Monday, June 20, 2011

பள்ளிக்கூடங்களில் சாதூரியமாக ஊடுருவுகின்றன மதுக் கம்பெனிகள் மாணவர்களை மதுவின் பாதிப்பிலிருந்து காப்பாற்றுங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

கல்வி ஊக்குவிப்பு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைள் என்ற பெயரில் மது பான நிறுவனங்கள் மிகவும் சாதுரியமாக பள்ளிக்கூடங்களில் நுழைவது தடுக்கப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்..

கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்கு உதவுவதாகக் கூறி நுழையும் மதுபான நிறுவனங்கள் மாணவர்களின் மனதில் தங்கள் மதுபான உற்பத்தியை மிகவும் இலகுவான முறையில் பதிய வைத்து விடுகின்றன என்றார் இத்ரிஸ்.

பள்ளிக்கூடங்களில் மிகவும் சாதூரியமான முறையில் நுழைந்து சிறார்களின் சிந்தனையை ஆக்கிரமிக்கும் யுக்திகளை கார்ஸ்பெக் மற்றும் கின்னஸ் மதுபான நிறுவனங்கள் நன்றாகவே கற்று வைத்திருக்கின்றன.

கார்ல்ஸ்பெர்க் மலேசியாவின் அகப்பக்கத்தை இணையத்தில் மேற்பார்வையிட்டபொழுது அதில் சிறார்கள் பச்சை வர்ண கார்ல்பெர்க் பையைப் பிடித்துக்கொண்டு புன்னகை பூத்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள். சென்ற வருட டிசம்பர் மாதத்தில் கார்ஸ்பெர்க் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்கள் மேற்கொண்ட சுற்றுலாவில் பிடிக்கப்பட்ட படமே இது. இந்த மாதிரியான நிகழ்வுகளின் மூலம் மது அருந்துவது ஏற்புடையது என்ற எண்ணம் மாணவர்களின் மனதில் அவர்களை அறியாமலேயே பதிந்துவிடுகிறது என்றார் இத்ரிஸ்.

வடக்கில் உள்ள தமிழ்ப்பள்ளிக்கூடம் ஒன்றுக்கு தினந்தோறும் 40 பத்திரிகைகளை இலவசமாகவே வழங்குவதற்கு கார்ஸ்பெர்க் மலேசியா ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் மாணவர்களின் ஆங்கிலத் தரத்தை உயர்த்துவதற்காகவே இந்த நடவடிக்கையாம்.

மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக மதுபானக் கம்பெனிகள் கோரிக்கொள்வது கேலிக்குரியது. உண்மையில் பல குடும்பத் தலைவர்களை குடிகாரர்களாக்கி குடும்பங்கள் சின்னாப்பின்னமாவதற்குக் காரணம் இந்த மதுபானக் கம்பெனிகள் தயாரிக்கும் மதுதான்.

கல்வி கற்க உதவுவதாகக் கூறி தமிழ்ப்பள்ளிக்கூடங்களோடு கை கோர்த்து தங்களுடைய மது பிரண்டை இளையோர்களிடையே பிரபலப்படுத்தும் இன்னொரு மதுபான நிறுவனம் கின்னஸ் எங்கர் ஆகும்.

மலேசிய இந்தியர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுவதாகக் கூறி கின்னஸ் எங்கர் நிறுவனம் பள்ளிக்கூடங்களில் இலவச ஆங்கில வகுப்புக்களையும் நடத்தி வருகிறது.

எதிர்காலக் குடிகாரர்களை உருவாக்குவதற்கு இப்போதைய சிறார்களை நோக்கிக் குறி வைத்தால்தான் முடியும் என்பதை மதுபானக் கம்பெனிகள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளன. மது விளம்பரத்திற்கும் மது அருந்துபவர்களின் அதிகமான எண்ணிக்கைக்கும் இருக்கின்ற தொடர்பை மதுக்கம்பெனிகள் மறுத்தாலும் கூட உண்மை அதுதான். மது விளம்பரம் செய்யும்பொழுது ஒருவர் ஒரு மது பிரண்டிலிருந்து இன்னொரு மது பிரண்டிற்கு மாறுவாரே தவிர புதிதாக யாரையும் குடிக்கத் தூண்டுவதில்லை என்று இந்த மதுக் கம்பெனிகள் வலியுறுத்தி வருகின்றன என்றார் இத்ரிஸ்.

மது உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட ஒரு இனத்தின் இளைய சமுதாயத்தைக் குறி வைத்து விளம்பரம் செய்கிறார்கள். 20களில் இருக்கும் இளைஞர்கள்தான் விரைவில் மதுவுக்கு அடிமையாகிறார்கள்.

ஆகையால் மதுக் கம்பெனிகள் தங்களுடைய வியாபாரத்தைப் பெருக்குவதற்காக பள்ளிக்கூடங்களில் தொடர்ந்து ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்கும் பொருட்டு கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். மதுக் கம்பெனிகளை கல்வியாளர்களும், பள்ளிக்கூடங்களும், கல்வி அமைச்சும் ஏற்றுக்கொண்டு அங்கீகாரம் வழங்கும் ஒரு நிலையில் மது ஒன்றும் அவ்வளவு ஆபத்தானது அல்ல என்ற சிந்தனையும் மனப்போக்கும் கல்வி கற்கும் மாணவர்களிடையே அவர்களை அறியாமலேயே உருவாகிவிடும். பிறகு இதுவே மதுக் கம்பெனிகள் தங்களுடைய விற்பனையை அதிகரிக்கும் ஒரு உத்தியாகிவிடும் என்றார் இத்ரிஸ்.

சமுதாயத்தில் உள்ள எல்லா சிறார்களும் பதின்மர்களும் மதுவின் பாதிப்பிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு உரிமை இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனக் கோட்பாடு கூறுகிறது. பள்ளிக்கூட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் மதுபான நிறுவனங்கள் இந்தக் கோட்பாடுகளை மீறுகின்றனவா என்று அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும் என்று இத்ரிஸ் கூறினார்.

மது கொண்டு வரும் பாதிப்புக்கள் எண்ணிலடங்கா. உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 2 மில்லியன் பேர் மது ஏற்படுத்தும் நோய்களால் மரணமடைகின்றனர். நாட்டில் ஏற்படும் 30% சாலை விபத்துக்களுக்கு மது அருந்திவிட்டு காரோட்டுவதே காரணம் என்று சாலை பாதுகாப்புக் கழகம் கூறுகிறது. மது அருந்துவது ஒருவரை நிதானமிழக்கச் செய்து வன்முறைப் போக்கை உருவாக்குகிறது. இது வீட்டுக் கொடுமை, சிறார் சித்ரவதை மற்றும் பல விதமான குற்றச் செயல்களுக்கு வித்திட்டுவிடுகிறது. மது அருந்துபவர்களின் தொழில் திறனும், உற்பத்தித் திறனும் குறைந்துவிடுகிறது என்றார் இத்ரிஸ்.

மதுக் கம்பெனிகள் பள்ளிக்கூடங்களில் எந்த ஒரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டும். மது உற்பத்திகளுக்காக விதிக்கப்படும் வரிக்கட்டணத்தையும் உயர்த்த வேண்டும். மதுக் கம்பெனிகள் சட்டத்தை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதங்கள் விதித்து பிறகு அந்த அபராதத் தொகையை கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிகழ்வுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment