தற்பொழுது 85 வயது ஆகும் சின் பெங் தன்னுடைய இறுதிக் காலத்தை சொந்த நாட்டிலேயே கழிக்கும் பொருட்டு அவரை நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று அனைத்துலக சிட்டிஸன் (சிஐ) என்ற அமைப்பின் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் அப்துல் ரசாக் மற்றும் அவரது அமைச்சரவைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நம்முடைய மோசமான எதிரிக்குக் கூட நாம் கருணை காட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் கூறியதை பின்பற்றியே இந்த வேண்டுகோளை முன் வைப்பதாக இத்ரிஸ் கூறினார்.
முகம்மது அவர்கள் ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்த விடாமல் கருணையோடும் தயாள சிந்தையோடும் மெக்கா புகுந்ததை நாம் ஓர் உதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
சின் பெங் தன்னுடைய 15வது வயதிலிருந்தே பிரிட்டிஷ் அராஜகத்தை எதிர்த்து வந்திருக்கிறார். பிரிட்டிஷ் ஆளுமையிலிருந்து, ஆக்கிரமிப்பிலிருந்து, கொடுமையிலிருந்து தன்னுடைய நாட்டை விடுவிக்க நிறைய அர்ப்பணிப்புக்களைச் செய்துள்ளார் என்றார் இத்ரிஸ்.
மறைந்த துன் அப்துல் ரசாக் போன்றே, சின் பெங்கும் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர்கள் மலேசியாவில் ஆதிக்கம் செலுத்தியதை எதிர்த்தார். அவருடைய இடையறா போராட்டத்தின் மூலம் நம்முடைய நாட்டு மக்களின் மானத்தைத் காத்தார்.
மலாயா சுதந்திரம் பெற்றதற்கு சின் பெங், ரஷிட் மைடின், அப்துல்லா சிடி, சம்சியா •பாக்கே போன்றவர்களின் விடுதலைப் போராட்டமும் முக்கிய காரணம் என்பது வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது என்பதனையும் இத்ரிஸ் நினைவுப்படுத்தினார்.
நாடு விடுதலை பெற்ற பின்னரும் சின் பெங் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதை பலரும் ஏற்கவில்லை. ஆனால் இதைக் காரணமாக வைத்து நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு காலணித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதில் சின் பெங் பங்காற்றியிருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அம்னோஇ மசிசா, மஇகா போன்ற கட்சிகளைத் தவிர்த்து இடது சாரி கட்சிகளும் கூட மலேசியாவில் சுதந்திரத்திற்கு பாடுபட்டனர் என்று துன் இஸ்மாயில் தன்னுடைய உரையில் கூட குறிப்பிட்டிருந்தார்.
நம்முடைய அண்டை நாடுகளான தாய்லாந்தும், இந்தோனேசியாவும் கூட கம்பூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் தலைவர்களை எதிரிகளாகக் கருதாமல் அவர்களை அரவணைத்துக்கொண்டுள்ளது.
தாய்லாந்து கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கெரிலா போராளியான புரொம்மின் லெட்சுரிடெஜ்தான் தாய் ராக் தாய் கட்சியைத் தோற்றுவித்தார். தக்சின் அரசாங்கத்தின் பொருதாளாரப் பிரிவின் துணை பிரதமராகவும் பதவி வகித்தார்.
இந்தோனேசியாவில் அரசியலமைப்பு நீதிமன்றம், முன்னாள் இந்தோனேசியா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடும் உரிமையை மீட்டுக்கொடுத்துள்ளது.
நம் அரசாங்கம் 12.12.1989ல் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியோடு ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தில் மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியைக் கலைக்கும் பட்சத்திலும் ஆயுதங்களைக் கைவிடும் பட்சத்திலும் கட்சியின் உறுப்பினர்கள் மலேசியாவுக்குத் திரும்ப வரலாம் என்று குறிப்பிட்டுள்ளதை அரசாங்கம் பின்பற்ற வேண்டும்.
மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் அப்துல்லா சிடி, சம்சியா •பாக்கேஇ,மூசா அமாட் போன்றவர்கள் மலேசியா திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறே சின் பெங்கும் அனுமதிக்கப்பட வேண்டும். சின் பெங் மலேசிய அரசாங்கத்திற்கு ஆற்றிய பங்கினையும் நினைவு கூர்ந்து அவர் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும்.
மலேசிய அரசாங்கம் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி கருணையையும் தயவையும் காட்டி சின் பெங் நாடு திரும்ப வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அனைத்துலக சிட்டிஸன் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.
No comments:
Post a Comment