Sunday, April 3, 2022

நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தின் வித்து!

இயற்கை விவசாயம் என்கிற ஜெயபேரிகையைக் கையில் எடுத்து கடந்த நாற்பதாண்டுகளாக தமிழ் மண்ணில் முழங்கிக்கொண்டிருந்த "இயற்கை வேளாண் விஞ்ஞானி" கோ.நம்மாழ்வார், இயற்கையோடு இயற்கையாகக் கலந்துவிட்டார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த நம்மாழ்வார், இளங்கலை விவசாயம் பயின்று, கோவில்பட்டி அரசு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் சிறிது காலம் பணியாற்றினார். 

இங்கு செய்யப்படும் ஆய்வுகள் எல்லாம் விவசாயிகளுக்குப் பலன் தராதவை என வெளிப்படையாக அறிவித்துவிட்டு, அரசுப் பணியை உதறித்தள்ளிவிட்டு முழுமையாக இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இரசாயனத்தில் விளைவிக்கப்படும் உணவுகள் அனைத்திலுமே நஞ்சு கலந்திருக்கிறது. இந்த உணவுகளை உட்கொள்வதால்தான் மக்கள் நோயாளிகளாகி சீக்கிரமே வாழ்வை இழக்கிறார்கள். இயற்கை விவசாயம்தான் ஆரோக்கியமான வாழ்வுக்குஉத்தரவாதம் அளிக்கும்" என்று நாடு கடந்தும் குரல் கொடுத்து வந்தவர் நம்மாழ்வார்.

விவசாயத்தை விவசாயிகளே வேண்டா வெறுப்பாக பார்த்த நிலையில் கணினி துறையில் பணியாற்றும் இளைஞர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகள்... என பல தரப்பினரையும் விவசாயத்தை நோக்கி μடி வரச் செய்தவர் நம்மாழ்வார். தமிழகம் மட்டுமன்றி உலக அளவில் பயணித்திருக்கும் நம்மாழ்வார், பல்வேறு பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள், போராட்டங்கள் என்று பலவற்றையும் முன்னெடுத்திருக்கிறார். குறிப்பாக, மரபணு மாற்றப்பட்ட விதைகள், பூச்சிக்கொல்லி நச்சுக்களை தயாரித்து சந்தைப்படுத்தும் அசுர பலமிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக விவசாயிகளைத் திரட்டி போராடியிருக்கிறார்.

இறப்பதற்கு முன்பாகக் கூட களத்தில்தான் நின்றிருந்தார் இந்தப் பசுமைப் போராளி! காவிரி பாசனப் பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. "இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், இங்குள்ள விளை நிலங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறிவிடும்" என பதைபதைத்து கொட்டும் பனியிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் கனமழையிலும் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தபோதுதான், பட்டுக்கோட்டை அருகே உள்ள பிச்சினிக்காடு கிராமத்தில் டிசம்பர் 30ம்தேதி இயற்கையோடு கலந்தார் நம்மாழ்வார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு பெண்மணி,  "அடி காட்டுல, நடு மாட்டுல, நுனி வீட்டுல... அது என்ன?" என்று நம்மாழ்வாரிடம் ஒரு விடுகதை போட்டாராம். இவருக்கு விடை தெரியவில்லை. "நெல்லுஅறுக்கும்போது அடிக்கட்டையை வயக்காட்டுலேயே விட்டுறோம். நடுவுல இருக்குற வைக்கோலை மாட்டுக்கு கொடுக்கிறோம். நுனியில இருக்குற நெல்லை வீட்டுக்கு எடுத்துட்டு போறோம்" என்று அந்தப் பெண் விடையைச்சொன்னபோது, நம்மாழ்வாருக்குள் இருந்த "இயற்கை விஞ்ஞானி" விழித்துக்கொண்டார். தனது இறுதிக்காலம் வரையிலும் இந்த "அடி, நடு, நுனி" தத்துவத்தை அவர் பரப்பினார்.

"யூரியா போட்டாத்தான் பயிர் வளரும்னு நம்ம விவசாயிகளிடம் மூட நம்பிக்கையை உருவாக்கிட்டாங்க. யூரியா மூட்டையில் '46 சதவிகிதம் நைட்ரஜன்'னு (தழைச்சத்து) எழுதியிருக்கான். ஆனால் நாம் பள்ளிக்கூடத்துல என்ன படிக்கிறோம்? வீசுற காற்றில் 78 சதவிகிதம் நைட்ரஜன் இருக்கு. காற்றுலயேஅவ்ளோ இருக்கும்போது எதுக்கு பொண்டாட்டி தாலிய அடகு வைச்சு யூரியா வாங்கிப்போடணும்? காற்றில் இருக்கிற தழைச்சத்தை இழுத்து மண்ணுக்குக் கொடுக்கிற தட்டைப்பயறு, உளுந்து, துவரை மாதிரியான பயறு வகைகளையும் நுண்ணுயிர்களையும் வளர்த்தாலே போதும்" - இப்படித்தான் இயற்கை விவசாயம் குறித்த பாடங்களை மிகவும் எளிமையாக நடைமுறை உதாரணங்களுடன் விளக்குவார். 

இயற்கை விவசாயம் உடனடிப் பயன் தராது. மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இரசாயன உரம் காரணமாக சீரழிந்து கிடக்கும் மண், பழைய பக்குவத்தை அடையவே பல ஆண்டுகள் ஆகும்" என்ற பிரச்சாரம் 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்தது. அப்போது வட இந்தியாவில் நடைபெற்ற இயற்கை விவசாயக் கருத்தரங்கில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த ஸ்ரீ பாத தபோல்கர் என்கிற கணிதப் பேராசிரியர் "அமிர்தபாணி" என்ற இயற்கை வளர்ச்சி ஊக்கியைப் பற்றி பரிந்துரைத்தார். அதாவது மாட்டுச் சாணம், மாட்டுக்கோமியம், வெல்லம் ஆகிய கலவையைத் தெளித்தால், பயிர்கள் மிக விரைவில் செழிப்புடன் வளரும் என்பதே அது. 

அதன் உபயோகம் பற்றி தபோல்கரிடம் மேலும் விசாரித்து தெரிந்துகொண்டு தமிழகம் திரும்பிய நம்மாழ்வார் 'அமிர்தபாணிக்கு' 'அமுதக்கரைசல்' என்று பெயர் சூட்டி தமிழ் நாட்டில் பரப்பினார். தமிழ்நாட்டின் மையத்தில், கரூர் மாவட்டம் கடவூரில், அவர் விரும்பி உருவாக்கி 'வானகம்' இயற்கைப் பண்ணையில்தான் விதைக்கப்பட்டிருக்கிறது நம்மாழ்வாரின் உடல்.

நன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

No comments:

Post a Comment