Thursday, October 23, 2008

தீபாவளிக்கு மாமிச விளம்பரங்கள் வேண்டாம் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

தீபத்திருநாள் தீபாவளி நெருங்கிவிட்ட நேரத்தில், வானொலியில் ஒலிபரப்பப்படும் இறைச்சி விளம்பரங்களுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது மாமிச உணவுகளை உட்கொள்ளுங்கள் என ஒலிபரப்பாகும், " இறைச்சி ", விளம்பரங்கள் தீபாவளியின் உண்மையான தத்துவத்தை மறைத்துவிடுகின்றன என பி.ப.சங்க அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

தீபாவளிப் பண்டிகையின் சிறப்பு அம்சங்களில் உணவும் முக்கிய இடத்தை வகிக்கிறது. தீப வழிபாடு முதலிடம் வகித்தாலும் பறிமாறப்படும் உணவிலும் சிறப்பு அம்சத்தைப் பெறுகின்றது. இந்த நாளில் சைவ உணவுதான் வழங்கப்பட வேண்டும் என கூலிம் தியான ஆசிரமத்தின் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி ஆணித்தரமாக கூறுகின்றார்.

ஆனால், வானொலியில் இறைச்சி விளம்பரத்தை ஒலிபரப்பி, தீபாவளியின் நோக்கத்தையே கலங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என சுப்பாராவ் கூறுகின்றார்.

ஆண்டு முழுவதும் அசைவ உணவுகளை உண்பவர்கள், இந்த தீபாவளி தினத்திலாவது சைவ உணவை உண்டு தீபத்திருநாளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றார் அவர்.

தீயவற்றிலிருந்தும், கொடுமைகள் செய்வதிலிருந்தும் விடுபட வேண்டிய நாளில், மிருகங்களையும், பிராணிகளையும் துடிதுடிக்கக் கொன்று சமைத்துச் சாப்பிடுவதும், அதற்கு விளம்பரம் செய்வதும் மிகக் கொடூரமான செயல் என சுப்பாராவ் கூறினார். இச்செயலை நரகாசுரன் காண நேரிட்டால் கூட வருத்தப்படுவார்.

வாழ்க்கையை முறைப்படுத்தி, எண்ணங்களை சீர்ப்படுத்தி, நன்கு சிந்திக்க வேண்டிய நாளில் மிருக பலி அவசிம்தானா என்பதைத் தீபாவளி கொண்டாடும் இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பிரகாசம் தருகின்ற நாளில், மிருகங்களும் பிராணிகளும் பிரகாசமாக சுற்றித் திரியட்டுமே. தீபாவளிக்காக அவற்றை வெட்டி தின்று நாம் மகிழ வேண்டுமா ஏன் சுப்பாராவ் கேள்வி எழுப்பினார்.

ஆண்டு முழுவதும் மாமிசத்தை தின்று தின்று பழகிவிட்ட நாம் இந்தத் தீபாவளிப் பண்டிகை தினத்திலாவது சைவ உணவுகளையும், பாரம்பரிய இந்திய பலகாரங்களையும் குடும்பத்தோடு உண்டு மகிழ்ச்சியாக இருக்க நம்மைத் தயார்படுத்திக்கொள்வோம் என என்.வி.சுப்பாராவ் கூறினார்.
நன்றி: பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

No comments:

Post a Comment