோல்வியடைந் தாலென்ன சிறிலங்கா மீளமுடியாத நெருக்கடிக்குள் சென்று கொண்டிருப்பது குறித்து மகிந்தவுக்கும் சரி, சிங்கள மக்களுக்கும் சரி அக்கறையிருப்பதாகத் தெரியவில்லை. பொருட்களின் விலைவாசி உயர்வு போதிய வருவாயின்மை அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை வெளிநாட்டு நிறுவனங்களே நிர்ணயிக் கின்றன. மாவின் விலை, அரிசியின் விலை, எரிபொரு ளின் விலை என்பனவற்றை நிர்ணயிக்கும் அதிகாரம் சிறிலங்கா ஆட்சியாளர்களின் கைகளைவிட்டு என்றோ போய்விட்டன. மேலும் பல நிறுவனங்களை விற்று (குறிப்பாக போக்குவரத்துச் சேவை, மின் சாரசபை) தொடர்ந்து யுத்தத்தை நடத்த மகிந்த அரசு விடாப்பிடியாக நிற்கின்றது.மகிந்த கூறுவது போல யுத்தத்தில் ஒரு போதுமே அவர்கள் வெல்லப்போவதில்லை. விடுதலைப் போராட்டம் என்பது எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அல்லது ஏற்க மறுக்கின்றனர். இறுதியில் யுத்தத்தில் களைப் படைந்து தோல்வியைத் தழுவும் போது சிறிலங்கா மீள முடியாத நிலைக்குச் சென்றுவிடும் என்பது மட்டும் உறுதி.

எழுதியவர் - வேலவன்

No comments:

Post a Comment