Tuesday, May 26, 2009

"ஸ்பாம்” எனும் சாபக்கேடு - பாகம் 3

இது எப்படி சாத்தியமாகிறது?

“ஸ்பாம் “(SPAM) என்பது ஒரு வகையில் AIDS எனப்படும் ஆட்கொல்லி நோய் போன்றது. ஒழுக்கக் குறைவான உறவுகளால் AIDS ஏற்படுவது போல, சில தேவையில்லாத, நமக்கு முன்பின் தெரியாத தளங்களுக்குச் சென்று வருவதால் “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு நாம் ஆளாகக் கூடும். இதனைத் தவிர்க்க முடிந்தால், “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு நாம் ஆளாகும் நெருக்கடி குறையும்.

சில நேரங்களில், நாம் ஒழுக்கத்துடன் இருந்தாலும், ஒரு நெருக்கடி நிலையில் உடலுக்கு மாற்று ரத்தம் செலுத்துவது போன்ற அவசியம் ஏற்படும் பொழுது, HIV+ க்குச் சோதித்தறியாத நபரின் ரத்தம் நம்முடலுக்குள் செலுத்தப்பட்டால், நமக்கும் AIDS வரும் அபாயம் இருக்கிறது. அது போல, நாம் தேவையற்ற தளங்களுக்குச் செல்லாமலிருந்தாலும், அங்கு சென்ற வேறொருவரது கணிணி, “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு ஆளாகி, அவர்களிடமிருந்து நமக்கு வரும் மின்னஞ்சல் மூலம் நமது கணிணியும் “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புண்டு.

இவையெல்லாவற்றையும் விட, இன்று “ஸ்பாம்” (SPAM) தாக்குதல் என்பது ஒரு தொழிலாகவே ஆகி விட்டது. அதெற்கென ஒரு தனி அமைப்பே பணி செய்கிறது. இச்செயல் அத்து மீறி உங்கள் வீட்டினுள் நுழைந்து உங்களுடைய அனுமதி இல்லாது உங்கள் உடமைகளை எடுத்துச் செல்வது போன்றது.

மேலும் “வைரஸ்” (VIRUS) எனப்படும் கிருமிகள், நமது உடலுக்குள்ளே இருந்து உடலுக்கு நோய் உண்டாக்குவது போல, சில கணிணிக் கட்டளைகள் நமது கணிணியின் உள்ளே இருந்து கொண்டே நமது கணிணியின் செயல்பாடுகளை குறைக்கிறது அல்லது செயலிழக்கச் செய்கிறது. அண்மைக்காலத்தில் இந்த “ஸ்பாம்” (SPAM)” மற்றும் “வைரஸ்” கூட்டுறவு தங்களுடைய அழிவு வேலையினை மேலும் சிறப்பாகச் செய்ய உதவுகிறது.

கீழ்கண்டவற்றில் எந்த ஒரு செயலும் நமது கணிணி “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு உட்படக் காரணமாகலாம்.

1. இணைய தளத்தில், சில தேவையில்லாத தளங்களுக்குச் சென்று “BROWSE” செய்து வருவது.

2. பாலின செய்திகள் அல்லது அது குறித்த படங்களைப் பார்க்க, ஏதேனும் தளத்தில் நமது மின் முகவரியினைக் கொடுத்து விடுவது.

3. முன்பின் அறியாத இணையதளத்தில் அல்லது நபர்களிடம் நமது மின் முகவரியினைத் தருவது.

4. VIRUS பரவியதால் செயற்குறைபாடுடைய கணிணியிலிருந்து “Floppy Disk”, குறுந்தகடுகள் (Compact Disk) அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் செய்திகள், படங்கள் மற்றும் புள்ளி விவரங்களை பிரதி (Copy) எடுத்து நமது கணிணிக்கு மாற்றுவது.

5. கடவுள் பற்றிய நமது பக்தி அல்லது பயம், இவற்றைத் தவறாகப் பயன்படுத்தும் வகையில், இவற்றின் படங்களை மின்னஞ்சல் மூலம் நமக்கு அனுப்பி பலருக்கும் இத்தனை நாட்களுக்குள் அனுப்பாவிடில், பெரிய தீமை உண்டாகும் என்று பயமுறுத்தும் அல்லது அனுப்பினால் நண்மை உண்டாகுமென்று உக்குவிக்கும் “தொடர் மின்னஞ்சலில்” தொக்கி நிற்கும் VIRUS PROGRAM அல்லது “COOKIES மூலமும் இது சாத்தியமாகலாம். இந்த வகையில் நம்மையறியாமலே “ஸ்பாம்” (SPAM) எனும் தொல்லை தொடர, நாமும் ஒரு காரணமாகிறோம்.

6. வறுமை, பசி, நோய் முதலியவைகளால் அவதிப்படும் உயிர்களிடத்து நமக்கிருக்கும் இரக்க உணர்வுகள், தாஜ்மஹால், ஐஸ்வர்யாராய், அழகான மலர்கள், குழந்தைகளின் படங்கள் இவற்றினைப் பாராட்டும் நமது கலையுள்ளம் போன்ற நல்ல மனித நேய உணர்வுகளைத் தவறாகப் பயன்படுத்தும் வகையில் இவற்றின் படங்களை நமக்கனுப்பி, அதனை நாம் நமக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் நாமே விரும்பி அனுப்பச் செய்யும் தந்திரங்களால், நம்மையறியாமலே “ஸ்பாம்” (SPAM) எனும் தொல்லை தொடர, நாமும் ஒரு காரணமாகிறோம்.

7. சில இணைய தளங்களில், நமக்குப் பயன்படும் நல்ல செய்திகளை (உதாரணத்திற்கு: ஸிமென்டெக் நிறுவன வெளியீடான “கணிணி சார்ந்த பாதுகாப்பு ஆலோசனைகள்” என்ற புத்தகத்தின் “PDF” பதிப்பினை) “இலவசமாகத் தருவதாக ஆசை காட்டி” நமது மின்னஞ்சல் முகவரியினைப் பெற்றுக் கொள்வதும், பிறகு அதன் மூலம் “ஸ்பாம்” (SPAM) தொல்லைகளுக்கு நம்மை ஆளாக்குவதும் வழக்கமாகிவிட்டது.

8. சில நேரங்களில், நாமே தேவையான ஒரே செய்தியினைப் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்புகையில், “ஸ்பாம்” (SPAM) விளக்கப்படி அவையும் “ஸ்பாம் (SPAM) எனக் குறிப்பிடப்படும் அபாயம் உள்ளது. a. சில ஸ்பாம் (SPAM) கட்டுப்பாட்டு அமைப்புக்களில், ஒரு குறிப்பிட்ட மின்முகவரியிலிருந்து ஒரே செய்தியினை, 20க்கும் மேற்பட்ட மின் முகவரிகளுக்கு ஒரே நேரத்தில் அனுப்பப்பட்டால், அதனை “ஸ்பாம்” என இனம் காணுமாறு செயல் நிரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

இது குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்?

முதலாவதாக, நாம் இந்த சமுதாயத்தின் ஒரு பொறுப்பான நபர். ஒரு நல்ல குடிமகனும் கூட. நம்மால் எவருக்கும் எந்தவிதமான தீங்கும் வராமல் பார்த்துக் கொள்வது நமது கடமையாகும். எனவே நமது கணிணியுடன் தொடர்பு கொள்ளும் எவரும் “ஸ்பாம் (SPAM) தொல்லைக்காளாகக் கூடாது.

அடுத்தபடியாக, நம்மில் பெரும்பாலோர் கணிணியைப் பயன்படுத்தி, அயல் நாட்டில் இருக்கும் நமது உறவினர்களுடன் நேருக்கு நேர் (CHAT) உரையாடுகிறோம்; மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்கிறோம். இவை மூலம் பல அந்தரங்கமான (Personal Information) செய்திகலைப் பறிமாறிக் கொள்கிறோம். அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

நம்மில் பலர் கணிணியைப் பயன்படுத்தி, இணைய தளம் மூலம் தொலை பேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம், வங்கிக் கணக்கு மற்றும் பணப்பட்டுவாடா செய்ய வேண்டிய தேவை உடையவர்களாக இருக்கிறோம். அவை அடுத்தவர்களுக்குத் தெரியாது, பாதுகாப்பானதாக இருப்பது அவசியம்.

தற்பொழுது பல சேவைகள் “On Line Transaction” என்ற வகையில், பயணச் சீட்டுப் பதிவு, மருத்துவ ஆலோசனைகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளைக் கணிணி மூலம் நிறைவேற்றிக் கொள்கிறோம். வயதானவர்கள், உடற் குறைபாடுடையவர்கள் முதாலானோருக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

ஆனால் நம்மில் பெரும்பாலோர் ஒரு சில சுய நலமிகளாலும், விவரம் அறியாதவர்களின் செயல்களாலும் “ஸ்பாம்” (SPAM) எனும் இந்தத் தொல்லைக்காளாகி, கணிணியின் முழுப் பயனையும் பெற முடிவதில்லை.

இன்றைய காலகட்டத்தில், நமது அலுவலகப் பணிகள் அனைத்தும் கணிணிமயமாக்கப்பட்ட நிலையில், நாம் இந்த “ஸ்பாம்” (SPAM) குறித்த விழிப்புணர்வு உடையவர்களாக இருக்க வேண்டுவது காலத்தின் கட்டாயம்.

இந்த “ஸ்பாம்” (SPAM) எனும் தொல்லையினைக் கட்டுப்படுத்துவதும் ஒரு தொழில்; பணம் செய்யும் வாய்ப்பு என்ற வகையில், அதெற்கெனவே பல தனி அமைப்புக்கள் துவங்கப்பட்டு, விசேஷக் கண்காணிப்பும் நடக்கிறது. இவர்களைப் பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்காக நியமித்திருக்கின்றன.

அறிந்தோ அறியாமலோ, “AIDS” நோய் வந்தவர்களை இந்த உலகம் ஒதுக்கி வைப்பது போல, பன்னாட்டுத் தகவல் தொடர்பு அணுகுமுறையில், விரும்பத்தாகாத விளைவுகளை சமுதாயத்திற்கு ஏற்படுத்தும் “ஸ்பாம்” (SPAM) உண்டாக நமது கணிணி காரணமாக இருப்பதாகத் தெரிய வந்தால், மேற்படி கண்காணிப்பு நிறுவனங்கள் நமது கணிணியினை இணைய தளம் மூலம் தொடர்பு கொள்ள விடாமல் தடுக்கவும் கூடும். இதன் பின் விளைவுகளை ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள். நமது உரிமைகள் மறுக்கப்படக் காரணமான இந்த “ஸ்பாம்” (SPAM) என்பது எவ்வளவு கொடுமையானது என்று புரியும்.

1. இதனை எப்படிக் கண்டறிவது/கட்டுப்படுத்துவது எப்படி?

2. இதற்கு சட்ட ரீதியான தீர்வு உண்டா?

இவற்றைப் பற்றி வரும் தொடரில் விளக்கமாகப் பார்ப்போம்.

No comments:

Post a Comment