Wednesday, March 24, 2010

ஊதாரித்தனத்தினால் ஊஞ்சலாடுகிறது இந்திய குடும்பங்கள்! வீண் செலவுகளைக் குறைத்து சேமிப்பை உயர்த்த வேண்டும் என்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

“21 வயது பிறந்தநாளை 20 ஆயிரம் வெள்ளியில் கொண்டாகிறார்கள்
தொழிற்சாலையில் வேலை செய்யும் சில இந்தியப் பெண்கள்”


தேவையற்ற, பலவிதமான ஊதாரிச் செலவுகளால் பல இந்தியக் குடும்பங்களின் வாழ்க்கை பலதரப்பட்ட நெறுக்கடிகளை எதிர்நோக்கி வருகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

இப்படிப்பட்ட ஊதாரிச் செலவுகளுக்கு இவர்கள் கணக்கில்லாமல் செலவழித்து, உண்பதற்கு வயிற்றை காய வைக்கின்றார்கள் என்றார் பி.ப.சங்கத் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்

ஆங்கில கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு, பிறந்தநாள் விழா, ஆண்டு விழா, புது வாகன விழா, காதணி விழா, நாலு நம்பர் விழா, திருமண விழா என எண்ணற்ற விழாக்களுக்கு ஆயிரக்கணக்கில் பணத்தைச் செலவு செய்வது மிகவும் வருத்தமளிக்கிறது என்றார் இத்ரிஸ்.

தனது சேமிப்பிற்கு குறைவாகவும், நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சமைத்து உண்பதற்கு செலவு செய்யாமல், பிரயோஜனமற்ற காரியங்களுக்குப் பல இந்தியக் குடும்பங்கள் தண்ணீர்போல் பணத்தை விரயம் செய்வது தமக்கு வியப்பைத் தருவதாக இத்ரிஸ் மேலும் கூறினார்.

இப்பொழுது 21 வயது பிறந்தநாள் கொண்டாடுவது அதுவும் அழகிய வர்ண கார்டுகளில் அழைப்பிதழ் அடித்து கொண்டாடுவது ஒரு புதிய கலாச்சாரமாகிவிட்டது.

இப்படிப்பட்ட பிறந்தநாள் விழாக்கள் முன்பு வீடுகளில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இப்பொழுது கேளிக்கை மையங்களில் 20 ஆயிரம் வெள்ளி வரையில் செலவு செய்து கொண்டாடுகின்றார்கள் என்றார் இத்ரிஸ்.

பி.ப.சங்கத்திற்கு தெரிந்த வரையில் தொழிற்சாலையில் வேலை செய்யும் இந்தியப் பெண்கள் தங்களின் 21 வயது பிறந்த நாளை “பேக்கஜ்” முறையில் 20 ஆயிரம் வெள்ளி வரை கொடுத்து கொண்டாகின்றார்கள் என்று தெரிய வருகிறது.

பணத்தின் அருமை, அதனை எப்படி நிர்வகிப்பது என்பதை இந்த இந்திய பெண்கள் உணரவில்லை என்பதையே இது காட்டுகின்றது என்றார் இத்ரிஸ்.

இப்பொழுதே பல இந்திய குடும்பங்கள் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். சொந்த குழந்தைக்கு புத்தக பை வாங்கி கொடுக்க முடியாத அளவுக்கு சில பெற்றோர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இவர்களின் ஊதாரிச் செலவுகளுக்கோ கணக்கே இல்லை.

விழாக்கள் என்ற பெயரில், பல ஆயிரங்களைச் செலவு செய்வதை இந்திய பெற்றோர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இளைஞர்களும், தொழிற்சாலையில் வேலை செய்யும் இந்தியப் பெண்களும் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பல ஆயிரங்கள் செலவு செய்வதை நிறுத்த வேண்டும் என்றார்

தங்கள் குழந்தைகளுக்கு சேமிப்பைக் கற்றுக் கொடுத்து, எதிர்காலத்தில் அவர்கள் கையேந்தும் நிலைக்கு உட்படாமலிருக்க, பணத்தின் முக்கியதுவத்தைக் கற்றுத்தர வேண்டும் என்றார் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்.

எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்
தலைவர்

உலக மர்ம இடங்கள்













ஒரிசா பட்டினிக் கொலைகள் - மீண்டும் ஒரு கண்ணோட்டம்


அரசால் அறிவிக்கப்படும் எந்த திட்டமும் மக்களுக்கு உருப்படியாய்க் போய்ச் சேர்வதில்லை என்பதைத் தமது பட்டினிச் சாவுக்களின் மூலம் உலகுக்கு காட்டியுள்ளனர் ஒரிசாவின் பலங்குடி மக்கள்.

போக்குவரத்து உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உண்பதற்கு உணவின்றி, மாங்கொட்டைகளைக் கஞ்சியாக்கி உண்டு, பசியாறுவதாய் நினைத்து உயிர்விட்ட ஒரிசா பழங்குடி மக்களின் சோகம் நம் நெஞ்சை உலுக்குகிறது.
வெள்ளம் அல்லது வறட்சி என்று அவலத்திற்கு உள்ளாகிவரும் ஒரிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டதி்ல் உள்ள காசிபூர் ஒன்றியத்தில்தான் இந்த நிலை. பலர் செத்தும் இந்த " ஓட்டு வங்கிகளுக்கு" ஆறுதல் சொல்லக்கூட யாரும் இல்லை.

"அவர்கள் கெட்டுப்போன மாங்கொட்டைகளை தின்றதால்தான் செத்தார்கள். பட்டினியால் சாகவில்லை" என்ற வியாக்கியானங்களுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. அரிசியோ, கோதுமையோ இருந்திருந்தால் அவர்கள் ஏன் மாங்கொட்டைகளைத் தின்கிறார்கள்?

ஒரிசா அரசாலட நடத்தப்படும் இந்த பட்டினிப் படுகொலைகளை பத்திரிக்கையாளர்களோ அம்பலப்படுத்தி உள்ளனர். ஒரிசாவிலிருந்து வெளியாகும் சாம்பா நாளிதழ், ஈநாடு நாளிதழ்களின் பகுதி நிருபர்களே இச்செய்திகளை வெளியுலகிற்கு கொண்டு வந்தனர். பின்னர் டெல்லி பத்திரிக்கைகள், சர்வதேச தொலைக்காட்சிகள் என ஹெலிகாப்டர்களிலும் நிருபர்கள் வந்து குவிநதனர். இதனிடையே ஒரிசாவின் படாகமடா கிராமத்தில் 1100 ரூபாய்க்கும் 15 கிலோ அரிசிக்கும் 4 வயது சிறுவனும் 2 வயதேயான சிறுமியும் விற்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. தந்தையற்ற, விதவைத் தாயும் பட்டினிக்குப் பலியாகிவிட்ட நிலையில் இக்கொடுமைகள் நடந்துள்ளது.

இத்தகைய செயலைச் செய்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார் ஒரிசா வருவாய்த்துறை அமைச்சர் பிஷ்வபூசன் அரிசந்தன்.

இந்நிலை உருவாக் காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை?

Bookmark and Share

Saturday, March 20, 2010

தண்ணீரை நேசிப்போம்!

வானம் பார்த்து, இரு கரங்களை ஏந்தி, மழையை வேண்டி நின்ற மக்களை, சுவடுகள் இல்லாமல் சூரியனை மறைத்த கருமேகங்களைப் போல, மறைத்துக்கொண்டிருக்கின்றது இந்த கலியுகம். இறைவன் கொடுத்த 5 அன்பு பரிசுகளில் ஒன்று தண்ணீர். தண்ணீரை பற்றி நாம் என்றாவது சிந்தித்தது உண்டா? உண்டு! குழாயில் தண்ணீர் வராத நாள் அன்றுதான்.

“நீர் இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு (வான் சிறப்பு -20)

உலகமும் உயிர்களும் நிலைத்திருப்பதற்கு தண்ணீர் இன்றியமையாதது. அது மட்டுமில்லாமல், மக்களின் வாழ்க்கையில் ஒழுக்கம் நிலைப்பெற்று வளர்வதற்கும், மழை அற்புதமான சேவையை வழங்கிக்கொண்டிருக்கின்றது, என்பது வள்ளுவர் நமக்குப் புகட்டும் தெளிவுரை.

