Friday, May 22, 2009

தமிழகமும் தெய்வத் தத்துவமும் - கந்தழி வழிபாடு. (2)

சுவாமி சரவணானந்தா

தெய்வ தத்துவத்தை அடிநிலையாகக் கொண்டு வாழ்க்கை முறை வகுத்து வழங்கப்பட்டது, ஆதித் தமிழகத்தில். அத் தமிழகம் இப்போது காண்டற்கில்லை. அது நம் நாட்டின் தென்பெருங் கடலில், முன்பு, பல்லாயிரம் மைல் தூரம் பரவிக் கிடந்தது, நீரில் மூழ்கி மறைந்து விட்டது. அப்பகுதிதான். உயிர்களின் தோற்றத்திற்கு முதலிடமாகவும், ஆதி மனித இனத்திற்கு பிறப்பிடமாகவும் கூறப்படும். அவ் ஆதிமக்கள், கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த பழங்குடிகளாக மொழியப்படுகின்றனர்.

அவர்களுக்கு ஒரு அதிசயமான உறுப்பு நெற்றி நடுவில் பாதம் பருப்பளவு புடைத்து நின்றது. அதில் தோன்றிய உணர்ச்சி கொண்டு அறிதற்கும், காண்டற்கும் அரிய காட்சிகளைக் கண்டு வெளியிட்டனர். அதுவே ஞானக் கண்ணாக வழங்கப்பட்டது. இந்தக் கண்ணால் தான் ஆதிமனிதன் - கடவுள் ஞானத்தை, தெய்வ உண்மையை உள்ளவாறு கண்டறிந்தான்.

கந்தழி வழிபாடு.

ஆதித் தமிழன். கடவுள் ஞானத்தை அறிய தன் நெற்றிக் கண்ணால், புற நாட்டத்தை விட்டு, அக நோக்கினான். சிரநடு ஆன்ம அணுவில் ஒன்றி நின்றான். உலகை மறந்து உடலை மறந்து உயிரை மறந்து நிலைத்து நின்றபோது, அணுத்துவமாகயிருந்த ஆன்மா, விளக்கெனத் தோன்றி, சுடரெனப் பெருகி, அகண்ட ஜோதியாய் நிறைந்தது கண்டான். இவ், அகண்ட ஜோதி நிலையே கடவுள் நிலயாகக் கொண்டான். இந்த அடி தோற்றா அழலொளியே கந்தழியாகக் கூறிக் கொண்டான். அகத்தே ஆன்ம அணுவில் இக் கந்தழிக் கடவுட் ஜோதி ஒடுங்கி நிற்பது போல், புறத்தே ஜோதி வெளியினின்று உருவாகியுள்ளது ஞாயிறு என்னும் சூரியன். இந்த ஞாயிற்றைக் கொடிநிலை என்றும், இதன் ஆற்றல் கொண்டு, ஜீவதேக தோற்ற ஒடுக்க காரணமாய் விளங்கும் திங்களை, வள்ளி, என்றும் கொண்டு வணங்கினான். எனவே, இந்தக் கந்தழி வழிபாட்டில்,. கொடிநிலை என்னும் ஞாயிறு வணக்கத்தால், அண்ட தத்துவ விளக்கமும். வள்ளி என்னும் திங்கள் வணக்கத்தால் பிண்ட தத்துவ விளக்கமும் பெற்று, நிரம்பிய வாழ்வு நடத்தினான் தமிழன்.

தொடரும்...

No comments:

Post a Comment