Wednesday, May 27, 2009

பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!

இப்போ நாம் முதலில் பிள்ளையாரைப் பத்தித் தெரிஞ்சுக்கலாமா? நாம எழுதறப்போ கூட பிள்ளையார் சுழின்னு போட்டுத் தான் எழுதுவோம், இல்லையா? பிள்ளையார் சுழி எப்படிப் போடணும்னு தெரியும் இல்லையா? 2 மாதிரிப் போட்டுக் கீழே 2 கோடு போடணும். இது "ஓம்" என்னும் எழுத்தின் சுருக்கம்னு சொல்லுவாங்க. நாம எந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிச்சாலும் முதலில் பிள்ளையாரை வணங்கிட்டுத் தான் ஆரம்பிக்கணும். அப்படித்தான் ஆரம்பிப்போம். பிள்ளையாரைக் கும்பிட்டு ஆரம்பிக்கிற வேலையில் தடங்கல் வராமல் இருக்கும்னு ஒரு நம்பிக்கை. அதனால் தான். நாம செய்யற காரியத்தில் தடங்கல் ஏற்படுவது நம்மளோட துரதிருஷ்டம்னு நினைப்போம் இல்லையா? அதனாலே தான் முதலில் பிள்ளையாரை நினைச்சுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அது எப்படி வேணாலும் இருக்கலாம்.

"விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் -- விநாயகனேவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் படுமின் பணிந்து.!"

என்று ஒரு தமிழ்ப் பாடல் இருக்கிறது. இதன் அர்த்தம் என்னன்னா, நம்மளோட வினை எல்லாத்தையும், அதாவது நாம் செய்யற, செய்யப் போற பாவங்கள் எல்லாத்தையும் வேரோடு அறுத்து விடுவான் விநாயகன் என்று முதல் வரிக்கு அர்த்தம். 2வது வரிக்கு விநாயகன் நம்முடைய வேட்கை தணிவிப்பான் என்றால் நம்முடைய நியாயமான வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பான் என்று பொருள் கொள்ள வேண்டும். அடுத்து என்ன சொல்றாங்கன்னா, "விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்" இந்த உலகமே அவருடைய தொந்திக்குள் அடங்கி இருக்கிறதுன்னு அர்த்தம். அதான் விநாயகர் தொந்தி பெரிசா இருக்கு பார்த்தீங்களா? இந்த மாதிரியான பெரிய தொந்திக்குள் உலகே அடக்கி இருக்கும். இந்த விநாயகர் தான் இந்த மண்ணால் ஆகிய பூமிக்கும், சுடர் விட்டுப் பிரகாசிக்கும் விண்ணான ஆகாயத்துக்கும், சகலத்துக்கும் நாயகன், அதாவது தலைவன் ஆகிறான். அடுத்து என்ன சொல்றாங்க? ஆகையால் அந்த விநாயகனை வணங்கிக் கும்பிடு, உன்னோட எல்லா வேலையும் நல்லா நடக்கும். அதான் "தன்மையிலே கண்ணிற்படுமின் கனிந்து!"ன்னு சொல்றாங்க. "கனிந்து"ங்கிற வார்த்தையோட முழு அர்த்தம் விநாயகனின் சக்தியை நாம் நல்லாத் தெரிந்து கொண்டு, மனம் கனிந்துன்னு இந்த இடத்திலே அர்த்தம் பண்ணிக்கணும்.

அடுத்து இன்னொரு முறையிலே ஸ்லோகம் சொல்லிக் கூட விநாயகரை வழிபடலாம்.

"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உப சாந்தயே!"

மஹாவிஷ்ணுவிற்கு நிகரானவரும், வெள்ளை உடை அணிந்தவரும், ரொம்பவே மகிழ்ச்சியான முகத்தைக் கொண்டவருமான அந்த விநாயகரைக் கும்பிடுகிறேன். என்னுடைய காரியங்களில் உள்ள விக்னங்களை நிவர்த்தி செய்து வேலைகளை முடித்துக் கொடுக்கட்டும்." என்று வேண்டிக் கொண்டு தான் பெரியவங்க எல்லாம் அவங்க ஜபம், தபம், பூஜை, புனஸ்காரம் எல்லாம் செய்வாங்க இல்லையா? அதான் மேற்படி ஸ்லோகத்தின் கருத்து.

பிள்ளையார் தோற்றம்

பிள்ளையார் எப்படித் தோன்றினார்ன்னு இப்போப் பார்ப்போமா? ரொம்ப நாளைக்கு முன்னே, அதாவது ரிஷிகள், முனிவர்கள்னு எல்லாருமா நிறைய இருந்தப்போ மரகத முனிவர்னு ஒரு முனிவர் இருந்தாராம். அவர் தவம் செய்வதற்குப் போன இடத்தில் விபுதைன்னு ஒரு அசுரப் பெண்மணி அவரைக் கல்யாணம் செய்துக்க ஆசைப் பட, முனிவர் மறுத்தும், பிடிவாதமாய்க் கல்யாணம் செய்து கொள்கிறாள். அவங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, என்னதான் முனிவரோட புத்திரனா இருந்தாலும், அவங்க அம்மாவோட வளர்ப்பினாலே அவன் ஒரு அசுரனாத் தான் வளர்ந்து வந்தான். அவன் பேர் கஜமுகாசுரன். இந்த அசுரன் தேவர்களுக்குப் பலவகையில் தொந்திரவு கொடுத்து வந்தான்.
(பொதுவாகவே நமக்குள்ளேயே ஒரு மனசு நல்லது நினைக்கும். ஒரு மனசு பொல்லாத விஷயத்தை யோசிக்கும். இப்போப் பக்கத்துப் பையனோ, பொண்ணோ தப்பு செய்தால் உடனே நாம டீச்சர் கிட்டே சொன்னா அது நல்ல மனசு. அப்படி இல்லாமல் நாமளே அவனை அடிச்சோ, கடிச்சோ தண்டிச்சோம்னா அது கெட்ட மனசு, இல்லையா? டீச்சர்னு ஒருத்தங்க பெரியவங்களா இருக்கும்போது, எதுவா இருந்தாலும் அவங்க கிட்டேத் தான் சொல்லணும், சொல்லுவோம். இந்த அசுரங்க அப்படி இல்லை, எதுவா இருந்தாலும் அவங்களே முடிவு எடுப்பாங்க. கடவுள்களையும் வேண்டிக்கிட மாட்டாங்க, அவங்க குருவும் சரியானபடி வழிகாட்ட மாட்டார். அப்படி அமைந்து போச்சு. இதுகூட ஏன் ஏற்பட்டதுன்னு கேட்டா, எல்லாருக்குமே வாழ்வோ, தாழ்வோ எல்லாமே ஏற்படும். கஷ்டமோ, சுகமோ எது வேணாலும் கிடைக்கும். எல்லாத்தையும் சமாளிச்சு வரணும்னு நமக்கு எல்லாம் மறைமுகமாத் தெரிவிக்கிறதுக்காக நடக்குது.)

