Thursday, February 26, 2009

திருமணம் - ஓ.சரஸ்வதி தேவி

இரண்டு மனங்களின், இரண்டு சிந்தனைகளின் ஒன்றிணைந்த பிணைப்பே திருமணம். திருமணம் என்ற பந்தத்தின் வழி, ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ளும் இரு ஜீவன்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களை காலம் முழுவதும் பகிர்ந்து கொண்டு ஒருவர் மற்றொருவரை அனுசரித்துக் கொண்டு, நீண்ட வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வதே இல்வாழ்க்கையாகும்.ஆனால் இந்த திருணம் என்பது எப்பொழுதும் மலர்கள் நிறைந்த ஒரு பசுஞ்சோலையாகவே இருந்து விடுவதில்லை.

வறண்டு போன ஒரு பாலைவனமாகவும் கூட இது மாறிவிடுவதுண்டு.திருமண வாழ்க்கை பூத்துக் குலங்கும் ஒரு பசுஞ்சோலையாக இருப்பதும், வறண்டுப் போன பாலைவனமாக மாறுவதும் இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும், இல்லற ஜோடிகளின் கைகளில்தான் உள்ளது.காதல் திருமணமாகயிருந்தாலும் சரி, பெற்றோர்கள் பார்த்து முடிக்கும் திருமணமாகயிருந்தாலும் சரி, திருமணமானவர்களிடையே இருக்கும் பொறுமையும், புரிந்துணர்வுமே வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் இரகசியமாகும்.

இருசாரார் ஒன்று சேர்ந்து நடத்துவதுதான் திருமண வாழ்க்கை. ஆதலால் ஒரு காரியத்தை இருபாலரும் சேர்ந்து செய்வதும், தங்கள் எண்ணங்களை ஒருவர் மற்றொருவருடன் பரிமாறிக் கொள்வதும், வெளிப்படையான பேச்சும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு மிக மிக அவசியமான “டானிக்கு” களாகும்.

ஒருவர் மற்றொருவருடன் பேசும் முறை, தம்முடைய எண்ணங்களைப் பகிர்ந்து, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறைகள் ஆகியவை திருமண வாழ்வில் முக்கிய பங்காற்றுகின்றன.இல்லற வாழ்க்கையில் வெற்றி என்பது ஒருவர் தம்முடைய இல்லறத்துணையின் மதிப்பையும், உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் புரிந்து கொள்வதையும்இ விட்டு கொடுக்கும் மனப்பான்மையையும் பொறுத்துள்ளது.ஆனால் துரதிஷ்ட வசமாக தம்பதிகள் பலர் இதனை உணராமலே திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கின்றார்கள்.

இதனால்தான் திருமண முறிவுகளின் எண்ணிக்கைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. மேலும் சிலர் மேற்குறிப்பிடப்பட்ட எது ஒன்றும் இல்லா சூழ்நிலையில் அனைத்தையும் பெற்றுக் கொண்டு காலம் தள்ளி வருகின்றனர். இன்னும் சிலர் எதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் பிரிந்து வாழ முடிவு செய்கின்றனர்.அதிகரித்து வரும் திருமண முறிவுகளும், திருமண பிளவுகளும் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கையின் அறிகுறிகள் அல்ல! இந்நிலை சமூகத்தினரிடையே குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியும், எதிர்கால சந்ததியினரிடையே பாதுகாப்பற்ற ஒரு நிலையையும் ஏற்படுத்த நேரிடும்.

தொடரும்...

Wednesday, February 25, 2009

வானம் ஏன் நீலநிறமாக காட்சியளிக்கிறது?

இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் ஓர் அற்புதமே. நமது நெருங்கிய பழக்கம் காரணமாக நாம் அவற்றின் அற்புதத் தன்மையைக் காண்பதில்லை. "பூக்கள் பூக்கின்றன; மழை பொழிகின்றன; காற்று அடிக்கிறது; இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன;..." இவையெல்லாம் அன்றாடம் நடக்கும் வழக்கமான நிகழ்வுகளே. வானம் பகலில் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது. அதுவும் தெளிவான வானம் அப்பழுக்கற்ற நீல நிறமாகக் காட்சியளிப்பது எத்தனை அற்புதமான காட்சி.

விப்ஜியார் ( Vibgyor) - சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா என்னும் ஏழு வண்ணங்களில், மற்ற ஆறினை விட்டுவிட்டு வானம் ஏன் நீல நிறத்தைத் தன்மீது போர்த்திக் கொண்டது? இக்கேள்வி விடையை அண்ணாந்து பார்த்து இது குறித்துச் சிந்தனை செய்தால் போதும்.

