Monday, May 25, 2009

"ஸ்பாம்” எனும் சாபக்கேடு - பாகம் 1


இது ஒரு “முடா - விரையம்” (MUDA – WASTE) – ஒரு விளக்கம்

கணிப்பொறி, இணையதளம், மின்னஞ்சல், வலைத்தளம் இவையெல்லாம் இன்றைய கவர்ச்சிகள். விஞ்ஞானமும், மின்னணுத் துறையும், தொழிற்துறை வளர்ச்சியையும் ஒன்றிணைத்து மனிதனால், மனித குலம் பயன்பட உண்டாக்கப்பட்ட அற்புதங்கள். நல்லதும் தீயதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. வசதிகள் பெருகும் அதே நேரத்தில், அதனை தவறாகப் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இன்றைய கணிப்பொறி உலகினை, அதிலும் குறிப்பாக “ஈமெயில்” எனப்படும் மின்னஞ்சலைப் பயன்படுத்துவோரிடையே பெரிதும் கலக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பெரும் பிரச்சினையாக இருப்பது “ஸ்பாம்” என்றால் மிகையாகாது. எனவே இது குறித்து ஒரு விழிப்புணர்வு இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமாகிறது. அதுவே இக்கட்டுரையின் நோக்கம்.

ஜப்பானிய மொழியில் “MUDA” என்றால், தமிழில் “விரையம்” (Waste) அல்லது “வீணாவது” என்று பொருள். நேரம் பொன் போன்றது என்பது நாமெல்லாம் அறிந்த ஒன்றே. பொன் போன்ற நேரத்தை வீணடிக்கும் “ஸ்பாம்” (SPAM) என்ற இந்தத் தொல்லையினை “நேர விரையம்” என்று குறிப்பிடுவது சரிதானே! இதற்கு “ஸ்பாம்” (SPAM) எனும் இப்பெயர் எப்படி வந்தது என்பதற்குப் பல செய்திகள் உண்டு. இதனை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது நமது முதன்மையான நோக்கம் என்றிருப்பதால், பெயர்க் காரணங்கள் குறித்து இங்கே விவரிக்கவில்லை. இதனைக் கட்டுப்படுத்துவது எப்படி சாத்தியமாகிறது என இனி பார்ப்போம்.

“ஸ்பாம் (SPAM) என்றால் என்ன?

ஆரம்பத்தில் “நாம் வேண்டாத ஒரு செய்தியினை, நம் மீது வலுக்கட்டாயமாகத் திணிப்பது” என்பது ”ஸ்பாம்” (SPAM) என்றிருந்த நிலை மாறி, காலப்போக்கில் பல அபாயகரமான பரிமாணங்களை இந்த “ஸ்பாம்” (SPAM) அடைந்துவிட்டது. இது நமக்கு வேண்டாதது எனக் கண்டுபிடிக்க, கண்டுபிடித்தபின் அதனை அழிக்க ஆகும் நேர விரையம், கணிசமானது. இதனால் ஒருவரின் நேரம் வீணாவது மட்டுமின்றி, பண விரையமும், உண்டாக ஏதுவாகிறது. சில சமயங்களில், இதனைத் திணிப்பவர் யாரென்பதே தெரியாததோடு, நமக்கே தெரியாமல், நமது கணிணி (Computer) யாரோ ஒரு மூன்றாம் நபரின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் வாய்ப்பிருப்பதால், நமக்கே தெரியாமல் நமது “அந்தரங்கம்” (Privacy/Confidential) அம்பலமாகும் அபாயமிருப்பது மற்றொரு அதிர்ச்சி தரும் செய்தியாகும். தற்பொழுது நமது கணிணிதனை நாமறியாமலே மூன்றாம் நபர் ஒருவர், சட்ட முறைகேடாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பும் அதிகரித்து விட்டது. இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளும் வரும் வாய்ப்பு இருப்பதும், இதற்காக ஒரு பெரும் கூட்டமே முழு நேரப் பணி புரிகிறது என்பதும் மன உளைச்சலுக்குக் காரணமாகிறது.

சாதாரணமாகப் பார்ப்போமேயானால், ஆரம்பத்தில், இது ஒரு வகையில், மின்னஞ்சல் மூலம் குறைந்த விலையில் விளம்பரம் செய்யும் ஒரு விளம்பர உத்தியாக இருந்தது. அனுப்புவருக்கு, மிகக் குறைந்த செலவில், பல்லாயிரக் கணக்கான நபர்களுக்கு விளம்பரம் சென்றடையும் ஒரு எளிய வழி.

இணைய தளத்திற்கான இணைப்புகள் தொலை பேசி இணைப்பின் மூலமாகத்தான் செயல்படுகிறது என்பதும், அதற்காக, தொலைத் தொடர்பு வசதிக்கு நாம் கட்டணம் கட்ட வேண்டும் என்பதும் நாமறிவோம்!

ஆனால் இத்தகு மின்னஞ்சலைப் பெறுபவர், பெரும்பாலும், மின்னஞ்சலைத் திறந்து பார்த்த பின்னரே, அது தனக்கு வேண்டாத ஒன்று என அறியும் வாய்ப்புள்ளதால், அந்த மின்னஞ்சலை இறக்கம் செய்தல், திறந்து பார்த்தல், வேண்டாமெனில், அழித்தல் இவற்றுக்கெல்லாம், ஆகும் நேரம் வீண்!. அது தவிர, தான் பெறும் மின்னஞ்சலின் அளவினைப் பொறுத்து மின்னஞ்சல் இணைப்பிற்குக் கட்டணம் கட்டும் சேவையில் இருப்பாரேயானால், அவரது இணைய தள இறக்கக் (Down Loading) கட்டணமும் மற்றும் தொலை பேசிக் கட்டணமும் அதிகரிக்கும். இது மிக முக்கியமான பிரச்சினை. எண்ணிக்கையில் அதிகமான பொழுது, மின்னஞ்சல் இறக்கும் நேரம் அதிகரிக்கும், அதிகப்படியான DISC SPACE தேவைப்படும். எனவே சிறப்பான சேவை வேண்டுமாயின், நமது கணிணியின் HARAD DISC, RAM மற்றும் PROCESSOR இவற்றின் தரம் மற்றும் அளவினை அதிகரிக்க நாம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

இந்த வகை விளம்பரங்களை உள்ளடக்கிய மின்னஞ்சலை சேமித்து வைக்கும் இணைய தளம் நடத்தும் HOTMAIL, YAHOO, GOOGLE, SIFI போன்ற சேவையாளர்களும் தங்களது வசதிகளைப் பெருக்க வேண்டியிருக்கும். அதற்காகும் செலவினை அவர்கள் அந்த சேவையினைப் பயன்படுத்துவோரிடமிருந்துதான் பெற வேண்டியுள்ளதால், அவர்களின் சேவைக் கட்டணங்கள் அதிகமாகும். இப்படியாக இந்த “ஸ்பாம்” (SPAM) எல்லோருக்கும் செலவினை அதிகரிக்கிறது.

அந்த வகையில் “மொபைல்/செல் போனில்” (Mobile Phone/Cell Phone) வரும் SMS எனப்படும் குறும்செய்திகள் கூட ஒருவகை “ஸ்பாம்” தான். தொலைக் காட்சியில் நாம் மிக ஆர்வமாக ஒரு நிகழ்ச்சியினைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, இடையிடையே வரும் விளம்பரங்கள் கூட ஒருவகையில் “ஸ்பாம்” தான். அவர்களுக்கு, இதன் மூலம் வருமானம் கிடைக்கிறது என்பதற்காக, நாம் விரும்பாவிட்டாலும் அந்த விளம்பரங்களை நாம் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சில சமயங்களில் அளவுக்கு மீறின வகையில், வெறுப்பாகவும், பிரச்சினையாகவும் கூட இருக்கிறது. அவை பொழுது போக்கு என்ற வகையில், நமக்கு வேண்டாத பொழுது தொலைக் காட்சியினை நிறுத்தி வைக்க முடியும். அதனால் இழப்பு ஒன்றுமில்லை. ஆனால் கணிணியில் வரும் மின்னஞ்சலை அது போல, நிறுத்த முடியாதல்லவா? அதற்காகத் தடை செய்யும் வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

1. இது எப்பொழுது சிக்கலான பிரச்சினையாகிறது?
2. இதன் அனுபவம் எப்படியிருக்கும்? இது குறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
3. இதனை எப்படிக் கண்டறிவது/கட்டுப்படுத்துவது எப்படி?

இவற்றைப் பற்றி வரும் தொடரில் விளக்கமாகப் பார்ப்போம்.

தொடரும்.....

No comments:

Post a Comment