Monday, May 18, 2009

கொழும்பில் பெரும் வெற்றிவிழாவிற்கான ஆயத்தங்கள் - தமிழர்களுக்கு எச்சரிக்கை


விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதேசங்களை முழுமையாக மீட்டெடுத்ததை பெரும் விழாவாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது சிறிலங்கா அரசு. இந்த வெற்றி விழாவை கொழும்பு உட்பட இலங்கை முழுவதும் வாழும் தமிழ் மக்கள் பெரும் வெற்றி விழாவாகக் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் சிங்களக் காடையர்கள் வெடி கொழுத்துவதற்கு பணம் தரவேண்டும் என வலியுறுத்தி பணத்தினை வாங்கிச் செல்வதுடன், விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டனர் என கேலியும், கிண்டலும் செய்கின்றனர். அத்துடன், சிறிலங்காவின் தேசிய கொடியை நாளை வர்த்தக நிலையங்களில் பறக்கவிட்டு வெற்றியைக் கொண்டாட வேண்டும் எனவும் எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, யாழ்குடாவில் சிறிலங்கா துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியினரும், கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் துணை இராணுவக் குழுவினரும் இந்த வெற்றி விழாவினை தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன், கொண்டாடதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க, விடுதலைப் புலிகளை முற்றாக தோற்கடித்துவிட்டதாக கூறியுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டுக்கு தான் நாளை திரும்பவுள்ளதாக ஜோர்தானில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு இன்று தெரிவித்துள்ளார்.

எனினும், படையினர் எஞ்சியிருக்கும் பகுதிகளை முழுமையாக நாளை கைப்பற்றாது போனால் தனது பயணத்தை ஓரிரு தினங்களுக்கு ஒத்தி வைத்துவிட்டு படையினர் குறிப்பிட்ட பகுதிகளை கைப்பற்றியதாக அறிவித்ததன் பின்னர் நாடு திரும்புவதற்கு மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

சிறிலங்காவின் நிலைமை இவ்வாறிருக்க, பொதுமக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதற்கு மனிதாபிமான அமைப்புக்களை கொழும்பு அனுமதிக்கவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாக எச்சரித்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தமது ஆயுதங்களைக் கீழே வைப்பதுடன், அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கும் பிரித்தானியப் பிரதமர், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த மோசமான போரின் இடையில் அகப்பட்டுள்ள மக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதற்காக மனிதாபிமான அமைப்புக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் கோர்டன் பிறவுண், இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு ஐ.நா. மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

“சிறிலங்கா அரசாங்கம் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் பிரித்தானியப் பிரதமர் கடுமையாக எச்சரித்தார்.

No comments:

Post a Comment