Saturday, March 20, 2010

தண்ணீரை நேசிப்போம்!

வானம் பார்த்து, இரு கரங்களை ஏந்தி, மழையை வேண்டி நின்ற மக்களை, சுவடுகள் இல்லாமல் சூரியனை மறைத்த கருமேகங்களைப் போல, மறைத்துக்கொண்டிருக்கின்றது இந்த கலியுகம். இறைவன் கொடுத்த 5 அன்பு பரிசுகளில் ஒன்று தண்ணீர். தண்ணீரை பற்றி நாம் என்றாவது சிந்தித்தது உண்டா? உண்டு! குழாயில் தண்ணீர் வராத நாள் அன்றுதான்.

“நீர் இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு (வான் சிறப்பு -20)

உலகமும் உயிர்களும் நிலைத்திருப்பதற்கு தண்ணீர் இன்றியமையாதது. அது மட்டுமில்லாமல், மக்களின் வாழ்க்கையில் ஒழுக்கம் நிலைப்பெற்று வளர்வதற்கும், மழை அற்புதமான சேவையை வழங்கிக்கொண்டிருக்கின்றது, என்பது வள்ளுவர் நமக்குப் புகட்டும் தெளிவுரை.

ஆனால் இன்றைய நிலைமையோ வேறு. கரியமிலவாயு பெருக்கத்தால் உலகம் நாளுக்கு நாள் சூடாகிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், மனிதனின் அறியாமையினாலும் பேராசையினாலும் இயற்கை வளங்கள் இழிவுக்கு உட்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றன. காடுகளை அழித்து, நாடுகளை வெளிப்படுத்திய விஞ்ஞானம், மேம்பாட்டுத் திட்டங்களுக்காக பெருமளவில் பல நகரங்களை உருவாக்கி, பல அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி, நிலத்தடியில் உள்ள தண்ணீர்களை உறிஞ்சி, நரகங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. பினாங்கு மாநிலத்தில் மாட்டுப்பாலுக்கும் நிலத்தடி நீருக்கும் பெயர் போன புவா பாலா கிராமம், மேம்பாட்டுத் திட்டத்தால் முற்றாக அழிந்து போனதை நாம் மறந்திட முடியாது. இப்படிப்பட்ட அழிவுகளால் கடல், வானம் மற்றும் நிலம் என்று மாறிக்கொண்டிருக்கும் தண்ணீரின் சுழற்சி பாதிக்கப்படும் என்பதை மனிதன் அறிவதில்லை.

அதிகரித்து வரும் மக்கட்தொகைகள், விரிவாகிக் கொண்டிருக்கும் வேளாண்மை;, பெருகிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் சேர்ந்து உலகத்தின் தண்ணீர் பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகின்றன. அதையும் தாண்டி சில உலக நாடுகள் நிலத்தடி நீர்களை தங்களது சுயநலத்துக்காக மூன்றாம் உலகத்திலிருந்து அத்துமீறி சுரண்டிக்கொள்கின்றன. புதிய நிர்வாகத்தின் அம்சங்களான நீர்தேக்கங்கள், கால்வாய்கள், குழாய்கள், நீரேற்றும் நிலையங்கள், கழிவுநீர் மையங்கள், தூய்மைப்படுத்தும் நிலையங்கள் போன்றவற்றை அமைக்கவும் நிர்வக்கிக்கவும் ஏராளமான பணம் தேவைப்படுகிறது. இதனால் பணத்தட்டுப்பாடு உள்ள நாடுகள் மிகப்பெரிய சவால்களை எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றன.