சூரிய ஒளி வானத்தையும் வளிமண்டலத்தையும் பிரகாசிக்கச் செய்கிறது. இரவில் நம் கண்களுக்குப் புலப்படாத வளிமண்டலம் சூரிய ஓளியின் மூலம் நமக்குத் தெரிகிறது. பெளர்ணமியன்று தெளிவான வானத்தைப் பார்ப்போம். சந்திர ஒளி சூரிய ஒளியின் பிரதிபலிப்பே என்றும் அறிவீர்கள். சந்திர ஒளியில் பார்க்கும் போது வானம் நீலநிறமாகத் தெரிவதில்லை என்பது விசித்தரமாகத் தோன்றவில்லையா? சூரிய ஒளியில் நீலமாகத் தெரியும் வானம் சந்திர ஒளியில் அவ்வாறு தெரிவதில்லை. இதற்கான விடை சந்திர ஒளி சூரிய ஒளியைக் காட்டிலும் மிக மிகக் குறைவு என்பதே. கணக்கிட்டுப் பார்த்தால் சந்திர ஒளி, சூரிய ஒளியில் ஐந்து லட்சத்தில் ஒரு பங்கே என்று தெரிகிறது. இது மிகமிகக் குறைவான அளவு ஆகும்.


இருப்பினும் இரவில் நமக்கு இது பிரகாசமாகத் தெரிவதற்குக் காரணம் நம் கண்கள் குறைந்த ஒளிக்குப் பழகிக் கொண்டுவிடுவதனாலேயே. சூரிய ஒளி, சந்திர ஒளி இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மனிதர்களின் காட்சி ஆற்றலைப் பற்றிய ஒரு உண்மை விளங்கும். நிறங்களைக் கண்டுணர மனிதர்களுக்கு சூரிய ஒளி பிரகாசமாக இருப்பதனாலேயே வானத்தின் நீல நிறம் நமக்குத் தெரிகிறது. இவ்வாறு அதிகப் பிரகாசமான வெளிச்சத்தில் மட்டுமே நிறங்களை நாம் காணமுடியும். பிரகாசம் குறையக் குறைய நிறங்கள் மறைந்து போகும்.

சூரிய ஒளியின் நிறமாலையில் நீல நிறம் மிகமிகக் குறைந்த பிரகாசத்தைக் கொண்டது. மொத்த ஒளியில் நாற்பதில் ஒரு பங்கே (1/40) நீல நிறத்தின் பிரகாசம். வானத்தில் நாம் காண்பது இந்த நாற்பதில் ஒரு பங்கான நீல நிறத்தை மட்டுமே. அதிக பிரகாசமுள்ள மற்றநிறங்கள் காணாமல் போய்விடுகின்றன. நீல நிறம் மற்ற நிறங்களை மூடி மறைத்து விட்டது இது ஒரு குறிப்பிடத்தக்க உண்மை.

சில சமயங்களில் ஆகாயத்தில் ஆங்காங்கே வெள்ளை மேகங்களைக் காணலாம். இத்தகைய வெள்ளை மேகங்கள் வானில் பவனி வரும் காட்சி மிக அற்புதமான ஒன்றாகும். இவ்வாறு வெள்ளை மேகங்கள் இருக்கும் போது வானம் பளீரென்று நீலநிறமாகக் காட்சியளிப்பதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்குக் காரணம், இந்த மேகக் கூட்டங்கள் உண்டாகும் போது அவை வளிமண்டலத்திலிருந்து தூசிப் படலத்தை தாங்கள் ஈர்த்துக் கொண்டு சுத்தம் செய்து விடுவதே.

பளீரென்ற வெள்ளை மேகங்களுக்கிடையே அற்புதமான நீலநிறத்துடன் வானம் காட்சியளிப்பது அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய ஒன்றாகும். உண்மையில் வெள்ளை மேகங்கள் நீர்த்துளிகளாலும் தூசியினாலும் ஆனவை. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தூசிகள் இல்லாவிட்டால் மேகங்களே உருவாக முடியாது என்பதே. இவ்வாறு மேகங்கள் உருவாகி வளிமண்டலத்தை ஒரளவிற்குச் சுத்தம் செய்துவிடுகிறது. உண்மையில் நாம் நீலவானத்தைப் பார்க்கும்போது, பூமியின் வளிமண்டலத்தைப் பார்க்கிறோம். அங்கு ஒளிச் சிதறல் ஏற்படுகிறது.

வானத்தில் பச்சை, மஞ்சள்,சிவப்பு ஆகிய நிறங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதுமட்டுமல்ல அவை நீலத்தைவிட பிரகாசமானவையாகவும் உள்ளன. ஆயினும் நாம் ஏன் அவற்றை காணாமல் நீல நிறத்தை மட்டும் காண்கிறோம்? இங்கு மனிதனின் காட்சி அமைப்பு(Vision) ஒரு காரணமாகிறது. நிற மாலையின் நீலப்பகுதி, பிரகாசம் குறைவாக மறைத்து அதுமட்டும் நம் கண்களுக்கு மட்டும் தெரியும். நிறமாலை முழுவதையும் இரண்டாகப் பிரிக்கலாம். நீலநிறம் முடியும் இடம் - அதாவது பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு இவை ஒரு பகுதி. மற்றவை நீலம், கருநீலம், ஊதா. முதல் பகுதியில் மற்ற நிறங்களிருப்பினும் மஞ்சள் நிறமே முதன்மையாக இருக்கும். அவ்வாறே இரண்டாவது பகுதியில் நீல நிறமே முக்கியத்துவம் பெறுகிறது. இதில் மஞ்சள் பகுதியை எடுத்துவிட்டால் நீல நிறமே தெரிகிறது. இதுவே வானம் நீலமாகக் காட்சியளிப்பதற்கான காரணம். மஞ்சளின் பிரகாசம் குறைக்கப்படுகிறதே அன்றி அது முழுவதுமாக நீக்கப்படுவதில்லை .

எனவே வானம் நீல நிறமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் வளிமண்டலத்தில் உள்ள திரண்மங்கள் ஏற்படுத்தும் ஒளிச்சிதறலே. பெரிய அலைகளைக் கொண்ட( Longwaves) மஞ்சள் நிறத்தின் சிதறல் குறைவாகவும் அடர்த்தியற்றும் இருப்பதால், அதிகமாகவும் அழுத்தமாகவும் உள்ள நீல நிறத்தின் சிதறல் மட்டுமே மிகவும் நன்றாகத் தெரிகிறது.

சுருங்கக் கூறின், வானம் நீலநிறமாக இருப்பதற்குக் காரணங்கள் பின்வருமாறு,

1. நிறங்களைக் கண்டுணர நமக்கு மிகவும் பிரகாசமான வெளிச்சம் தேவை என்பது நமது காட்சித்திறன் பற்றிய ஓர் அடிப்படை அம்சம். எனவே பகலில் சூரிய ஒளியில் மட்டுமே வானம் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது.

2. நமது காட்சித்திறன் பற்றிய மற்றொரு அம்சம் - நிறமாலையின் நீலப்பகுதி, அது பலவீனமாக இருப்பினும், மஞ்சள் நிறம் மிகக் குறைவாக இருக்கும் போது முக்கியத்துவம் பெறுகிறது.

டைனோசர் ஆணா? பெண்ணா?

பிரமாண்டமான டைனோசரை தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் பார்த்து நாம் பயந்து போயிருக்கிறோம். அருங்காட்சி யகத்திலே அதன் மாதிரி வடிவத்தைப் பார்த்து வியந்து போயிருக்கிறோம். ஆனால் இந்த டைனோசர் ஆணா? பெண்ணா? என்று உங்களுக்கு தெரியுமா?

டைனோசர் ஒரு பெண்தான் என்று அடித்துச் சொல்கின்றனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். இதற்கு ஆதாரமாக இருப்பது அவர்கள் நடத்திய எலும்புத் திசு ஆராய்ச்சி. 6 கோடியே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டைராசோசரஸ் ரெக்ஸ் என்ற டைனோசர் புதைவடிவத்தின் எலும்புத் திசுவை உயிருள்ள பறவைகளின் எலும்புத் திசுக்களுடன் ஒப்பிட்டு அமெரிக்காவின் வடக்கு கரோலினா அரசுப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் மேரி ஷ்வைட்ஸர் தலைமையிலான குழு ஆராய்ச்சி நடத்தியது. டி ரெக்ஸ் என்ற அந்த டைனோசர் ஒரு பெண் தான் என்றும் அது இறந்த போது முட்டையிடும் பருவத்தில் இருந்தது என்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

டி ரெக்ஸ் டைனோசர் புதைவடிவத்தின் உடைந்த கால் எலும்பில் வழக்கத்திற்கு மாறான எலும்புத் திசு லைனிங் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இப்படைப்பட்ட திசு இருப்பது டைனோசர் ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பதற்கு உதவியாக இருக்கின்றது. அது மட்டுமல்ல வெகு காலத்திற்கு முன்பே அழிந்து விட்ட பிரமாண்டமான டைனோசர்களுக்கு தற்போதைய பிரமாண்டமான பறவைகளான நெருப்புக்கோழி மர்றும் எமுள் எனப்படும் ஆஸ்ட்ரேலியப் பறவைக்கும் இடையே உள்ள தொடர்பை நிலைநாட்டவும் இந்த எலும்புத் திசு உதவியாக உள்ளது. டி ரெக்ஸ் டைனோசரின் எலும்பில் காணப்படும் வழக்கத்திற்கு மாறான திசு ஒரு மஜ்ஜை எலும்பாகும். இது இன்றைய பறவைகளில் ஒரு மெல்லிய நாள எலும்பாக உள்ளது.


இந்த எலும்புத் திசு இனப் பெருக்கத்துடன் தொடர்புடையது. உள்ளீடற்ற கால் எலும்பில் காணப்படும் இந்தத் திசு கடைசி முட்டை போடப்படும் வரை இருந்து விட்டு அப்புறம் மறைந்து விடுகின்றது. இந்தத் திருவை பறவையின் உடம்பு கிரகித்துக் கொள்கின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தத் தற்காலிகத் திசு ஈஸ்ட்ரோகன் அளவு கூடுவதால் உருவாகிறது. மேலும் முட்டையின் தோடு உருவெடுப்பதற்குத் தேவையான கால்சியம் சத்தை வழங்குகின்றது. இத்தகைய நாள எலும்பு தற்கால பெண் பறவைகளிடம் தான் காணப்படுகின்றது. டைனோசர்க்கு நெருங்கிய சொந்தக் காரரான முதலையிடம் கூட இந்தத் திசு இயல்பாக வளர்ச்சியடைகின்றது. கோழி கவுதாரி போன்ற பறவைகளின் நாள எலும்புக்கும் டைனோசர் நாள எலும்புக்கும் ஒப்பிட முடியவில்லை. ஆகவே நெருப்புக் கோழி எமுஸ் போன்ற பறக்காத பறவைகளின் கால் எலும்புடன் ஒப்பிட்டு ஆராய்ந்தனர். அதில் இந்த ஒற்றுமை தெரிந்து டைனொசர் ஒரு பெண் தான் என்று விஞ்ஞானிகள் முடிவுகட்டினர்.

Sunday, February 22, 2009

இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளே நீங்கள் என்ன செத்த பிணங்களா ?

எத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகள் இருந்தும் என்ன பயன் ?

அவரவர் அரசியல் என்னும் சாக்கடையை விளம்பரப்படுத்தவே உங்களின் தொ(ல்)லைக்காட்சிகள்.
எங்குமே இல்லாத "தொலைக்காட்சிகளிடையிலான யுத்தம்" இந்தியாவில் மட்டும்தான் உள்ளது.
நாள்தோறும் நாலு காசுக்குக்கூட பிரியோசனம் இல்லாத பல நிகழ்ச்சிகளை வழங்கும் அன்பானவர்களே...

உங்களின் தொப்புள்க்கொடி உறவுகளுக்காக தற்போது தமிழகமே திரண்டுள்ளது, ஆனால் நீங்கள் மட்டும் பின்நிற்பது ஏன் ?

நாள்தோறும் உங்கள் அயல் நாட்டிலே உங்கள் உறவுகள் செத்து மடிகிறார்கள், சாவின் விழிம்பிலே நிற்கிறார்கள்.

பச்சிளங் குழந்தைகள் பாசத்தை அறியமுன் பாடைக்கு போகிறார்கள்
உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்க ஒரு பாயின்றி, நாள்தோறும் பதுங்கு குழிகளுக்குள் பயத்தோடு அடைந்து கிடக்கிறார்கள்.

கேட்ப்பதற்கு யாரும் இல்லை, நாங்கள் கத்துகிறோம், வீதி வீதியாய் சென்று கெஞ்சுகிறோம், கண்டுகொள்ள யாருமில்லை.

சர்வதேசமே ! சிங்கள அரக்கர்களை தட்டிக்கேட்க வக்கில்லாத தலைவர்களே !
இதுதான் உங்கள் மனித நாகரீகமா ?

அன்பான தொலைக்காட்சிகளே, உங்களுக்கும் கேட்க்கவில்லையா ? இல்லை கேட்டும் செவிடர்களாக நடிக்கறீர்களா ?

அண்மையில் காஸாவில், இஸ்றேல் தாக்குதல் நடத்த, காஸாவில் நடப்பவற்றை அனைத்து அரபு தொலைக்காட்சிகளும் அதையே, அமை மட்டுமே ஒளிபரப்புச் செய்தன. அது உலகெலாம் சென்றடைந்தது, உரியவர்களை ஈாத்தது.

ஆனால் !!! நீங்கள் என்ன செய்கறீர்கள் ? உங்கள் உறவுகளுக்காக, தமிழ்பேசும் உறவுகளுக்காக என்ன செய்கிறீர்கள் ???

குறைந்த பட்சம் உங்கள் செய்திகளிலாவது "உண்மையை" ஒளிபரப்ப முடியாது என்றால், எதற்காக உங்கள் சேவை ???

வெளிநாட்டு ஊடகங்கள்கூட தயங்காமல் உண்மையை உரைக்கின்றன, உங்களால் மட்டும் முடியாது என்றால் ???

நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது ?
உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.
உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".
உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".
உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".
உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".
உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".
உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".
உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".
உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".
உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா".
உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".
உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".
உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".
உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".
உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".

அன்பானவர்களே, எம்மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை வெளிக்காட்டுங்கள்.

உண்மைகளைத் தயங்காமல் ஒளிபரப்புங்கள்.

அவர்களை சாவின் வழிம்பில் இருந்து காப்பாற்றுங்கள்.

மத்திய அரசின் நாடகத்தை அம்பலப்படுத்துங்கள்.

