Friday, May 22, 2009

தமிழகமும் தெய்வ தத்துவமும் - முன்னுரை (1)

மதுரையில் நடைபெற்ற 5-வது உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிடப் பெற்றது.

தயா நேயன் சரவணானந்தா

சத்திய ஞானக் கோட்டம், திண்டுக்கல்.

வெளியிடுவோர்.
தயவு ஆலய அன்பர்கள், சின்மயபுரம் (சின்னாளப்பட்டி).

நாள் 4.1.1981.


தயவு
முன்னுரை

காண்பரிய மெய்ப்பொருளைக் காணத் தமிழ்மொழியே
மாண்புடையார் வாய்மலர்ந்த வாக்கு.

கற்பனையின் வெற்றி கடவுள் தயவுகாண்
தற்போதம் நீக்கும் தமிழ். .. .. .. (தயவுக் குறள்)

எல்லாம் வல்ல ஒன்றாகிய நித்திய பரம்பொருள்தானே, ஐஞ்சக்திச் செயலால் இந்த மாபிரபஞ்சத்து அனைத்துமாய் விளங்குகின்றார். இந்தப் பேருண்மையை மனித வடிவில் வெளிப்படுத்தி, மக்கள் சமுதாயத்தை நித்தியானந்த வாழ்வில் தழைக்கச் செய்ய வேண்டியே, திருவருளின் பெருஞ்செயலால் நம் தமிழ் அரும்பி மலர்ந்து விரிந்து அருள் மணம் பரப்பிக் கொண்டுள்ளதாம்.

உலகெலாம் அருள் தமிழ்மணம் நுகர்ந்து ஆனந்தமுற இந்த ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு (மதுரையில் 1981ஆம் ஆண்டில் நடைபெற்றது) திருவுளப்படி இத் தருணம் நேர்ந்துள்ளது. இங்கு வெளியிடப்பெறுகின்ற. இத் “தமிழகமும் தெய்வ தத்துவமும்” என்ற கட்டுரை மிகப் பொருத்தமாக விளங்கக் காண்கின்றோம். பதினைந்து எழுத்துக்கள் கொண்ட இத் தலைப்புடைச் சிற்றுரை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன். 1956-ஆல் எழுதப் பெற்றது. இதுவரை இது உலகிடை வெளிவரவில்லை. ஐயைந்து ஆண்டுகள் கழித்து இது சமயம் வெளியுறுகின்றது. ஏன் ? திருவருட் சம்மதம் போலும்.

தமிழ்: ஈர் உயிரும் மும்மெய்யும் ஆக ஐந்து எழுத்து கொண்டு, இறை இயலை வெளிப்படுத்த, இந்த ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் ஒளி பெறுகின்றது. ஆண்டவர் அருட்சோதி வடிவம், இருபத்தைந்து (தமிழ் எண்ணில் “உரு”) ஆகி, இருபத்தைந்து அசை (Syllables) கொண்ட மகாமந்திர உருவாய் வள்ளலாரால் வெளியிடப் பெற்றுள்ளது .. ? இவ்வுண்மை கண்டு வாழ்வில் எல்லோரும் நற்பயன் அடைய, அருட்பெருஞ்சோதிக் கடவுளே, நம்மில் தயவு வண்ணமாய், அறிவு, உயிர், உடலில் நிரம்பி உயர் இன்ப வாழ்வு பெற உதவுகின்றார்.

உலகில் இத் தயவுப் பெருநெறி மூலம் பெரு நன்மை விளைய இருக்கின்றது. இதற்காகவே இந்த மதுரை மாவட்டத்து, காந்திக் கிராமம் அடுத்து சின்மயபுரத்தில் (சின்னாளப்பட்டியில்) ஒரு தயவு ஆலயம் தோற்றுவிக்கப் பட்டு, நன்முறையில் வழிபாடு ஆற்றப் பெற்று வருகின்றது. இப் பகுதி பிற் சேர்க்கையாகும். இவை யாவும் இச் சிறு நூலில் கண்டு யாவரும் இன்பெய்துவார்களாக.

தொடரும்...

No comments:

Post a Comment