உகாதி சுபகாஞ்சுலு, இந்த இன்பகரமான சொல், மலேசியாவில் வாழ்கின்ற சுமார் 3 லட்சம் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட தெலுங்கர்களின் உள்ளத்திலிருந்து ஒலிக்கவிருக்கின்றது.
இந்திய கணிதமேதையான பாஸ்கரசார்யா அவர்களின் கணக்குப்படி, உகாதி தினத்தன்றுதான் அந்த வருடத்தின் முதல் நாள், மாதம் தொடங்குவதாக கூறுகிறார். தாவரங்கள் துளிர் விடுவதும், செடிகள் பூத்துக் குழுங்குவதும், கனி மரங்கள் காய்ப்பதும், பூக்கள் மலர்வதும் இதுதான் இயற்கை சொல்லித் தருகின்ற பாடம். இப்படி புது உயிர்களின் தொடக்கத்தை உகாதியின் போதுதான் பார்க்க முடிகிறது.
உகாதி காலக்கட்டத்தில் மா காய்த்துக் குலுங்கி தனது இன்பமான மணத்தை பரப்பி நிற்கும். வேப்பமரங்களும் இக்கலாக்கட்டத்தில் பூத்து சுற்றுப்புறத்தில் உள்ள காற்றை ஆரோக்கியமாக மாற்றும் பணியைச் செய்கிறது.
உகாதி புத்தாண்டு அன்று புதிய உடைகள் அணிந்து கோயிலுக்குச் சென்று, ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஒரு இனத்தின் மொழி கலாச்சார, பண்பாடுகள், உணவு முறை ஆகியவை மறக்கப்படாமலிருக்க அவற்றின் முக்கிய விழாக்களும் பண்டிகைகளும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொக்கிஷங்கள் அடுத்த தலைமுறைக்கும் சென்றடையும்.
மற்ற புத்தாண்டைப் போலவே வீட்டை சுத்தம் செய்வது, பழைய பொருட்களை தூக்கி எறிவது, வீட்டை அழகுபடுத்துவது, புதிய ஆடை வாங்குவது போன்றவை உகாதி புத்தாண்டுக்கு முன்பதாக செய்யப்படும் ஒரு பாரம்பரிய வழக்கமாகும்.
உகாதி புத்தாண்டு தினத்தன்று விடியற்காலையில் எழுந்து தலைக்குகுளியல் முடிந்த பிறகு, அசல் மா இலையை வீட்டின் வாசலில் கட்டி தொங்கவிடுவார்கள். ஆனால் இப்பொழுது கடைகளில் விற்கப்படுகின்ற பிளாஸ்டிக் மா இலைகள்தான் பலரது வீடுகளில் நம்மை வரவேற்கின்றன.
அதன் பிறகு கோமியத்தை வீட்டின் முன் வாசலில் தெளித்தபிறகு விதவிதமான பாரம்பரிய வடிவத்தில் கோலமிடுவார்கள். அந்த கோலமும் சொந்தமாக வரைந்தததாக இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமாகும்.
அதன் பிறகுதான் குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டில் உள்ள பூஜை அறையில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். தங்களின் ஆரோக்கியம், தொழில், வருவாய், குடும்ப மேம்பாடு ஆகியவை சிறப்பானதாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்வார்கள்.
பெரும்பாலானவர்கள் உகாதி தினத்தன்று புதிய தொழிலைத் தொடங்குவார்கள். உகாதி குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தருகின்ற தினமாக கொண்டாடப்படுவதோடு சமூகத்திலும் வாழ்விலும் ஓர் அந்தஸ்தை, மதிப்பை ஏற்படுத்தித் தருகின்ற ஒரு தினமாக கருதப்படுகிறது. மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு காரியமும் மங்களகரமாக தொடங்கி வெற்றிகரமாக முடிய வேண்டும் என்பதே பலரின் ஆசை. அதற்கு உகாதி ஒரு சிறந்த தினமாகும்.
உகாதி பச்சடி
உகாதி புத்தாண்டு தினத்தன்று கண்டிப்பாக சைவமாக இருக்க வேண்டும். மிகப் பிரமாதமான அச்சைவ சமையலில் கண்டிப்பாக இருக்க வேண்டியது உகாதி பச்சடியாகும். சமையலில் கைதேந்தவர்களும், வயதான பாட்டிமார்களும் உகாதி பச்சடியை சுவையானதாக தயாரிப்பார்கள். அதன் சுவை இரண்டு தினங்களுக்கு நாவைவிட்டு அகலாது. இந்த உகாதி பச்சடியை சுவைத்துச் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே, பலர் தெலுங்கர்களின் வீட்டுக்குச் செல்வார்கள். புளிச்சகீரை சட்டினியைவிட இந்த உகாதி பச்சடி பல மடங்கு ருசியானது, சுவையானது, சத்தானது.
குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர அமர்ந்து பாரம்பரியமான முறையில் தயாரிக்கப்படும் உகாதி பச்சடியை உண்டு மகிழ்வார்கள். உகாதி பச்சடி செய்யும் முறையைப் பார்ப்போம்:
தேவையான பொருட்கள்
புளி கரைசல் - 250 மிலி
வேப்பம் பூ - 5 கிராம்
மாங்காய் - 50 கிராம்
தேங்காய் துண்டுகள் - 50 கிராம்
கரும்பு - 100 கிராம்
திராட்சை - 10-12
வாழைப்பழம் - பாதி
உப்பு சுவைகேற்ப
மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை
வெல்லம் - 250 கிராம்
செய்முறை: புளியை வெந்நீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும். மாங்காய், தேங்காய், கரும்பு, திராட்சை, வாழைப்பழும் அனைத்தையும் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெல்லத்தை புளிநீரோடு கரைத்துக் கொண்டு, மிளகாய்த்தூளையும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொண்டு, வெட்டி வைத்திருக்கும் அனைத்தும் பொருட்களையும், வேப்பம்பூ உட்பட ஒன்றாக சேர்ந்து கலந்து பரிமாறலாம்.
உகாதி பச்சடியில் சேர்க்கப்படும் வேப்பிலை நீரிழிவு நோயாளிகளுக்கும், தோல் பிரச்னை உடையவர்களுக்கும் நன்மை பயக்கும். வெல்லம் இரத்த விருத்தியை ஏற்படுத்தும். மாங்காய் மற்றும் புளி ஆந்திரகாரர்களின் அனைத்து சமையலிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும்.
வாழ்க்கை என்பது எப்பொழுதும் இன்பகரமாக இருப்பதில்லை. அது சோகம், மகிழ்ச்சி, வெற்றி, ஏமாற்றம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. அனைத்து அனுபவங்களையும் ஒரே மாதிரியாக ஏற்று வாழ்க்கையை எதிர்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும் என்பதை உகதி பச்சடியில் உள்ள மூன்று சுவைகளும் குறிக்கின்றன.
ஆந்திர மாநிலத்தில் புளியோரா அல்லது “போப்பட்லு” போன்றவையும் தயார் செய்யப்படும் இதனையும் மாம்பழத்தில்தான் தயார் செய்து உகாதி தினத்தன்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், வீட்டிற்கு வருகின்றவர்களுக்கும் வழங்குகின்றார்கள்.
கவி சம்மேளனம்
மலேசியாவில் உகாதி தினத்தில் சிலர் காலையில் ஆலயங்களுக்குச் செல்வார்கள். பலரோ மாலை வேளையில் ஆலயங்களுக்குச் சென்று குடும்ப உறுப்பினர்களோடும், நண்பர்களோடும் பேசி மகிழ்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வார்கள். ஆனால், ஆந்திர மாநிலத்தில் மாலை வேளைகளில் கவி சம்மேளனம் என்று ஒரு சிறப்பு அங்கமே நடைபெறுகின்றது.
பல துறைகளைச் சேர்ந்த கவிஞர்கள், அரசியல், கலை, கலாச்சாரம், நகைச்சுவை, மொழி என பல தலைப்புக்களில் மிக அருமையாக பல விஷயங்களை எடுத்துரைப்பார்களாம். இந்நிகழ்ச்சி நேரிடையாக வானொலி மற்றும் தொலைக்காட்சி வழி காட்டப்படுகின்றது. இந்நிகழ்ச்சியை செவிமடுப்பதற்காகவும் காண்பதற்காகவும் பலர் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்களாம்.
ஆனால், நவீன கலாச்சாரம் இந்த பாரம்பரிய கவி சம்மேளனத்தை சாகடித்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. கவி சம்மேளனத்திற்கு பதில் சினிமா சம்மேளனம்தான் அரங்கேறுகிறது. இன்றைய மக்களிடையே இந்த கவி சம்மேளனத்தின் முக்கியத்துவம் பற்றி சொல்லித்தரப்பட வேண்டும்.
ஆக உகாதி புத்தாண்டு பல வகையான சிறப்பு அமசங்களை தாங்கி வருகின்ற ஒரு பண்டிகையாகத் திகழுகின்றது. தெலுங்கர்களின் எண்ணத்திலும் சிந்தனையிலும் மட்டுமல்லாது மலேசியாவில் வாழ்கின்ற மற்ற இனத்தவர்களின் வாழ்க்கையிலும், வாழ்க்கையை மென்மேலும் உயர வழிவகுக்கும் நாளாக அமையும் என எதிர்பார்ப்போம்.
தெலுங்கு புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் உகாதி சுபகாஞ்சுலு.
என். வி. சுப்பாராவ்
பினாங்கு
No comments:
Post a Comment