அப்படித்தான் இந்த கஜமுகாசுரனும் இருந்தான். அவனாலே தேவர்களுக்கு ரொம்பவே தொல்லை ஏற்பட்டது. அவன் ஈஸ்வரனை நோக்கிக் கடும் தவம் செய்து பலவிதமான வரங்களை வாங்கி வந்தான். அதிலே ஒண்ணுதான் தன்னைக் கொல்பவன் மனிதனாயும் இருக்கக் கூடாது, மிருகமாயும் இருக்கக் கூடாது, ஒருவர் உருவாக்கிய ஆயுதத்தில் தோன்றக் கூடாது, ஒருவர் உருவாக்கின ஆயுதத்தில் என்னைக் கொல்லக் கூடாது என்று ஏகப்பட்ட வரங்கள். சாமிதான் நமக்கு வரம் கொடுத்து விட்டதே, இனிமேல் நம்ம பாடு ஜாலிதான்னு அவன் நினைச்சான். சாமி வரம் கொடுத்தாலும் அதை நாம ஒழுங்கா வச்சிருக்கோமான்னு அவர் பார்க்க மாட்டாரா என்ன? அதை அந்த அசுரன் மறந்தே போனான். அவன் பாட்டுக்கு இஷ்டத்துக்குத் தேவர்களை அடிக்கிறதும், கொல்றதுமா இருக்கான். தேவர்கள் எல்லாம் என்ன செய்யறதுன்னு ரொம்பவே யோசிச்சாங்க. தேவர்கள் நல்லா வாழ்ந்தாத் தான் மழை பொழியும், தண்ணீர், காற்று, உணவு உற்பத்தி எல்லாம் ஏற்படும். அவங்களோட வேலைக்கு இடையூறு வந்தால் யாருமே நிம்மதியா வாழ முடியாது. ஆகையால் தேவர்கள் எல்லாரும் மஹாவிஷ்ணுவிடமும், பிரம்மாவிடமும் போய் முறையிட்டாங்க. பிரம்மாவும், விஷ்ணுவும் எல்லாத் தேவர்கள் கூடவும் திருக்கைலை போய்ப் பரமசிவனைத் தரிசனம் செய்தார்கள். பரமசிவனிடம் தங்களோட கோரிக்கையைத் தெரிவித்தார்கள். தேவர்கள் செய்யும் காரியங்கள் எந்த விதமான தடங்கலும் இல்லாமல் நடக்கறதுக்காக வேண்டி ஒரு கடவுளை எங்களுக்கு உருவாக்கித் தரவும்னு கேட்டாங்க. விக்கினங்களைப் போக்க வல்ல விக்கின ராஜன் வேண்டும்னு தேவர்கள் விடுத்த கோரிக்கைக்கு சிவன் செவி சாய்த்தார்.

திருக்கைலாயமலையில் ஏழு கோடி மந்திரங்கள் அடங்கிய ஒரு சித்திர மண்டபம் இருந்தது. அதில் பார்வதியும், பரமேஸ்வரனும் போய் அங்கே எழுந்தருளினார்கள். "பள பள" வென்று ஜொலித்துக் கொண்டிருக்கும் இரண்டு ஒளிவடிவங்கள் அந்த ஏழு கோடி மந்திரங்களுக்கு நடுவில் பிரகாசமிட்டுத் தெரிந்தன. அவை இரண்டும் "சமஷ்டிப் பிரணவம்", "வியஷ்டிப் பிரணவம்" என்ற பெயர்களில் உள்ள இரண்டு பிரணவங்கள். அந்த இரண்டு பிரணவங்களையும் பரமசிவனும், பார்வதியும் கருணையுடன் நோக்க, அவை இரண்டும் இணைந்து, அந்தப் பிரணவங்களில் இருந்து பிரணவ சொரூபமான பிள்ளையார் யானை முகத்துடன் தோன்றினார்.

பிற கதைகள்

விநாயகர் பற்றி இன்னும் சில கதைகள் இருக்கின்றன. முதலில் நாம் பார்த்தது ஒரு புராணத்தில் உள்ளது என்றால் "பார்கவ புராணத்தில்" வேறு விதமாய்ச் சொல்கிறார்கள். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மாதிரியாக விநாயகர் பற்றிக் கூறப் படுகிறது. பார்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தின் படி விநாயகரே முழு முதல் கடவுள். இந்த உலகை மட்டுமல்லாது மும்மூர்த்திகளையும் படைத்து அவர்களுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தொழில்களைச் செய்யுமாறு கட்டளை இட்டவரும் விநாயகரே ஆவார். ஒவ்வொரு கல்பத்திலும் இவ்வுலகம் அழிந்து மறுமுறை சிருஷ்டி ஆரம்பிக்கும் முன் அண்ட சராசரங்களிலும் உள்ள எல்லா ஜீவன்களும் விநாயகருக்குள்ளேயே ஒடுங்கும் என்று பார்கவ புராணம் சொல்லுகிறது. பிரளயத்துக்குப் பின் விநாயகர் வக்ரதுண்ட விநாயகராக அவதரித்து மும்மூர்த்திகளையும் படைத்தார். பின் அவர்களைத் தம் தொழில்களைச் செய்யுமாறு கூறி மறைந்தார். இந்த பார்கவ புராணத்தின்படி ஒரு முறை என்ன நடந்தது என்றால்:
பிரம்மா ஒரு சமயம் கொட்டாவி விடவே, அதிலிருந்து ஓர் அரக்கன் தோன்றினான். அவன் பெயர் சிந்தூரானனன் ஆகும். ஏனெனில் அவன் சிந்தூர வண்ணத்தில் இருந்தான். அவனுடைய செக்கச் சிவந்த நிறத்தால் பயந்துபோன பிரம்மா அவன் கேட்காமலேயே அவனுக்குச் சில வரங்களைத் தந்தார். சும்மாவே அரக்கன். அவனுக்கு வரம் வேறே இலவசமாய் வந்தால் கேட்க வேணுமா? மூவுலகையும் ஆட்டிப் படைத்தான். யாவரும் செய்வதறியாமல் திகைக்க, மும்மூர்த்திகளும் கணபதியைப் பணிந்தனர். விநாயகர் உடனே தோன்றி, "கவலை வேண்டாம். நான் உமா தேவியாரின் திரு வயிற்றில் அவதரிப்பேன்." எனக் கூறி மறைந்தார். அது போலவே கருவுற்ற சமயம், உமாதேவியாரின் திருவயிற்றில் காற்று வடிவில் நுழைந்த சிந்தூரானன் குழந்தையின் தலையைத் திருகி எடுத்துக் கொண்டு போய் விட்டான். குழந்தை பிறந்தது தலையே இல்லாமல். அதுகண்டு அனைவரும் பதறவே, கலங்காதீர்கள் என்று சொன்ன சிவபெருமான் முன்பொரு சமயம் கஜமுகாசுரன் கேட்டுக் கொண்டபடி அவனுடைய தலையைத் தன் குழந்தையின் தலை இருக்கும் இடத்தில் பொருத்தினார். அன்று முதல் அந்தத் தெய்வக் குழந்தை "கஜானனன்" என்ற பெயர் பெற்றான்.

உமா தேவியாரிடம் வளர்ந்து வந்த கஜானனன் உரிய காலம் வந்ததும் சிந்தூரனனை அழிக்கப் புறப்பட்டார். சிந்தூரானனைத் தூக்கி எடுத்துத் தன் துதிக்கையால் ஓங்கி அடித்து அவன் ரத்தத்தைத் தன் உடம்பில் பூசிக் கொண்டார். செந்நிறமான விநாயகர் அன்று முதல் "சிந்தூர விநாயகர்" என்ற பெயரும் பெற்றார்.

