தமிழகமும் தெய்வ தத்துவமும்.
சுவாமி சரவணானந்தா.
தமிழும் தமிழகமும்
ஐந்தின் தத்துவம்.
“தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவமாமே” எனத் திருமூலர் ஓதியுள்ளார். மேலும் அவர்
‘ஐந்தின் பெருமையே அகலிடமாவதும்
ஐந்தின் பெருமையே ஆலயமாவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெய்யப் பாலனு மாமே”
என்கின்றார்.
இத் தமிழ் என்ற சொல் த்+அ, ம்+இ, ழ் என வல்லின, மெல்லின இடையின மெய்யெழுத்து மூன்றும், மூலாங்கப் பிரணவமாகிய அகரம், அருட் பிரணவமாகிய இகரம் ஆகிய உயிரெழுத்து இரண்டும் சேர்ந்து ஐந்தெழுத்தாகி, கடவுள் தத்துவத்தை யுணர்த்துவதாம்.
நம் பிரபஞ்சத்தில் நிலமும் நீரும் கீழே தங்கியிருப்ப, தீயும் காற்றும் வானும் மேலோங்கியுள்ளன. இவ்வுண்மை ஐங்கோணத்தால் குறிக்கப்படது.
“நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே
உவமையிரண்டு ஒன்று விண்” (ஒளவை குறள்)
என்றதனால் தெளியலாகும்.
மேலும் இத் தமிழகம் பாண்டிய மண்டலம், சோழமண்டலம், சேர மண்டலம், கொங்கு மண்டலம், தொண்ட மண்டலம் என ஐந்தாகப் பிரித்துக் கூறப்படும். பழம் பதியாகிய பாண்டிய மண்டலத்தில் அடங்குவது ஈழ மண்டலம். இவற்றில் நம் தமிழும் தமிழ்த் தெய்வமும் தழைத்து ஓங்கியுள்ளன.
உள்ளத்தறிவில் ஒளிவிடும் கடவுளை அகப்பொருள் இலக்கணத்தால், புனைந்து புனைந்து கூறி புறத்தேயும் இலக்கியக் கோயில்களையும் சிற்ப ஆலயங்களையும் ஆக்கியுள்ளனர் நம்மனோர். அன்பின் ஐந்திணையாக உரைக்கப்படுவது அகப்பொருள்.
ஐந்திணையாவன: குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ப. ஆன்ம விசாரத்தில் கடவுள் அணுவடிவே நமது ஆன்மாவாய் உள்ள உண்மை குறிஞ்சி நிலத்தின் கருப்பொருளாய்க் குறிப்பர். அவ்வக நிலையை மறந்து மாயா பிரபஞ்சத்தில் அல்லல் பட்டலைதல், தலைவன் பிரிவால் ஏற்படும் பாலை நில அனுபவமாம். பக்குவ காலம் வரும் வரை பிறந்து பிறந்து உழன்றுகொண்டிருத்தல் முல்லைப் பொருளாகவும், பந்தங்களால் ஏற்பட்ட தொல்லையால், உலகோடு ஊடி, உலகைத் துறந்து செல்லல் மருதநிலப் பொருளாயும், அப்புறத் துறவாலும் பயனில்லாது வருந்தி ஆண்டவன் அருளை அடைய இரங்குதல், அன்பு மயமாகுதல் நெய்தல் திணையின் கருவாகவும் கொண்டார்கள்.
இப்படியுள்ள அகப் பொருள் உண்மையால், கடவுளோடு இரண்டறக் கலந்த அனுபவத்தை வழங்கவே தமிழ்த் தெய்வ வழிபாடு தோன்றியது. உண்மையை உள்ளபடி அறிந்து கொள்ளாததினால், இலக்கண இலக்கியங்களும், தெய்வ ஆலயங்களும், கொள்கை கோட்பாடுகளும், விழா வைபவங்களும் பலவாகப் பெருகியும், குறிக்கோளை வழங்கத் தவறின.
No comments:
Post a Comment