நான் சிங்கையில் படித்துக் கொண்டிருந்த போது, பள்ளிப் பாடங்களைத் தவிர்த்து, பிற வார மாத இதழ்கள் புதினங்கள் என வாசிக்கத் துவங்கியக் காலங்களில், என்னுடன் நெருங்கியத் தொடர்புக் கொண்டிருந்தவர் மாமனிதர் மாமேதை அவரின் மறைவிற்குப் பிறகும், அவர் விட்டுச் சென்ற எண்ணங்கள், அறிவிற்கு உணவாகும் கருத்துக் குவியல்கள் அனைத்தும், இன்னும் எனது மனதில் பசுமையாக படர்ந்துள்ளன.
கருத்தாழமிக்க கருத்துக்களைத் தெளிவாக ஆணித்தரமாகத் தனித்தமிழில் வெல்லும் சொற்களைக் கொண்டு, எழுதவும் பேசவும் கூடியவர். கூறியப்படி வாழ்ந்து காட்டியவர். இவரது எளிய நடைச் சாமானியரும் அறிந்து தெளிவுப் பெற வியலும். சிறப்புக்கள் கொண்டுள்ள எனது மதிப்பிற்குரிய பெரியவர், திருச்சி மாவட்டத்தின் குக்கிராமத்தில் பதினாறு பிள்ளைகளில் கடைக்குட்டியான தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள்.
கேடில்லா சிறந்த நூல்களை விட ஒரு நல்ல நண்பன் என்பர். இவரது நூல்களைப் படிக்கும் ஒவ்வொரு முறையும், ஆசிரியரே முன் நின்றுப் போதிப்பது, கலந்துரையாடுவதுப் போன்ற உணர்வே மேலோங்கி நிற்கும் நின்றது. குறிப்பாக இவரின் எண்ணங்கள், அறிவிற்கு உணவு, நல்வாழ்வுக்கு வழி போன்ற நூல்களைப் படிப்பதன் வழி, மனநிலைத் தெளிந்த நீரோடையைப் போல் தெளிவடைவதுப் புதுச் சிறப்பாகும். அவற்றில் கூறப்பட்டிருந்த நல்லப் பழக்கங்களை வழக்கமாக்கிக் கொண்டு, வாழ்வைச் செம்மைப் படுத்திக் கொள்ள உறுதுணையாக இருந்தது. எனவே என் மானசீக ஆசானாக வரித்துக்கொண்டேன்.
அன்றாடும் வாழ்க்கை நடைமுறையி்ல் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், ஏமாற்றங்கள், தடுமாற்றங்களைச் சமாளிப்பதற்கு, தெம்பும் திறனும், மனதிடனும், மனப்பக்குவமும் ஏற்பட்டது. மனசோர்வு, மனத்தளர்ச்சி தோன்றும் சமயங்களில், அவரது சத்தான கருத்துரைகள் நல்ல ஊட்டச்சத்தாக அமைந்ததின் வழி, வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ள முடிந்தது. மற்றும் இவரின் மும்மணிகள், நான் மணிக்கடிகை, ஐந்து செல்வங்கள், ஆறு செல்வங்கள், தமிழின் சிறப்பு போன்ற நூல்கள் தமிழின் பால் என்னை வெகுவாக ஈர்த்தன. வள்ளுவர் உள்ளம், வள்ளுவரும் குறளும், திரக்குறள் கட்டுரைகள், திருக்குறள் புதைப்பொருள் (2 பாகங்கள்) இந்த நூல்களும் இவருக்குச் சிறப்புக் கூட்டுக்கின்றன. இரண்டடிக்குறளுக்கு இரத்தினச் சுருக்கமான விளக்கம் தந்திடும் இவரது பாணியை மிஞ்சிட யாருமிலர். பாலர் முதல் பல்கலைக்கழக மாணவர் வரை, சிறியவர் பெரியவர் என எல்லாத் தரப்பினரும் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டிய நூல்கள் இவருடையது. மேற்கண்ட இவரின் நூல்கள் கையடக்க அளவில் 50 பக்கங்களுக்கு மேல் போகாதவை, கருத்தில் சிகரமானது.
என்து மானசீக ஆசானை நேரில் காணும் வாய்ப்பிற்காக ஏக்கத்துடன் காத்திருந்ததது வீண் போகவில்லை. 1987-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் 6வது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது நிறைவேறியது. சந்திப்பு ஒரு சில நிமிடமேயானாலும், நேரில் கண் குளிரப் பார்த்து, அவரின் சன்னமான குரலைக் கேட்டது, அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டதைப் பெரும் பேராகக் கருதி, எல்லையற்ற மகிழ்வு எய்தினேன்.
தொகுத்தவர் : டி.ராமன்ஜி அவர்கள்
No comments:
Post a Comment