மலேசியாவிலிருந்து தமிழகம் வந்திருந்த தமிழ் எழுத்தாளர் சீ.அருண், 'சயாம்-பர்மா மரண ரயில் பாதை' மறைக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு என்ற நூலை மதுரையில் வெளியிட்டு பேசினார். அவர் பேசும் போது, ஒடுக்கப்பட்ட பல்வேறு இனங்களை மேற்கோள் காட்டி, தமிழர்களும் அவ்வாறு ஒடுக்கப்படும் இனமாக இருப்பதைக் குறிப்பிட்டார்கள்.
உலகின் பல தேசிய இனங்கள் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவை வளப்படுதத கறுப்பின ஆப்பிரிக்க மக்கள் கொண்டு செல்லப்பட்டனர். அடிமைகளாக விலை பேசியும், ஏமாற்றியும், துப்பாக்கி முனையில் விலங்குகளைப் போல் சங்கிலியால் பிணைத்து கப்பலில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர்.
இன்று அந்த மக்கள் தங்கள் தாய்நாடு எது என்று தெரியாமல், ஆப்ரோ அமெரிக்க இனமாக வாழ்கின்றனர். அதனை குறிக்கும் விதமாக இன்றும் தங்கள் பெயருக்கு முன்னால் எக்ஸ் என்ற ஆங்கில எழுத்தை சேர்த்துக் கொள்கின்றனர். 1960 களில் அமெரிக்காவில் புகழ் பெற்று விளங்கிய தலைவர் மால்கம் எக்ஸ் இதற்கு ஒரு உதாரணம்.
கறுப்பின மக்களை கையாண்ட அதே வழிமுறைகளை ஆசியாவில் பயன்படுத்தினர் பிரிட்டிசார். அதற்கு பெருமளவில் இரையாகியது தமிழினம். அந்த வகையில் கறுப்பின மக்களுக்கு அடுத்தபடியாக சொல்லண்ணா துன்பங்களை அனுபவிததது தமிழ் இனம் தான். தென் ஆப்ரிக்கா, பர்மா, மேற்கிந்திய தீவுகள், பிஜி, மொரிசியஸ்,சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அடிமைகளாக கடத்தப்பட்டனர். அங்கிருந்த கரும்பு தோடடங்களையும், ரப்பர் தோட்டங்களையும் வளப்படுத்தினர். இலங்கைக்கும், மலேசியாவுக்கும் இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட மக்கள் பெரும்பாலும் மதுரை, நெல்லை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, தென்ஆற்காடு, வடஆற்காடு, சேலம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள்.
பிரிட்டிசாரை எதிர்க்க ஜப்பானுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டார் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இந்தியாவையும் தனது பிடிக்குள் கொண்டு வர திட்டமிட்டது ஜப்பான். ஆனால் ஜப்பானிலிருந்து படைகளை கொண்டு செல்ல அதிக காலம் பிடிக்கும். அதே நேரத்தில் செலவும் அதிகம். எனவே சயாமிலிருந்து (தாய்லாந்து) பர்மா ( இப்போது மியான்மர்) வரை சுமார் 416 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரயில் பாதை அமைக்க முடிவு செய்தனர். இதற்கு ஜப்பான் தன்னால் பிடிக்கப்பட்ட இங்கிலாந்து, நியூசிலாந்து,ஆஸ்திரேலியா, போலந்து,நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த போர்க்கைதிகளை பயன்படுத்தியது. இருந்தாலும் போதுமான வேலையாட்கள் இல்லை. இந்த நிலையில் மலேயாவில் பிரிட்டிசார் வசம் இருந்த இரப்பர் தோட்டங்களில் பணிபுரிந்த தமிழர்களையும்,மலேயா,சிங்கப்பூர், பர்மா, சயாம் மக்களையும் இரயல் பாதை பணிக்காக கொண்டு சென்றனர்.
அந்த இரயில் பாதை வேலைக்காக போய் தமிழர்கள் பட்ட துன்பம் படுபயங்கரமானது. மலாயா-சயாம் ரயில் பாதை மிக நீண்ட தூர பயணமாகும். இடையிடையே உள்ள ரயில் நிலையங்களில் இரயில் நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் ஓய்வெடுக்க வேண்டும். அப்போது மலம், சிறுநீர் கழிப்பது இயற்கையாக நிகழ வேண்டும். ஆனால் பயணத்தின் போது தொழிலாளர்களுக்கு மலம் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படாமலிருக்க மலத்துவாரத்தினுள் ஒரு வகை மருந்தை திணித்துள்ளனர். பாட்டாளி தமிழ்ப் பெண் ஒருத்தி இரயில் பாதை கட்டுமான தளத்தில் குழந்தை பெற்றெடுத்தாள். குழந்தை ஈன்றெடுத்த சில மணி நேரத்திற்குள் அந்த தாயை இழுத்துக் கொண்டு போய் தண்டவாள கட்டையை சுமக்க வைத்தான் ஒரு ஜப்பானியன்.
சயாம் மரண இரயில் பாதையில் வேலை பார்த்தவர்கள் அதிகமானோர் தமிழர்கள் தான். அதாவது 60 விழுக்காடு தமிழர்கள். ஆனால் இன்றைய மலேசிய அரசு அதனை மறைத்து 60 விழுக்காடு மலேய இனத்த்வர் பணியாற்றியதாக சொல்கிறது. இந்த இரயில் பாதையில் பணியாற்றி பாதிக்கப்பட்டவர்களுக்காக ஜப்பானிய அரசு 1967 ஆம் ஆண்டு இரண்டரை கோடி வெள்ளியை மலேயாவிடம் இழப்பீடாக கொடுத்துள்ளது. ஆனால் இநத் பணம் பாதிப்புக்குள்ளான தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. இது வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.சயாம் மரண இரயில் பாதையில் பணியாற்றி இறந்த பிற இனத்து தொழிலாளர்களுக்கு நினைவு சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழர்களுக்கு எதுவும் இல்லை. அங்கு சென்ற மலாய் இனத்தவர்கள் தங்களுக்கான இழப்பீடை பெற சங்கம் வைத்து போராடுகிறார்கள். ஆனால் தமிழர்களுக்கு மட்டும் இத்தகைய எண்ணம் தோன்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இவர் வெளியிட்டுள்ள 'சயாம் பர்மா மரண இரயில் பாதை' என்ற புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள அவலங்கள் நெஞ்சை உருக்குவதாக இருப்பதுடன், மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட ஒரு வரலாற்றின் பதிவு எனப் பலராலும் கருத்துரைக்கப்பட்டிருக்கிறது.
- நன்றி தமிழ் மீடியா
No comments:
Post a Comment