மலேசியாவில் உட்கொள்ளப்படும் இறைச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட காரணத்தால் கால்நடைகளுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. 1985ல் ஒருவர் சராசரி வருடத்திற்கு 2.4 கிலோகிராம் மாட்டிறைச்சி மட்டுமே உட்கொண்டு வந்தார். 2010ல் ஒருவர் உட்கொள்ளும் மாட்டிறைச்சி 8.4 கிலோகிராமாக உயர்ந்துள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.
மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் பன்றியிறைச்சி உள்நாட்டுத் தேவைக்குப் போதுமானதாக உள்ளது. அதிகமான இறைச்சித் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு மலேசியாவில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அதே வேளையில் அவற்றை உட்கொள்ளும் பயனீட்டாளர்களுக்கும் பல விதமான ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்குகிறது என்றார் இத்ரிஸ்.
கால்நடை வளர்ப்பில் பாரம்பரிய நடைமுறைகளும் வளங்களும் சிறிதுசிறிதாக அழிக்கப்பட்டு வருகின்றன. கால்நடைகள் சுதந்திரமாக மேய்வதற்கு இடமில்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம், சோயா ஆகியவை அதிகமாக சுத்திகரிக்கப்பட்டு கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கப்படுகின்றன. இவை கால்நடைகளுக்குப் பல விதமான நோய்களை ஏற்படுத்துகின்றன. தீவனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இவற்றுக்குக் கொடுக்கப்படும் அளவுக்கு அதிகமான என்டிபையோட்டிக்குகள் நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைத்துவிடுகின்றன. இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளான கால்நடைகள் சினை ஆவது குறைந்து போகிறது. இவற்றுக்கும் எளிதில் கருச்சிதைவும் ஆகின்றன. வெளிநாட்டிலிருந்து இன்னும் குறைவான விலைக்கு இறைச்சிகள் கிடைக்கின்ற காரணத்தால் உள்நாட்டு கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களுடைய கால்நடைகளுக்கு நியாயமான விலை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள் என்றார் இத்ரிஸ்.
இந்தியா, ஆந்திராவில் உள்ள இரு கால்நடை நிபுணர்கள் மலேசியாவில் உள்ள பலதரப்பட்ட கால்நடைப் பண்ணைகளுக்கு வருகை அளித்து, அந்தப் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைக் களைவதற்கான வழிமுறைகளையும் கால்நடைகளுக்கான மாற்று மருத்துவத்தையும் பரிந்துரைத்து வருகிறார்கள்.
ஆந்திரா என்ற அமைப்பைச் சேர்ந்த டாக்டர் சகாரி ராமதாஸ் கால்நடை மருத்துவர் ஆவார். ஆந்திரா அமைப்பின் இயக்குநராக இவர் இருக்கிறார். திரு சன்யாசி ராவ் மூலிகை ஆராய்ச்சியாளர். ஆந்திரா அமைப்பின் இயற்கை வள ஆய்வு வேலைகளில் இவர் இருக்கிறார். ஒதுக்கப்பட்டவர்கள், நிலமில்லாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள், குறிப்பாக இதில் உள்ள பெண்களோடு இணைந்து வேலை செய்து நிலைத்த நீடித்த விவசாயத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது இந்த அமைப்பு.
கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய், சீரணக் கோளாறுகள், சுவாசக்குழாய், இன உற்பத்தி, சிறுநீர் சார்ந்த இயக்கம், சரும நோய்கள் போன்ற பலதரப்பட்ட கால்நடைகளுக்கு ஏற்படும் ஆரோக்கியக் கோளாறுகளுக்கு பாரம்பரிய முறையில் நிவாரணம் அளித்து நூறு விழுக்காடு வெற்றியினைக் கண்டிருக்கும் இவர்களுடைய பாரம்பரிய கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை மருத்துவ வழிமுறைகளை இங்குள்ள கால்நடை வளர்ப்பாளர்களோடு பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறார்கள். எந்த வித இரசாயனக் கலப்பு இல்லாத மூலிகை சார்ந்த இவர்களுடைய அணுகுமுறைகள் ஆரோக்கியமான கால்நடை வளர்ப்புக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலைப் பேணி, நீடித்த நிலையான விவசாயத்திற்கும் உதவுகிறது.
மலேசியாவில் உள்ள விவசாயிகளும் கால்நடை வளர்ப்பாளர்களும் ஆந்திரா அமைப்பின் தகவல்களைப் பெற்றுக்கொண்டு இரசாயனம் அல்லாத, நீடித்த விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு முறையைக் கற்றுக்கொண்டு பயன் பெற வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment