Tuesday, May 26, 2009

"ஸ்பாம்” எனும் சாபக்கேடு - பகுதி 4


ஸ்பாம் (SPAM) குறித்த தற்போதைய நிலை
இது வரை நீங்கள் படித்ததிலிருந்து உங்களுக்கு ஒன்று நன்கு புரிந்திருக்க வேண்டும். அதாவது “ஸ்பாம் (SPAM)” எனப்படும் இந்தத் தொல்லை அறவே தவிர்க்க முடியாத ஒன்று என்பதும், இதனை ஏற்றுக் கொண்டு இதனுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதுமாம். இதனுடன் வாழ, இதனைக் கட்டுப்படுத்தும் வழியினை அறிந்து கொள்வது ஒன்றே அறிவுடமையாகும். இதனைக் கட்டுப்படுத்த இதனைப் பற்றி இன்னும் விளக்கமாக அறிய வேண்டியது அவசியமாகிறது. இந்த வகையில் “வைரஸ்” செயல் நிரை (VIRUS APPLICATION) பற்றியும் மற்றும் “ஹேக்கர்ஸ்” (HACKERS) எனப்படும் குறும்பர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மின்னஞ்சல் மற்றும் இணைய தளம் சார்ந்த பணிகள் அதிகமாகிவிட்ட இந்த நாளில், “ஸ்பாம் (SPAM)” எனப்படும் இத்தொல்லை விலக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இதனை வேறு கோணத்திலிருந்தும் பார்க்கலாம்.

“ஸ்பாம்” (SPAM) என்பதற்குக் கீழ்க்கண்டவாறு பொருள் கொண்டால், நமது பார்க்கும் கோணம் வேறுபடும். “Simple & Plain Advertisement through Mail” = (SPAM).

“Small Product Advertisement through Mail” = (SPAM)

“Services & Products Advertisement through Mail” = (SPAM)

எனவே இவையனைத்திலும், மின்னஞ்சல் மூலம் விளம்பரம் என்பதுதான் அடிப்படை செய்தி என்பதும் அவற்றுக்கான செலவு நம்மிடம் பெறப்படுகிறது; சில சமயங்களில், நாம் வேண்டாத செய்தி நமக்கு வரும் பொழுது அது நமக்கு எரிச்சலூட்டுகிறது என்பதுதான் பிரச்சினை என்பதும் தெளிவு.

நாம் “ஸ்பாம் (SPAM) - வேண்டாதது; நான் விரும்பிக் கேட்காத ஒரு செய்தி என எண்ணும் பொழுது, அதே செய்தி வேறு யாரேனும் ஒருவருக்கு அவராகக் கேட்காத பொழுதும், அவரது கணிணியில், மின்னஞ்சல் மூலம் வந்திருந்து, அதனால் அவரே எதிர்பார்க்காத நண்மை உண்டானால், அவருக்கு அது “ஸ்பாம்” இல்லை!! உடல் ஊனமுற்றோருக்கு, முதியோர் இல்லத்தில் அனாதையாக இருப்பவர்களுக்குத் தங்களைத் தேடி வரும் இத்தகைய செய்திகள் வரவேற்கத் தக்கதே. எனவே எது “ஸ்பாம்” (SPAM) என்பதே மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது.

நமது தொலைபேசி எண், கைபேசி எண் மற்றும் முகவரியினை இனவாரியாகப் பிரித்தெடுத்து, அதனை விலைக்கு விற்கும் முறை கூட ஒரு வகை “ஸ்பாம்” (SPAM) ஆகும். முகவர் மூலம் பெற்று நம்மைத் தொடர்பு கொண்டு “விசா மற்றும் மாஸ்டர் கார்டு” தர அணுகும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதனால் பலன் பெறுகின்றன. இந்தியாவிலேயே 6 இடங்கள்தான் இத்தகைய “DATA BASE” வைத்திருப்பதாகவும், பல பன்னாட்டு நிறுவனங்கள் அவற்றின் சேவையைப் பயன்படுத்துவதாகவும், இது ஒரு சுய தொழில் வாய்ப்பு எனவும் கூறுபவருக்கிடையே, இதனைத் தவறு என்று சொல்பவருக்கு என்ன மதிப்பு இருக்கும்?

உங்கள் கைபேசியில் யாரேனும் முன்பின் தெரியாதவரிடமிருந்து அழைப்பு வந்தால், எதேனும் ஒரு பொருள் அல்லது சேவைக்கு அதன் மூலம் விளம்பரம் செய்யப்பட்டால், அது உங்களுக்குத் தொல்லை என நீங்கள் நினைத்தால் மட்டுமே அது “ஸ்பாம்”.

ஆயுத உற்பத்தி ஒரு தொழில் என்றான பிறகு, அதனை விற்பதும், பயன்படுத்துவதும் தவறல்ல என்றும் ஆன பின், அதனால் உண்டாகும் அழிவிற்கு யாரைக் குறை கூறுவது? “ஸ்பாம்” (SPAM) செயல்பாடுகளும் அது போலத்தான். விளம்பரம் செய்வது ஒரு தொழில் என்றான பிறகு, மிகக் குறைவான செலவில் மிக அதிகமான நபர்களுக்குப் பொருட்களையும், சேவைகளையும் பற்றி விளம்பரப்படுத்த மின்னஞ்சல் ஒன்றுதான் வழியென்றான பிறகு, அம்மின்னஞ்சலைப் பயன்படுத்த முயற்சிப்பது பற்றி என்ன சொல்ல முடியும்!! நமது தொலைக்காட்சிப் பெட்டியும், நமது கைபேசியும் (CELL PHONE) அந்தந்த முகவர்களால் பிறர் பொருட்களையும், சேவைகளையும் விளம்பரம் செய்யப் பயன்படுத்தப் படலாம் என்றால் நமது கணிணியும் ஏன் பயன்படுத்தப் படக்கூடாது? “ஸ்பாம்” (SPAM) என்பதனைக் கட்டுப்படுத்துவது ஏன் சிரமமான ஒன்று என்பது இப்பொழுது புரிந்திருக்கும்.

இதில் தவறு என்று சொல்ல ஒரே ஒரு காரணம் அதனால் உண்டாகும் கால விரையம், பணச்செலவு இவை நம்மை பாதிக்கிறது என்பதே. தொலைக்காட்சியிலாவது பொழுது போக்காகச் சில கலை நிகழ்ச்சிகளை, சில திரைப்படப் பாடல்களை அல்லது சில திரைப்படங்களை வெளியிட்டு அதனிடையே சில விளம்பரமும் செய்கிறார்கள். இல்லாவிடில், இந்தப் பொழுது போக்கு அம்சத்திற்காக நாம் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், கைபேசியிலும், கணிணியிலும் அது போல நமக்கு எந்த விதமான ஆதாயமும் இல்லை. அது தவிர, நமக்குக் கணிசமான இழப்பு உண்டாகிறது. சில சமயங்களில், சட்ட ரீதியான சிக்கல் உண்டாகிறது என்பதே பிரச்சினை. தொலைக்காட்சி ஒரு பொழுது போக்கு சாதனம் என்பதால் அந்த விளம்பர இடையீடுகளைப் பார்க்க வேண்டாமென்றால், தொலைக்காட்சியினை இயக்காமலிருக்கலாம். அதனால் இழப்பு அதிகம் இல்லை. ஆனால் கணிணியும் மின்னஞ்சலும், நம்து தொழிலுக்கும் பயன்படுவதால், இதனை இயக்காமலிருக்க முடியாது.

இது நாள் வரை “ஸ்பாம் (SPAM) எனப்படும் மின்னஞ்சல் மூலம் விளம்பரம் செய்ய முனைவோர், “வைரஸ்” எனப்படும் கணிணியின் செயல்பாட்டைக் குறைக்கும் அல்லது அறவே செயலிழக்கச் செய்யும் செயல்நிரை எழுதுவோர் மற்றும் அத்து மீறிப் புகுதல் என்ற வகையில் நமது கணிணியினைத் தங்கள் வசப்படுத்தும் “ஹேக்கர்ஸ்” (Hackers) எனப்படும் குறும்பர்கள் ஆகியோர் தனித்தனியே இருந்து பணியாற்றிய நிலை மாறி, “பணம்” பண்ணுவது ஒன்றே குறி என்ற வகையில் மூவரும் ஒன்று சேர்ந்து, கூட்டாக நமது கணிணியினை முறைகேடான செயல்களுக்குப் பயன்படுத்தும் நிலை உருவாகியிருக்கிறது. இதுவரை வெறும் விளையாட்டாக, தங்களின் செயல் நிரை எழுதும் திறமையினைக் காட்ட, ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்தின் பேரில் தங்களுக்கு இருக்கும் வெறுப்பினைக் காட்ட அவர்களது கணிணியினை செயலிழக்கச்செய்வது, அவர்களது அந்தரங்கங்களைப் பிறர் அறியச் செய்வது என்ற நிலை மாறி, இது ஒரு நல்ல ஆதாயம் தரும் தொழில் என்றாகிவிட்டது.

“ஸ்பாம்” (SPAM) என்பது ஆரம்பத்தில் மின்னஞ்சலை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தும் உத்தியாக செயல்பட்டது. மிகக் குறைந்த செலவில் மிக அதிகமான நபர்களுக்குப் பொருட்களையும் சேவைகளையும் அறிமுகம் செய்யும் வகையில்தான் நல்ல வருவாய் பெறும் வசதி உள்ளது. எனவே “ஸ்பாம்” (SPAM) உருவாக்குவோர், தாங்கள் உருவாக்கும் “ஸ்பாம்” (SPAM) இன்னும் சிறப்பாகச் செயல்படத் தேவையான தனித்திறமை வாய்ந்த செயல் நிரைகளையும், கருவிகளையும், சேவைகளையும் தரும் பல்வேறு முறைதவறிய சேவை வழங்குபவர்களை நாடுவது வழக்கமாகிவிட்டது.

அவர்களிடையே நிலவும் உறவு முறை விவரங்கள் பின் வருமாறு;

வைரஸ் செயல் நிரை எழுதுவோரும் நமது கணிணியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்து, அத்து மீறிப் பிரவேசிக்கும் ஹேக்கர்ஸ் எனும் குறும்பர்களுமாகச் சேர்ந்து, “ஸ்பாம்” (SPAM) பரப்பும் செயல்பாட்டிற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கிறார்கள். நமது கணிணியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்து, நமது கணிணி அவர்கள் வசம் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது இவர்களின் பொறுப்பு.

“ஸ்பாம்” (SPAM) சேவை அளிப்போர், தனித் திறமை (SPECIALISTS) வாய்ந்த செயல் நிரை எழுதுவோரையும் மற்றும் வசதிகளையும் உருவாக்கிக் கொடுக்கிறார்கள்

“ஸ்பாம்”(SPAM) மென்பொருள் ஒருங்கிணைப்பாளர்கள் சேவை, நிர்வாகம் மற்றும் பிரசார அமைப்பினைப் பார்த்துக் கொள்கிறது.

தங்களது தனித் திறமைகளைக் காட்ட, தங்களுக்கு உரிய மரியாதை தரத் தவறிய சமுதாயத்தின் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ளச் செயல் நிரை எழுதுவது என்றெல்லாம் இருந்த நிலை மாறி, அவர்களின் திறமைகள், ஒன்றுமறியாத, சற்றே கவனக் குறைவாக இருக்கும் கணிணி பயன்படுத்துவோரை ஏமாற்றவும் அதன் மூலம் பணம் பண்ணவும் பயன்படுகிறது என்பது ஒரு வருத்தமளிக்கும் செய்தியாகும்.

சில சமயங்களில், கணிணி செயல்பாட்டிற்கு உதவுவதாகக் கூறிக்கொள்ளும் “வைரஸ்” கட்டுப்பாட்டுச் செயல்நிரை உருவாக்கும் பெரிய நிறுவனங்கள் கூட இத்தகு அமைப்பினைத் தங்களின் வியாபாரம் பெருக (மறைமுகமாக, கணிணி பயன்படுத்துவோருக்குப் பாதகமான சூழலை உருவாக்கி, அவர்களது கணிணியினை “வைரஸ்”, “ஸ்பாம்” மற்றும் அத்துமீறல் செயல்களுக்கு ஆளாகுமாறு செய்த பின்னர் பிறகு அதனை நீக்கத்) தங்களின் “வைரஸ்”, ஸ்பாம் கட்டுப்பாட்டுச் செயல் நிரைகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரை செய்வதாக ஒரு செய்தியும் கூட உண்டு. பெரும்பாலான “இலவச” மென்பொருட்களும், “ADWARE, SPYWARE செயல் நிரைகளும் இதில் அடங்கும்.

இந்த முறைதவறிய கூட்டணிக்கும், முறையாகச் செயலாற்றி இவர்களின் முயற்சியினை முறியடிக்கும் “ஸ்பாம்” (SPAM) எதிர்ப்பாளர்களுக்கும் நடக்கும் போட்டி ஒரு தொடர் கதை. இருவரும் தங்கள் அறிவினை நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டு, யார் அறிவுடையவர் என்றறிய நடத்தும் போட்டியில், இந்த “ஸ்பாம் (SPAM) எனும் பிரச்சினையை மென்மேலும் பெரியதாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது இந்த “ஸ்பாம்” (SPAM) பிரச்சினை நமது இல்லத்தில் உள்ள கணிணியினை பாதிக்காது எப்படிக் காத்துக் கொள்வது எனப் பார்ப்போம்.

முதலாவதாக வீட்டில் உள்ள கணிணியினை “ஸ்பாம்” (SPAM) தாக்குதலில் இருந்து எப்படிக் காப்பது எனப் பார்க்கலாம். கொஞ்சம் உங்கள் பொது அறிவினைப் பயன்படுத்தினாலே இந்த “ஸ்பாம்” (SPAM) எனும் தொல்லையினைக் கட்டுப்படுத்த உங்களால் முடியும். இதன் அடுத்த பகுதியில் விவரங்களைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment