Wednesday, March 24, 2010

ஊதாரித்தனத்தினால் ஊஞ்சலாடுகிறது இந்திய குடும்பங்கள்! வீண் செலவுகளைக் குறைத்து சேமிப்பை உயர்த்த வேண்டும் என்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

“21 வயது பிறந்தநாளை 20 ஆயிரம் வெள்ளியில் கொண்டாகிறார்கள்
தொழிற்சாலையில் வேலை செய்யும் சில இந்தியப் பெண்கள்”


தேவையற்ற, பலவிதமான ஊதாரிச் செலவுகளால் பல இந்தியக் குடும்பங்களின் வாழ்க்கை பலதரப்பட்ட நெறுக்கடிகளை எதிர்நோக்கி வருகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

இப்படிப்பட்ட ஊதாரிச் செலவுகளுக்கு இவர்கள் கணக்கில்லாமல் செலவழித்து, உண்பதற்கு வயிற்றை காய வைக்கின்றார்கள் என்றார் பி.ப.சங்கத் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்

ஆங்கில கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு, பிறந்தநாள் விழா, ஆண்டு விழா, புது வாகன விழா, காதணி விழா, நாலு நம்பர் விழா, திருமண விழா என எண்ணற்ற விழாக்களுக்கு ஆயிரக்கணக்கில் பணத்தைச் செலவு செய்வது மிகவும் வருத்தமளிக்கிறது என்றார் இத்ரிஸ்.

தனது சேமிப்பிற்கு குறைவாகவும், நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சமைத்து உண்பதற்கு செலவு செய்யாமல், பிரயோஜனமற்ற காரியங்களுக்குப் பல இந்தியக் குடும்பங்கள் தண்ணீர்போல் பணத்தை விரயம் செய்வது தமக்கு வியப்பைத் தருவதாக இத்ரிஸ் மேலும் கூறினார்.

இப்பொழுது 21 வயது பிறந்தநாள் கொண்டாடுவது அதுவும் அழகிய வர்ண கார்டுகளில் அழைப்பிதழ் அடித்து கொண்டாடுவது ஒரு புதிய கலாச்சாரமாகிவிட்டது.

இப்படிப்பட்ட பிறந்தநாள் விழாக்கள் முன்பு வீடுகளில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இப்பொழுது கேளிக்கை மையங்களில் 20 ஆயிரம் வெள்ளி வரையில் செலவு செய்து கொண்டாடுகின்றார்கள் என்றார் இத்ரிஸ்.

பி.ப.சங்கத்திற்கு தெரிந்த வரையில் தொழிற்சாலையில் வேலை செய்யும் இந்தியப் பெண்கள் தங்களின் 21 வயது பிறந்த நாளை “பேக்கஜ்” முறையில் 20 ஆயிரம் வெள்ளி வரை கொடுத்து கொண்டாகின்றார்கள் என்று தெரிய வருகிறது.

பணத்தின் அருமை, அதனை எப்படி நிர்வகிப்பது என்பதை இந்த இந்திய பெண்கள் உணரவில்லை என்பதையே இது காட்டுகின்றது என்றார் இத்ரிஸ்.

இப்பொழுதே பல இந்திய குடும்பங்கள் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். சொந்த குழந்தைக்கு புத்தக பை வாங்கி கொடுக்க முடியாத அளவுக்கு சில பெற்றோர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இவர்களின் ஊதாரிச் செலவுகளுக்கோ கணக்கே இல்லை.

விழாக்கள் என்ற பெயரில், பல ஆயிரங்களைச் செலவு செய்வதை இந்திய பெற்றோர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இளைஞர்களும், தொழிற்சாலையில் வேலை செய்யும் இந்தியப் பெண்களும் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பல ஆயிரங்கள் செலவு செய்வதை நிறுத்த வேண்டும் என்றார்

தங்கள் குழந்தைகளுக்கு சேமிப்பைக் கற்றுக் கொடுத்து, எதிர்காலத்தில் அவர்கள் கையேந்தும் நிலைக்கு உட்படாமலிருக்க, பணத்தின் முக்கியதுவத்தைக் கற்றுத்தர வேண்டும் என்றார் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்.

எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்
தலைவர்

No comments:

Post a Comment