ஆனால் இன்றைய நிலைமையோ வேறு. கரியமிலவாயு பெருக்கத்தால் உலகம் நாளுக்கு நாள் சூடாகிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், மனிதனின் அறியாமையினாலும் பேராசையினாலும் இயற்கை வளங்கள் இழிவுக்கு உட்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றன. காடுகளை அழித்து, நாடுகளை வெளிப்படுத்திய விஞ்ஞானம், மேம்பாட்டுத் திட்டங்களுக்காக பெருமளவில் பல நகரங்களை உருவாக்கி, பல அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி, நிலத்தடியில் உள்ள தண்ணீர்களை உறிஞ்சி, நரகங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. பினாங்கு மாநிலத்தில் மாட்டுப்பாலுக்கும் நிலத்தடி நீருக்கும் பெயர் போன புவா பாலா கிராமம், மேம்பாட்டுத் திட்டத்தால் முற்றாக அழிந்து போனதை நாம் மறந்திட முடியாது. இப்படிப்பட்ட அழிவுகளால் கடல், வானம் மற்றும் நிலம் என்று மாறிக்கொண்டிருக்கும் தண்ணீரின் சுழற்சி பாதிக்கப்படும் என்பதை மனிதன் அறிவதில்லை.

அதிகரித்து வரும் மக்கட்தொகைகள், விரிவாகிக் கொண்டிருக்கும் வேளாண்மை;, பெருகிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் சேர்ந்து உலகத்தின் தண்ணீர் பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகின்றன. அதையும் தாண்டி சில உலக நாடுகள் நிலத்தடி நீர்களை தங்களது சுயநலத்துக்காக மூன்றாம் உலகத்திலிருந்து அத்துமீறி சுரண்டிக்கொள்கின்றன. புதிய நிர்வாகத்தின் அம்சங்களான நீர்தேக்கங்கள், கால்வாய்கள், குழாய்கள், நீரேற்றும் நிலையங்கள், கழிவுநீர் மையங்கள், தூய்மைப்படுத்தும் நிலையங்கள் போன்றவற்றை அமைக்கவும் நிர்வக்கிக்கவும் ஏராளமான பணம் தேவைப்படுகிறது. இதனால் பணத்தட்டுப்பாடு உள்ள நாடுகள் மிகப்பெரிய சவால்களை எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றன.


எதிர்காலத்தில், பூமி சூடாவதால், தட்பவெப்பநிலை எப்படி மாறும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. நவீன கருவிகளைக் கொண்டு சிலவற்றை நம்மால் கண்டுபிடிக்க முடியும். தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான நீரை தொழிற்சாலைகளைக் கட்டும் பொழுதே நிறுவிக்கொள்கின்றன. மாறிவரும் தட்பவெப்பநிலை போக்கிற்கு ஏற்ப வேளாண்மையில் மாற்றம் செய்வது மிகவும் சிரமமான செயலாகும். இவ்வகையான பிரச்சனைகளைச் சமாளிக்க பல நாடுகளைச் சேர்ந்த தனியார் சங்கங்கள், மழை நீர் சேகரிப்பு, கழிவு நீர் சுத்திரிப்பு, நீர் குழாய்கள் கட்டுவது. மக்களுக்கு தண்ணீர் விழிப்புணர்ச்சிகள் போன்ற இன்னும் சில சின்னஞ்சிறு தீர்வுகளை கண்டுபிடித்து வெற்றியும் கண்டுள்ளனர். நமது நாட்டிலேயே பல சங்கங்கள் இயற்கை பாதுகாப்பதில் மிகவும் அக்கறை கொண்டுள்ளன.

குறிப்பாக, பினாங்கு மாநிலத்தில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கம், மரம், குப்பை,தண்ணீர் மற்றும் நெகிழி பற்றிய வழிகாட்டி புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்காக வெளியிட்டுள்ளது. அப்புத்தகங்களை பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் படித்து பயனடையக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

மாணவரும் சுற்றுச்சூழலும் - மரம்

மாணவரும் சுற்றுச்சூழலும் - குப்பை

மாணவரும் சுற்றுச்சூழலும் - தண்ணீர்

மாணவரும் சுற்றுச்சூழலும் - நெகிழி

நம்முடைய வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதும் நெறிமுறையைப் பின்பற்றுவதும் முக்கியமானது. தண்ணீர் நிர்வாகத்தை, நம்மிலிருந்து பிரித்துப் பார்;த்து, அதைக் கட்டுப்படுத்துவது, நமது உடலிருந்து இரத்தத்தைப் பிரித்து அதை வேறு ஒரு இடத்திற்கு அனுப்புவதற்கு சமமாகும். ஆனால் இவை அனைத்தையும், புதிய சமுதாயம், நீர் குறித்து கொண்டிருக்கும் மனப்பான்மைதான் இங்கு முக்கிய தடைக்கல். நம்மில் பலரும், தண்ணீர் என்பது குழாயில் கொட்டும் ஒரு வித திடப்பொருள் என்றுதான் கருதுகின்றோம். நீருக்கு நாம், முன்பு கொடுத்து வந்த மதிப்பும், மரியாதையும் எப்பொழுதோ காற்றில் பறந்து விட்டது இன்று. தண்ணீர் விண்ணிலிருந்து இலவசமாக பொழிவதாலும், தண்ணீர் உற்பத்தி செலவைவிட, குறைவாக விற்கப்படுவதாலும், அது தாராளமாகக் கிடைக்கிறது என்ற மாயையை ஏற்படுத்துகின்றது.


“கிணறு காய்ந்தால்தான் நீரின் அருமை தெரியும்” என்று பெஞ்சமின் பிராங்ளின் கூறியிருந்ததைப் போல, வறட்சியும் பஞ்சமும் ஏற்படும் வரை நீர் சிக்கனம் பற்றி நாம் சிந்திக்கப்போவதில்லை. தனிப்பட்ட முறையில் பொருள் வாங்குவதைக் குறைப்பதன் மூலம், வீணாக்குவதை தவிர்ப்பதன் மூலமும், நேரடியாக கழிவறைகளில் குறைவான நீரை பயன்படுத்துவதன் மூலமும், நீர் சிக்கனத்திற்கு உதவ முடியும். இப்பொழுது மனித இனத்திற்கு சவாலாக இருந்து வரும், கடுமையான இயற்கை சீற்றங்கள், பொருளியல் பின்னடைவு, உணவுப் பற்றாகுறை, பன்னாட்டு மோதல்கள் போன்றவற்றை தடுக்க வேண்டுமானால், வானத்தை வணங்குவோம், காற்றைச் சுத்தபடுத்துவோம், நெருப்பைக் கட்டுப்படுத்துவோம், நிலத்தை வளப்படுத்துவோம், தண்ணீரை மதிப்போம், மொத்தத்தில் இயற்கையை நேசிப்போம், நாமும் செழிப்பாக வாழ்வோம்.

Tuesday, March 16, 2010

தமிழர்களை ஏமாற்றும் மலேசிய அரசு -மலேசிய தமிழ் எழுத்தாளர் அருண் குற்றச்சாட்டு!

மலேசியாவிலிருந்து தமிழகம் வந்திருந்த தமிழ் எழுத்தாளர் சீ.அருண், 'சயாம்-பர்மா மரண ரயில் பாதை' மறைக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு என்ற நூலை மதுரையில் வெளியிட்டு பேசினார். அவர் பேசும் போது, ஒடுக்கப்பட்ட பல்வேறு இனங்களை மேற்கோள் காட்டி, தமிழர்களும் அவ்வாறு ஒடுக்கப்படும் இனமாக இருப்பதைக் குறிப்பிட்டார்கள்.
உலகின் பல தேசிய இனங்கள் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவை வளப்படுதத கறுப்பின ஆப்பிரிக்க மக்கள் கொண்டு செல்லப்பட்டனர். அடிமைகளாக விலை பேசியும், ஏமாற்றியும், துப்பாக்கி முனையில் விலங்குகளைப் போல் சங்கிலியால் பிணைத்து கப்பலில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர்.

இன்று அந்த மக்கள் தங்கள் தாய்நாடு எது என்று தெரியாமல், ஆப்ரோ அமெரிக்க இனமாக வாழ்கின்றனர். அதனை குறிக்கும் விதமாக இன்றும் தங்கள் பெயருக்கு முன்னால் எக்ஸ் என்ற ஆங்கில எழுத்தை சேர்த்துக் கொள்கின்றனர். 1960 களில் அமெரிக்காவில் புகழ் பெற்று விளங்கிய தலைவர் மால்கம் எக்ஸ் இதற்கு ஒரு உதாரணம்.