உலகத்தின் கவனத்தை எமைநோக்கித் திருப்புங்கள்

நன்றி : தமிழன் சிவா

உலகியலும் அருளியலும்-III

ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம் எனில் அது மக்கள் வாழ்க்கை நலத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும். வள்ளலார் மக்கள் வாழ்க்கை நலத்துடன் மட்டும் இல்லாமல் எல்லா உயிர்களிடத்தும் அன்பு பூண்டார். எல்லா உயிர்களிடத்தும் இறையை கண்டார். தயவு என்ற தவம் வள்ளலாரை பெரிய நிலைக்கு ஏற்றிவிட்டது. ஆனால் இன்றோ நாகரீகம் மற்றும் கல்வி வளர்ச்சியில் பெரிதும் வளர்ச்சி அடைந்தாலும் மக்கள் புற பூஜை களில் தான் அதிகம் திருப்தி அடைகின்றனர்.

தன்னுடைய அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய மறுக்கும் முதலாளி வர்க்கத்தினர் பிரபல கோயில்களில் கோடி கணக்கில் தங்கம் மற்றும் வைரத்தில் வித விதமான பொருட்களை வாங்கி தருவதும் நடைமுறையில் யாவரும் அறிந்ததே.

மற்றும் சிலபேர் போலி சாமியார்களிடம் ஏமாறுகின்றனர். தெருவிற்கு தெரு இப்பொழுது உள்ள தியான மையங்களையும் கூறலாம்.அன்றே காக புஜண்டர் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்.

பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
பணம்பறிக்க உபதேசம் பகர்வோ என்பான்

பிரமநிலை காட்டா மற்றான்
காசப் பொய்களையும் அன்றோ சொல்வான்
நேரப்பா சீடனுக்குப் பாவமாச்சு
நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோடமாச்சு
வீரப்பா அடக்குகின்ற இடத்தைப் பாரான்
விதிபோல முடிந்ததென்று விளம்புவானே....
சித்தர் ஞானக்கோவை : காகசுண்டர் பாடல் :35.

மேலும் சிலர் தயவு மற்றும் கருணையைப்பற்றி மிக அதிக அளவில் விளக்கம் அளித்துக் கொண்டிருப்பார்கள், ஆனால் நிஜ வாழ்வில் யாருக்கும் உதவி செய்ய முன் வரமாட்டார்கள்.

ஜாதி, மதத்தைப் பற்றி மேடையில் வாதிடுவோர், நிஜ வாழ்க்கையில் தங்களுடைய மகன்/மகளுக்கு அதே இனத்தில் வரன்களை பார்ப்பவர்களாக இருக்கின்றனர்.

ஜீவகாருண்யத்தை நினைப்பவர்கள் வேறு-பிற இனத்தவர்கள் சாப்பிட அழைத்தால் செல்வதில்லை.

எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு பிற மதங்களை இழி வாக பேசுவதும் , அடுத்தவர்களின் மனதை புண் படுத்துவதும் எவ்வாறு சன்மார்க்கத்திற்கும் பொருந்தும்.

எல்லாருடைய மனமும் இன்புற்றிருக்க வேண்டும் அல்லவா! அதுவும் செய்வதில்லை.

ஒரு சில தியான மையத்தில் இருக்கும் மூல விளக்கங்களைப் பார்க்கும் போது வள்ளலாருடைய கருத்துகள் தான் வியாபித்துருக்கின்றன. ஆனால் அவர்கள் அதை வெளிப்படையாக யாருக்கும் கூறுவதில்லை. (இங்கு மற்றவர்களை விமர்சனம் செய்வதற்காகவோ, அவதூறு செய்வதற்காகவோ எழுத வில்லை) பலரும் வியாபர ரீதியில் வள்ளாருடைய கருத்துகளை வேறு விதமாக மாற்றி தங்களுக்கு புகழை தேடுகின்றனர்.

அக பூஜையும் ஜீவகாருண்யமும் தான் இறை நிலையை உணர்த்தும் என்பதை பல சித்தர்கள் கூறியுள்ளனர்.
நட்ட க்கல் பேசுமோ நாதன் உள்ளிருக்கை யில்- ………

மற்றும்

"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே."

பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே! -சிவ வாக்கியர்

தவளையைப்போல வேதமெல்லாம் சாற்றுகின்றீர்
வந்தவழி அறியார்க்கு மந்தரமேது........ - ஞானவெட்டியான் 1500

உங்கள் தெய்வ உண்டெனவும் வேறு செய்து
அங்கங்கள் வேறுளதா யாகமங்களுற் பவித்தார்
பங்கமதாய் வேறு செய்யும் பாதகரே அங்குமிங்கும்
எங்கெங்குமாய் நிறைந்த ஈசனென்றறிகிலீரே "
- ஞானவெட்டியான் பாடல் 616

ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள்தாம் பூரணமே "
- பட்டினத்தார் பாடல் :30

நஞ்சுண்ண வேண்டாமே –அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்ச மலையாதே அகப்பேய்
நீ ஒன்றும் சொல்லாதே -------
-அகப்பேய் சித்தர்


தாம்திமித் திமி தந்தகோனாரே
தீந் திமித்திமி திந்த கோனாரே
ஆனந்த க்கோனாரே- அருள்
ஆனந்தக்கோனாரே!


ஆயிரதெட்டு வட்டமுங்கண்டேன்
அந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன்
மாயிறு ஞாலத்து நூற்றெட்டும் பாத்தேன்
மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் (தாந்)

மெய்வாய்கண் மூக்குசெவியெனும் ஐந்தாட்டை
வீறுஞ் சுவையொளி ஊரோசையாம் காட்டை
எய்யாமல் ஒட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்
ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே

மேலும்,
மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவகோனே-முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவகோனே
சினமெனும் பாம்பிறந்தால் தாண்டவகோனே-யாவும்
சித்தி யென்றே நினையேடா தாண்டவகோனே............ - இடைக்காடர்

ஆசை என்னும் பசுவையும் , சினம் என்னும் விஷ பாம்பையும் அடக்கினால் இறை வனை உணர முடியும், இவர் பாடல்கள் பெரும்பாலும் தாண்டவகோனே என்றும் கோனாரே என்றும் முடிகிறது.

திருமூலர்,
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்தோம்புகின்றேனே
-திருமந்திரம்
கொல்லா விரதம் குளிர்பசி நீக்குதல்
நல்ல விரதமடி-குதம்பாய்
நல்ல விரதமடி................

என்று ஜீவகாருண்யம் மற்றும் உயிர்ப்பலியைத் தடுக்கும் இவரின் பாடல்கள் எல்லாமே, குதம்பாய் என்று தன்னை அழைத்துக் கொண்டே முடிகிறது.

இதுபோல் நிறைய பாடல்கள் உள்ளன. விரிவஞ்சி ஒரு சில பாடல்கள் மட்டுமே இங்கு தரப்படுகின்றன.

மேலே குறிப்பிட்ட பாடல்கள் மற்றும் பல்வேறு சித்தர் பாடல்களில் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், மற்றும் ஆன்ம ஒழுக்கங்கள் பற்றி மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் திருவருட்பாவில் வள்ளலார் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.

இதுவும் ஆண்டவன் திருவிளையாடல் போலும் இல்லையெனில் வள்ளலாருடைய பொக்கிஷம் நமக்கு கிடைத்திருக்காது அல்லவா! வள்ளலாரும் யார் என்றும் நமக்கு தெரிந்திருக்காது.

ஒரு கடை நிலை பாமர மக்களும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் மிக தெளிவாக மிக நுட்பமாக வள்ளலார் திருவருட்பா-பாடத்தை வடிவமைத்துள்ளார்கள். எனவே இதில் ஒப்பீடு என்பது தேவையில்லை. அனைவரும் சமுதாயத்தை செம்மைப்படுத்த ஆண்டவனாலே உருவாக்கப்பட்டவர்கள். அல்லது நெற்றிக்கண் திறக்கப்பட்டவர்கள். நாமும் ஆண்டவனால் ஆட்கொள்ளபட வேண்டுமெனில் - நம்முள் இருக்கும் இறைவனை காண வேண்டுமெனில் வள்ளலார் கூறிய அனைத்து ஒழுக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், மற்றும் ஆன்ம ஒழுக்கங்கள் இறையைப்பற்றி தெரிந்துக்கொள்ள உறுதுணை புரியும்.

இதெல்லாம் கடைப்பிடிக்காமல் நம்முள் கடவுள் உள்ளார் என்று சொல்வது வெளிப்படையான வார்த்தைக்கு மட்டுமே உதவுமே தவிர கடவுளை நம்மால் உணர முடியாது.

சாதனம், சாதனை, மற்றும் சாக்கியம் திருவருட்பாவில் கூறப்பட்டுள்ளது. சாதனம்: எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம்.

சாதனை: நான்கு வித ஒழுக்கங்களை கடைப்பிடித்தல் . இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், மற்றும் ஆன்ம ஒழுக்கம்

சாக்கியம்: புருஷார்த்தகங்களான ஏம சித்தி , சாகாக்கல்வி, தத்துவநிக்கிரம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்.

சாதனமும், சாதனையும் உலகியியலில் ஜீவகாருண்யம் மூலமும் பெரு நெறி ஒழுக்கங்கள் மூலமும் நிறைவேற்றினால் சாக்கியம் கூடும் - இறை நிலை வெளிப்படும் . எனவே எல்லாம் வல்ல ஸ்ரீ ராமலிங்க அடிகளை ஞான குருவாக ஏற்றுக்கொண்டு அருளியியல் உண்மையை உணருவோமாக.

முற்றிற்று.

நன்றி :
K.KUMARESAN
2/134, Middle Street
58,Alathur Post, Neravy via
Karaikal
Karaikal, Puducherry, India - 609604
Phone.9952327314

உலகியலும் அருளியலும்-II

ஜீவகாருண்யத்தை கடைபிடித்து மக்கள் உயர்நிலையை அடைய முடியும் என்பதை வள்ளலார் மட்டுமேஎளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தெரிவித்திருக்கிறார். மனித உடலை பிரணவ தேக மாக மாற்றி செய்து நிருபித்தார். பிரவண தேகம் பின் ஞான தேக மாகியது. தியானத்தையும் , யோக முறையும் ஒருவர் கற்றுக்கொண்டு ஒரு குகையிலோ அல்லது தனிமையாகவோ வாழ்ந்தால் அதனால் சமுதாயத்திற்கு ஒரு பயனும் இல்லை என்பதை வள்ளலார் தீவிர மாக கடைப்பிடித்தார்.

கீதையிலே பரமாத்மா கிருஷ்ணன் சொல்கிறார் :(இந்து தர்மத்தின் முக்கிய நூலாக போற்றப்படுவது பகவத்கீதை. இந்த கீதையை உபதேசித்தவனும் கேட்டவனும் சந்நியாசிகள் அல்லர். குடும்பவாழ்விலிருந்தோர்,
மற்றும் மன்னாண்ட மன்னர்கள். வரலாற்று அறிஞர்கள் 5000 வருடத்திற்கு முன் மகா பாரதம் நடந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

இங்கு மதத்தை ப் பற்றி குறிப்பிடுவதை பொறுத்தருளவும்.)

"அர்ச்சுனா, மூன்று உலகங்களிலும் இனி மிஞ்சிற்கும் செயல்,செய்கை ஒன்றும் எனக்குக் கிடையாது. அடையத்தக்கது, அடையப்படாது என ஒரு பேறுமில்லை.எனினும் நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நான் தொழில் செய்யாது வாளாவிருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும், என் வழியையே பின் பற்றும்.

அதனால் இந்த உலகம் அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரணமாகாமல் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். ஓயாமல் தொழில் செய்பவன் சிறந்த கர்மயோகி. அவன் ஜீவாத்மாவை இடைவிடாது துதிக்கிறான். சம்சாரத்தை நேசிக்கிறான். குடும்பத்தை காக்கிறான். மனைவி, மக்களை காக்கிறான்.
சுற்றத்தாரை, அயலவரை போற்றுகிறான். எல்லாவற்றையும் துறந்து சென்றால் அவன் முத்திக்கு தகுதியுடைவனாக மாட்டான். எல்லாவற்றையும் துறந்து செல்கிறவன் கடவுளுடைய இயற்கை விதிகளை துறந்து செல்பவனாகிறான்...

இவ்வாறு நாம் பார்க்கும் போது இல்வாழ்க்கையில் முற்று முழுதாக
விடின் இறைவனை அடையலாமா? என்ற கேள்வி எழும். வாழ்வில் பற்றை விலக்க
வேண்டுமே தவிர ஒழிக்க வேண்டியதில்லை.

'படகு தண்ணீரில் இருக்கலாம். தண்ணீர் படகினுள் இருக்ககூடாது'என்று அருமையாக வழிகாட்டுகிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

இல்லறத்துறவை காட்டிலும், உள்ளத்துறவு சதகோடி மடங்கு மேலானதாகும்.
இல்லாள் அகத்திருக்க இல்லாததது ஒன்றில்லை. கற்புடைய மனைவியை
காதலுற்று, அறம்பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையாகும்.

கடவுள் அனைத்து உயிர்களிலும் இருக்கிறார். இல்வாழ்க்கையில் இருந்து கொண்டு உற்றார்,உறவினர், உலகத்தாருக்கும் உபசாரம் செய்து கொண்டு அறவழியில் இன்பங்களை அனுபவித்து ஆண்டவனை தொழுது அதனால் மனிதத் துன்பங்களில் இருந்து விடுபட்டு மேன்மையான வாழ்க்கை வாழ்வது மேலான வழியாகும்.

இதனை வள்ளுவப் பெருந்தகை அன்புடைமை, வாழ்க்கை துணைநலம், புதல்வரைப் பெறுதல், விருந்தோம்பல், மற்றும் இனியவை கூறல் என்ற அதிகாரங்களில் மிக சிறப்பாக கூறியுள்ளார்.

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போ ஓய்ப் பெறுவது எவன் "

இல்லறத்தினை ஒழுங்காக நடத்துபவன் துறவறத்திற்கு போய் பயன் ஒன்றுமில்லை.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை"

இல்லறத்தை சரியாக நடத்துகிறவன் புலன்களை அடக்கி முயல்கிற எல்லாரினும் தலை சிறந்தவன்.

"ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து"

சரியான முறையில் இல்லறம் நடத்துகிறவன் , துறவறத்தானை விட பொறுப்புகளும் சகிப்புகளும் உள்ளவன். இல்லறத்தான் பிறருக்குக்குற்ற துன்பங்களையும் தனக்கு வந்தது போல் எண்ணி அதை நோக்கும் பொறுப்புடையவனாகிறான்.

"அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்ப தில்லாயின் நன்று"

மனிதனுக்கு அறம் என்று நூல்களால் தீர்மானிக்கப்பட்டதே இல்லறம்
ஆகவே, இல்லறத்தை சரியாக நடத்துகிறவன் வானுறையும் தெய்வதுள்
வைக்கப்படுவான்.

எதனைப் பற்றியும் ஆராய்ச்சி இல்லாமலே கர்ம ஒழுக்கங்களினால்
இல்லறத்தில் நின்று வீடுபேறு அடைய முடியும். இல்லறம் என்பது பொறுப்புகளும்,சகிப்புத் தன்மையும் உடையது. இல்லறத்தை நாம் கர்மயோகமாக கருதினால் அதுவே சமுதாயத்துக்கு பயனுள்ளது.

பெரியபுராண வரலாறு மூலம் "அடியார்கள் இல்லறத்தை நடத்தி இறைவனை அடைந்ததைக் காணலாம். இதை கதையாக கொண்டாலும் இதனுடைய கருத்து இல்லறத்தை வலியுறுத்துவதே யாகும்.

"இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணக் கடை"

என்பதற்கேற்ப இளையான் குடிமாற நாயனாரும், காரைக்காலம்மையாரும் இல்லறத்தில் நின்று கொண்டே ஆன்மீகத்தில் உயர்ந்து பேரின்ப பெருவாழ்வு பெற்றதை அறியலாம்.

இல்லற வாழ்விலே தர்மத் தளத்தில் நின்று செய்யும் கடமைகள்தான் ஆன்மீக உணர்விற்கும் ஆன்மீக தேடலுக்கும் வழிவகுக்கும் என்பதை அடுத்த பகுதியில் பல்வேறு சன்மார்க்கிகள் கூறும் கருத்துகளுடன் வள்ளலார் கூறுகிற முடிவுரையையும் காண்போம்.

உலகியலும்- அருளியலும்

உலக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவது இறைவனுக்கு ஆற்றும் தொண்டிற்கு சமமாகும். உயிர்களின் இதயக் கோயிலே இறைவன் வாழும் கலைக்கோயிலாகும். அருள் நெறி என்று உயிர்களுக்கு அன்பு செய்ய சமய வாழ்வு வாழ்கிறோம் எனில் அது சமுதாய வாழ்வுடன் இணைந்ததாக அமையவேண்டும். இந்த வகையில் இல்லறத்தில் இருந்து கொண்டே இறைவனை அடையலாம் என்பதை வள்ளுவரும் வள்ளலாரும்கூறுகின்றனர்.

இல்வாழ்கையைநடத்துபவர்களுக்கும், ஆன்மீகவாழ்க்கையை மேற்கொள்பவர்களுக்கும் முறையே உலகியல் மற்றும் அருளியல் என்று திருவருட்பாவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால் சில பேர் மேம்போக்காக சில பாடல்களையும் , பேருபதேசத்தையும் படித்து விட்டு வள்ளலார் எல்லாவற்றையும் விட்ட விட சொல்லுகிறார் என்றும் மதத்தை வெறுக்க சொன்னார் என்றும் பல வழிகளில் மக்களின் மனதை புண்படுத்துகின்றனர்.திசை திருப்புகின்றனர்.

இல்லறத்தை நல்லறமாக மாற்றி வாழ வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை- என்கிறார் வள்ளுவர்.

இல்வாழ்க்கையின் பண்பு அன்புடமை. பயன் அறனுடையமையாகும். மனைவி சுற்றம் என்று விரியும் அன்பிலே வாழும் ஒருவன் உலகனைத்தின் பாலும் விரிந்த அன்பு பூணும் மனப்பக்குவம் அடைகிறான். மனைவியும் அதே அன்புசால் மனப்பக்குவம் அடைகிறாள்.

உலகனைத்தையும் அன்புக்கண்களிலே காணும் இந்த விரிந்த மனோபக்குவம் அடைய இல்லறம் வழிகாட்டுகிறது. அன்பும், அறனும் இல்வாழ்க்கையினை சிறப்பாக்குகிறது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேராதார் -வள்ளுவர்

மற்றுமொரு இடத்தில் இல்லறத்தை வலியுறுத்தி கீழ் காணும் தேவர் குறளை எடுத்து மேற்கோளிடுகிறார்.


தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இல்லறம் நடத்தியே இறைவனை அடைந்தாகச் சொல்லப்படும் நாயன்மார்களுடைய கதைகளும், ஆழ்வார் கதைகளும் இதனை தான் சொல்கிறது.

"காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன?
கந்தை சுற்றி ஓடே எடுத்தென்ன?

உள்ளன்பில்லாதவர் ஓங்கு செல்லநாடேயிடை
மருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர்

பால் வீடேயிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுமே"
இங்கு இல்லறத்தானும் வீடுபேறு பெறமுடியுமென கூறப்படுகிறது

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்

இதைதான் வள்ளலார் செய்து காண்பித்தார். மலைக்கும் ,குகைக்கும் செல்ல வில்லை.மனித சமுதாயத்தில் கடமைகளையும் ஜீவகாருண்யத்தையும் கடைபிடித்து மக்கள் உயர்நிலையை அடைய முடியும் என்றும் போதித்தார். மனித உடலை பிரணவ தேக மாக மாற்றி செய்து நிருபித்தார்.