விநாயகர் உருவ ரஹஸ்யம்

சரி, விநாயகர் பிறந்தாச்சு, அவர் எப்படி இருந்தார்னு பார்ப்போமா? யானை முகம், ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், ஆறு எழுத்துக்கள் உள்ளவர். விநாயகர் என்பது ஆறு எழுத்து இல்லையா? இவரை வழிபடுவோர் ஏழு பிறவிகளில் இருந்தும் விடுபட்டு, எட்டுத் திசைகளும் புகழ, ஒன்பது மணிகளும் பெற்று சம்"பத்து"க்களுடன் வாழ்வார்கள். இவருடைய திருமேனி மூன்று வகையில் ஆனது. இடைக்குக் கீழே பூத உடம்பு, இடைக்கு மேல் கழுத்து வரை தேவ உடம்பு, தலை மிருகத் தலை, ஒரு கொம்பு ஆண் தன்மை, கொம்பில்லாத பகுதி பெண் தன்மை, யானைத் தலை அஃறிணை, தெய்வ சரீரம் உயர்திணை. இந்த மாதிரித் தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர் திணையாய், அஃறிணையாய் எல்லாமுமாய் விளங்குபவர் விநாயகர். "தத்துவ மசி" என்ற ஆறு எழுத்தின் வடிவமே விநாயகர்.
பிரணவ வடிவினரான விநாயகரின் காது, அகன்ற யானைத் தலை, வளைந்த துதிக்கை ஆகியவை "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தின் வடிவத்தைக் குறிக்கும். இவரது திருவடிகள் ஞான சக்தியும், க்ரியா சக்தியும் ஆகும். இவருடைய பேழை வயிற்றில் உலகெல்லாம் அடங்கும். ஐந்து கரங்களும் ஐந்து தொழிலகளைச் செய்யும். எழுத்தாணி பிடித்த கரம் படைப்பையும், அங்குசம் கொண்ட கை அழித்தலையும், பாசம் வைத்திருக்கும் கை மறைத்தலையும், அமுத கலசம் ஏந்திய துதிக்கை அருளையும் குறிக்கும். மூன்று கண்களோ என்றால் முறையே சூரிய, சந்திர, அக்னியாகும். இவரின் உருவ அமைப்பில் எல்லா உருவங்களும் இருப்பதாய்க் கூறுகிறது "பார்கவ புராணம்" என்னும் விநாயக புராணம். இவருடைய நாடி பிரம்மா, முகம் வி்ஷ்ணு, கண் சிவன், இடப்பாகம் சக்தி, வலப்பாகம் சூரியன் என்று அமைந்திருப்பதாய்க் கூறுகிறார்கள்.

சிவ பெருமானுனம், உமை அம்மையும் விநாயகரை ஆசீர்வதித்தனர். "யாராக இருந்தாலும் ஒரு செயலைத் துவங்குமுன் முதலின் உன்னை வணங்கி விட்டு ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் அந்தக் காரியம் பூர்த்தி ஆகும். அவ்வாறன்றி உன்னை வணங்காமல் ஆரம்பிக்கும் செயல் முற்றுப் பெறாது." என்று அருளினார்கள். தீச் செயல்கள் புரிபவர்கள் யாரும் விநாயகரை வணங்கி விட்டு ஆரம்பிக்க மாட்டார்கள். அப்படியே ஆரம்பித்தாலும் ஏதேனும் இடையூறு வரும். இந்த வரம் கடவுளருக்கும் பொருந்தும் என்று அருளியதால் சிவபெருமான் ஒருமுறை திரிபுர அசுரர்களை வெல்லப் புறப்பட்ட சமயம் விநாயகரை வழிபடாமல் கிளம்பிச் சென்றதால் அவர் தேரின் அச்சு முறிந்தது என்று புராணம் கூறுகிறது. இதே போல் அகந்தையால் பிரம்மா விநாயகரை வழிபடாமல் சிரு்ஷ்டி செய்ய அவர் படைத்த மனிதர்கல், மிருகங்கள், பறவைகள் எல்லாம் பேய், பிசாசுகளாய் மாறிவிட்டன. பின்னர் கணபதியை ஆராதனை செய்து வழிபட்டபின் சரியான கோணத்தில் சிருஷ்டி ஆரம்பித்தது.
இப்போ மாம்பழக் கதையாகச் செவிவழியாக நாம் கூறுவது உண்மையில் அமிர்தத்தால் ஆன மோதகம் என்றும், அதை உலகைச் சுற்றிப் புண்ணியம் சேர்த்துக் கொண்டு வருபவருக்குத் தருவதாயும் சிவன் சொல்ல, விநாயகர் தாய், தந்தையை விடச் சிறந்த உலகம் இல்லை எனச் சொல்லி அவர்களைப் பணிந்து நிற்க, மோதகம் அவருக்குக் கிடைத்தது. அன்றில் இருந்து மோதகம் விநாயகருக்குப் படைக்கப் படும் பொருள் ஆனது என்கிறது புராணம். ஆனானப் பட்ட விநாயகரே தாய், தந்தையருக்கு மரியாதை கொடுக்கும்போது நாம் எப்படி நடக்க வேண்டும்? குழந்தைகளே! தெரிந்து கொள்ளுங்கள். விநாயகர் என்ற பெருக்கு அர்த்தம் என்ன தெரிய்மா? "வி" என்றால் தன்னிகரற்ற என்று பொருள் படும். நாயகர் என்றால் தலைவர். தன்னிகரற்ற தலைவரான இந்த விநாயகருக்குக் குரு யார் தெரியுமா? சூரியன் தான் விநாயகரின் குரு. அது போல் இன்னொருவருக்கும் சூரியன் தான் குரு. அவர் யார் தெரியுமா? நம் வாயு புத்திரன், வானர வீரன், அஞ்சனை புத்திரன் அனுமந்தனுக்கும் சூரியன் தான் குரு. இருவரும் சூரியனிடம் தான் வேத சாஸ்திரங்களைப் பயின்றார்கள். அதுவும் எப்படி? நம்ம வகுப்பில் உட்கார்ந்து கேட்பதைப் போல் எல்லாம் இல்லை.