கறுப்பின மக்களை கையாண்ட அதே வழிமுறைகளை ஆசியாவில் பயன்படுத்தினர் பிரிட்டிசார். அதற்கு பெருமளவில் இரையாகியது தமிழினம். அந்த வகையில் கறுப்பின மக்களுக்கு அடுத்தபடியாக சொல்லண்ணா துன்பங்களை அனுபவிததது தமிழ் இனம் தான். தென் ஆப்ரிக்கா, பர்மா, மேற்கிந்திய தீவுகள், பிஜி, மொரிசியஸ்,சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அடிமைகளாக கடத்தப்பட்டனர். அங்கிருந்த கரும்பு தோடடங்களையும், ரப்பர் தோட்டங்களையும் வளப்படுத்தினர். இலங்கைக்கும், மலேசியாவுக்கும் இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட மக்கள் பெரும்பாலும் மதுரை, நெல்லை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, தென்ஆற்காடு, வடஆற்காடு, சேலம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள்.

பிரிட்டிசாரை எதிர்க்க ஜப்பானுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டார் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இந்தியாவையும் தனது பிடிக்குள் கொண்டு வர திட்டமிட்டது ஜப்பான். ஆனால் ஜப்பானிலிருந்து படைகளை கொண்டு செல்ல அதிக காலம் பிடிக்கும். அதே நேரத்தில் செலவும் அதிகம். எனவே சயாமிலிருந்து (தாய்லாந்து) பர்மா ( இப்போது மியான்மர்) வரை சுமார் 416 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரயில் பாதை அமைக்க முடிவு செய்தனர். இதற்கு ஜப்பான் தன்னால் பிடிக்கப்பட்ட இங்கிலாந்து, நியூசிலாந்து,ஆஸ்திரேலியா, போலந்து,நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த போர்க்கைதிகளை பயன்படுத்தியது. இருந்தாலும் போதுமான வேலையாட்கள் இல்லை. இந்த நிலையில் மலேயாவில் பிரிட்டிசார் வசம் இருந்த இரப்பர் தோட்டங்களில் பணிபுரிந்த தமிழர்களையும்,மலேயா,சிங்கப்பூர், பர்மா, சயாம் மக்களையும் இரயல் பாதை பணிக்காக கொண்டு சென்றனர்.
அந்த இரயில் பாதை வேலைக்காக போய் தமிழர்கள் பட்ட துன்பம் படுபயங்கரமானது. மலாயா-சயாம் ரயில் பாதை மிக நீண்ட தூர பயணமாகும். இடையிடையே உள்ள ரயில் நிலையங்களில் இரயில் நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் ஓய்வெடுக்க வேண்டும். அப்போது மலம், சிறுநீர் கழிப்பது இயற்கையாக நிகழ வேண்டும். ஆனால் பயணத்தின் போது தொழிலாளர்களுக்கு மலம் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படாமலிருக்க மலத்துவாரத்தினுள் ஒரு வகை மருந்தை திணித்துள்ளனர். பாட்டாளி தமிழ்ப் பெண் ஒருத்தி இரயில் பாதை கட்டுமான தளத்தில் குழந்தை பெற்றெடுத்தாள். குழந்தை ஈன்றெடுத்த சில மணி நேரத்திற்குள் அந்த தாயை இழுத்துக் கொண்டு போய் தண்டவாள கட்டையை சுமக்க வைத்தான் ஒரு ஜப்பானியன்.

