Monday, February 14, 2022

கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்ற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அகல் விளக்குகளை ஏற்றங்கள். தெலுக் பஹாங் தெப்பத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள்.


எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படும் பினாங்கு தெப்பத்திருவிழாவின் போது பக்தர்களால் கடலில் விடப்படும்  மிதக்கும் அகல் விளக்குகளின் தட்டுக்கள், சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு இருக்க அங்கு வரும் பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என 4 பொது இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.  

பக்தர்கள் எந்தவிதமான செயற்கை நெகிழி தட்டுக்கள் அல்லது கடல் வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வர்ண தட்டுக்களும் பயன்படுத்த வேண்டாம் என 

பினாங்கு பயனீட்டாளர்  சங்கம், பினாங்கு மாநில பசுமைக் கவுன்சில், மலேசிய இந்து சங்கம் புக்கிட் பெண்டாரா பேரவை, மற்றும் ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் கோயில் நிர்வாகம், தெலுக் பகாங் ஆகியவை கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. 

மாசி மக தெப்ப திருவிழா இந்த ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி பினாங்கில் உள்ள தெலுக் பஹாங்கில் கொண்டாடப்படும் ஒரு மிதக்கும் தேர் திருவிழாவாகும்.

தெலுக் பகாங்கில் உள்ள 115 ஆண்டுகள் பழமையான சிங்கமுக காளியம்மன் கோவிலில் கொண்டாடப்படும் மிதக்கும் தேர் ஊர்வலம் ஒரு கடலோர திருவிழாவாகும், இது கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.

இத்திருவிழாவின் போது கோயில் தெய்வங்களை ஏற்றிக்கொண்டு விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மிதக்கும் தேர் கடலில் உலா செல்லும். 

இது இக்கோயிலின் பாரம்பரியமாக இருந்து வருகிறது; ரத யாத்திரையின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலங்காரம் செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவர்.

அலங்கரிக்கப்பட்ட அகல் கடலில் பக்தர்களால் விடப்படும். முன்பு இந்த அகல் விளக்குகள்  ஸ்டைரோஃபோம் மற்றும் பாலிஸ்டிரீன் போன்ற நெகிழியால் செய்யப்பட்டதாக இருந்தன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக நெகிழி தட்டுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்த காரணமாக நெகிழி தட்டுக்களின் பயன்பாடு குறைந்து உள்ளது என இந்த பிரச்சாரத்திற்கு பொருப்பு ஏற்றுள்ள என் வி சுப்பாராவ் தெரிவித்தார்.

மிதக்கும் ஸ்டைரோஃபோம் மற்றும் பாலிஸ்டிரீன் ஆகியவை கடல் நீரில் எளிதில் பயணிக்கின்றன. கடந்த காலங்களில், நூற்றுக்கணக்கான செயற்கை நுரை அடிப்படையிலான பொருட்கள் ஊர்வலம் முடிந்த மறுநாள் கடலில் மிதப்பதைக் காண முடிந்தது. நுரை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல் மாசுபடுத்தும் முக்கிய காரணிகளாக அறியப்படுகின்றன, அவை கடல் உயிர் இனங்களை அச்சுறுத்துகின்றன.

ஸ்டைரோஃபோம் மற்றும் பாலிஸ்டிரீன் ஆகியவை மக்கும் தன்மையற்றவை மற்றும் சிறிய துண்டுகளாக உடைந்துவிடும். இவை மீன் மற்றும் ஆமைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்களால் உணவாக தவறாக உட்கொள்ளப்படுகின்றன என்றார்  சுப்பாராவ்.

கடல் மாசுபாடு மற்றும் கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளின் விளைவாக பாலிஸ்டிரீன் மற்றும் பிளாஸ்டிக் அடிப்படை பொருட்களைத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றன. 

அகல் விளக்குகள் சுமார் இரண்டு முதல் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர்  வாழை மரத்தின் தண்டுகளின் அடுக்குகளில் பொருத்தப்பட்டன, அவை மிதக்கும் தன்மையைக் கொண்டுள்ளன, இறுதியில் அது கடலில் மக்கும். கோயில் நிர்வாகம் கடந்த ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளை ஊக்குவித்து வருகிறது,

ஆகவே, பினாங்கு பயனீட்டாளர் சங்கம், பினாங்கு மாநில பசுமை கவுன்சில்,  மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டாரா பேரவை  மற்றும் கோவில் நிர்வாகத்துடன் இணைந்து பாக்கு மரத்தட்டு, மற்றும் வாழை மரத்தின் தண்டுகள் போன்ற பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளுக்குச் செல்லுமாறு பக்தர்களை வலியுறுத்துகிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறைகளுடன் கூடிய பக்திச் செயல் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் அதே வேளையில், மிதக்கும் திருவிழா மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என அந்த 4 பொது இயக்கங்கள் கூட்டாக வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளன. 


பினாங்கு பயனீட்டாளர் சங்கம் | 
பினாங்கு பசுமை கவுன்சில் | 
பினாங்கு இந்து சங்கம் புக்கிட் பெண்டேரா பேரவை |               
ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் கோயில் தெலுக் பகாங்

No comments:

Post a Comment