Sunday, April 3, 2022

விவசாயிகளே! பூச்சிகளைக் கொல்லாதீர்கள்! தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி நன்மை செய்யும் பூச்சிகளை வளரவிடுங்கள்! பூச்சியியல் வல்லுநர் நீராவி செல்வம் ஆலோசனை


விவசாயிகளுக்கு பூச்சிகளின் தொல்லை மிகப் பெரிய தவைவலியாக உருவெடுத்திருப்ப தன் காரணமாக, பலதரப்பட்ட கொடிய விஷத்தன்மையுடைய பூச்சிக்கொல்லிகளை வாங்கி தங்களது விவசாய நிலங்களில் உள்ள அனைத்து பூச்சிகளின் மீது தெளித்து அவற்றைக் கொன்று விடுகின்றனர் என்கின்றார் பூச்சி நிர்வாக வல்லுநர் நீராவி செல்வம். 

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று இரண்டாவது முறையாக மலேசியா வந்த செல்வம், இங்குள்ள பலதரப்பட்ட விவசாயிகளை நேரிடையாக சந்தித்து உரையாடியதில், அதிகமான விவசாயிகள், பூச்சிகளின் உண்மையான நிலவரத்தை அறிந்துகொள்ளாமல் விஷத் தன்மையுடைய பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து நன்மை செய்யும் பூச்சிகளையும் அநியாயமாகக் கொன்று விடுகின்றனர் என தனது கவலையைத் தெரிவித்துக்கொண்டார். பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பணிமனையில் உள்ள இயற்கை விவசாயத் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது செல்வம் பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். நம் விவசாய தோட்டங்களில் குறிப்பாகக் காய்கறி தோட்டமாக இருந்தாலும் சரி, நெல் வயல் தோட்டமாக இருந்தாலும் சரி, அதில் வருகின்ற பூச்சிகளை அழிக்க பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லும் செல்வம் அனைத்து பூச்சிகளுமே விவசாயிகளின் நண்பர்களே என்கின்றார்.

வயல்களில் 25 சதவிகிதம்தான் தீமை செய்யும் பூச்சிகள் உள்ளன. மீதமுள்ள 75 சதவிகிதம் பூச்சிகள் நன்மை செய்யும் பூச்சிகள் ஆகும். ஆரம்ப கால விவசாயிகள் இயற்கையான பூச்சி விரட்டிகளை அதிகம் பயன்படுத்தி அதிக விளைச்சலை எடுத்தனர் என்று கூறும் செல்வம் இப்போது எதற்கெடுத்தாலும் விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளே நிவாரணம் என தவறாக நினைத்து ஆயிரக்கணக்கான வெள்ளியை பூச்சிகளுக்காக செலவு செய்து கடன்காரர்களாக ஆகிவிடுகின்றனர் என்றார். விவசாயிகள் இப்படி கண்மூடித் தனமாக பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதால் தீமை செய்யும் பூச்சிகள் மட்டும் சாகவில்லை.

மாறாக நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்ந்து கொல்லப்படுகின்றன என்றார். இதனால் நோய்களும் அதிகரிக்கின்றன, விளைச்சலும் குறைகிறது என்றார். விவசாயத் தோட்டத்தில் பயிரைத் தின்று மகசூல் இழப்பு ஏற்படுத்தும் பூச்சிகளால்தான் நமக்குப்

பிரச்னைகள். அதே நேரத்தில் நம் சாகுபடி பயிரைச் சாப்பிடாமல் நமக்கு தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் பிடித்து சாப்பிடக்கூடிய சிலந்தி, குளவி, பொறிவண்டு, தட்டான் என வேறு ஏராளமான நன்மை செய்யும் பூச்சிகள் உள்ளன. பூச்சிக்கொல்லிகளை வயல்களில் அடிக்கும்போது முதலில் நன்மை செய்யும் பூச்சிகள்தான் கொல்லப்படுகின்றன. விவசாயத்தில் இறங்குவது முக்கியமல்ல. ஆனால் விவசாயத்தில் உள்ள சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் செல்வம். விவசாயத்தில் இப்போது பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளைத் தாங்கி உயிர்வாழக்கூடிய தகவமைப்பு என்பது பூச்சிகளுக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளின் வீரியத்தையும் அதிகப்படுத்திக்கொண்டே செல்ல
வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக பூச்சிக்கொல்லியின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க அந்த வயல்களில் உற்பத்தியாகும் உணவுப்பொருள்களை சாப்பிடும் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும்தான் பல புதிய நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் பயிர்களை அழிக்கும் பூச்சிகளின் குடும்பமும் பெருகிக்கொண்டே செல்கின்றன என்றார் செல்வம். விவசாயத்தில் பூச்சிகள் இல்லையென்றால் விவசாயமே இல்லை என்று கூறும் இவர், பூச்சிகள் இல்லையென்றால் அயல் மகரந்தச் சேர்க்கையே நடக்காது என்கின்றார். ஆண் மலரிலிருந்து மகரந்தம் பெண் மலருக்குப் போகாது. அயல் மகரந்தச் சேர்க்கை இல்லையென்றால் அந்த விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்காது. பூச்சிகளில் எப்படி கெட்டது செய்யும் பூச்சிகள் இருக்கின்றதோ அதேபோல் கெட்ட பூச்சிகளை பிடித்துச்

சாப்பிடும் நல்ல பூச்சிகளும் இருக்கின்றன. சிலந்தி, குளவி, பெருமாள் பூச்சி, ஒட்டுண்ணிகள் போன்ற நன்மை தரும் பூச்சிகளை விவசாயிகள் பூச்சிக்கொல்லி தெளித்து கொன்றுவிட்டார்கள். நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல வழிகள் உண்டு. மஞ்சள் நிறத்தில் பூ பூக்கக்கூடிய செண்டுப்பூ,  சாமந்திப்பூ, மக்காச் சோளம் போன்றவற்றை வயல் வரப்புகளில் வளர்ப்பதன் மூலம் நன்மை செய்யும் பல பூச்சிகளை நம் வயல்களில் வரவழைக்கலாம் என்றார் செல்வம். இதுபற்றிய முழு தகவல்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திடம் கிடைக்கும்.

நன்மை செய்யும் பூச்சிகள் வயல்களில் இருக்க வேண்டும் என்றால், தீமை செய்யும் பூச்சிகளும் வயலில் இருக்க வேண்டும். நன்மை செய்யும் பூச்சிகளுக்கு தீமை செய்யும் பூச்சிகள்தான் உணவு என்பதை விவசாயிகள் மறக்கக்கூடாது. மேலும் தீமை செய்யும் பூச்சிகளைக் கொல்வதைவிட அவற்றை விரட்டி அடிக்க வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும் என்கின்றார் செல்வம். அவற்றை விரட்டியடிக்கவும், கட்டுப்படுத்தவும் இயற்கையிலான பூச்சி விரட்டிகளை பயன்படுத்த விவசாயிகள் முன் வர வேண்டும். இது தொடர்பான விளக்கக் கையேடுகள் பி.ப.சங்கத்திடம் இருப்பதாகவும் செல்வம் கூறினார்.

மண் அடுத்த பத்தாண்டுகளுக்கு செழிப்பானதாக இருக்க வேண்டும் நல்ல விளைச்சல் வேண்டும் என நினைத்தால் அவர்கள் இயற்கை முறையைப் பின்பற்ற வேண்டும். பூச்சிக்கொல்லிகளுக்கு விவசாயத்தில் இடம் கொடுக்கக்கூடாது. இயற்கை சார்ந்த முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கான சாகுபடி செலவு குறைகிறது. மகசூல் இழப்பு தடுக்கப்படுகின்றது. இதனால் இயற்கை சார்ந்த நமது சூழலியலும் பாதுகாக்கப்படுகிறது என்றார் நீராவி செல்வம்.

No comments:

Post a Comment