சயாம் மரண இரயில் பாதையில் வேலை பார்த்தவர்கள் அதிகமானோர் தமிழர்கள் தான். அதாவது 60 விழுக்காடு தமிழர்கள். ஆனால் இன்றைய மலேசிய அரசு அதனை மறைத்து 60 விழுக்காடு மலேய இனத்த்வர் பணியாற்றியதாக சொல்கிறது. இந்த இரயில் பாதையில் பணியாற்றி பாதிக்கப்பட்டவர்களுக்காக ஜப்பானிய அரசு 1967 ஆம் ஆண்டு இரண்டரை கோடி வெள்ளியை மலேயாவிடம் இழப்பீடாக கொடுத்துள்ளது. ஆனால் இநத் பணம் பாதிப்புக்குள்ளான தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. இது வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.சயாம் மரண இரயில் பாதையில் பணியாற்றி இறந்த பிற இனத்து தொழிலாளர்களுக்கு நினைவு சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழர்களுக்கு எதுவும் இல்லை. அங்கு சென்ற மலாய் இனத்தவர்கள் தங்களுக்கான இழப்பீடை பெற சங்கம் வைத்து போராடுகிறார்கள். ஆனால் தமிழர்களுக்கு மட்டும் இத்தகைய எண்ணம் தோன்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இவர் வெளியிட்டுள்ள 'சயாம் பர்மா மரண இரயில் பாதை' என்ற புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள அவலங்கள் நெஞ்சை உருக்குவதாக இருப்பதுடன், மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட ஒரு வரலாற்றின் பதிவு எனப் பலராலும் கருத்துரைக்கப்பட்டிருக்கிறது.
- நன்றி தமிழ் மீடியா

Yahoo vs Google

மின்னஞ்சலில் பட்டாசாக கலக்கி கொண்டு இருந்த யாஹூவின் இடத்தை தற்போது தனது பல புதிய உத்திகளை புகுத்தியதன் மூலம் கூகிள் பிடித்து விட்டது. யாஹூ இதை செய்யத்தவறியதால் தன் இடத்தை மட்டுமல்ல தன் பெயரையே இழந்து வருகிறது. தற்போதெல்லாம் வெறும் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு காலத்தை ஓட்ட முடியாது என்பதை யாஹூ போன்ற மிகப்பெரிய நிறுவனம் ஏன் உணரத்தவறியது என்பது எனக்கு புரியாத புதிர்.

கூகிள் தினமும் ஒரு மாற்றம் என்று அசத்திக்கொண்டு வரும் வேளையில் வருடத்திற்கு சில மாற்றங்கள் கூட இல்லாமல் இன்னும் பழைய வசதிகளையே அப்படியே பயன்படுத்தி வருவது வருத்தமளிக்கிறது. பத்து வருடங்களாக யாஹூ மின்னஞ்சலை பயன்படுத்தி எந்த ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் தராததால் பொறுத்து பொறுத்து பொறுமை இழந்து தற்போது கூகிள் மின்னஞ்சலுக்கு மாறி விட்டேன்.

இருந்தாலும் யாஹூ வின் பழைய பாசம் :-) காரணமாகவும் மற்றும் யாஹூ மின்னஞ்சல் பயன்படுத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி இந்த இடுகை.

யாஹூ மின்னஞ்சலின் இடது புறத்தில் கீழே Application என்ற வசதி உள்ளது, இதை சிலர் கவனித்து பயன்படுத்திக்கொண்டு இருப்பார்கள் பலர் கவனித்து இருக்க மாட்டார்கள் அல்லது கவனித்தும் பயன்படுத்தி இருக்க மாட்டார்கள். அதில் உள்ள முக்கியமான இரு வசதிகளை பற்றி இந்த இடுகையில் பார்ப்போம்.

யாஹூ தரும் இந்த வசதிகள் யாஹூ வின் சொந்த வசதிகள் இல்லை மற்ற நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுடன் இந்த சேவையை உங்களுக்கு தருகிறது (அதாவது External Applications) இதை பயன்படுத்த விரும்பினால் உங்கள் அனுமதியை கேட்டு நீங்கள் அனுமதித்த பிறகே செயல்படும். யாஹூ பரிந்துரைப்பதால் இவர்கள் நம்மை தவறாக பயன்படுத்த மாட்டார்கள் என்பதால் நம்பிக்கையுடன் இவற்றை பயன்படுத்தலாம். ஏனென்றால் யாஹூ இதை எல்லாம் உணர்ந்தே இருக்கும், ஏதாவது நேர்ந்தால் தன் பெயர் முற்றிலும் கெட்டு விடும் என்பதை அறியாமல் இருக்காது. அதனால் நீங்களும் இதை தைரியமாக பயன்படுத்தலாம் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

இந்த வசதிகள் உங்களுக்கு பிடிக்கவில்லை அல்லது நம்பிக்கையில்லை என்று நீங்கள் கருதினால் எப்போது வேண்டும் என்றாலும் இந்த வசதிகளை உங்கள் மின்னஞ்சலில் இருந்து நீக்கிக் கொள்ளலாம்.

முதலில் நாம் பார்க்க போவது Zumo Drive

இதை நாம் இணைத்துக்கொண்டால் 1 GB அளவுக்கு உங்கள் தகவல்களை நீங்கள் இங்கே சேமித்து வைக்க முடியும்.

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது இந்த தளத்தில் உங்களுக்கு ஒரு பயனர் கணக்கு ஏற்படுத்த வேண்டியது மட்டுமே. ஒருமுறை நீங்கள் இதை செய்து விட்டால் நீங்கள் யாஹூ கணக்கில் நுழைந்தாலே போதுமானது ஒவ்வொரு முறையும் இதை பயன்படுத்தும் போதும் பயனர் கடவுச்சொல்(Password) கொடுக்கத் தேவையில்லை.

நீங்கள் யாஹூ கணக்கில் இருந்து எந்த ஃபைல் (setup, doc) வேண்டும் என்றாலும் அப்லோட் செய்து கொள்ளலாம். ஒரு ஃபைல் அளவு 100 MB வரை மட்டுமே இருக்க முடியும், இதை பின்னாளில் மாற்ற வாய்ப்புண்டு.

நான் 100 MB ஃபைலை விட அதிகமான MB யில் வைத்து இருக்கிறேன் அதை எப்படி அப்லோட் செய்வது?

அதற்கும் வழி இருக்கிறது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Zumodrive.com ல் சென்று அங்குள்ள மென்பொருளை தரவிறக்கி நிறுவ வேண்டியது மட்டுமே. இதை நீங்கள் செய்து விட்டால் உங்கள் Zumodrive ல் உள்ள தகவல் உள்ள இடம் உங்கள் கணிப்பொறியில் Z:\ (Virtual)டிரைவாக வந்து விடும். இதில் வழக்கமாக நீங்கள் காப்பி பேஸ்ட் செய்வது போல செய்தால் போதும் அதுவே Sync செய்து விடும். வழக்கமாக அப்லோட் செய்யும் போது ஆகும் நேரம் போல் ஆகாது.

இதில் உள்ள ஒரு ஃபைலை (தரவிறக்க சுட்டியை) நீங்கள் யாருக்கு வேண்டும் என்றாலும் யாஹூ மின்னஞ்சலில் இருந்தே அனுப்பலாம். இடது புறம் உள்ள My Drive ஐ க்ளிக் செய்து அதில் உள்ள உங்கள் ஃபைலை தேர்வு செய்து send பொத்தானை க்ளிக் செய்தால் போதும் பின் நீங்கள் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்கள் மின்னஞ்சலை வழக்கம் போல கொடுத்து அனுப்பிட வேண்டியது தான்.

இதன் முக்கியமான சேவை உங்களுக்கு இலவசமாக இடம் கொடுப்பது மட்டுமே! மின்னஞ்சலில் அனுப்பவது எல்லாம் அவர்கள் தரும் கூடுதல் வசதி.

இவர்கள் 1 GB இடம் கொடுத்தாலும் அதன் பின் சில போட்டிகள் வைக்கிறார்கள் அதில் நீங்கள் வெற்றி பெற்றால் இன்னும் 1 GB தருகிறார்கள், ஆக மொத்தம் 2 GB. இந்தப்போட்டி கூட நீங்கள் அதில் உள்ள வசதிகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே. எளிதான ஒன்று தான், நான் தற்போது 2 GB வைத்துள்ளேன்.

நீங்கள் அதிக இடம் வேண்டும் என்றால் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

drop.io

இதுவும் மேற்கூறிய ஒன்றைப் போலவே தான் ஆனால் மின்னஞ்சலுக்காக மட்டுமே. 100 MB அளவிற்கு நீங்கள் இதில் ஃபைலை அனுப்பலாம் என்பதே இதன் பயன்.

இதை இணைத்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டியது இடது புறம் உள்ள Attach Large Files ஐ க்ளிக் செய்தால் வரும் Select Files ஐ க்ளிக் செய்து உங்கள் ஃபைலை தேர்வு செய்து பின் Upload and compose E-mail என்ற பொத்தானை அழுத்த வேண்டியது தான். பின் உங்கள் அப்லோட் ஆன ஃபைலை நீங்கள் யாருக்கு அனுப்ப விரும்புகிறீர்களோ அவர்கள் மின்னஞ்சலை அதில் வழக்கம் போல கொடுக்க வேண்டியது தான்.

இந்த ஃபைல் 30 நாட்களுக்கு மட்டுமே இருக்கும், அதற்குள் நீங்கள் மின்னஞ்சல் செய்த நபர் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் அதில் உள்ள தகவல்கள் காலாவதியாகி விடும். இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது, ஃபைல் இவர்களது தளத்திலே இருக்கும். எனவே 100 MB ஃபைலை நீங்கள் மின்னஞ்சல் செய்தால் உங்கள் நண்பருக்கு செல்வது தரவிறக்க சுட்டி மட்டுமே உங்கள் ஃபைல் அல்ல.

நீங்கள் எதிர்பாராதவிதமாக ஒருவருக்கு அனுப்ப வேண்டிய ஃபைலை இன்னொருவருக்கு அனுப்பி விடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், கவலைப்பட வேண்டாம் திரும்ப Attach Large Files பகுதிக்கு வந்து அங்கே உள்ள ஃபைலை நீங்கள் நீக்கி விடலாம். இதன் மூலம் அவர் இதை தரவிறக்கம் செய்ய முடியாது.

மேலும் சில வசதிகள் இதைப்போல கொடுக்கப்பட்டுள்ளன ஆனால் இவை இரண்டும் நாம் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்ததால் இவற்றை மட்டும் கொடுத்து இருக்கிறேன். நான் கூறியதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் ஒரு முறை நீங்கள் செய்து பார்த்தால் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும்.

Monday, March 15, 2010

சிறப்பான முறையில் நடைபெற்ற எஸ்பிஎம் & எஸ்டிபிஎம் உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கு மாணவர்களும் பெற்றோர்களும் பயனடைந்தனர் !


பினாங்கு சுய அறிவாலயம் தியான ஆசிரமம் மற்றும் ஸ்ரீ பால தண்டாயுதபாணி இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த எஸ்.பி.எம் & எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்கில் சுமார் 250 மாணவர்களும் 200 பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.


எஸ்.பி.எம் & எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கான இந்த வழிகாட்டி கருத்தரங்கு 4வது முறையாக இந்த அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என அதன் ஏற்பாட்டு குழுவின் தலைவர் டாக்டர் இரா. சிவகுமார் கூறினார்.


இந்த வழிகாட்டி கருத்தரங்கில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களும் மாணவர்களுக்கான பல விளக்கங்களைத் தந்து உதவினர்.

எஸ்.பி.எம் மற்றும் எஸ்டிபிஎம் மாணவர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளுக்கு எந்த துறையைத் தேர்ந்தெடுக்கலாம், அரசாங்கம் வழங்குகின்ற சேவை மற்றும் சலுகைகள் பற்றி தெளிவாக விளக்கப்பட்டது.


பெற்றோர்களும் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கில் மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்லும் போது ஏற்படும் செலவுகள் பற்றியும் அவற்றை எப்படி சிக்கனப்படுத்தலாம் என்பது பற்றியும் மிக தெளிவாக விரிவுரையாளர்கள் விளக்கினர். பதிவு பெறாத துறையைத் தேர்ந்தெடுத்து அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் பற்றியும் விவரிக்கப்பட்டது.

மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த மதிப்பெண்களை வைத்து எந்த துறைகளை அவர்கள் தேர்ந்தெடுத்தால் மிக சுலபமாக மலேசிய பல்கலைகழகங்களில் சேரமுடியும் என்பது பற்றிய நுணுக்களை விரிவுரையாளர்கள் விளக்கியது கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

இறுதியாக இந்நிகழ்ச்சி வெற்றி பெற ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய மலேசிய அறிவியல் பல்கலைகழக மாணவர்ளுக்கும் நிதி உதவி வழங்கிய ஆதரவாளர்களுக்கும் தியான ஆசிரம பினாங்கு கிளை ஆலோசகர் என்.வி.சுப்பாராவ் நற்சான்றிதழ் வழங்கினார்.


சரஸ்வதி தேவி
செயலாளர்
சுயஅறிவாலயம் தியான ஆசிரமம் பினாங்கு கிளை