மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிடப் பெற்றது.
(4.1.1981).
சுவாமி சரவணானந்தா.
கந்தழி நிலை கற்பனை நிலையாய் மாறியது.
ஆதித் தமிழகத்தில் தோன்றிய மக்கட் கூட்டம் பெருகிப் பல்கி நெடுந்தூரம் பிரிந்து சென்று வாழலானார்கள். இப்பொழுதுள்ள ஆஸ்திரேலியா முதல் மேற்கே தென் அமெரிக்காவரை நிலப்பகுதியாயிருந்ததால், அது வரை சென்று வாழ்ந்து வந்தார்கள். பின்னர் பழந் தமிழகமும் அதைச் சேர்ந்த பல பகுதிகளும் மறைந்து விட்டதாலும், வேறு பல புதிய நிலப்பகுதிகள் தோன்றியதாலும் அங்கங்கு தங்கி வந்த அவர்களின் பிற் சந்ததியார்க்கு, சீதோஷ்ணத்தாலும், மற்ற சூழ்நிலையாலும் தேக கருவிகரண வேறுபாடும், பழக்க வழக்க வேறுபாடும் ஏற்பட்டன. நெற்றிக்கண் தோற்றமே மறைந்து விட்டது. அதனால் அக உண்மை உள்ளவாறு காண முடியாது, சிரநடு ஆன்ம பீடத்தை மன ஒருமையிற் கண்டு பலப்பலவாக தெய்வ நிலையைக் கற்பனை செய்யலாயினர். அந்தக் கற்பனையில் கண்டது, முதலாவது லிங்க வடிவம்.இது நம் ஆன்ம அணு விளங்கும் தலை நடு இடத் தோற்றமாம். இந்த லிங்க நிலை அகத்தில் கண்டு புறத்தில் ஞாயிறு வழிபாடு செய்யப்பட்டது. இதனால் ஒரு காலம் லிங்க வழிபாடும், ஞாயிறு வழிபாடும் உலகெல்லாம் பரவியிருந்தன, அவற்றின் சின்னம் இன்றும் உலகில் பல்வேறிடத்தில் காணப்படுகின்றன.
பின்னர், பொறிபுலன் விரிவால் புற வாழ்வு பெருகப்பெருக, புற வழிபாடு, கலை நோக்கோடு பற்பல சின்னங்களாகவும், சித்திர, சிற்ப விக்கிரகங்களாகவும், தத்துவ கற்பனா ஆலயங்களாகவும் வளர்ந்தன.
இப்பொழுதுள்ள நம் தமிழகத்தில் வந்து தங்கியிருந்த பழந்தமிழரின் கூட்டம் மலைகளிலிருந்து அக ஜோதியை வேலாகக் கொண்டு வேலன் வழிபாடாக முருகன் வழிபாடாகச் செய்து வந்தனர். லிங்க வழிபாடு சிவ வழிபாடாய்விரிந்திட, தமிழ் மொழியொடு வளர்க்கப்பட்டது தலை, இடை, கடையாய தமிழ்ச் சங்கங்களில், இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிய மேல் நாட்டவர்களின் கப்பல் வாணிப உறவாலும், வட நாட்டவர்களின் தலையீட்டாலும் நம் தமிழின் சிறப்பும் தத்துவமும் எங்கும் பரவின. திரைகடல் வழியாய் வந்து புகுந்தவர்கள் தமிழர்களுடன் கலந்து ஒன்று பட்டு தமிழையும், கடவுள் தத்துவத்தையும் வளர்க்கலாயினர். தமிழ்ப் பெருஞ் சித்தர்களின் சேர்ப்பினால், தென்னாடு முற்றும் தமிழ் நாடாக விளங்கியது. “தென்னாடுடைய சிவனே பொற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று துதிக்கலாயினர். இச் சமயம் வடவர்கள் வந்து நுழைந்து, தமிழரொடு கலவாது, தம் மொழி, கருத்து, வாழ்க்கை முறை முதலியவற்றை தமிழினத்தில் புகுத்த பலவாறாக முயன்றனர். அதன் பயனாக தமிழகத்தின் வட எல்லையிலும், மேற்கெல்லையிலும் வாழ்ந்தவர்களின் மொழி, பழக்க வழக்கம் முதலியன மாற்றமடைந்தன. இப்படியாக வடக்கில் தெலுங்கும், மேற்கில், மலையாளம், கன்னடம், துளுவமும் தோன்றின. எஞ்சிய தமிழகப் பகுதியில் வடமொழி எட்டி முட்டிப் பார்த்தும், மூர்த்தி, தல, தீர்த்தங்களோடும் பிறப் பிறப்புச் சடங்கோடும், பூஜை, அருச்சனை கிரியைகளோடும் நின்று விட்டன. இப்பொழுது தமிழகம் மறுமலர்ச்சி பெற்று ஓங்கத் தொடங்கியுள்ளதால் தடையானவை யாவும் ஒழிந்து தமிழனது உண்மைக் கடவுள் வழிபாடு எங்கும் விளங்கும். இனி திரை கடல் வழி வந்து தமிழர் ஆனவர்கள், யாவரும், திராவிடர்கள் என வழங்கப்படுகின்றனர். ஆதலின் இத் தென்னாட்டினர் திராவிட நாட்டினரே என்றும், இந் நாடு திராவிட நாடு என்றும் கொள்ள வேண்டும். நம் தென்னாட்டுக் கோயில்கள் யாவும் திராவிட சிற்ப தத்துவத்தைக் கொண்டுள்ளனவாம்.
ஜோதி ஞாயிற்றின் தத்துவ சின்னங்கள் சிவலிங்கம் முதலாக வந்தன. அக அனுபவத்தில் நிற்கும்போது ஆத்மலிங்க நிலையை சூழ்ந்து தோற்றிய ஜோதி நிலையே அதன் பீடமாக ஆவிடையாகவுள்ளது. அந்த ஆவிடையே, ஆ = பசு, விடை = நந்தி. இதுவே சிவன் ஏறும் இடபமாகக் கூறப்படுகிறது, ஆவினிடத்து பெறும் பஞ்சகவ்யம் (பால், தயிர், நெய், கோசலம், கோமயம்) சிவபெருமானின் அபிஷேகப் பொருளாம். இவை ஐந்தும் நன் ஆன்மாவைச் சூழ்ந்த ஐம்பூத தேகத்தை விளக்கப் படுத்துபவை. ஆதலில், இவ் ஆவிடை சிவனது அருட் சக்தியாகவும், அவர் தம் வடிவு, பஞ்ச லிங்கமாகவும் ஐந்தெழுத்தே பெயராகவும், ஆக்கலாதி ஐந்தொழிலே செயலாகவும் கூறப்படும். ஐந்தொழில் நடனம் விளக்க நடராஜ வடிவத்தை ஆக்கினர். இது போல சில சில கருத்தை விளக்கவே, விநாயகர், சுப்பிரமணியர், திருமாலின் பல்வேறு வடிவங்கள், பல் வேறு சக்திகளின் உருவங்கள் ஆக்கி, சாதாரண மனித சக்திக்கு அப்பாற்பட்ட யோக ஞான தபோ சக்தியால், இயற்கைச் சூழ்நிலை, கால தேசத்திற்கும் பொருந்த வழிபாடு செய்யவும், அதனால் பல பல நன்மைகள் பெறவும் ஏற்படுத்தியுள்ளனர். மனித வர்க்கம் விழிப்புற்ற இக்காலம் மேற்படி தெய்வத்துவ உண்மையை உள்ளவாறு அறிந்து அன்பும், அறிவும் ஓங்கி, அருள் வண்ண வழிபாடு எங்குஞ் செய்து பெரு நன்மை அடைய வேண்டியதாகும்.
அகஜோதி லிங்கத்தையும் அதன் பீடமாகிய ஆவிடையையும் புறவானில் திகழும் ஜோதி ஞாயிறும் அதனைச் சூழ்ந்து கறங்கும் கோள்களின் விருத்தமாகவும் கண்டனர். கடவுள் ஒளி ஐந்தின் தத்துவமாகப் பொருந்துயுள்ளதால் நம் ஐம்பூத தேகமும் இதன் கை, கால்களில் ஐந்தைந்து விரல்கள் இருப்பதும், மலர்களில் பல சாதாரணமாக ஐந்திகழ் கொண்டு மலர்வதும் அகவுண்மையைத் தெரிவிப்பனவே. நடராஜ வடிவில் ஆக்கலாதி ஐந் தொழிலும், நான்கு கரங்களாலும் தூக்கிய திருவடி ஒன்றாலும் சுட்டப்படுகின்றன. இதுபோல் விநாயக வடிவில் ஐங்கரமும், விஷ்ணுவடிவில் பஞ்சாயுதமும் விளங்குவன.
வான ஜோதியைச் சூழ்ந்து ஐம்பூதக் கோட்கள், குஜாதி (செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய) பஞ்ச கிரகங்கள் சுழன்று கொண்டுள்ளன. இத் தத்துவத்தைக் கொண்டு ஞாயிறு சின்னத்தை சுவஸ்திகம் என்று உருவாக்கினர். இதன் நாற்கரமும் சுழற்சி வேகத்தைக் குறிப்பன. இச் சின்னத்தைக் கொண்டோர் பஞ்ச சீலத்தை மேற்கொண்டவராயினர். இச் சுவஸ்திகத்தின் சுழற்சி நிலையைக் கொள்ளாது நிற்கும் நிலையைச் சிலுவையுருவாகக் கொண்டவர்கள், அதில் அன்புருவத் தேக ஒளியை ஐந்தாணிகளால் அறையப் பட்ட ஏசு கிருஸ்துவாகக் கொண்டார்கள். நமது ஞாயிறு போன்றனவே ஒவ்வொரு நட்சத்திரமும், ஆதலின் இவற்றைக் குறிக்க ஐந்திதழ் கோணவடிவம் கொடுக்கப் படுகின்றன. எனவே, ஆன்ம பீடமும் ஒளியும், பிறையும் இதன் மேல் ஒரு ஐந்திதழ் நட்சத்திரமும் மகமதியச் சின்னமாயின. பிரம்மம்என்றால் ஜோதியே. இது ஆன்ம அக ஜோதியே. உலக வாழ்க்கைக்குப் பிரபஞ்ச விளக்கம் தருவதற்கு பஞ்ச பிரம்ம வடிவாக, மனு, மயன், துவஷ்டா, சிற்பி, விஸ்வஞ்ஞன் என்ற பெயரோடு ஐந்தொழிலாளர் குறிக்கப்படுகின்றனர்.
No comments:
Post a Comment