Friday, March 12, 2010

தண்ணீரை சேமியுங்கள்! ! - பி.ப.சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது

தண்ணீரை சேமியுங்கள்!
ஒரு மலேசியர் நாள் ஒன்றுக்கு 208 லிட்டர் தண்ணீரை விரயமாக்குகின்றார்
சிங்கப்பூரியர் விரயமாக்குவது 157 லிட்டர் தண்ணீர்!
பி.ப.சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது

___________________________________________________

நாட்டின் சில மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளதால், பயனீட்டாளர்கள் தண்ணீரின் அவசியத்தை உணர வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நமது அண்டை நாடான சிங்கப்பூரியர்களை விட மலேசியர்கள் அதிக நீரை உபயோகிக்கின்றனர். மலேசியர்கள் தினந்தோறும் ஏறக்குறைய 208 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள் என பி.ப.சங்கத் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கூறினார். ஆனால் ஒரு சிங்கப்பூரியர் சராசரி 157 லிட்டர் தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறார். ஆகவே மலேசியர்கள் தங்களின் தண்ணீர் விரையத்தைக் குறைக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

குளிப்பதற்கும், பல் துலப்பதற்கும் அதிக அளவிலான தண்ணீரை மலேசியர்கள் விரையமாக்குகின்றார்கள் என்றும் இத்ரிஸ் கூறினார்.

குளிக்கும் போது சுமார் 100 லிட்டர் தண்ணீர் விரையமாகிறது. ஒரு 3 நிமிட ஷவரில் (shower) குளிக்கும் போது, 50 லிட்டர் தண்ணீர்தான் விரையமாகிறது. இதற்கு அந்த ஷவரில் குறைந்த நீரோட்டம் கொண்ட தலையைப் பொருத்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

தண்ணீரை விரையமாக்குபவர்களுக்கு அபராதமும் மிச்சப்படுத்துபவர்களுக்கு வெகுமதியும் தரப்பட வேண்டும் எனவும் இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

தண்ணீரை மிச்சப்படுத்துகின்ற சில வழிகளையும் அவர் தெரியப்படுத்தினார்.

குளிர்ச்சியான காலை அல்லது மாலை பொழுதில் மட்டுமே செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தட்டில் வைத்து கழுவுவது சிறந்தது. குழாயைத் திறந்து ஓடும் நீரில் கழுவினால் தண்ணீர் அதிக அளவு விரையமாகும்.

மீன் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது அதன் நீரை உங்கள் செடிகளுக்கு ஊற்றலாம். அந்நீரில் அதிக அளவு சத்துக்கள் இருக்கின்றன.

ஒரு வாளி சோப்பு நீரைக் கொண்டு உங்கள் கார் அல்லது மோட்டார் வண்டியைச் சுத்தப்படுத்திய பிறகு ரப்பர் பைப்பைக்கொண்டு விரைவாக கழுவி விடுங்கள். திறந்த பைப்பைக் கொண்டே கார் கழுவினால் ஒரு அரை மணி நேரத்தில் 500 லிட்டர் தண்ணீர் விரயமாகின்றது.

தண்ணீரை சேமிக்கும் வழிமுறைகளை குழந்தைகளுக்கு அவ்வபோது சொல்லித் தர வேண்டும் என்றும் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கேட்டு கொண்டார்.



எஸ்.எம். முகம்மது இத்ரில்
தலைவர்

No comments:

Post a Comment