Tuesday, November 11, 2008

இளையோரிடம் அலட்சியப் போக்குகள் அதிகம்

அன்றாட வாழ்வில் சினிமா பிரிக்க முடியாத ஒரு அங்கமாகிவி்ட்டது. திரையில் தோன்றும் கதாநாயக - நாயகிகள், இளையோர்களை மெய் மறக்கச் செய்யும் வசீகரச் சக்தி அவர்களுக்கு இருக்கிறது. ஒரு இளைஞன் தான் எப்படியிருக்க வேண்டும் என்று நினைப்பதை ஏதோ ஒரு வகையில் திரையில் தோன்றும் கதாபாத்திரங்கள் பூர்த்திச்செய்யும் போது, அவர்கள் இளையோரின் கனவு நாயக - நாயகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று நேற்றைய கதையில்லை இது. கருப்பு வெள்ளை யுகத்திலேயே ஆரம்பமாகி விட்டது.

இளையோரை நல்வழிப்படுத்துவது கடினமான ஒரு விசயமாகும். காரணம் துள்ளும் இளமை பருவத்தில் இருப்பவர்கள் அவர்கள். அதோடு இளையோரிடம் அலட்சியப் போக்குகள் நிறையவே காணப்படுகின்றன. அவர்களின் ஆர்வத்தையும் இளமைத் துள்ளல்களையும் நம்மால் தணிக்கைச் செய்ய முடியாது. ஆனால் கலாச்சார சீரழிவுக்குக் காரணமாக இருந்து வரும் திரைப்படங்களை நம்மால் தணிக்கைச் செய்ய முடியும்.

தணிக்கை வாரியங்கள், புகை, மது, ஆபாசம் மற்றும் அளவுக்கு மீறிய வன்முறைகள் சம்பந்தப்பட்டக் காட்சிகளெல்லாம் தணிக்கைச் செய்யப்பட வேண்டும். நம் நாட்டு சட்டத் தி்ட்டங்கள் என்று வரும்பொழுது, ஒரு திரைப்படங்களில் குறிப்பிட்ட வரையில்தான் வன்முறைக் காட்சிகள் இடம் பெற்றிருக்க வேண்டும். அதுதான் இங்கு சட்டமும் கூட. ஒரு திரைப்படத்தைச் சம்பந்தப்பட்ட புகை நிறுவனங்களோ அல்லது மது நிறுவனங்களோ விளம்பரம் செய்தால் அதை உடனடியாக அரசாங்கம் தடை செய்ய வேண்டும். வளரும் தலைமுறைகளான பள்ளி மாணவர்களுக்குத் திரைப்படங்களால் ஏற்படும் கலாச்சார சீரழிவுப் பற்றி விழிப்புணர்ச்சிகளை அரசாங்கம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

ஒரு மாறுதல் ஏற்பட வேண்டும் என்றால், அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஏற்படுத்த வேண்டும். ஆதலால் வளர்ந்து வரும் இளையோர்களுக்கு நாம் விழிப்புணர்ச்சிகளை ஆழமாக அவர்களின் மனத்தில் பதிய வைத்து விட்டால், அவர்கள் நிச்சியமாக திசை மாறிப் போகமாட்டார்கள் என்று நம்பிக்கை கொள்ளலாம்.

-இக்கட்டுரை 15 மே 2005, தமிழ் நேசனின் வாசகர் களம் என்ற சிறப்பு பகுதியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment