Sunday, November 30, 2008

மெல்ல கொல்லும் நோய்

மலேசிய மக்களை மெல்ல கொல்லும் நோய்கள் என்று ஒரு பெரிய பட்டியல் போடலாம். சுருக்கமாக இதோ!

1. பயனீட்டாளர் உரிமை பற்றிய அறியாமை

2. தகவல் சாதனங்களில் வரும் விளம்பரங்கள் யாவும் உண்மை, உண்மையைத் தவிர
வேறெதுவும் இல்லை என்று நம்பிவிடுவது.

3. படித்த அறிவாளிகள் உண்மை அறிந்தும் ஊமையாய்ப் பதவி உயர்வை மட்டும் குறி
வைத்து 55+2 வயது வரை வாழ்வது.

4. நமக்கு மழை வேண்டும், மழைக்கு மரம் வேண்டும் என்று அறிந்தும் அறியாதவர் போல்
இருப்பது.

5. உணவு விசயத்தில் நாக்கை மட்டும் திருப்தி செய்து விட்டுப் பின்பு மருத்துவமனையைக்
குடும்பத்தில் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்வது.

6. தொழில்துறையில் ஓரளவு, மின்னுகின்ற இளைஞர்கள் மகிழ்ச்சி என்றால், அது
மதுபானம் என்றும் மாமிச உணவுகள் என்றும் மயங்கிக் கிடப்பது.

7. இந்து சமயத்தின் பெயரால் மூடநம்பிக்கைகளையும், மூடநம்பிக்கைகளை
வியாபாரமாகவும் வளர்வது.

இப்பட்டியலை வாசகர் தம் ஆராய்ச்சிக்கு ஏற்ப நீடித்துக் கொள்ளலாம்

Monday, November 24, 2008

இடப்பெயர்வில் அழியும் ஈழம்

ஈழத்தில் நடைபெறும் போர்ச் செய்திகள், தமிழக ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. மக்களின் வாழ்விடங்கள் மீது குண்டு வீச்சு; அதனால் சாவு என்பதே இச்செய்திகளின் மய்ய இழை. இதனைக் கடந்தும் மக்கள் எத்தகைய இன்னல்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் நமக்கு தெரிய வருவதில்லை. ஏனெனில் போரின் விளைவு சாவு மட்டுமல்ல; போரின் மிகப் பெரிய பாதிப்பு - உள்நாட்டு இடப்பெயர்வுகள். மக்களின் வாழ்விடங்கள் மீதான தொடர்ந்த விமான தாக்குதல்கள், எறிகணை வீச்சுகள், இவற்றின் காரணமாக கையில் பச்சிளம் குழந்தைகளுடன் வெயில், மழை பாராது உயிருக்கு அஞ்சி ஊர் விட்டு ஊர் ஓடும் கொடுமை அது. ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, பல முறை தங்கள் இருப்பிடங்களை மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டிய கட்டாயம். இதனால் ஏற்படும் சமூக, பொருளாதார, உளவியல் சிக்கல்கள், பாதுகாப்பின்மை என, அம்மக்கள் அன்றாடம் படும் வேதனைகள் கற்பனைக்கு எட்டாதவை. என்றாவது ஒரு நாள் நமக்கு விடிவு வரும். நமது ஊர்களுக்குத் திரும்பி இயல்பாக வாழலாம் என்ற ஒற்றை நம்பிக்கையோடு, ஈழத்தமிழர்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

Eleam கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதே ஈழத்தின் வன்னிப் பெருநிலப் பகுதி. மன்னாரும் முல்லைத்தீவும் கடலோர மாவட்டங்கள். கடற்கரையோரப் பகுதிகள் தவிர, வன்னி நிலப் பகுதி முழுவதும் அடர் காடுகளால் நிறைந்தது. இடை இடையே ஊர்கள் பரந்திருக்கும். வயல்களில் அன்றாடம் கூலி வேலை செய்வது, மீன் பிடித் தொழில், அதை சார்ந்த வியாபாரங்கள் ஆகியவையே இம்மக்களுக்கான பொருளியல் ஆதாரம்.
ஈழத்தில் பெருமளவிலான உள்நாட்டு இடப்பெயர்வு என்பது, 1980களிலேயே தொடங்கிவிட்டது. 80களின் முற்பகுதியில் குண்டு வீச்சினால் சிதிலமடைந்த தங்கள் வீடுகளை விட்டு, தங்கள் ஊர்களிலேயே உள்ள பள்ளிகள், கோயில்கள் போன்றவற்றில் அடைக்கலம் புகுந்த மக்கள், ஊரைவிட்டு வெளியேறவில்லை.

என்றாவது தங்கள் வீடுகளை சீரமைத்து மீண்டும் அங்கே வாழ முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். பின்னர், 80களின் பிற்பகுதியில் இந்திய ராணுவம் அங்கு இருந்த காலத்தில் இடப்பெயர்வுகள் அதிகரித்தன. உள்ளூர் என்பதிலிருந்து அருகில் உள்ள நகரங்கள், பொதுப் பள்ளிகள், தேவாலயங்கள், கோயில்கள் எனப் பரவவும் தொடங்கின. 90களின் தொடக்கத்தில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்த போது, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி இழந்த வாழ்வை செப்பனிடத் தொடங்கினர். ஆனால் அது அதிக காலம் நீடிக்கவில்லை.

அதன் பின்னர் போரும் பேச்சு வார்த்தையும் மாறி மாறி நிகழத் தொடங்கின. பேச்சு வார்த்தை நடைபெறும் காலங்களில் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்பி நிலங்களில் பயிரிட்டு, கால் நடைகளைப் பராமரித்து, கடைகள் வைத்து என பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதும், மீண்டும் போர் தொடங்கியதும் சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவழித்து இடம் பெயர்ந்து வாழ்வதும் - கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையாகிப் போனது.

1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேறச் சொன்னதால் நடைபெற்ற முஸ்லிம்களின் இடப்பெயர்வும், அதன் பின்னர் 1995 அக்டோபர் 30 அன்று சிங்கள ராணுவம் யாழைக் கைப்பற்றி மிகப் பெரிய இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட இருப்பதால், உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயருமாறு புலிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 5 லட்சம் மக்கள் ஓர் இரவில் இடம் பெயர்ந்ததும் - இது வரை நடந்ததிலேயே பெரும் இடப்பெயர்வுகளாக இருக்கின்றன.

குறிப்பாக, மன்னார் மடு பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த சூன் மாத காலப்பகுதிக்குள் - ஆறு முறைக்கு மேல் தமது நிரந்தர இடங்களில் இருந்து இடம் பெயர்ந்ததன் பின்னர், தற்காலிக வாழ்விடங்களில் இருந்தும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். மடுவில் உலகப் புகழ் பெற்ற தேவாலயம் ஒன்று உள்ளது. கடந்த ஏப்ரல் 2008இல் மடு தேவாலயத்தை முற்றிலும் அழிக்கும் அளவிற்கு சிங்கள ராணுவம் அதன் மீது தாக்குதல் நடத்தியது. அந்தப் பகுதியைச் சேர்ந்த இடம் பெயர்ந்த மக்களுக்கு அது நாள் வரை உறைவிடம் அளித்த அந்த தேவாலயமே தாக்குதலுக்கு உள்ளானது, மக்களிடையே பெரும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் எழுப்பியது. மடு மாதா தாக்கப்பட்டதற்குப் பிறகு, அப்பகுதி மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயரத் தொடங்கினர். ஏற்கனவே இடம் பெயர்ந்து தேவாலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்த மக்களும், மடுப் பகுதியில் நிரந்தரமாக வாழ்ந்து வந்த மக்களும் மொத்தமாக வெளியேறத் தொடங்கினர். அன்று தொடங்கிய இடப்பெயர்வு இன்று வரை தொடர்கிறது.

ஈழம் என்பது வடக்கில் யாழ்ப்பாணத்தையும், வன்னிப் பெருநிலப் பகுதியையும், கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, திரிகோணமலை மாவட்டங்களையும் உள்ளடக்கியது. இதில் யாழ்ப்பாணமும், கிழக்கும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள். இப்பகுதிகளில் ஏறத்தாழ ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலை போன்ற வாழ்நிலை. ஏற்கனவே பல்வேறு காலகட்டங்களில் இடம் பெயர்ந்த மக்களே அங்கு வாழ்கின்றனர். யாழ்ப்பாண தீபகற்பத்தை பிற பகுதிகளுடன் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அத்துடன் கூடிய பொருளாதாரத் தடை காரணமாக உணவு, மருந்து உட்பட எவ்விதப் பொருட்கள் அங்கு கொண்டு செல்லப்படுவதும் இயலாததாகி விட்டது. யாழிலிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கும் பெரும் கட்டுப்பாடுகள், சோதனைகள். தொண்டு நிறுவனங்களும் முற்று முழுதாக வெளியேற்றப்பட்டு விட்டன. எந்த ஊடகவியலாளரும் அங்கு செல்ல இயலாது. இதனால் யாழ் மக்களுக்கு என்ன நேர்கிறது என்பதே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வெளி உலகத்தினர் அறியாத புதிராகவே இருக்கிறது.

கிழக்குப் பகுதியில் ஒரு புறம் ராணுவம், மற்றொரு புறம் ஒட்டுக் குழுக்கள். இவற்றிற்கு இடையில் சிக்கிக் கொண்டு எந்நேரம் என்ன நடக்குமோ என்ற அச்ச உணர்வுடனேயே மக்கள் வாழ்கின்றனர். அதோடு அங்கு அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் நடத்தப்படுகின்றன. இதனால் மக்கள் எதையும் வெளிப்படையாகப் பேசக் கூட இயலாதவர்களாக, நடமாட்டங்களை குறைத்து முடங்கி இருக்கின்றனர்.

தென்னிலங்கை முழுவதும் சிங்களப் பகுதி. இந்நிலையில் வன்னிப் பெருநிலப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் போர் பாதிப்புகளால் இடம் பெயரும் மக்கள், யாழ்ப்பாணத்திற்கோ, கிழக்கு இலங்கைக்கோ, தென்னிலங்கைக்கோ போக முடியாமல், அங்கு போய் சிக்கிக் கொள்ள விரும்பாமல், வன்னிப் பெருநிலப் பகுதியையே சுற்றிச் சுற்றி வரும் அவலம். மிகச் சிறிய தீவான இலங்கையின் ஒரு சிறிய பகுதியே வன்னிப் பெருநிலப் பகுதி. இதைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் அதற்குள் எவ்வளவுதான் செல்ல இயலும்? அதிலும் சிங்களப் பகுதிகளுக்கோ, ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கோ அருகிலுள்ள இடங்களைத் தவிர்த்து உட்புறம்தான் செல்ல வேண்டும். முன்னைப் போல் இந்தியாவிற்கு வருவதும் அத்தனை எளிதாக இருக்கவில்லை.

சற்று வசதி பெற்றவர்கள், குடும்பத்தில் ஒருவரையோ அல்லது ஒட்டுமொத்தாகவோ வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து விடுகின்றனர். அவர்கள் அனுப்பும் பணத்தில் தான் இங்குள்ளவர்கள் வாழ வேண்டும். ஆனால் அந்தப் பணமும் கைக்கு வந்து சேரும் என்ற உத்தரவாதமில்லை. பல வழிகளில் அந்தப் பணத்தை உரியவர் கையில் சேர்ப்பதுவுமே பெரும் பாடு. அப்படி வந்த பணத்தை வைத்து இடப் பெயர்வுக்கான செலவுகளை சமாளிப்பதே பெரும் சிரமம். இடப் பெயர்வுக்கான செலவு என்பதில் பெரும்பகுதி போக்குவரத்திற்கே போய்விடுகிறது. பெரும்பாலும் டிராக்டர்களை பயன்படுத்தியே மக்கள் இடம் பெயர்கின்றனர். 5 கி.மீ. தூரத்திற்கு ரூ.4000, 10 கி.மீ.க்கு 10,000 என வாடகை செலுத்த வேண்டியிருக்கிறது.

காரணம் எரிபொருட்களின் விலை. தற்போதைய சூழ்நிலையில் மண்ணெண்ணெய் 1 லிட்டர் 130 ரூபாய்க்கும், பெட்ரோல் 1 லிட்டர் 700 ரூபாய்க்கும் டீசல் 1 லிட்டர் 170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலான குடும்பங்கள் குழுவாக இணைந்து வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவதால், அவர்கள் எடுத்துச் செல்கின்ற தத்தமது உடைமைகளை மட்டுப்படுத்துகின்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு வண்டி அமர்த்தி செல்லும் வசதியற்ற, அன்றாடம் கூலி வேலை செய்து வந்த ஏழை மக்கள், குடும்பத்தில் அனைவரும் தங்களால் சுமக்கக் கூடியவற்றை தூக்கிக் கொண்டு, பாதுகாப்பான இடங்களைத் தேடி நடந்தே செல்லும் நிலை. இதற்கு குழந்தைகளும், முதியவர்களும் விதிவிலக்கல்லர்.

இதற்கு நடுவில் நினைத்துப் பார்க்கவும் இயலாத நிலையில் இருக்கும் உணவுப் பொருட்களின் விலை. மன்னார், இலங்கையின் நெற்களஞ்சியம் என்றே அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது நெல் உற்பத்தி என்பது அறவே அற்றுப் போனதாக இருக்கிறது. வயல்கள், மீன்பிடி நிலையிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதால், உணவு உற்பத்தி முற்றிலுமாக நின்று போனது. இதனால் ஒரு மீனின் விலை 225 ரூபாய். அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் கிடைப்பதே அரிது. ஏனெனில் அவை வெளியிலிருந்து வர வேண்டும். சிங்கள ராணுவம் வன்னிக்குச் செல்லும் பாதையை முற்றுகையிட்டு நிற்கிறது. இதனால் வியாபார ரீதியாக உணவுப் பொருட்களை கொண்டு வருவது இயலாத ஒன்று. தொண்டு நிறுவனங்கள் தாம் உணவுப் பொருட்களை கொண்டு வந்து மக்களுக்கு அளித்துக் கொண்டிருந்தனர். அதையும் சிங்கள அரசு தடுத்துவிட்டது. மேலும் தொண்டு நிறுவனங்களை வன்னியை விட்டு வெளியேறவும் சொல்லிவிட்டது. அரசின் உத்தரவையும் மீறி ஒரு சில தொண்டு நிறுவனங்கள் மட்டுமே அங்கு இயங்கி வருகின்றன.

சமைப்பதற்கான பொருள் கிடைத்தாலும், சமைப்பதற்கான உபகரணங்களைச் சுமந்து வர இயலாத நிலையில், விறகு வைத்துத்தான் சமைக்க வேண்டும். ஒரு சைக்கிள் சுமை விறகு 300 ரூபாய்க்கு விற்கிறது. அதற்குரிய பணத்தை இடம் பெயர்ந்து வாழும் மக்களால் செலுத்த இயலாது. இந்த காரணங்களால் அன்றாட சமையல் மற்றும் உணவு வழங்கல் என்பது மிகப் பெரிய சவாலாகவே இருக்கிறது. வன்னிப் பகுதி முழுவதுமே காட்டுப் பகுதி நிலமாதலால், மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக ஆகிவிடும். இந்தச் சூழலில் வெட்ட வெளிகளில், மரங்களுக்குஅடியில் கூட்டமாக நெருங்கி வாழ நேரிம்போது பல்வேறு சமூக, சுகாதார பிரச்சனைகளும், காட்டுப் பகுதியில் வாழ்வதால் விஷ உயிரினங்களினாலான ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.

Eleam_ வன்னிப் பகுதியில் பெரிய ஆறுகள் இல்லை; குளங்களும், மழை நீர் பெற்று ஓடும் சிற்றாறுகளுமே உண்டு. இதனால் சமையல் மற்றும் பிற தேவைகளுக்கான தண்ணீருக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். குறைந்தபட்சமாக ஒரு சராசரி மனிதனுக்கு, சமையல் மற்றும் சுய சுகாதாரத் தேவைகளுக்காக, எட்டு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது, அணைகளுக்கு அருகிலோ அல்லது துப்புரவற்ற கிணறுகளுக்கோ அருகில் உள்ளவர்களில் சிலர் அந்தத் தண்ணீரையே சமையல், குளியல் மற்றும் பிற தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். இது, நோய்கள்
பரவும் தன்மையில் முக்கியமாக ஓர் அதிகப்படியான சுகாதார முறைகேட்டைத் தோற்றுவிக்கிறது. அருகில் கழிவறை வசதிகள் அற்றவர்கள் தங்களின் கழிவுகளை வெளியேற்ற அகழிகள் உருவாக்க வேண்டும். இது, மக்கள் குறைவாக கூடி வாழ்கின்ற இடங்களில் பிரச்சனையாக இல்லாவிடினும், மக்கள் அதிகப்படியாக சேர்ந்து வாழும் இடங்களில் மிக அதிக அளவிலான சுகாதார சீர்கேட்டை உருவாக்குகிறது.

இவை தவிர, காட்டுப் பகுதிகளில் வாழ்வதால் நேரக்கூடிய பாம்புக் கடிகள், விஷ பூச்சிகளின் கடிகள் போன்றவற்றிற்கான மருந்து என்பது கிடைக்க வாய்ப்பே இல்லை. மிகவும் அவசர சிகிச்சைத் தேவைப்படும் நோயாளிகளை தூக்கிச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் போன்ற எந்த வசதிகளும் கிடையாது. இதனால் மிதிவண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலுமே நோயாளிகளை எடுத்துச் செல்லும் நிலை இருக்கிறது.

இயற்கை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு புறம், குண்டு வீச்சுகளினால் காயம்பட்டவர்கள் மறுபுறம் என மருத்துவமனைகள் எப்போதும் நிரம்பியே இருக்கின்றன. ஆனால் அத்தனை நோயாளிகளையும் கவனிக்க போதுமான மருத்துவர்கள் இல்லை. பெரும்பாலும் மருத்துவ உதவியாளர்களே சிகிச்சைகளை கவனிக்க வேண்டும். வன்னிப் பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனைகளில் பெரியதும் ஓரளவு வசதிகள் உடையதுமான கிளிநொச்சி மருத்துவமனை, அண்மையில் சிங்கள ராணுவத்தின் விமான குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளானது. இருந்த ஒரே நல்ல மருத்துவமனையும் சிதைக்கப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சை என்பதே பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது.

பொதுவாக ஈழத் தமிழர்கள் கல்விக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வந்திருக்கின்றனர். கல்விக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் காரணமாக, மக்கள் இடம் பெயரும் போது, பள்ளிகளும் இடம் பெயரும் விந்தையான சூழல் நிலவுகிறது. பள்ளிகள் இடம் பெயர்வது என்பது, வெறும் உபகரணங்களின் இடப்பெயர்வு அல்ல. அப்பள்ளியில் பயின்ற, பயிலுகின்ற அனைத்து மாணவர்கள் பற்றிய ஆவணங்களையும் பாதுகாப்பாக இடம் மாற்றுவது மிகப் பெரும் பணி. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 115 பள்ளிகள் இடம் பெயர்ந்துள்ளன. ஒன்றிணைக்கப்பட்ட பள்ளிகள் பிரதான பள்ளிகளில் இயங்குகின்றன. சில இடங்களில் ஒரே வளாகத்தில் 10 பள்ளிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இயங்கும் நிலையும் உள்ளது. இந்த எதிர்பாராத சூழல் காரணமாக ஆசிரியர்கள், வகுப்பறைகள், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் ஆகியவற்றில் பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த இடப்பெயர்வின் அழுத்தம் மாணவர்களையும் வெவ்வேறு விதங்களில் பாதித்துள்ளன. தேசிய மட்டத்திலான தேர்வுகள் மற்றும் பாடத்திட்டங்கள் சீரற்றவையாக உள்ளன. தங்களின் தேர்வுகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலையில், கல்வியை மேற்கொண்டு தொடர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்த
தருணங்களில் சிங்கள விமானங்கள் பள்ளி வளாகத்தில் குண்டு வீச்சை நடத்திய காரணத்தினால், பள்ளிக்கூடங்களை விட்டு நிற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

உளவியல் தாக்கம் என்பதும் மிகவும் அதிகப்படியானதாகவே இருந்துள்ளது. பல மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர். வகுப்புகளோ, தேர்வுகளோ எது நடந்து கொண்டிருந்தாலும் விமான சத்தம் கேட்டால் எழுந்து ஓடி பதுங்கு குழிகளுக்குள் இறங்கிவிட வேண்டும் என்பது, குழந்தைகளுக்கு ஒரு பயிற்சியாகவே அளிக்கப்பட்டுள்ளது. குண்டு சத்தத்திற்கு அஞ்சி கண்ணையும் காதையும் இறுக மூடித் திறப்பதற்குள் - அருகிலிருந்தவர் செத்து விழும் கொடுமையை காண நேரும் குழந்தைகள், பெரும் மன அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். பெற்றோரை விட்டு பள்ளியில் இருக்கும் நேரத்தில், இதுபோன்ற அனுபவங்களினால் மிகப் பெரிய அளவில் பாதுகாப்பின்மை மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அதனால் பெற்றோரை விட்டு பள்ளிக்கு வரவே அஞ்சுகின்றனர். வெளியேறிய இடங்களில் உள்ள ஆசிரியர்களும் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக, அவர்கள் இந்தப் பள்ளிகளின் தற்காலிக வளாகங்களில் இருந்து வெகு தூரத்தில் இடம் பெயர்ந்துள்ளதால், தங்களின் பள்ளிகளில் தொடர்ந்து கற்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்தப் பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாகவே ஏற்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் விட, இடப் பெயர்வு என்பது பெரும் சமூகச் சிக்கல்களை தோற்றுவித்துள்ளது. ஓர் ஊரில் பல தலைமுறைகளாக ஒரே சமூகமாக கூடி வாழ்ந்த மக்கள் பல திசைகளில் சிதறும் பொழுது, சமூகப் பிணைப்பு பாதிக்கப்படுகிறது. திருமணம் போன்று வாழ்வில் இயல்பாக நடக்க வேண்டிய நிகழ்வுகள் அதனதன் போக்கில் நடக்க இயலாமல் தேக்கம் ஏற்படுகிறது. இதனால் பல ஆண்களும் பெண்களும் திருமண வயதைக் கடந்தும் திருமணம் ஆகாமல் வாழ்கின்றனர். எந்தவொரு அவலத்திலும் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே என்பதற்கு இச்சமூகமும் விதிவிலக்கல்ல. அடிக்கடி நிகழும் சாவு, உணவுக்காக கையேந்தி நிற்கும் நிலை, நிரந்தர வாழ்விடம் இன்றி மாறிக் கொண்டேயிருப்பது போன்றவை, குழந்தைகள் மனதில் பெரும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இனம், மொழி, மதம், தேசம் ஆகியவற்றை கடந்த துயரம் இது. இத்தகைய அவலம் உலகில் எந்தப் பகுதியில், யாருக்கு நேர்ந்திருந்தாலும் அத்துயரைத் துடைக்க முன் நிற்பதே - மனித நேயமிக்க ஒவ்வொருவரின் கடமை. உண்மைக்கு முன்னால் நடுநிலைமை என்று ஒன்று இல்லை. ஆனால், போருக்கு முன்னால் நடுநிலைமை என்பது உண்டு. போரினால் அல்லலுறும் மக்களின் பக்கம் நிற்பதே அது.

Wednesday, November 19, 2008

சட்டக் கல்லூரி: பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை... அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!

‘முடிந்து விட்டது’ என்று நினைத்தோம். ‘முடிய விடக்கூடாது’ என்பதில் பெரும் முனைப்பு காட்டுகிறது சன் டிவி. சட்டக்கல்லூரி கலவரத்துக்கு பின்னணி இசையும் சேர்த்து எப்படியாவது தமிழகத்தைப் பற்றவைத்து விட வேண்டும் என்ற வெறியுடன் திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறது.

ஜெயா டிவியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார், சேதுராமன் எல்லோரும் இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராகக் குமுறுகிறார்கள். கொந்தளிக்கிறார்கள்.

அடித்தவர்கள் என்ன சாதி, அடிபட்டவர்கள் என்ன சாதி என்பதை டிவிக்கள் சொல்வதில்லை. அது பத்திரிகை தருமமில்லை என்பதனால் மட்டுமல்ல, அது தேவைப்படவில்லை. மனித உரிமைக்காக வாண்டையார் குரல் கொடுப்பதைப் பார்த்த பிறகு கூட, பாதிக்கப்பட்ட மனிதர்கள் எந்த ‘இனத்தை’ச் சேர்ந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மாங்காய் மடையர்களா என்ன தமிழர்கள்?

பிதுங்கி வழியும் சென்னை மாநகரின் மின்சார ரயிலில், சுற்றியிருப்பவர்களில் யார் என்ன சாதி என்று தெரிந்து கொள்ளமுடியாத அந்தச் சூழலில் ஐகோர்ட் விவகாரத்தை இப்படி அலசுகிறார்கள் பயணிகள்.

“பாக்கவே குலை நடுங்குது சார். அந்தப் பையனோட அம்மா அழுவுறதப் பாக்கமுடியலன்னு என் வொய்ப் டிவியையே ஆஃப் பண்ணிட்டா.”

“இவாள்ளாம் ஜட்ஜா வந்தா நாடு உருப்பட்ட மாதிரிதான்.”

“செத்த நாயக்கூட இப்படி அடிக்க மனசு வராது சார். எந்த ஜாதியா இருந்தா என்ன சார்? அதுக்காக இப்படியா? இப்போ நீங்க என்ன ஜாதின்னு எனக்குத் தெரியுமா, நான் என்ன ஜாதின்னு உங்களுக்குத் தெரியுமா?”

“டிரான்ஸ்போர்ட்டுக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க - கலவரம். மாவட்டத்துக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க - அதுக்கும் கலவரம். அதையெல்லாம் எடுத்தாச்சுல்ல, அதே மாதிரி காலேஜுக்கும் எடுத்துர வேண்டியதுதானே.”

சாதியின் பெயரைச் சொல்லாமலேயே, சாதிச் சார்பை நிலைநாட்டிக் கொள்ளும் இந்த உரையாடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு செல் உயிரினங்களும், தாவரங்களும் தமக்குள் பரிமாறிக் கொள்ளும் சங்கேத மொழியை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், காதலைப் போலவே கண்ஜாடையையும் மவுனத்தையும்கூட ஒரு மொழியாக மாற்றி தன் இனத்தை அடையாளம் காணும் வித்தையைக் கண்டுபிடித்திருக்கிறது சாதி. புத்தன் முதல் பெரியார் வரை எத்தனை பேர் வந்தால் என்ன, பாஷாணத்தில் புழுத்த புழுவல்லவோ சாதி?

ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறை, தாக்குகின்ற மாணவர்களுக்கும், வேடிக்கை பார்த்து நின்ற போலீசுக்கும் எதிராக வலுவான ‘பொதுக்கருத்தை’ உருவாக்கியிருக்கிறது. பொதுவாக எல்லா வன்முறையையும் எதிர்ப்பது போலவும், சாதியை வெறுப்பது போலவும், சட்டத்தின் ஆட்சிக்காகக் குரல் கொடுப்பதைப் போலவும் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தப் பொதுக்கருத்தின் ஒவ்வொரு கல்லையும் இணைக்கும் சாந்து ‘ஆதிக்க சாதி சிந்தனை’. அம்பேத்கரின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘இந்து மனோபாவம்’.

“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” இந்த மெசேஜ் கடைசித் ‘தமிழனின்’ மண்டை வரை இறக்கப்பட்டிருக்கிறது. எனினும், நாம் அஞ்சியது போல இதுவரை தமிழகம் பற்றி எரியவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாகத்தான் இருக்கிறது. ஆயினும் இதை நினைத்து மனப்பூர்வமாக மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை. இந்த அமைதிக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

கணிதத்தில்கூட ‘சமன் செய்யும் பிழை’ (compensating error) என்று ஒன்று உண்டு. வரவுக்கணக்கில் 900 ரூபாய் கூட்டல் பிழையால் அதிகமாகி, செலவுக் கணக்கில் 100 ரூபாயை 1000 என்று தவறாக எழுதியிருந்தாலும் கடைசியில் கணக்கு டாலி (tally) ஆகிவிடும். அதுபோல இந்த அமைதியைத் தோற்றுவித்த காரணிகள் பலவாக இருக்கலாம். இதை வைத்தே தமிழகம் சாதிவெறியற்ற சமத்துவப் பூங்காவாகி விட்டது என்று அமைதி கொள்வதற்கு இடமில்லை.

இது தொடர்பாக என்னுடைய வலைப்பக்கத்தில் எழுதப்பட்ட முந்தைய பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்ட சில பதிவர்களின் கருத்துகள் கீழ்க்கண்டவாறு இருக்கின்றன:

“வன்முறை எந்த வடிவத்தில் யாரிடமிருந்து வந்தாலும் கண்டிக்க வேண்டும். வினவு நடுநிலை தவறி தலித் தரப்பை ஆதரிக்கிறது. இதன் மூலம் வன்முறையை மேலும் தூண்டி விடுகிறது.”

“தேவர் சாதியினரின் நியாயத்தைப் பேச யாருமில்லை. இது வரை சாதி பார்க்காத நான், இனி தேவர் சாதிக்காக நிற்கப் போகிறேன்.”

“பார்ப்பனியம் என்ற சொல்லை எதற்கு நுழைக்கிறீர்கள். பிராமணர்களுக்கும் இந்த வன்முறைக்கும் என்ன சம்மந்தம்?”

“நான் தனிப்பட்ட முறையில் சாதி பார்ப்பதில்லை. எனக்குப் பல தலித் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு சிலரின் தவறுக்காக அந்தச் சாதியையே குற்றம் சொல்வதை என்னால் ஏற்க முடியாது”

இந்தப் பதிவர்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கும் தனித்தனியே பதில் எழுதுவது கடினம். அதைக்காட்டிலும் இத்தகைய பின்னூட்டங்களை ஆளுகின்ற மனோபாவத்திற்கு பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

சட்டக்கல்லூரி வன்முறை என்பது ஒரு ஒளிபரப்பப்பட்ட வன்முறை. நியாயங்களும், அறிவும், காட்சிப் படிமங்களால் தோற்கடிக்கப்படும் காலம் இது. ஒரு சாதிவெறியனின் அனல் கக்கும் பேச்சு ஏற்படுத்தக் கூடிய மனப்பதிவைக் காட்டிலும் அழுத்தமான மனப்பதிவை இந்தக் காட்சிப் படிமங்கள் ஏற்படுத்தியுள்ளன.

“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” என்ற “இந்த ஸ்டோரியின் ஒன்லைனில்” நம்மாளு என்ற சொல் தேவர் சாதியை மட்டும் குறிப்பதல்ல. அது ஆதிக்க சாதியினர் அனைவரையும் தழுவி நிற்பது. இன்று அடங்கியிருப்பது போலத் தோன்றினாலும் நாளை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் (நிச்சயமாக வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்) லேசாகத் தண்ணீர் தெளித்து விட்டால் கூட, குப்பென்று சிலிர்த்து எழக்கூடியது. எனவே, இதனுடைய வேரைக் கெல்லி எடுத்துப் பார்ப்பது அவசியம்.

ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறைக் காட்சி மிகவும் கொடூரமாக இருக்கிறது என்பதிலோ, பிள்ளை அடிபடுவதைப் பார்த்துப் பதறும் அந்தத் தாயின் கண்ணீர் நெஞ்சை உருக்குகிறது என்பதிலோ ஐயமில்லை. அடிபட்ட மகனுக்காகத் துடிக்கும் அந்தத் தாயோ, அல்லது தந்தையோ சாதிவெறியர்களாக இருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்கவும் இல்லை. எனினும், இந்த வன்முறை அரிதானது. அதாவது தலித்துகள் ஆதிக்க சாதியினரைத் திருப்பித் தாக்கும் இந்த வன்முறை மிகவும் அரிதானது. தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் செலுத்தி வரும் வன்முறை அரிதானதல்ல. அது மிகவும் பொதுவானது. ஆதிக்க சாதி மனோபாவத்தைப் பொருத்தவரை அது ‘இயல்பானது’.

தலித் மக்கள் மீது திணிக்கப்படும் அடிமைத் தொழில்கள், தனிக்குவளை, தனிச்சுடுகாடு, தனிக் குடியிருப்பு போன்ற ‘வழக்கங்கள்’ இன்றளவும் எல்லா கிராமங்களிலும் நீக்கமற நின்று நிலவுவதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இந்த வழக்கங்கள் அல்லது மரபுகள் கடந்து போன காலத்தின் எச்சங்கள் என்றும் இன்று காலம் ரொம்பவும் மாறிப்போச்சு என்றும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள், கல்லூரி மாணவர் விடுதிகள்கூட ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

மாணவர் விடுதிகளும், மாணவியர் விடுதிகளும் ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்று யாரையாவது கேட்டுப் பாருங்கள். இப்படிப்பட்ட ‘கேனத்தனமான’ கேள்வி அவர்களுக்கு ஆச்சரியமூட்டும். “பஞ்சையும் நெருப்பையும் யாராவது பக்கத்தில் வைப்பார்களா? ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அன்றுமுதல் இன்றுவரை தனி விடுதிதானே” என்று பதிலளிப்பார்கள். ஆணாதிக்கத்தின் அபாயத்திலிருந்து பெண்களைப் பாதுகாக்க வேறு வழியில்லாத காரணத்தினால்தான் பெண்களைத் தனியாகப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்ற சாதாரணமான உண்மைகூட ஆண் மனதுக்கு உரைப்பதில்லை.

அது போலவே, “எஸ்.சி - பி.சி ஹாஸ்டல்கள் தனித்தனியே அமைக்கப்பட்டிருப்பதும்” சாதி ஆதிக்கத்தின் விளைவுதான் என்பது ஆதிக்க சாதியினருக்கு உரைப்பதில்லை. இது நூற்றாண்டு காலமாக நின்று நிலவும் வழக்கமோ மரபோ அல்ல. ஆதிக்க சாதியினரின் மன உணர்வைப் புரிந்து கொண்டு அரசாங்கம் செய்திருக்கும் ஏற்பாடு. சட்டக்கல்லூரி விடுதி ஒன்றாக இருந்ததும் பிரச்சினை ‘வெடிப்பதற்கு’ ஒரு காரணம்.

வெடிக்கும்போது மட்டும்தான் இத்தகையதொரு சாதிப் பிரச்சினை சமூகத்தில் நிலவுவதே தங்களுக்குத் தெரியவருவது போல நடிப்பதற்கு ஆதிக்க சாதியினரின் மூளை நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

உலகப்புகழ் பெற்ற இசைஞானி இளையராஜாவின் ஊரும், தமிழ் சினிமாவின் பாடல் பெற்ற தலமுமான பண்ணைப்புரத்தில், மாஸ்ட்ரோ ராஜாவின் மாமன் மச்சான்களுக்கு தனிக்குவளைதான். எமது அமைப்பைச் (ம.க.இ.க.) சேர்ந்த தோழர்கள் அதை எதிர்த்துப் போராடிய பிறகுதான் ‘அப்படியா?’ என்று புருவம் உயர்த்தியது தமிழ்நாடு. இன்னமும் இந்தச் சேதி பலருக்குத் தெரியாமல் இருக்கக் கூடும். ஒருவேளை தெரிந்தாலும், “ஒரு தலித்தின் இசை என்பதற்காகப் புறக்கணிக்காமல், அதனைக் கொண்டாடிய தமிழர்தம் தகைமை குறித்த பெருமிதத்தை ஒப்பிடுகையில் தனி கிளாஸ் பிரச்சினை ஒரு சில்லறை விவகாரமே” என்று கூட ஆதிக்க மனோபாவம் அமைதி கொள்ளக் கூடும்.

பண்ணைப்புரம் மட்டுமா? கண்டதேவி, சேலம் மாரியம்மன் கோயில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, திண்ணியம்.. இன்னும் எத்தனை எடுத்துக்காட்டுகள் வேண்டும்? எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதனாலேயே இவை சகஜமாகி விடுகின்றனவோ?

திண்ணியம் கிராமத்தில் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட குற்றத்துக்காக, தலித்துக்கு சூடு வைத்து, வாயில் மலம் திணிக்கப்பட்ட வன்முறை சட்டக் கல்லூரி வன்முறையைக் காட்டிலும் மென்மையானதா? அந்தக் குற்றவாளிகளை நீதிமன்றம் தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கவில்லை என்பதை பதிவர்கள் அறிவார்களா?

தேவர் சாதியினர் சூழ்ந்து நின்று கொண்டு வார்த்தை வார்த்தையாக சொல்லிக் கொடுக்க, “யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. நானாகத்தான் பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று பாப்பாபட்டி தலித் பஞ்சாயத்து தலைவர் டி.வி காமெராவின் முன் சொல்ல வைக்கப்பட்டாரே, அந்த வன்முறையைக் கண்டு கோடிக்கணக்கான தலித் மக்களின் சுயமரியாதை உணர்வு புழுவாய்த் துடித்திருக்குமே, அதை யாராலாவது உணரமுடிகிறதா?


அனைத்திந்தியப் புகழ் பெற்ற ‘கயர்லாஞ்சி படுகொலை’யில் போட்மாங்கே என்ற தலித்தின் நிலத்தைப் பறித்துக் கொண்டு, அதற்கெதிராக போலீசில் அவர் புகார் கொடுத்த குற்றத்துக்காக, அவரது மனைவியையும் கல்லூரியில் படிக்கும் மகளையும் கற்பழித்துக் கொலை செய்து, மகன்கள் இருவரையும் கொலைசெய்த ஆதிக்க சாதிக் குற்றவாளிகளில் ஒருவர் கூட தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கப்படவில்லை என்பதை அறிவீர்களா? மேல் முறையீட்டில் விடுதலையாவதற்குத் தோதான ஓட்டைகளை வைத்துத்தான் அவர்களில் சிலருக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலவளவு படுகொலையை விசாரித்த செசன்ஸ் நீதிபதி தேவர் சாதியைச் சேர்ந்தவர் என்பதும், கொலைகாரர்களின் சாதிவெறி நீதிமன்றத்தின் சாதிவெறியை விடக் கொடியதாக இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா? “உண்மையான கொலைகாரர்கள் பலர் தண்டிக்கப்படவில்லை” என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருந்தும், தமிழகத்தின் கழக அரசுகள் அதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பதை அறிவீர்களா?

எத்தனை கொலைகள், எத்தனை வல்லுறவுகள்.. அவற்றையெல்லாம் பட்டியலிட்டால் இந்தப் பதிவு மீட்டர் கணக்கில் நீளும்.

ஒளிபரப்பப்பட்ட ஒரு வன்முறை - ஒளிபரப்பப்படாத ஆயிரம் வன்முறைகள்!

மேலவளவும், திண்ணியமும் ‘லைவ்’ ஆக ஒளிபரப்பப்படாத காரணத்தினால்தான் தமிழகம் குமுறிக் கொந்தளிக்கவில்லையோ? இந்தக் காட்சிகள் எல்லாம் ‘லைவ்’ ஆகக் காமெராவில் கிடைக்காத துர்ப்பாக்கியத்தினால்தான் சன் டிவியும், ஜெயா டிவியும் அவற்றை ஒளிபரப்பவில்லையோ? சட்டக்கல்லூரியில் அடிபட்ட தமிழர்களுக்காகவும், ஈழத்தில் அடிபடும் தமிழர்களுக்காகவும் பதறித் துடிக்கும் வைகோவின் வரையப்பட்ட மீசை, மேற்கூறிய தமிழர்களுக்காக என்றுமே இப்படித் துடித்ததில்லையே, ஏன்? கருணாநிதியை ஒழித்துக் கட்ட அன்றாடம் கிடைக்கின்ற இத்தகைய பொன்னான வாய்ப்புகளை இவர்களெல்லாம் தெரிந்தே கைநழுவ விடுவது ஏன்?

“ஏனென்றால் இவை ஒளிபரப்பப்படவில்லை” என்று சொல்லி சமாதானமடைந்து கொள்வோமா? மேன்மை தங்கிய ஆதிக்க சாதி மனோபாவத்தின் கருணை உணர்ச்சியை உசுப்பி விடும் வகையில் அவர்களுடைய மனசாட்சியின் சந்நிதியில் இவை சமர்ப்பிக்கப்படவில்லை என்று நியாயம் கற்பித்துக் கொள்வோமா? அத்தகைய ‘நியாயம்’ பதில் ஷகீலா படத்தை விடவும் அம்மணமாகவும், ஆபாசமாகவும் இருப்பதை உங்களால் உணர முடியவில்லையா?

இவையெல்லாம் ஒளிபரப்பப்படவில்லை என்பது வேறு கதை. ஒருவேளை ஒளிபரப்பப்பட்டாலும் நாம் பார்க்க விரும்பும் காட்சிகளை மட்டுமே பார்ப்பதற்கு கண்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. கேட்க விரும்பும் செய்திகளைக் கேட்பதற்கு மட்டுமே செவிகள் பக்குவப் படுத்தப்பட்டிருக்கின்றன. உணர்ச்சிவயப்பட விரும்பும் சம்பவங்களுக்கு மட்டுமே உணர்ச்சி வயப்படுமாறு இதயம் தடிமனாக்கப் பட்டிருக்கிறது.

ஏனென்றால் இது பல நூற்றாண்டுகளாய் சவாரி செய்து சவாரி செய்து காய்த்துப் போன புட்டம். “பல நூற்றாண்டுகளாய் சுமந்து சுமந்து குதிரையின் முதுகும் காய்த்துப் போயிருக்க வேண்டுமல்லவா? அதுதானே இயற்கையின் நியதி?” என்று ஆதிக்க சாதியினரின் புட்டம் சிந்திக்கிறது. தங்களது புட்டத்தின் இந்த சிந்தனையை அனுதாபத்துடன் பரிசீலிக்குமாறு தலித் மக்களுக்கும் சாதி ஒழிப்பாளர்களுக்கும் ஆதிக்க சாதி மனோபாவம் வேண்டுகோள் விடுக்கிறது.

அம்பேத்கரிடம் காந்தி விடுத்த வேண்டுகோளும் இதுதான். “ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ள ஒரு தலித்தை சங்கராச்சாரி ஆக்கி, அவர் காலில் பார்ப்பனர்கள் விழுந்து வணங்கத் தயாரா? தீண்டாமையைக் கடைப்பிடிப்பவன் காங்கிரசில் உறுப்பினராக இருக்க முடியாது என்று விதி செய்யத் தயாரா?” என்ற கேள்விகளை அம்பேத்கர் எழுப்பியபோது காந்தி அளித்த பதிலின் சாரம் என்ன?

“தலித் மக்களுக்கு சாதி இந்துக்கள் இழைத்த கொடுமைக்கு பரிகாரம் தேடிக்கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” - இதுதான் காந்தியின் பதில். எப்போது பரிகாரம் தேடுவார்கள்? அதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படும்? அவர்களுக்கு விருப்பப்பட்டபோது, அவர்களுக்கு விருப்பப்பட்ட முறையில் பரிகாரம் தேடுவார்கள். அதுவரை ‘குதிரை’ காத்திருக்கவேண்டும். சுமக்கவும் வேண்டும்.

காந்தியின் பதிலில் இருந்த ‘நேர்மை’ கூடத் தமிழகத்தின் ஆதிக்க சாதியினரிடம் இல்லை. ராஜினாமா செய்வதையே முதல் நிபந்தனையாகக் கொண்டு பாப்பாபட்டி தேவர்சாதியினரால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ தலித் பஞ்சாயத்து தலைவர், டிவி காமெராவின் முன் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறார். அடுத்த கணமே, “நாங்களெல்லாம் அண்ணன் தம்பி போல வித்தியாசமில்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். வெளி ஆட்கள்தான் எங்களிடம் பிரிவினையை உருவாக்குகிறார்கள்” என்று தேவர்சாதியினர் பேட்டி கொடுக்கிறார்கள்.

இப்படியொரு பச்சைப் பொய்யை சொல்வதற்காக அவர்கள் கடுகளவும் கூச்சப்படவில்லை. ஏனென்றால் “இதுதான் இயற்கை நியதி, இதுதான் மரபு” என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த மரபு இந்து மதத்தால் புனிதப்படுத்தப்பட்ட மரபு. “பார்ப்பனர்களை ஏன் இழுக்கிறீர்கள்?” என்று சில பதிவர்கள் கொதிக்கிறார்களே, அந்தப் பார்ப்பனர்களால் இன்றளவும் அவர்கள் போற்றி வரும் பார்ப்பனியத்தால், சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்களால் நியாயப்படுத்தப்படும் மரபு. சங்கராச்சாரிகளால் நிலைநாட்டப்பட்டு வரும் மரபு. அரியானாவில் மாட்டைக் கொன்றதாக 5 தலித்துகளை கண்டதுண்டமாக வெட்டிப் போட்டு, ‘அதுதான் எங்கள் தருமம்’ என்று பாரதிய ஜனதா எம்.பி வேதாந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட மரபு. இதன் காரணமாகத்தான் “இந்து மதம் என்பது அறவுணர்ச்சியே இல்லாத மதம்” என்றார் அம்பேத்கர்.

தேவர் ஜெயந்தி பற்றிய எமது பதிவுக்குப் பின்னூட்டம் போட்ட ஒரு பதிவர், “என்னைப் பொறுத்தவரை நான் சாதி பார்ப்பதில்லை. யாரோ ஒரு சிலர் செய்யும் குற்றத்துக்காக ஒரு சாதியையே பழிதூற்றுவது என்ன நியாயம்?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அந்தப் பதிவரின் நேர்மையை நாம் சந்தேகிக்கவில்லை. ஆனால், “என்னைப் பொருத்தவரை நான் திருடன் இல்லை, பொறுக்கி இல்லை” என்று கூறி ஒதுங்கிக் கொள்ளும்படியான தனிநபரின் ஒழுக்கம் குறித்த விவகாரமல்ல சாதி.

அது மாத்திரமல்ல, “நான் திருடன் இல்லை என்றால், திருடர்களை உதைப்பதற்கு நான் ஏன் முன்வருவதில்லை? என் மாமனோ மச்சானோ சொந்தக்காரனோ அந்தக் குற்றத்தை இழைக்கும்போது அதை எதிர்க்கவிடாமல் என்னை மவுனமாக இருக்கச் செய்வது எது?” என்ற கேள்விக்கும் அந்தப் பதிவரைப் போன்றோர் பதில் தேட வேண்டும்.

இந்த மவுனத்துக்கு ஆயிரம் விளக்கங்கள் சொல்லி நியாயப்படுத்தலாம். ஆனால் மவுனத்தின் விளைவு சம்மதம்தான். வாங்கிய சம்பளத்துக்கு உரிய கடமையை ஆற்றாமல், “அந்த அநீதியான வன்முறையை”ப் பார்த்துக் கொண்டு நின்ற குற்றத்துக்காக சட்டக்கல்லூரியின் வாயிலில் நின்ற போலீசாரை தமிழகமே சபிக்கிறது. தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது அரசாங்கம். போலீசாரின் மவுனம், சட்டப்படி கடமை தவறிய குற்றமாகிவிட்டது. சொந்தக்காரனும் சாதிக்காரனும் இழைக்கும் அநீதிகளைப் பார்த்துக் கொண்டு நிற்கும் ‘நல்லவர்களின் மவுனத்திற்கு’ யார் தண்டனை வழங்குவது? அவர்களை எதிலிருந்து சஸ்பெண்டு செய்வது?

“என்னை தேவர் என்றோ, படையாச்சி என்றோ, பிராமணன் என்றோ நான் கருதிக்கொள்வது இல்லை” என்பது உண்மையானால், தேவர் சாதியையும் பார்ப்பன சாதியையும் இடித்துரைக்கும்போது, அந்தச் சாதியினரின் வரலாற்றுக் குற்றங்களையும், நிகழ்காலக் குற்றங்களையும் சாடும்போது, எனக்கு ஏன் தசையாட வேண்டும்? சாதி அடையாளம் இழிவானது என்று புரிந்து அதனைத் துறந்தவனுக்கு அந்த அடையாளத்தின் பால் ஏன் அனுதாபம் பிறக்க வேண்டும்?

நல்லெண்ணம் கொண்டோராகவும், சாதி உணர்வு இல்லாதவர்களாகவும் தங்களைக் கருதிக் கொள்பவர்கள் இதனைப் பரிசீலித்துப் பார்க்கவேண்டும். “எம்பேரு கோபாலகிருஷ்ணன்” என்று நீங்கள் சொல்லி, ஊர்க்கார பயக ஒத்துக் கொள்ளாமல் “சப்பாணி” என்று சொன்னால் கோபப்படுவதற்கு, இது ஒரு தனிப்பட்ட மனிதனின் பெயர் சம்மந்தப்பட்ட விவகாரம் இல்லையே. அவனுடைய சமூக நடத்தை தொடர்பான பிரச்சினையாயிற்றே!

“சட்டக் கல்லூரி பிரச்சினை வெடிப்பதற்கான பொறி, தேவர் ஜெயந்தி போஸ்டர்தான்” என்கிறார்கள். தேவர் நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பல பின்னூட்டங்கள் வந்தன. இப்போது அதற்குள் நாம் போகவில்லை. இன்று தேவர் குருபூஜை எதற்காக நடத்தப்படுகிறது? அவர் நேதாஜியுடன் இணைந்து சுதந்திரப் போரில் ஈடுபட்டார் என்பதற்காகவா, அல்லது சில பதிவர்கள் கூறுவது போல அவர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதற்காகவா? இன்று காங்கிரசு, பாஜக, திமுக, அதிமுக முதல் கம்யூனிஸ்டு கட்சிகள் வரை குருபூஜைக்குப் போய் சாமி கும்பிடுகிறார்களே, அங்கே உலக வர்த்தகக் கழகத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்களா, அல்லது தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்கிறார்களா?

இன்னும் புரியும்படி சொல்வதென்றால், காந்தி நினைவு நாளுக்கு பனியா குருபூஜை என்றோ, கட்டபொம்மன் பிறந்த நாளுக்கு நாயக்கர் குருபூஜை என்றோ, மருதுவின் நினைவுநாளுக்கு சேர்வை குருபூஜை என்றோ, வ.உ.சி பிறந்த நாளுக்கு பிள்ளைவாள் குருபூஜை என்றோ காமராசர் பிறந்த நாளுக்கு நாடார் குருபூஜை என்றோ பெயரிடப்படாததது ஏன்? அந்தந்த சாதிக்காரர்களுக்கு அப்படியொரு சாதி அபிமானம் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் தேவருக்கு மட்டும்தான் ‘குருபூஜை’. அங்கே மட்டும்தான் மொட்டை போட்டு சாமி கும்பிடுவது போன்ற வழிபாட்டு முறைகள். பாப்பாபட்டி, கீரிப்பட்டி முதல் மேலவளவு வரை தேவர் சாதிவெறியர்களால் ரணமாக்கப்பட்டிருக்கும் தலித் இளைஞர்களின் மன உணர்வுகள் “இந்த சாதி வழிபாட்டை சகித்துக் கொள்ள வேண்டும். இதற்கு போஸ்டரும் பானரும் வைத்தால் முகம் சுளிக்கக் கூடாது” என்பது சாதி வெறியர்களின் எதிர்பார்ப்பு.

சட்டக் கல்லூரி தலித் மாணவர்கள் இதையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலவளவில் தலித் ஊராட்சித் தலைவரை வெட்டியெறிந்ததைப் போலவே, சட்டக்கல்லூரியின் முன்னால் இருந்த ‘அம்பேத்கர்’ பெயரையும் வெட்டியிருக்கிறார்கள் சாதிவெறியர்கள். தாங்கள் அடிமை நிலையிலிருந்து விடுபடவும், கல்வி கற்கவும் ஆதாரமாக இருந்த தலைவரின் பெயரை வெட்டியெறிந்ததையும் தலித் மாணவர்கள் மவுனமாகச் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது சாதிவெறியர்களின் எதிர்பார்ப்பு.

சாதித் தலைவரான தேவரை தேசியத் தலைவராகவும், தேசியத் தலைவரான அம்பேத்கரை சாதித் தலைவராகவும் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யும் இந்த வன்முறையை எதிர்த்து நியாயமாக அனைத்து மாணவர்களும் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும். அது ஏன் நடக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலாக, தலித் மாணவர்களின் வன்முறை இன்று விவாதப் பொருளாகியிருக்கிறது. மிகத் தந்திரமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பொதுக்கருத்தால் தலித் மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். தலித் மாணவர்களைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

“என்னதான் இருந்தாலும் ஒரு மாணவனை பத்து பேர் சேர்ந்து கொண்டு நாயை அடிப்பது போல அடிக்கிறார்களே இது என்ன நியாயம்?” என்ற உருக்கமான முறையீடும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படும் அந்தக் காட்சிகளும், கடையக் கடையத் திரண்டு வரும் நஞ்சைப் போல, தலித்துகளுக்கு எதிரான மிகப்பெரும் வன்முறையாகத் திரண்டு எழுந்து வருகின்றன.

ஒரு மாணவனைப் பத்து பேர் சேர்ந்து அடிப்பது! எப்பேர்ப்பட்ட அநீதி! இதே போன்றதொரு கொடுமையை நானும் கண்டிருக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் பெரியார் (ஈரோடு) மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் என் தலித் நண்பனொருவனுடைய வீட்டுக்குப் போயிருந்தேன். கவுண்டர்களும், படையாச்சிகளும் அந்த கிராமத்தின் பெரும்பான்மை சமூகம். வழக்கம்போல ஊருக்கு வெளியிலிருந்தது காலனி. ஒரு பத்து இருபது வீடு இருக்கும். அவ்வளவுதான்.

டவுனிலிருந்து வந்திருக்கும் பாண்ட் சட்டை போட்ட (மேல் சாதி) பையன் என்பதால் எனக்கு காலனி மக்களின் உபசரிப்பு ரொம்ப அதிகம். இதை விளக்கத் தேவையில்லை. முக்கியமாக என் நண்பனின் தாத்தா. கடலைக் கொட்டை அவித்துக் கொடுப்பது என்ன, இளநி வெட்டிக் கொடுப்பது என்ன, அவருடைய முகத்தில் அப்படியொரு ஆனந்தம். பெருமை.

காலை உணவெல்லாம் முடித்த பின், கறி எடுப்பதற்காக நண்பன் பக்கத்திலுள்ள சிறு நகரத்துக்குப் போய்விட்டான். கிராமத்தின் அலுப்பூட்டும் மதிய வேளை. ‘ஒரு டீ குடித்து விட்டு வரலாம்’ என்று வெளியில் வந்தேன். டீயை சொல்லி விட்டு ஒரு சிகரெட்டையும் பற்றவைத்து ரெண்டு இழுப்பு இழுத்த பிறகுதான் பார்த்தேன் - டீக்கடை தடுப்புக்கு அந்தப் புறத்தில் குத்துக்கால் போட்டு உட்கார்ந்திருந்தார் தாத்தா.

கூச்சப்பட்டு அவசரம் அவசரமாக சிகரெட்டடை மறைத்து அணைத்தேன். “சும்மா பிடிங்க சார், அதிலென்ன இருக்கு. ஊர்ப்பயலுவளே மூஞ்சியில ஊதுறானுங்க” என்றார் கடைக்காரர்
“பரவாயில்லீங்க. தாத்தாவுக்கும் ஒரு டீ சேத்துப் போடுங்க” என்றேன். முதலில் எனக்குத் தயாரான டீயைக் கையில் கொடுத்தார் கடைக்காரர். அதை தாத்தாவிடம் கொடுத்தேன். அவர் அதைக் கையில் வாங்காமல், “நீ சாப்பிடு கண்ணு” என்றார்.

“நீங்க சாப்பிடுங்க சார், அவருக்கு நான் போடறேன்” என்றார் கடைக்காரர்.

கடையின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு அலுமினியக் குவளையைக் கழுவி நீட்டினார் தாத்தா. அப்போதுதான் எனக்கு விசயம் மண்டையில் உறைத்தது. பதட்டமானது. குப்பென்று வியர்க்கத் தொடங்கியது.

“ஏன் அவருக்கும் கிளாஸிலயே கொடுங்களேன்” என்றேன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

கடையில் ஒரு பத்து பேர் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பேச்சு நின்றது. ஒரு அசாதாரணமான மவுனம்.

“நீ சாப்பிடு கண்ணு” என்றார் தாத்தா. அவர் முகம் வெளிறியிருந்தது.

“நீங்க சாப்பிடுங்க சார்” என்றார் கடைக்காரர்.

“சார் வெளியூர் போல... நீங்க சாப்பிடுங்க” என்றார் கூட்டத்திலிருந்த இன்னொருவர்.

என்னுடைய கேவலமான நிலைமையை எண்ணி கைகால்கள் நடுங்கின. சண்டை போடுவதா? இப்போது சண்டை போட்டு விட்டு ராத்திரி பஸ் ஏறி நான் போய்விடுவேன். தாத்தாவின் கதி என்ன? பிறகு காலனி மக்களின் கதி என்ன?

தாத்தாவின் குவளையில் இன்னும் டீ ஊற்றப்படவில்லை. என்னுடைய டீயையும் இன்னும் நான் குடிக்கவில்லை.

அவர்கள் பத்து பேர் - நானும் தாத்தாவும் மட்டும். கோபம், பயம்.. கண்ணீர் முட்டியது.

“எனக்கும் டீ வேண்டாங்க” என்று சொல்லி விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு காலனிக்கே போய்விட்டேன். மாலை கிளம்பிவிட்டேன். நடந்தது என்ன என்பது எனக்கும் தாத்தாவுக்கும் மட்டும்தான் தெரியும். புறப்படுவதற்கு முன் அவருடைய கையை ஒரு முறை அழுந்தப் பற்றியதைத் தவிர வேறு எதையும் நான் அவருக்குச் சொல்லவில்லை. சொல்ல முடியவுமில்லை.

இது முன்னொரு நாள் நான் நேரில் அனுபவித்த வன்முறை. தாத்தாவுக்கு அது அனுபவித்துப் பழகிய வன்முறை. குஜராத் முஸ்லிம் மக்கள் அனுபவிக்கும் வன்முறை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் இந்த நாட்டின் தலித் மக்கள் அனுபவித்து வரும் வன்முறை. பார்ப்பனர் முதல் வேளாளர், முதலியார், செட்டியார், தேவர், வன்னியர், கவுண்டர் போன்றோரடங்கிய “பெரும்பான்மை இந்துக்கள்” பல்லாயிரம் ஆண்டுகளாக தலித் மக்கள் மீது மிகவும் இயல்பாகச் செலுத்தி வரும் வன்முறை.

ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தச் சம்பவத்தை டீக்கடைக்காரர் மறுநாளே மறந்திருப்பார். தாத்தாவும் கூட மறந்திருக்கக் கூடும். ஆனால் இந்த வன்முறையின் தழும்பை என்னுடைய நினைவுகள் தீண்டும் ஒவ்வொரு முறையும், குத்துக்காலிட்டபடி கையில் குவளையுடன் அமர்ந்திருக்கும் தாத்தாவின் முகம் சுரீரென்று நெஞ்சைக் குத்துகிறது.

பேச வந்த விசயத்திலிருந்து நான் வெகுதூரம் விலகிப் போய்விட்டேனோ? நாம் சட்டக்கல்லூரி மாணவர் வன்முறையைப் பற்றியல்லவா பேசிக்கொண்டிருந்தோம்.

பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை அடிக்கும் வன்முறை - அடேயப்பா, அது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமானது!

Tuesday, November 18, 2008

மனித உடலின் அணுக்களை (செல்) தாக்கும் குளிர்பானங்கள்

அணுக்களைச்(செல்) சாகடித்து, உடல் பருமனை ஏற்படுத்தும் அதிக கலோரியைக் கொண்ட குளிர்பானங்களின் விற்பனையை நிறுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கேட்டு கொண்டார்.

உலகம் முழுவதிலும் உள்ள பல பயனீட்டாளர் கழகங்கள் “உலகளாவிய நிலையில் குளிர்பானத்தை மறுப்போம்” என்ற பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. உலக அளவில் சிறார்களிடையே உடல் பருமன் பிரச்னைக்குக் காரணமாக இருக்கும் அதிக கலோரி கொண்ட குளிர்பானங்களின் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என உலகம் முழுதிலும் உள்ள நாடுகளின் அரசாங்கங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றன.

குளிர்பானங்களில் இருக்கும் அதிகமான சீனியினால் மட்டுமே பாதிப்பு இருக்கிறது என்று கிடையாது. அதில் மிக பரவலாக பயன்படுத்தப்படும் சோடியம் பென்சொயித் என்ற பதப்பொருள் மரபணுக்களில் முக்கிய அம்சங்களைக் குளறுபடியாக்கி கடுமையான அணுசிதைவை ஏற்படுத்துகிறது என பிரிட்டன் பல்கலைகழக ஆய்வு ஒன்று கூறுகின்றது. முதுமை மற்றும் மது பழக்கத்தினால் ஏற்படும் ஈரல் இறுக்கி நோயான சிரோசஸ் மற்றும் ஓயாத உறுப்புக்கள் நடுக்கத்தை ஏற்படுத்தும் பார்கின்சன் நோயையும் ஏற்படுத்தும் என்று கூறுப்படுகிறது என்று இத்ரிஸ் கூறினார்.

உலகம் முழுவதிலும் குளிர்பானங்களைக் குடிக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சுவைக்கூட்டுப்பொருள் குழந்தைகளிடையே மிகை சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது என்பதும் இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

சோடியம் பென்சோயித் இ211, கேஸ் பானங்களில் மிக பரவலாக உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்படுகிறது. பென்சோயித் அமிலத்திலிருந்து தருவிக்கப்படும் சோடியம் பென்சொயித் குளிர்பானங்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

சோடியம் பென்சொயித் புற்றுநோயுடன் சம்பந்தப்படுத்தப்பட்டு வருகிறது, காரணம் குளிர்பானங்களில் இருக்கும் வைட்டமின் சியுடன் இது கலக்கும் போது பென்சின் என்ற இரசயானத்தை உருவாக்கிறது. பென்சின் இரசாயனம் புற்றுநோய் காரணிகளில் ஒன்றாக இருக்கிறது.

உணவு விதி 1985ன் கீழ் பென்சோயிக் அமிலம் அல்லது சோடியம் பென்சோயித் உணவுகளில் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுவை சேர்க்கப்பட்ட பானங்களில் 2000 பிபிஎம் அளவும், குளிர்பானங்களில் 800பிபிஎம் அனுமதிக்கப்பட்ட அளவாகும்.

ஊட்டச்சத்து என்று பார்க்கும் போது குளிர்பானங்களில் மிக குறைந்த அளவே இருக்கிறது ஆனால், சுகாதார கேடுகள் என்று பார்க்கும் போது அதில் ஏரளாமாக மலிந்து கிடக்கிறது. பெரும்பாலான குளிர்பானங்கள¢ல் ஆபத்தான கேஸ், வர்ணம், அமிலம், சுவைப்பொருள், சீனியூட்டப்பட்ட நீர் மட்டுமே இருக்கின்றது. இந்தப் பொருட்களினால் புற்றுநோய், எலும்பு தேய்மானம், உடல் பருமன் சொத்தைப்பல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

சோடியம் பென்சோயித் ஏராளமான சுகாதார கேடுகள் சம்பந்தப்பட்டிருப்பதால், சுகாதார அமைச்சு இதனை மறு ஆய்வு செய்து, அதன் பயனீட்டை நிறுத்த வேண்டும். இந்த அமிலம் குளிர்பானம் உட்பட மற்ற உணவுகளில் பயன்படுத்தப்படுத்துவதற்கு உணவு விதி 1985 அனுமதிக்கிறது.

இளைஞர்களை புகையிலிருந்து விடுவியுங்கள்

உலக புகைபிடிக்காத தினம் 2008 ஆண்டு கொண்டாட்டத்தில் 2.73 மில்லியன் புகைபிடிப்பவர்கள் கலந்து கொள்ளப் போகின்றார்கள். இவர்களில் 2.61 மில்லியன் ஆண், 120,000 பெண் புகையாளர்களும் அடங்குவர். சராசரி நாள் ஒன்றுக்கு மவெ.15 மில்லியன் சிகரெட்டுக்காக செலிவிடப்படுகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். இத்ரிஸ் கூறினார்.

இந்த வருட கொண்டாட்டம் “இளைஞர்களைப் புகையிலிருந்து விடுவியுங்கள்” என்ற கருவுடன் கொண்டாப்படுகிறது. 18 வயதுக்கு கீழ்பட்ட 45லிருந்து 50 மலேசிய இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் புகைபிடிக்க தொடங்குக¢ன்றனர், இவர்களில் 8விழுக்காட்டினர் பள்ளி சிறார்களாவர். 2000கும் 2005ம் ஆண்டுக்கும் இடையில் பதின்ம வயதுடைய பெண்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை அவர்களிடைய 4 விழுக்காட்டிலிருந்து எட்டு விழுக்காடு அதிகரித்திருக்கிறது. மொத்தத்தில் 2004ம் ஆண்டில் ஐந்து மலேசிய இளைஞர்களிடையே ஒருவர் புகைப்பிடிப்பவராக இருக்கிறார் என இத்ரிஸ் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகத்தில் ஒவ்வொரு நாளும் 60,000க்கும் 100,000க்கும் இடைப்பட்ட குழந்தைகள் தினமும் புகைபிடிக்க தொடங்குகின்றனர். இதில் பெரும்பகுதியினர் ஆசியாவைச் சார்ந்தவர்கள்.

சிகரெட்டில் 4,000 விதமான இரசாயனங்கள் இருக்கின்றன, இதில் 2000 இரசாயனங்கள் நச்சுத்தன்மையானவை, 63 புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. இருப்பினும் உலகலாவிய நிலையில் நாள் ஒன்றுக்கு அதன் விற்பனை 15 பில்லியன் அல்லது நிமிடத்திற்கு 10 மில்லியனாக இருக்கிறது. ஒவ்வொரு சிகரெட் பிடிக்கப்படும்போது மனிதனின் வாழ்நாளில் ஐந்து நிமிடத்தை அது குறைத்து விடுகிறது. உலகத்தில் ஒவ்வொரு எட்டு வினாடிக்கு ஒருவர் புகைபிடிப்பதனால் அல்லது அது சம்பந்தப்பட்ட நோய்களினால் செத்து மடிகின்றனர்.

மலேசியாவில் மட்டும், ஒவ்வொரு வருடமும் 10,000 இறப்புக்கள் புகையினால் சம்பவிக்கிறது. இதில் குறைந்த பட்சம் 3000 நுரையீரல் புற்றுநோய், இருதய நோய் மற்றும் கடுமையான நுரையீரல் நோயாக இருக்கிறது.

சிகரெட் வாங்குபவர்களின் வயது 18லிருந்து 21க உயர்த்தப்பட வேண்டும் என இத்ரிஸ் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். அதோடு வாங்குவதை மட்டும் தடை செய்யாது இளம் குழந்தைகள் புகைபிடிப்பதையும் அரசாங்கம் அடியோடு தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

அமெரிக்காவில் இல்லிநோயிஸ் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து கெடுபிடியான சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பிறகு, 69விழுக்காட்டினர் புகைபிடிப்பதை கைவிட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. வயது குறைந்தவர்கள் சிகரெட் வாங்குவதைக் கட்டுப்படுத்திய பிறகு அவர்களிடையே சிகரெட் வாங்குபவர்களின் எண்ணிக்கை 3லிருந்து 70 விழுக்காடாக குறைந்திருக்கிறது என அந்த ஆய்வு காட்டுகிறது.

பொதுவாக குடும்பங்களாக செல்லக்கூடிய பொது இடங்களான உணவு கடைகள், உணவகங்கள் பொது கேளிக்கை இடங்களிலும் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என பி.ப.சங்கம் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறது.

அரசாங்கம் சுகாதார அமைச்சு மூலமாக, நெடுஞ்சாலைகளில் இருக்கும் ஓய்வு இடங்கள், பொது கேளிக்கை இடங்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் அதிகமாக பொதுமக்கள் செல்லக்கூடிய இடங்களில் சிகரெட்டுக்கு தடை வ¢திக்க வேண்டும் என்றும் இத்ரிஸ் கேட்டு கொண்டார். இது பொதுமக்களுக்குப் பாதுகாப்பான ஒரு சூழலை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் இரண்டாவது புகையாளராக மாறுவதிலிருந்தும் தடுக்கிறது.

710 மில்லியன் குழந்தைகள் உலக அளவில் இரண்டாவது புகையாளராக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 6லிருந்து 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இரண்டாவது புகையாளராக இருக்கும் போது அவர்களிடயே வாசிப்பு, கணித மற்றும் சிந்தனை திறன் குறைவதாக அமெரிக்க சிஞ்சினாத்தி மருத்துவமனையின் ஆய்வு காட்டுகிறது.

பினாங்கில் அமைந்திருக்கும் இளைஞர் பூங்கா மற்றும் பூந்தோட்டத்தில் பொதுமக்கள் புகைபிடிப்பதாக பி.ப.சங்கத்திற்கு புகார்கள் வந்திருக்கின்றன. ஆகையால் இந்த இரு இடங்களிலும் புகைபிடிக்கக்கூடாத பகுதியாக அறிவிக்கும்படி பினாங்கு மாநில அரசாங்கத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டு காள்கிறது. இங்கு வருகை புரியும் பொதுமக்கள், மற்றும் உடற்பயிற்சியாளர்களின் நலன் கருதி இந்நடவடிக்கை மிக அவசிமாகிறது என இத்ரிஸ் கூறினார்.

இத்தகைய நடவடிக்கை இளைஞர்களைப் புகையிலிருந்து காப்பதற்காக உதவுவதோடு மட்டுமல்லாமல், புகையிலையின் ஆபத்தைப் பற்றி தனிநபர் மற்றும் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமயும் என்று பி.ப.சங்க தலைவர் எஸ்.எம். இத்ரிஸ் கூறினார்.

Tuesday, November 11, 2008

இளையோரிடம் அலட்சியப் போக்குகள் அதிகம்

அன்றாட வாழ்வில் சினிமா பிரிக்க முடியாத ஒரு அங்கமாகிவி்ட்டது. திரையில் தோன்றும் கதாநாயக - நாயகிகள், இளையோர்களை மெய் மறக்கச் செய்யும் வசீகரச் சக்தி அவர்களுக்கு இருக்கிறது. ஒரு இளைஞன் தான் எப்படியிருக்க வேண்டும் என்று நினைப்பதை ஏதோ ஒரு வகையில் திரையில் தோன்றும் கதாபாத்திரங்கள் பூர்த்திச்செய்யும் போது, அவர்கள் இளையோரின் கனவு நாயக - நாயகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று நேற்றைய கதையில்லை இது. கருப்பு வெள்ளை யுகத்திலேயே ஆரம்பமாகி விட்டது.

இளையோரை நல்வழிப்படுத்துவது கடினமான ஒரு விசயமாகும். காரணம் துள்ளும் இளமை பருவத்தில் இருப்பவர்கள் அவர்கள். அதோடு இளையோரிடம் அலட்சியப் போக்குகள் நிறையவே காணப்படுகின்றன. அவர்களின் ஆர்வத்தையும் இளமைத் துள்ளல்களையும் நம்மால் தணிக்கைச் செய்ய முடியாது. ஆனால் கலாச்சார சீரழிவுக்குக் காரணமாக இருந்து வரும் திரைப்படங்களை நம்மால் தணிக்கைச் செய்ய முடியும்.

தணிக்கை வாரியங்கள், புகை, மது, ஆபாசம் மற்றும் அளவுக்கு மீறிய வன்முறைகள் சம்பந்தப்பட்டக் காட்சிகளெல்லாம் தணிக்கைச் செய்யப்பட வேண்டும். நம் நாட்டு சட்டத் தி்ட்டங்கள் என்று வரும்பொழுது, ஒரு திரைப்படங்களில் குறிப்பிட்ட வரையில்தான் வன்முறைக் காட்சிகள் இடம் பெற்றிருக்க வேண்டும். அதுதான் இங்கு சட்டமும் கூட. ஒரு திரைப்படத்தைச் சம்பந்தப்பட்ட புகை நிறுவனங்களோ அல்லது மது நிறுவனங்களோ விளம்பரம் செய்தால் அதை உடனடியாக அரசாங்கம் தடை செய்ய வேண்டும். வளரும் தலைமுறைகளான பள்ளி மாணவர்களுக்குத் திரைப்படங்களால் ஏற்படும் கலாச்சார சீரழிவுப் பற்றி விழிப்புணர்ச்சிகளை அரசாங்கம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

ஒரு மாறுதல் ஏற்பட வேண்டும் என்றால், அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஏற்படுத்த வேண்டும். ஆதலால் வளர்ந்து வரும் இளையோர்களுக்கு நாம் விழிப்புணர்ச்சிகளை ஆழமாக அவர்களின் மனத்தில் பதிய வைத்து விட்டால், அவர்கள் நிச்சியமாக திசை மாறிப் போகமாட்டார்கள் என்று நம்பிக்கை கொள்ளலாம்.

-இக்கட்டுரை 15 மே 2005, தமிழ் நேசனின் வாசகர் களம் என்ற சிறப்பு பகுதியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

Monday, November 10, 2008

தாய்மொழிவழிக் கல்வி : தமிழால் இயலாது என்பது தவறு.

ஒவ்வொருவருக்குமான முதன்மையான அடையாளம் என்பது அவரவர் தாய்மொழியால் பெறப்படுவதே ஆகும். குழந்தை தாயின் கருப்பையி லிருக்கும்போதே மொழியைக் கற்கத் தொடங்கி விடு கிறது. எனவே உலகின் அறிவுத் துறைகள் யாவற்றை யும் எந்தெந்த மொழிகளின் வழியாகப் பெற்றாலும் சிந்தனை என்பது தம் தாய்மொழி வழியாகவே அமையும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவேதான் உளவியலறிஞர்களும் மானுடவியலாளர் களும் கல்வி என்பது அவரவர் தாய்மொழியில் அமைந் தால் மட்டுமே கல்வியின் முதன்மை நோக்கமாகிய சிந்தனைத்திறன் வளர்ச்சியும் படைப்பாற்றல் மேம் பாடும் நிகழும் என்கின்றனர். சிந்திப்பது ஒரு மொழி யிலும், கல்வி கற்றலென்பது ஒரு மொழியிலுமாக அமைவது அறிவியல் அடிப்படையிலேயே தவறானது.

குறிப்பாகத் தமிழகத்தின் பெரும்பான்மைப் பெற்றோர்கள், தாம் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் சிறப்பான முறையில் கல்வி பெற்றுயர்ந்ததை உணர்ந்தும் கூட, ஆங்கிலமோகம் கொண்டவர்களாகவே இருப்பது தமிழகத்தின் அவலச் சூழல்.

ஆங்கிலம் பயிலல் என்பது வேறு. ஆங்கிலத்தின் வழியாகப் பயிலுதல் என்பது வேறு. பிற மொழிகளைக் கற்றுக் கொள்வது என்ற நோக்கில் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் வயது, கற்றல் வேகம், சூழல் சார்ந்து கற்றுக் கொள்வதென்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் அடிப்படையான அறிவு வளர்ச்சிக்கான பாடங்கள் யாவற்றையும் எந்தக் காரணகாரியங்களும் இன்றி ஆங்கில வழியாகவே (ஆநனரைஅ டிக நுபேடiளா) பயின்றால் தான் அறிவு வளரும் என்பதான பெற்றோர்களின் எண்ணம் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. ஆங்கிலம் என்பதனை அறிவின் மொழியாகவும் உலகின் அறிவுப்புலங்களுக்கெல்லாம் அதுவே வாயி லாகவும் எண்ணிக்கொள்கிற பல பெற்றோர்கள், தன் குழந்தை குறித்து ‘பிற பாடங்களெல்லாம் நன்றாகப் படிப்பான். ஆங்கில வழியிலேயே படித்ததால் தமிழ் தான் சரியாக வருவதில்லை’ என்று சொல்லிக் கொள்வ தில் பெருமையடைகிறார்கள்.

இன்றைக்கும் பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, கியூபா, சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆங்கிலேயர் ஆண்டு விடுதலை வழங்கிய பல நாடுகளிலும் அவரவர் தாய்மொழியில்தான் ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை வழங்கப்படுகிறது. இன்று உலகையே தன் தொழில்நுட்ப அறிவால் ஆளுகிற ஜப்பானிய விஞ்ஞானி கள் பலருக்கும் ஆங்கிலம் தெரியாது என்பது நாம் அறிய வேண்டியது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் அளப்பரிய சாதனைகள் செய்து நோபல் பரிசு பெற்ற பல அறிஞர்களில்கூட ஆங்கிலம் தெரியாதவர் உள்ளனர். எனவே, ஆங்கிலப் புலமை என்பது அறிவின் அடையாளம் என்ற தவறான மனப்போக்கு மாற வேண்டும்.

நுண்ணிய நூல் பல கற்பினும் தத்தம்
உண்மை அறிவே மிகும்.
- என்ற வள்ளுவர் வாக்கை இப்போக்கில்கூடப் பார்க்கலாம்.

ஒரு குழந்தை இரண்டாவது மொழியாக ஆங்கி லத்தை மட்டுமல்ல வேறு எந்த மொழியைக் கற்க வேண்டுமானாலும் அது முதலில், தன் தாய்மொழியைச் சரியாகக் கற்று வளம் பெற்றால்தான் அந்த இரண்டா வது மொழியறிவையும் வெற்றிகரமாகப் பெறமுடியும். எனவேதான் உளவியல் மற்றும் மொழியியல் அறிஞர் கள் ஒரு குழந்தை தன் தாய்மொழியில் ஓரளவிற்குப் பயிற்சி பெற்ற பின்னர் பிறமொழி அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென்கின்றனர். ஆனால் இங்கோ அ, ஆவிற்கு முன் ஹ, க்ஷ, ஊ, னு அறிமுகப் படுத்தப் படுவதே கௌரவமாகக் கருதப்படும் சூழல். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பு வதைத் தடை செய்ய வேண்டும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வளர்ச்சியடையாத ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எழுதுவது, படிப்பது, கணக்கு சொல்லிக்கொடுப்பது தடை செய்யப்பட வேண்டும். பள்ளிப் பைகளின் எடை குழந்தையின் எடையில் பத்து சதவீதம் (10சதவீதம்) அதாவது 1 முதல் 1 1 /2 கிலோ வரை இருக்க வேண்டும் என்று இந்திய குழந்தைகள் மருத்துவக்கழகம் அறிவுறுத்துகிறது.

தட்பவெப்பச்சூழலுக்கு முற்றிலும் முரணான வகையில் கழுத்தில் இறுகும் பட்டையையும் (டை) காலுறையையும் (சாக்ஸ்) புதையடியையும் (ஷு) இறுக்கிக் கட்டி குழந்தையின் பிஞ்சு உடலும் மனமும் அரைவேக் காடாகும் வண்ணம் விலங்குகளை அடைப்பதுபோல் அள்ளிக்கொண்டு செல்லும் ஊர்திகளில் ஏற்றி ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்புவதில் அலாதி இன்பம் காண்கின்றனர் கற்றறிந்த பெற்றோர்கள்கூட.

பெரும்பாலும் தமிழ்வழிக்கல்வி என்பது கிராமப் புற ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கானது என்பது போலவும் ஆங்கில வழிக்கல்வி மேல்தட்டு மக்களுக் கானது என்பது போன்றதுமான மாயைச் சூழலைக் களையத் தற்போது சமச்சீர்க்கல்விக்கான முன்வைப்பு கள் மகிழ்ச்சி தருகிறன. பாமரனும்கூட தன் பிள்ளை ஆங்கில வழியில்தான் பயில வேண்டும் என்று முனைப்பு காட்டுவதுதான் தமிழ்ச்சமூகம் ஆங்கில மோகத்தின் வழி, மெக்காலே கண்ட கனவின் வழி மீண்டும் ஓர் அடிமைத்தனத்திற்குத் தயாராகிறது என்பதன் அடையாள மாகும்.

பல்லாண்டுகளுக்கு முன்பே கல்லணை கட்டிய சோழனின் தொழில்நுட்ப அறிவு இன்றைய பொறியியல் கல்லூரிகள் தந்ததா? கப்பல் கட்டிய அறிவு இங்கிலாந் தில் பெற்றதா? ஒவ்வொரு மொழியும் அவ்வினமும் அறிவுத் தோற்றவியல்( நுயீளைவநஅடிடடிபல) சார்ந்து தனக்கான அறிவுத்தேடலின் பயணப் பதிவை தத்தம் மொழியில் செய்திருக்கின்றன. அம்மொழியில் இன்றைய நவீனத் திற்கும் அதற்கு மேலுமான தொழில்நுட்ப அறிவு புதைந்திருக்கிறது.

அவ்வகையில் நம் செம்மொழித் தமிழால் மருத்துவம், அறிவியல், சட்டம், பொறியியல் கற்பிக்க இயலாது என்பது முற்றிலும் தவறானது. உயர்கல்வி யினைச் சிறப்பாகத் தமிழில் தர முடியும். கல்லூரிப் பாடங்களெல்லாம் ஆங்கிலத்தில் உள்ளன. எனவே தான் எங்கள் குழந்தைகளை ஆங்கில வழிப்பள்ளியில் படிக்க வைக்கிறோம் எனும் பெற்றோர்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். படித்த, சென்ற தலைமுறைப் பெற் றோர்களின் ஆங்கிலப் புலமை இத் தலைமுறையினரை விடச் சிறப்பாகத்தான் இருக்கிறது. அவர்கள் ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தவர்களில்லை. ஒரு மொழிப் பாடமாக மட்டும் ஆங்கிலத்தைப் பயின்றவர்கள்தான்.

உயர்கல்வி பெறும் பருவ வயதிற்கான கேட்டல், எழுதுதல், படித்தல், புரிதல் நிலை வளர்ச்சிவேறு.

“கல்விக்கு சரியான அடிப்படை ஒழுக்கத்தைக் கற்பிப்பதே. ஆங்கிலத்தில் எல்லா பாடங்களையும் போதிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு என் பிள்ளைகளை ஆப்பிரிக்காவில்கூட அனுப்பவில்லை. தாய்மொழி யில்தான் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும். எங்களோடு டால்ஸ்டாய் பண்ணையில் வாழ்ந்த குழந்தைகளுக்கு தமிழும், உருதும் சொல்லிக் கொடுப் பதை நான் ஏற்றுக்கொண்டேன்” (சத்தியசோதனை - 238) என்ற மகாத்மா காந்தியடிகளின் கூற்றிற்கேற்ப குழந்தைகளின் வாழ்வு செப்பமானதாக்க தாய்மொழி வழிக்கல்வியை நாடுவோம்.

மன்னார்குடி இரெ.இராசகணேசன்