எதிர்காலத்தில், பூமி சூடாவதால், தட்பவெப்பநிலை எப்படி மாறும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. நவீன கருவிகளைக் கொண்டு சிலவற்றை நம்மால் கண்டுபிடிக்க முடியும். தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான நீரை தொழிற்சாலைகளைக் கட்டும் பொழுதே நிறுவிக்கொள்கின்றன. மாறிவரும் தட்பவெப்பநிலை போக்கிற்கு ஏற்ப வேளாண்மையில் மாற்றம் செய்வது மிகவும் சிரமமான செயலாகும். இவ்வகையான பிரச்சனைகளைச் சமாளிக்க பல நாடுகளைச் சேர்ந்த தனியார் சங்கங்கள், மழை நீர் சேகரிப்பு, கழிவு நீர் சுத்திரிப்பு, நீர் குழாய்கள் கட்டுவது. மக்களுக்கு தண்ணீர் விழிப்புணர்ச்சிகள் போன்ற இன்னும் சில சின்னஞ்சிறு தீர்வுகளை கண்டுபிடித்து வெற்றியும் கண்டுள்ளனர். நமது நாட்டிலேயே பல சங்கங்கள் இயற்கை பாதுகாப்பதில் மிகவும் அக்கறை கொண்டுள்ளன.

குறிப்பாக, பினாங்கு மாநிலத்தில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கம், மரம், குப்பை,தண்ணீர் மற்றும் நெகிழி பற்றிய வழிகாட்டி புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்காக வெளியிட்டுள்ளது. அப்புத்தகங்களை பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் படித்து பயனடையக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

மாணவரும் சுற்றுச்சூழலும் - மரம்

மாணவரும் சுற்றுச்சூழலும் - குப்பை

மாணவரும் சுற்றுச்சூழலும் - தண்ணீர்

மாணவரும் சுற்றுச்சூழலும் - நெகிழி

நம்முடைய வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதும் நெறிமுறையைப் பின்பற்றுவதும் முக்கியமானது. தண்ணீர் நிர்வாகத்தை, நம்மிலிருந்து பிரித்துப் பார்;த்து, அதைக் கட்டுப்படுத்துவது, நமது உடலிருந்து இரத்தத்தைப் பிரித்து அதை வேறு ஒரு இடத்திற்கு அனுப்புவதற்கு சமமாகும். ஆனால் இவை அனைத்தையும், புதிய சமுதாயம், நீர் குறித்து கொண்டிருக்கும் மனப்பான்மைதான் இங்கு முக்கிய தடைக்கல். நம்மில் பலரும், தண்ணீர் என்பது குழாயில் கொட்டும் ஒரு வித திடப்பொருள் என்றுதான் கருதுகின்றோம். நீருக்கு நாம், முன்பு கொடுத்து வந்த மதிப்பும், மரியாதையும் எப்பொழுதோ காற்றில் பறந்து விட்டது இன்று. தண்ணீர் விண்ணிலிருந்து இலவசமாக பொழிவதாலும், தண்ணீர் உற்பத்தி செலவைவிட, குறைவாக விற்கப்படுவதாலும், அது தாராளமாகக் கிடைக்கிறது என்ற மாயையை ஏற்படுத்துகின்றது.


“கிணறு காய்ந்தால்தான் நீரின் அருமை தெரியும்” என்று பெஞ்சமின் பிராங்ளின் கூறியிருந்ததைப் போல, வறட்சியும் பஞ்சமும் ஏற்படும் வரை நீர் சிக்கனம் பற்றி நாம் சிந்திக்கப்போவதில்லை. தனிப்பட்ட முறையில் பொருள் வாங்குவதைக் குறைப்பதன் மூலம், வீணாக்குவதை தவிர்ப்பதன் மூலமும், நேரடியாக கழிவறைகளில் குறைவான நீரை பயன்படுத்துவதன் மூலமும், நீர் சிக்கனத்திற்கு உதவ முடியும். இப்பொழுது மனித இனத்திற்கு சவாலாக இருந்து வரும், கடுமையான இயற்கை சீற்றங்கள், பொருளியல் பின்னடைவு, உணவுப் பற்றாகுறை, பன்னாட்டு மோதல்கள் போன்றவற்றை தடுக்க வேண்டுமானால், வானத்தை வணங்குவோம், காற்றைச் சுத்தபடுத்துவோம், நெருப்பைக் கட்டுப்படுத்துவோம், நிலத்தை வளப்படுத்துவோம், தண்ணீரை மதிப்போம், மொத்தத்தில் இயற்கையை நேசிப்போம், நாமும் செழிப்பாக வாழ்வோம்.

No comments:

Post a Comment