சூரியனோ தாங்க முடியாத சூடு உள்ளவன். அவனிடம் பாடம் கேட்பது என்றால் லேசா? நம்மால் முடியத் தான் முடியுமா? விநாயகரையும், அனுமனையும் போல் சக்தி வாய்ந்தவர்களால் தான் முடியும். தினம் தினம் உலகை வலம் வருகிறான் சூரியன். ஒரு நிமி்ஷம் கூடச் சும்மா இருப்பதில்லை. இதிலே அவன் செய்யும் வழிபாடு வேறு. அப்போ என்ன செய்யலாம்? சூரியன் தினமும் ஸ்ரீமன்நாராயணனை வழிபடும் நேரம் அவனை வலம் வந்து பாடம் கேட்டு சாஸ்திரங்களைப் பயின்றவர் விநாயகர். எவ்வளவு கஷ்டம் இது? இப்படி எல்லாம் க்ஷ்டப்பட்டுப் பாடம் பயின்றார் விநாயகர். அனுமன் எப்படிப் பாடம் பயின்றார் தெரியுமா? வாயுவேகத்தில் சுழன்று கொண்டிருக்கும் சூரியனின் ரத்ததிற்கு முன்னால் கை கூப்பி நின்று ரதம் எந்த வேகத்தில் போகிறதோ அதே வேகத்தில் பின்புறமாய் நடந்து பாடம் கேட்டானாம் அனுமன். இரண்டு பேரும் ஒரே குருவின் மாணாக்கர்கள் என்பதால் தான் நாம் எந்தக் காரியத்தையும் பிள்ளையாரில் தொடங்கி அனுமனில் முடிக்கிறோம். இன்றைய நாளில் "பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது" என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு தப்பு தெரியுமா?

நாம் பூஜையோ பஜனையோ செய்யும் போது எப்போதும் பிள்ளையார் பூஜையில் ஆரம்பித்து, அனுமன் பூஜையில் முடிக்க வேண்டும். அது தான் முறை. இதைத் தான் யாரோ பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது எனச் சொல்லி வைக்க, சம்பிரதாயமான பூஜை முறைகளின் அர்த்தமே மாறி விட்டது. இப்போ நாம் செய்யும் தெய்வ வழிபாடு எல்லாமே ஆவணி மாதம் சுக்கிலச் சதுர்த்தியில் வரும் பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிக்கும். அதுக்கு அப்புறம் ஸ்ரீராமநவமிக்குப் பின் வரும் அனுமத் ஜெயந்தியில் முடியும் நம்முடைய பூஜை புனஸ்காரங்கள். ஆனால் இன்றோ மாறிச் செய்து வருகிறோம். அனுமத் ஜெயந்திக்கு அப்புறம் சில மாதங்களுக்கு ஒன்றுமே இருக்காது. திரும்ப அடுத்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment