Monday, June 20, 2011

சட்ட விரோத கருத்தடை மாத்திரை விற்பனையும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களும் பெண்கள் ஆரோக்கியமான வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

கருத்தடை மாத்திரைகள் தொடர்பாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் அது மருந்துக்கடைகளில் மிகவும் எளிதாக கிடைக்கப்பெறுவது அம்பலமாகியுள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

இந்த கருத்தடை மாத்திரை விற்பனைகள் விஷ சட்டம் 1952ன் கீழ் வருகின்றன. கருத்தடை மாத்திரையை விற்பனை செய்பவர், வாங்குபவரின் விபரத்தை விஷ புத்தகம் என்ற பெயரிடப்பட்ட புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இப்படி பதிவு செய்யப்படாமலேயே இந்த கருத்தடை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சி தரும் விஷயமாகும். பினாங்கில் உள்ள மருந்துக்கடைகளிலும் கூலிம், கெடாவில் உள்ள மளிகைக்கடைகளிலும் இம்மாதிரியான சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. கோலாலம்பூரில் உள்ள சௌகிட் பகுதியிலும் கிராமப்புறங்களில் உள்ள மளிகைக் கடைகளிலும் கருத்தடை மாத்திரைகள் சட்டத்திற்கு விரோதமான முறையில் விற்கப்பட்டு வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

கருத்தடை மாத்திரைகள் விளைவிக்கும் பாதிப்புக்களை உணராத ஆயிரக்கணக்கான மலேசியப் பெண்கள் அதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்யும் 15 கடைகளில் சோதனையிட்ட பொழுது அவற்றில் 14 கடைகளில் விஷ புத்தகத்தில் வாங்குபவரின் பெயர் பதிவு செய்யப்படாமலேயேதான் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரே ஒரு மருந்துக்கடையில் மட்டும்தான் கருத்தடை மாத்திரையை வாங்குபவரின் பெயரைப் பதிவு செய்தார்கள். அதுவும் கூட அவர் கொடுத்த விபரங்கள் உண்மையா என்பது பரிசோதிக்கப்படவில்லை. அப்படியானால் விஷ புத்தகத்தில் தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். 14 மருந்துக் கடைகளில் 5 மருந்துக்கடைகள் மட்டுமே வாங்குபவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டு இறுதியில் மாத்திரையை விற்றன. ஓர் ஆணும் எந்த வித சிரமமும் இல்லாமல் மருந்தை வாங்க முடிந்தது என்றார் இத்ரிஸ்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மருந்துக்கடைகள் பினாங்கில் உள்ளவையாகும். அவை பள்ளிக்கூடத்திற்கு, பல்கலைக்கழகத்திற்கு, கடைகள் மற்றும் மக்கள் குடியிருக்கும் இடங்களுக்கு அருகில் இருந்தன. சில கருத்தடை மாத்திரைகளை உதிரியாகவும் விற்பனை செய்கின்றனர். அதில் மாத்திரை தொடர்பான விபரங்கள், பக்க விளைவுகள் தொடர்பான எந்த விபரங்களும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

சில கடைகளில் மட்டுமே கருத்தடை மாத்திரையின் விலையை எழுதி வைத்திருந்தார்கள். ஒரே பிரண்டைக் கருத்தடை மாத்திரைகள் மவெ.4.80லிருந்து மவெ. 6.50 வரை விற்கப்படுகின்றன. வெவ்வேறு பிரண்டு கருத்தடை மாத்திரைகளுக்கான விலைகள் மவெ. 4.80லிருந்து மவெ.23.00 வரைக்கும் உள்ளன. சிலர் விலையைக் குறைத்து வாங்குகின்றனர்.

இந்த கருத்தடை மாத்திரைகள் எளிதில் கிடைக்கின்ற காரணத்தால் அதனை மலேசியப் பெண்கள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. கருத்தடை மாத்திரைகள் விளைவிக்கும் ஆபத்துக்கள் மற்றும் நீண்ட கால பாதிப்புக்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இவை மருத்துவரின் கண்காணிப்பின் கீழேயே விநியோகிக்கப்பட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

இந்த கருத்தடை மாத்திரைகளை அதனுடைய உண்மையான நோக்கத்தைத் தவிர்த்து பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பரீட்சைக் காலங்களில் தங்களுடைய மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்கும், சமய சம்பிரதாய நிகழ்வுகளில் தடையின்றி கலந்துகொள்வதற்காகவும் மாதவிடாயைத் தள்ளிப்போட இணையம் மூலம் ஆலோசனைக் கேட்டு வருவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. பெண்கள் இந்த மாத்திரைகளை ரமலான் மாதத்திலும் ஹாஜ் செலுத்தும் சமயத்திலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

கருத்தரித்த காலத்தில், இருதயக் கோளாறுகள், இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், இரத்த சோகை, புற்றுநோய், மூளை, குருதிக்குழாய் கோளாறுகள் போன்ற நிலையில் உள்ளவர்கள் இந்த மாத்திரையைப் பயன்படுத்தக்கூடாது.

கருத்தடை மாத்திரைகளின் மூலம் போலி ஹோர்மோன்களை உடலுக்குள் செலுத்தி சினை முட்டை வெளிப்படுவதைத் தடுப்பது உடலின் இயல்பான இயக்கத்திற்கு ஊறு விளைவிப்பதாகும். இது பெண்களுக்கு சௌகரியம், வலி, மன நிலையில் மாற்றம், மன அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்திவிடும். அதே நேரத்தில் எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் பெண்களுக்குப் பிரச்னைகளையும் ஏற்படுத்திவிடும் என்றார் இத்ரிஸ்.

கருத்தடை மாத்திரைகள் மன அழுத்தம், மார்பகக்கட்டி, மாதவிடாய் நேரத்தில் அதிக உதிரப்போக்கு, உயர் இரத்த அழுத்தம், உடலில் கொலெஸ்ட்ரோலின் அளவை அதிகரித்தல், காலில் இரத்தக் கட்டு, நெஞ்சு வலி, ஈரல் பாதிப்பு மற்றும் பக்கவாதத்திற்கான அறிகுறிகளை ஏற்படுத்திவிடும். கருத்தடை மாத்திரைகளில் உள்ள எஸ்ட்ரோஜனின் அளவே இவ்வளவு பாதிப்புக்களையும் ஏற்படுத்திவிடும்.

பெண்களுக்கான மாதவிடாய் சுற்று 27லிருந்து 29 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இதில் மாதவிடாய் அதிகபட்சமாக 7 நாட்கள் வரைக்கும் வரும். 8லிருந்து 10 நாட்களுக்கு சினை முட்டைகள் வெளிப்படும். 10லிருந்து 11 நாட்கள் மாதவிடாய் வருவதற்கான அறிகுறிகளுக்கான உடல் பாதிப்புக்கள் இருக்கும். இதையெல்லாம் கணக்கு வைத்துப் பார்க்கும்பொழுது பெண்களுக்கு வெறும் 5 நாட்கள் எந்த வலியும் வேதனையும் இல்லாத நாட்களாக இருக்கின்றன. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உடல் வலியும் மனஅழுத்தமும் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் இப்படி மாத்திரைகளை உட்கொள்வது மாதவிடாயின்போது ஏற்படும் பாதிப்புக்களை அதிகமாக்கிவிடுகின்றன.

மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பதாக வரும் உடல் நலப் பாதிப்புக்கள்

மார்பகத்தில் வலி, குமட்டல், வாந்தி, மன அழுத்தம், ஒலி மற்றும் வாசனைகளால் அதிகம் எரிச்சலுக்கு உள்ளாகுதல். இவை எல்லாம் மாதவிடாய் வருவதற்கு 5லிருந்து 11 நாட்களுக்கு முன்பதாகவே ஏற்பட்டுவிடுகின்றன. மாதவிடாய் ஆரம்பித்தவுடன் இந்த அறிகுறிகள் எல்லாம் போய்விடுகின்றன.

சினை முட்டை வெளிப்படும் சமயத்தில் ஏற்படும் வலிகள்
மாதவிடாய் ஆரம்பித்த 11லிருந்து 17வது நாளில் இந்த வலி ஏற்படுகிறது. வெள்ளைப்படுதல் மற்றும் இடுப்பு மற்றும் தொடையில் வலி ஏற்படுவதே இதற்கான அறிகுறி.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, குமட்டல், வாந்தி மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அடி வயிறு, முதுகு வலி மற்றும் தொடைக்கும் வலி பரவுகிறது. கால்களில் விறைப்பு ஏற்படுகிறது. சிலருக்கு வயிற்று வலி அதிகமாகவும் உதிரப் போக்கு கட்டியாகவும் வெளிப்படும்.

விஷ சட்டம் 1952 பெண்களுக்கு எந்த விதமான பாதுகாப்பையும் வழங்கவில்லை. கருத்தடை மாத்திரைகளை எந்த பதிவும் எல்லாமல் பெண்கள் எளிதாக வாங்குவது தடை செய்யப்பட்ட மருத்துவரின் கண்காணிப்பின் கீழேயே கருத்தடை மருந்துகள் விநியோகிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

கருத்தடை மாத்திரைகள் கொண்டு வரும் பாதிப்புக்களை எடுத்து விளக்கும் பொருட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு மாற்றாக வேறு பாதுகாப்பான குறைவான உடல் நலப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வழிகளைப் பரிந்துரைக்க வேண்டும்.

பெண்களில் உடல் நலனில் அக்கறை காட்டும் பொருட்டு ஆண்களும் தங்களுடைய பங்கை ஆற்ற வேண்டும். ஆணுறை, விந்து புகுதலை தவிர்க்கும் முறை (coitus interruptus) மற்றும் ஆண் குடும்பக் கட்டுப்பாடு (vasectomies) போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம். தாய்லாந்தில் ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வது பரவலாக வரவேற்கப்படுகிறது. 1984ல் அங்கு 164,511 ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டுள்ளனர். ஆகையால் குடும்பக் கட்டுப்பாடு என்பது பெண்களால் மட்டும் செய்துகொள்ளப்பட வேண்டியது ஒன்று அல்ல.

பெண்களுக்கான உடல் நலனும் வாழ்க்கைத் தரமும் மேம்பட ஆரோக்கியமான வழிகளை கடைபிடிக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.

கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் பாரம்பரிய நடைமுறைகளை அமல்படுத்தி ஏற்றம் காணுவதை மலேசிய அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்

மலேசியாவில் உட்கொள்ளப்படும் இறைச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட காரணத்தால் கால்நடைகளுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. 1985ல் ஒருவர் சராசரி வருடத்திற்கு 2.4 கிலோகிராம் மாட்டிறைச்சி மட்டுமே உட்கொண்டு வந்தார். 2010ல் ஒருவர் உட்கொள்ளும் மாட்டிறைச்சி 8.4 கிலோகிராமாக உயர்ந்துள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் பன்றியிறைச்சி உள்நாட்டுத் தேவைக்குப் போதுமானதாக உள்ளது. அதிகமான இறைச்சித் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு மலேசியாவில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அதே வேளையில் அவற்றை உட்கொள்ளும் பயனீட்டாளர்களுக்கும் பல விதமான ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்குகிறது என்றார் இத்ரிஸ்.




கால்நடை வளர்ப்பில் பாரம்பரிய நடைமுறைகளும் வளங்களும் சிறிதுசிறிதாக அழிக்கப்பட்டு வருகின்றன. கால்நடைகள் சுதந்திரமாக மேய்வதற்கு இடமில்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம், சோயா ஆகியவை அதிகமாக சுத்திகரிக்கப்பட்டு கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கப்படுகின்றன. இவை கால்நடைகளுக்குப் பல விதமான நோய்களை ஏற்படுத்துகின்றன. தீவனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இவற்றுக்குக் கொடுக்கப்படும் அளவுக்கு அதிகமான என்டிபையோட்டிக்குகள் நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைத்துவிடுகின்றன. இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளான கால்நடைகள் சினை ஆவது குறைந்து போகிறது. இவற்றுக்கும் எளிதில் கருச்சிதைவும் ஆகின்றன. வெளிநாட்டிலிருந்து இன்னும் குறைவான விலைக்கு இறைச்சிகள் கிடைக்கின்ற காரணத்தால் உள்நாட்டு கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களுடைய கால்நடைகளுக்கு நியாயமான விலை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள் என்றார் இத்ரிஸ்.

இந்தியா, ஆந்திராவில் உள்ள இரு கால்நடை நிபுணர்கள் மலேசியாவில் உள்ள பலதரப்பட்ட கால்நடைப் பண்ணைகளுக்கு வருகை அளித்து, அந்தப் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைக் களைவதற்கான வழிமுறைகளையும் கால்நடைகளுக்கான மாற்று மருத்துவத்தையும் பரிந்துரைத்து வருகிறார்கள்.

ஆந்திரா என்ற அமைப்பைச் சேர்ந்த டாக்டர் சகாரி ராமதாஸ் கால்நடை மருத்துவர் ஆவார். ஆந்திரா அமைப்பின் இயக்குநராக இவர் இருக்கிறார். திரு சன்யாசி ராவ் மூலிகை ஆராய்ச்சியாளர். ஆந்திரா அமைப்பின் இயற்கை வள ஆய்வு வேலைகளில் இவர் இருக்கிறார். ஒதுக்கப்பட்டவர்கள், நிலமில்லாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள், குறிப்பாக இதில் உள்ள பெண்களோடு இணைந்து வேலை செய்து நிலைத்த நீடித்த விவசாயத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது இந்த அமைப்பு.

கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய், சீரணக் கோளாறுகள், சுவாசக்குழாய், இன உற்பத்தி, சிறுநீர் சார்ந்த இயக்கம், சரும நோய்கள் போன்ற பலதரப்பட்ட கால்நடைகளுக்கு ஏற்படும் ஆரோக்கியக் கோளாறுகளுக்கு பாரம்பரிய முறையில் நிவாரணம் அளித்து நூறு விழுக்காடு வெற்றியினைக் கண்டிருக்கும் இவர்களுடைய பாரம்பரிய கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை மருத்துவ வழிமுறைகளை இங்குள்ள கால்நடை வளர்ப்பாளர்களோடு பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறார்கள். எந்த வித இரசாயனக் கலப்பு இல்லாத மூலிகை சார்ந்த இவர்களுடைய அணுகுமுறைகள் ஆரோக்கியமான கால்நடை வளர்ப்புக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலைப் பேணி, நீடித்த நிலையான விவசாயத்திற்கும் உதவுகிறது.

மலேசியாவில் உள்ள விவசாயிகளும் கால்நடை வளர்ப்பாளர்களும் ஆந்திரா அமைப்பின் தகவல்களைப் பெற்றுக்கொண்டு இரசாயனம் அல்லாத, நீடித்த விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு முறையைக் கற்றுக்கொண்டு பயன் பெற வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

ஆஸ்ட்ரவின் ஆதிக்கத்தினால் தொலைகாட்சி ரசிகர்களுக்கு இழப்பு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சாடல்

அரசாங்கம் ஆஸ்ட்ரோவுக்கு கொடுத்துள்ள அதிசலுகைகளினால், மலேசியர்கள் நெடுங்காலமாகவே அதிகமாக செலவு செய்து வந்திருக்கின்றனர். இதனால் மலேசிய தொலைகாட்சி ரசிகர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதோடு மற்ற நிறுவனங்களின் சேவைகளும் தடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தொலைகாட்சி நிறுவனத்துக்கு மட்டும் 20 வருட சிறப்பு லைசன்ஸ் வழங்கியிருப்பது மலேசியாவில் மட்டுமே காணப்படும் நிலையாகும் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கூறினார்.

மற்ற நாடுகளில் தொலைகாட்சி ரசிகர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைகாட்சி அலைவரிசைகள் கிடைக்கின்றன. அத்தகைய நாடுகளில்:
* இந்தியாவில் கட்டணம் செலுத்தப்படும் ஐ6 தொலைகாட்சி நடத்துநர்கள் இருக்கின்றார்கள்
* இந்தோனிசியாவில் 6
* ஆஸ்திரேலியாவில் 3;
* விலையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றோரு விஷயமாகும். இந்தியாவில் மெவ19.17க்கு 155 தொலைகாட்சி அலைவரிசைகள் கிடைக்கின்றன.

இதுவே ஆஸ்ட்ரோவுடன் ஒப்பிடும் போது மவெ64.61க்கு குடும்ப பேக்கஜ் அல்லது 3 மினி பேக்கஜ் என்று மொத்தம் 50 அலைவரிசைகளைக் கொண்டிருக்கிறது. குடும்ப பேக்கஜில் 33 அலைவரிசைகள் மட்டுமே இருக்கின்றன, அவற்றில் டிவி1லிருந்து டிவி 9 வரை இலவசமாக கொடுக்கப்படும் 6 அலைவரிசைகளும் அடக்கம்.

குடும்ப பேக்கஜில் இருக்கும் அலைவரிசைகள் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்கள் விரும்பி பார்க்கக்கூடியவையாக இருக்கின்றது. ஆகையால் தங்களுக்கு பிடிக்காத அலைவரிசைகளுக்கு சந்தாதாரர்கள் காசு கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள என்று இத்ரிஸ் கூறினார்.

ஆஸ்ட்ரோ டிகாடர் வழி வரும் இந்த அலைவரிசைகள் மழை பெய்யும் போது ரசிகர்களால் பார்க்க இயலுவதில்லை. மழை பெய்யும் போது தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல் போகிறது என்பது ரசிகர்களின் பெரிய புகாராகும். 2008ல் மியாசாட் 2 மற்றும் மியாசாட் 3 துணைக்கோளங்கள் பாய்ச்சப்பட்ட பிறகு இந்த பிரச்னை 30விழுக்காட்டுக்கு குறைந்து விடும் என்று ஆஸ்ட்ரோ கூறியிருந்தது. ஆனால் அப்படி எதுவும் பெரிய மாற்றங்கள் இருந்ததாக தெரியவில்லை.

ஆஸ்ட்ரோ இப்பொழுது HD B என்ற புதிய டிக்கோடரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. உண்மையில் இந்த புதிய டிக்கோடருக்கு ரசிகர்கள் மாதாமாதம் கூடுதல் மவெ20 செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த புதிய டிஷ் மழைபிரச்னையைக் குறைப்பதற்கான நோக்கத்திற்கே தயாரிக்கப்பட்டது. ஆயினும் மழை காலங்களில் இன்னுமும் தெளிவான சேவையை பெற இயலாத நிலையிலே ரசிகர்கள் இருப்பதால் ஆஸ்ட்ரோ இந்த புதிய டிஷை அனைத்து சந்தாதாரர்களுக்கும் இலவசமாகவே பொறுத்தியிருக்க வேண்டும்.



தெளிவான காட்சி குறிப்பிட்ட சில அலைவரிசைகளுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் அதிகமான அலவரிசைகளுக்கு இதை அறிமுகப்படுத்தும் போது ஆஸ்ட்ரோ தனது கட்டணத்தை இன்னும் அதிகரிக்கூடும் என்று இத்ரிஸ் கூறினார்.

மேலும், தொலைகாட்சிக்கான உபகருவிகளின் சந்தையையும் ஆஸ்ட்ரோவே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இத்தகைய கருவிகள் சீரிம் மற்றும் எம்சிஎம்சி அனுமதியோடு விற்கப்பட்டால் ரசிகர்கள் அவற்றை எங்கு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். இந்தக் கருவிகளின் விற்பனையில் கூட ஆஸ்ட்ரோ ஏன் தனது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்று இத்ரிஸ் கேள்வி எழுப்பினார்.

ஆஸ்ட்ரோ சந்தாதாரர்கள் அதன் சேவை பொறுத்தப்பட்ட காலத்திலிருந்து எல்லாவற்றிற்கும் பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதில் தாமதமான கட்டணம், மீண்டும் பொறுத்தும் கட்டணம், சேவை கட்டணம் வேறு இருக்கிறது. இது போதாது என்று ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை புதிய பேக்கஜ் என்று ரசிகர்கள் தலையில் மேலும் மேலும் பணச்சுமையை ஏற்படுத்துகிறார்கள். ஜூலை 11 2011 முதல் மீண்டும் மாற்றம் காணப்பட்ட கட்டணம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு கட்டணங்களுக்குப் பிறகும் நிகழ்ச்சிகளுக்கு நடுவில் ஏகத்துக்கும் விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. இது மிகவும் எரிச்சலை ஏற்படுத்துவதாகவும் ரசிகர்களை ஏமாற்றுவதாகவும் இருக்கிறது என்று இத்ரிஸ் கூறினார்.

2017 வரை ஆஸ்ட்ரோவுக்கு 20 வருட சிறப்பு லைசன்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. அமைச்சு வலியுறுத்தியும் கூட இந்நிறுவனம் தொடர்புத்துறை பல்நோக்கு ஊடக சட்டம் 1998க்கு மாற மறுக்கிறது.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:

* மலேசிய தொடர்புத்துறை பல்நோக்கு ஊடக கமிஷன், ஆஸ்டரோ போன்ற வாணிக சமூகத்தினருக்கு உதவுகிறதே தவிர ஏழை மக்களுக்கு அல்ல. அவர்கள் பொதுமக்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

* விலையை ஏற்றுவதற்கு பதில் ஆஸ்ட்ரோ குடும்ப பேக்கஜில் உள்ள அலைவரிசைகளை மலிவான சிறு சிறு பேக்கஜுகளாக மாற்ற வேண்டும். இது பணச்சுமையைக் குறைக்கும். ஆஸ்ட்ரோ சந்தாதார்கள் எண்ணிக்கை 3 மில்லின் குடும்பங்களை எட்டியிருப்பதால், ஆஸ்ட்ரோவுக்கு இந்த விலைக்குறைப்பு பெரிய சிக்கல்களை எதுவும் ஏற்படுத்தாது.

* அரசாங்கம் புதிய தொலைகாட்சி நடத்துநர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும், அதோடு மற்ற நாடுகளைப் போன்று தொலைகாட்சி உபகருவிகளைச் சந்தையில் வாங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

* சுலபமான போக்குவரத்துக்கு உதவும் வகையில் டிஷ் கனமில்லா பொருளிலிருந்து தயாரிக்கப்பட வேண்டும்.


எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Sunday, December 26, 2010

10 விஷயங்கள் மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் தொடர்பாக மருத்துவ ஆராய்ச்சி கழகம் (IMR) செய்திருந்த மனுவுக்கு, தேசிய உயிரியல் பாதுகாப்பு மன்றம்(NBB), அனுமதி அளித்திருக்கின்றது. மருத்துவ ஆராய்ச்சி கழகம், இந்த ஆண் கொசுக்களால் எவ்வளவு தூரம் பறக்க முடியும், எவ்வளவு காலம் அவற்றால் உயிர் வாழ முடியும் போன்ற பரீட்ச்சார்த்த சோதனைகளை பெந்தோங் மற்றும் ஆலோர் காஜாவில் நடத்தவிருக்கின்றது.

இந்த மரபணு மாற்று தொழில்நுட்பத்தின் நோக்கம் மரபணு மாற்றபட்ட ஆண் கொசுக்களைப் பெண் கொசுக்களுடன் ஜோடி சேர வைப்பதாகும். ஆண் கொசுவின் மரபணு மாற்றப்பட்டிருப்பதால், கொசுக்குஞ்சுகள் வளர்ச்சியடைவதற்கு முன்பதாகவே இறந்துவிடும். இதன் வழி கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி டெங்கி காய்ச்சலைக் குறைக்கலாம் என்ற எதிர்ப்பார்போடு இதைச் செய்கின்றார்கள்.


1. மரபணு தொழில்நுட்பம் அல்லது மாற்றம் பாதகமான விளைவுகளைக் கொண்டு வரலாம். அதன் விளைவுகளைச் சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. மரபணு மாற்றப்பட்ட கொசுக்களின் பாதுகாப்பு குறித்த ஏராளமான சந்தேகங்களுக்கு இன்னும் விடை காணப்படாமலேயே இருக்கிறது.

2. மரபணு மாற்றப்பட்ட கொசுக்களைப் பற்றி மிக குறைந்த அறிவும் அனுபவமே இருப்பதால் அது சுகாதாரத்திற்கும் சுற்றுப்புறத்திற்கும் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் பற்றி சில அறிவியலாளர்கள் அச்சம் கொண்டிருக்கின்றார்கள். சில விஞ்ஞானிகள் தங்கள் அச்சம் குறித்து தேசிய உயிரியல் பாதுகாப்பு மன்றம் மற்றும் இயற்கை வள சுற்றுப்புற அமைச்சிடம் அறிக்கை சமர்பித்திருக்கிறார்கள். விஞ்ஞானிகளிடையே இதன் பாதுகாப்பு பற்றிய சர்ச்சைகள் ஏற்பட்டிருப்பதால், இந்தக் கொசுக்களை வெளியிடுவதில் நாம் இன்னும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

3. இந்த பரீட்ச்சார்த்த சோதனை பல தடவைகள் செய்யப்படவிருப்பதால், அதிக எண்ணிக்கையிலான கொசுக்கள் வெளியில் விடப்படும். இந்தச் சோதனையின் போது நாள் ஒன்றுக்கு 2,000-3,000 கொசுக்கள் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து விடப்படும். அதாவது ஒரு சோதனையின் போது ஏறக்குறைய 4,000லிருந்து 6,000 கொசுக்கள் வெளியே விடப்படும். இதுவே தேர்ந்தெடுக்கபட்ட இரு பகுதிகள் என்றால் 16,000லிருந்து 24,000 மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மலேசிய சுற்றப்புறத்தில் உலா வந்து கொண்டிருக்கும். அப்படி இச்சோதனை தொடரப்பட்டால் இவற்றின் எண்ணிக்கை பன்மடங்காகும்.

4. மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுக்கள் மட்டுமே வெளியே விடப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஆராய்ச்சி கழகம் கொசுக்களை வெளியே விடுவதற்கு முன் ஆண் பெண் கொசுக்களைப் பிரித்தெடுக்க வேண்டும். அதிக எண்ணிக்கை என்பதால், அப்பணியின் போது, மனித தவறுகள் நிகழுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உருவாகும். பெண்கொசுக்களே மனிதர்களைக் கடித்து நோயைப் பரப்புவுதால் இதுவும் அச்சப்படவைக்கும் விஷயமாக இருக்கிறது.
5. செத்துமடியும் படி வடிவமைக்கப்படும் சில கூட்டுப்புழுக்கள் தப்பி உயிர் பிழைக்கலாம். ஆண் பெண் கொசுக்கள் ஜோடி சேரும் போது உற்பத்தியாகும் கூட்டுப்புழு செத்து மடிய வேண்டும். ஆயினும் சொற்ப எண்ணிக்கையிலான கூட்டுப்புழுக்கள் உயிர் தப்பலாம் (ஆய்வுக்கூட சோதனையில் உயிர் தப்பியவை3-4%) இப்படி உயிர்தப்பிப்பவைப் பெண் கொசுக்களாக இருக்கலாம். மரபணு மாற்றப்பட்ட உயிர்தப்பும் கூட்டுப்புழுக்கள் என்பது நமது சுற்றுச்சூழலில் அந்நிய மரபணு உலா வரும் என்று அர்த்தமாகிறது. அவற்றின் பாதிப்புக்கள் பற்றியும் தெரிந்திருக்கவில்லை.

6. மலேசியாவில் டிங்கி காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் ஒரு வழி முறையாக பின்பற்றப்பட்டால், தொடர்ந்தார் போல் பல இலட்சக்கணக்கான கொசுக்கள் வெளியே விடப்பட வேண்டும். கொசுக்கள் தொடர்ந்தார்போல் இனப்பெருக்கம் செய்யக்கூடியது என்பதால், அடிக்கடி இந்தக் கொசுக்களை வெளியே விடவேண்டி வரும். அதுவும் வாராவாரம் இப்படி செய்ய வேண்டும். இந்தத் திட்டத்திற்கு 100 மில்லியனிலிருந்து 1 பில்லியன் வரையிலான மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் பயன்படுத்தப்படுவதற்குச் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது.

7. மரபணு மாற்றப்பட்ட கொசு தொழில்நுட்பம் பிரிட்டனைச் சேர்ந்த ஒக்சிடெக் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்தத் தொழில்நுட்பத்தின் உலகளாவிய உரிமத்தை இந்த ஒக்சிடெக் நிறுவனம் கொண்டுள்ளது. தொடர்ந்தார் போல் இந்தக் கொசுக்கள் விடப்படும் என்றால் இந்த நிறுவனத்திற்குத் தொடர்ச்சியான லாபம் கிடைத்துவரும். அண்மைய காலமாக இந்நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதால், தனது உற்பத்திக்கு அனுமதி பெறுவதில் அது நிறைய நெருக்குதலுக்கு உள்ளாகலாம்.

8. மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் எண்ணிக்கை நீண்ட நாட்களுக்குக் குறைவாகவே இருந்தால், டெங்கி மற்றும் சிக்கன்கூனியா நோய்களைப் பரப்பும் இன்னும் ஒரு வகையான கொசுக்களின் எண்ணிக்கை பெருகக்கூடும். இயற்கையும் இப்படிதான் இயங்குகிறது - ஒரு இனம் குறையும் போது மற்றொரு வகை வளர்ச்சி அடைவது இயற்கையின் நியதியும் ஆகும்.

9. உலக அளவில் மரபணு மாற்றப்பட்ட கொசுக்களைச் சுற்றுச்சூழலில் பரவ செய்வதில் மலேசியா இரண்டாவது நாடாக இருக்கிறது - மலேசியர்களும் மலேசிய சுற்றுச்சூழலும் ஏன் சோதனை எலிகளாக்கப்பட வேண்டும்? 2010ல் கெய்மென் தீவு என்ற இடத்தில் பரீட்ச்சார்த்த சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அங்குள்ள சுற்றுச்சூழல் (சூழியலும் மனிதர்களும்) முற்றிலும் வேறுப்பட்டது. கெய்மென் தீவின் முழுமையான மதிப்பீட்டு சோதனை இன்னும் பொதுவாக விவாதிக்கப்படவில்லை.

10. கொசுக்கள் விடப்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த பரீட்ச்சார்த்த சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கலாம். அனுமதிக்காக உள்ள விதிமுறைகளில் ஒன்று தேசிய உயிரியல் பாதுகாப்பு மன்றம் பொது விவாத மேடை வைத்து, அங்கு வசிப்பவர்களின் அனுமதியைப் பெற்றிருப்பதாகும்.

நன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Monday, November 15, 2010

நீரிழிவு நோய் - அமைதியான உயிர்கொல்லி!

இன்று உலக நீரிழிவு தினம். சர்வதேச நீரிழிவு சம்மேளனமும் உலக சுகாதார நிறுவனமும் 1991ம் ஆண்டு நவம்பர் 14 தேதியை நீரிழிவு தினமாக பிரகடனப்படுத்தியதிலிருந்து, உலக அளவில் நீரிழிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தன்று சுகாதார அமைச்சும் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரங்களை நடத்தி வருகின்றது. இருப்பினும் மலேசியாவில் இந்நோய் குறிப்பாக 2ம் ரக நீரிழிவு, தொற்றுநோய் போல எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.


ஆசியாவிலேயே நீரிழிவு நோயாளிகளில், மலேசியா 4வது இடத்தில் இருப்பதாக சர்வதேச நீரிழிவு சம்மேளனம் கூறுகிறது. 2007ல் எட்டு இலட்சமாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, 2010ல் 3.4 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டுகளில், தென் கிழக்காசிய நாடுகளில் நீரிழிவு நோயாளிகள் மிக அதிகமாக இருப்பார்கள் என்றும் அச்சம்மேளனம் கணித்திருக்கிறது என்றார் அவர்.

தேசிய சுகாதாரம் மற்றும் நோய்கள் பற்றி மிக அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை திடுக்கிடும் வகைனில் அதிகரித்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. 1996-ல் 8.3 விழுக்காடாக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை, 2006ல் 14.9 விழுக்காடாக அதிகரித்தது. பத்தே வருடத்தில் 30 வயதுக்கும் அதிகமான மலேசியர்களிடையே 80% வரை இந்நோய் அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது.

இதே ஆய்வில் 18 வயதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மத்தியில், 1996ல் 4.4 விழுக்காடாக இருந்த உடல் பருமன், 2006ல் 14.0 விழுக்காடாக உயர்ந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இது பத்தே வருடத்தில் 200 விழுக்காடு உயர்வாகும்.

ஆசியாவிலேயே அதிக உடல் பருமனும் கூடுதல் எடை கொண்டவர்களும் மலேசியாவில் தான் அதிகமாக இருக்கிறார்கள். பெரியவர்களுக்கான மக்கள் தொகையில் 54 விழுக்காட்டினர் உடல் பருமன் அல்லது கூடுதல் எடையோடு இருக்கின்றார்கள். இந்த எண்ணிக்கை 10 வருடங்களுக்கு முன் 24.1 விழுக்காடாக மட்டுமே இருந்தது. இப்பொழுது 10 மலேசியர்களில் (பெரியவர்கள்) எழுவர் மோசமான பிணிக்கு உளாகியிருக்கிறார்கள் என்றார் இத்ரிஸ்.

அதிகமான சீனி உட்கொள்ளும் பழக்கமே மலேசியர்களிடையே நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் இத்ரிஸ் கூறினார். நாள் ஒன்றுக்கு 26 தேக்கரண்டி சீனியை உட்கொள்வதோடு, சீனி அதிகமாக உபயோகிப்பவர்கள் பட்டியலில் நாம் எட்டாவது இடத்தை வகிக்கின்றோம்.

நீரிழிவு உயிர்க்கொல்லி நோயாக கருதப்படுவதற்கு காரணம் அது உடலில் முக்கிய உறுப்புக்களான இருதயம், சீறுநீரகம், நரம்புகள், கண்கள் போன்றவற்றைப் பாதிக்கிறது. நீரிழிவு நோய் முறையாக கட்டுபட்டுத்தப்படவில்லை என்றால், அது பல்வேறு சிக்கல்களை உடலில் ஏற்படுத்தும். முக்கிய உடல் உற்றுப்புக்களைத் தாக்கும் அதே வேளை, கால்களையும் அது குறி வைக்கிறது. 40%லிருந்து 70% கால் துண்டிப்பு சம்பவங்களுக்கு நீரிழிவே காரணமாக இருக்கிறது.

உலகத்தில் ஏதாவது ஒரு மூலையில்:
* 10 வினாடிகளில் இருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது
* 10 வினாடிகளில் ஒருவர் நீரிழிவு நோயினால் இறக்கிறார்.
* 30 வினாடிகளில் ஒருவர் கை அல்லது காலை நீரிழிவு நோய்க்கு பலி கொடுக்கிறார்

நீரிழிவு நோயின் முற்றிய நிலையில் சிறுநீரகம் பாதிக்கப்படுவது மலேசியாவில் மிகப் பெரிய சுகாதார பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. சுமார் 13,000 நீரிழிவு நோயாளிகள் டயலிசிஸ் செய்து கொள்கிறவர்கள். ஒவ்வொரு ஆண்டும் 2,500 பேர் நீரிழிவு நோயின் இறுதி கட்டத்தை அடைகின்றார்கள் என்றார் இத்ரிஸ்.

நீரிழிவு நோயாளிகளில் ஐவரில் நான்கு பேர் இருதய நோயால் இறக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் அறுவர் பக்கவாதத்திற்கு பலியாகிறார்கள்.

இருவருக்கு நீரிழிவு நோய் என்று அறியப்படும் பொழுது ஒருவர் தனக்கு இந்நோய் இருப்பது தெரியாமலேயே இருக்கிறார். வயதானவர்களுக்கு அல்லது மத்திய வயதை ஒத்தவர்களுக்கு ஏற்படும் என்று மட்டுமே கருதப்பட்ட 2ம் ரக நீரிழிவு இப்பொழுது 10 வயது குழந்தைக்கும் ஏற்படுகிறது.

இளைஞர்களிடையே நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு உண்ணும் பழக்கமும், வாழ்க்கை முறையும் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 18க்கும் 29 வயதுக்கும் இடைபட்டவர்களிடையே 2ம் ரக நீரிழிவு ஏற்படுவது அதிகமாக இருக்கிறது என்று இத்ரிஸ் மேலும் கூறினார்.

குழந்தைகள் உண்ணும் “நாகட், பர்கர், பொறித்த கோழி, பொறியல், கேஸ் பானங்கள் அவர்களை உடல் பருமனானவர்களாக மாற்றுகிறது. நீண்ட நேரத்துக்கு அமர்ந்து நிலையில் வீட்டுப்பாடம் செய்வது, தொலைகாட்சி பார்ப்பது, கணினி விளையாட்டுக்களை விளையாடுவது” அவர்களிடையே உடல் பருமன் பிரச்னையை ஏற்படுத்துகிறது.

அதிக புருக்டோஸ் உள்ள சோள சீரப்பில் இருக்கும் மலிவான சீனி பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களிலும், பானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது இன்சுலினுக்கு எதிராக செயல்பட்டு 2ம் ரக நீரிழிவு நோய்க்கு வித்திடுகிறது. ஜேம், சாக்லட், பேக் செய்யப்பட்ட பதார்த்தங்கள், பேக்கட்டுக்களில் அடைக்கப்பட்ட பானங்கள், சத்து பானங்கள், பசியாறல் சீரியல்கள், சாஸ் வகைகள், சூப் வகைகளில் இந்த சீரப் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது.

நீரிழிவு பொதுமக்களின் சுகாதாரத்தைக் குறிவைக்கும் ஒரு மோசமான நோய். உலக அளவில் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம். மக்கட்தொகை எண்ணிக்கை அதிகரிப்பு, நகரமயமாக்குதல், உடல் பருமன் அதிகரிப்பு, குறைவான உடல் உழைப்பு போன்றவை முக்கிய காரணமாகிறது.

மலேசியாவில் நீரிழிவின் அதிகரிப்பு எதிர்பார்த்த அளவைவிட மிக அதிகமாக இருக்கிறது. இந்த நோய்க்கான செலவினங்கள் அதிகரிப்பதோடு, அது நோயாளிகளின் கைகால்கள், கண் பார்வை போன்றவற்றைப் பலி கொள்கிறது.

தொற்றுநோய் போன்று அதிகரித்து வரும் இந்நோயைத் தடுப்பதற்கு அரசாங்கம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டு கொள்கிறது:

* உணவுகளில் சோள சீரப் பயன்பாட்டைத் தடை செய்ய வேண்டும்

* உணவு உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்பில் சீனி பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கு வகை செய்ய வேண்டும்.

* தங்கள் தயாரிப்பில் எவ்வளவு சீனி இருக்கிறது என்பதை லேபல்களில் குறிப்பிடும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

* குழந்தைகள் தொலைகாட்சி பார்க்கும் சமயங்களில் அதிக சீனி சேர்த்த உணவுகளின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்.

* பள்ளிக்கூட சிற்றுண்டிச் சாலையிலும், பள்ளிக்கூட வளாகத்துக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட தூரம் வரை இந்த உணவுகள் விற்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

* மருத்துவமனை, விமான நிலையம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் தின்பண்டங்களை விற்கும் தானியங்கி இயந்திரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். அதற்குப் பதில் குடிநீர் தானியங்கி இயந்திரங்களைப் பொருத்த வேண்டும்.

* நீரிழிவு நோயின் ஆபத்துக்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெரிய அளவிலான பிரச்சாரங்கள் தீவிரமாக்கப்பட வேண்டும்.

* பயனீட்டாளர்கள் உடல் உழைப்பு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் விரிவான பிரச்சாரங்கள் மெற்கொள்ளப்பட வேண்டும் என்று எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

Tuesday, November 2, 2010

எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது! எலிகளின் சிறுநீர் மற்றும் எச்சத்தால் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு! எச்சரிக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்!

கடந்த 10 ஆண்டுகளில், மலேசியா எலிகளின் பெருக்கத்தில் ஆச்சிரியப்படக் கூடிய வளர்ச்சியை கண்டுள்ளது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம், மோசமான ஆரோக்கிய பழக்கங்களும், கழிவு முறைகளுமே என்றார் பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்.
நகர்புறத்தின் அதிக வளரச்சி, மற்றும் மக்கள் குடியிருக்கும் இடத்தில் முறையாக செயல்படாத திட்டங்களுமே இதற்கு மற்றொரு காரணமும் என்றார் இத்ரிஸ்.

இந்த உலகத்தில், தோன்றிய இயற்கை பிராணியாக ஏற்றுக்கொண்டாலும் மனித உயிருக்கு இந்த எலிகள் இன்று மிகவும் மிரட்டலாக இருக்கின்றது. “லெப்டோஸ்பிரோஸிஸ் எனப்படும் எலிகளின் எச்சத்தால் ஏற்படும் நோய்கள் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன என்றார் இத்ரிஸ்.
எலிகளின் சிறுநீர் மற்றும் எச்சத்தால் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களும் மரணங்களும் அதிக அளவு அதிகரித்துள்ளது.

கடந்த 2009ல் எலிகளின் மூலமாக 62 மரணங்களும், 1418 நோய்களும் ஏற்பபட்டதாக சுகாதார அமைச்சு அண்மையில் அறிவித்துள்ளது. மலேசியாவில் எலி தொடர்பான மற்றொரு நோய் தொடர்பான தகவல்கள் அவ்வளவாக கிடைப்பதில்லை என்றார் இத்ரிஸ்.

தீபகற்ப மலேசியாவில் எவ்வளவுதான் எலிகள் இருக்கின்றன? கோலாலம்பூரில் மட்டும் ஏறக்குறைய 44 லட்சம் எலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பினாங்கு நகராண்மை கழகம், கடந்த 2009ம் ஆண்டில் 14,639 எலிகளை பிடித்து கொன்றுள்ளதாக அறிவித்துள்ளது என்றார் இத்ரிஸ்.

உண்மையில் எலிகளின் எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் என்றார் இத்ரிஸ். ஊதாரணத்திற்கு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர ஆய்வில், 600 லட்சம் எலிகள் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவருக்கு ஒரு எலி என்ற விகிதத்தில்.
மலேசியாவில் எலிகளை ஒழிப்பதற்காக, சில இலாக்காக்கள் நடவடிக்கை எடுத்திருந்தாலும், இப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை. எலிகளின் வசிப்பிடங்கள் அதிகரித்துகொண்டே போவதற்கு முக்கிய காரணம், சுத்தமின்மை, உணவுகளை தூக்கி எறிவது மற்றும் குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டுவதுதான் என்றார் இத்ரிஸ்.

சரியான முறையில் கட்டுப்படுத்த முடியாவிட்டால், எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கும் என எச்சரித்தார் இத்ரிஸ்.

எலிகள் ஒரு ஆண்டில் நான்கிலிருந்து ஏழு முறை குட்டியிடும். ஒவ்வொரு முறையும் 6லிருந்து 12 குட்டிகளை அது ஈன்றெடுக்கும்.

ஒரு பெண் எலி ஒரு ஆண்டில் 4 முறை குட்டியிட்டால், ஏறக்குறைய ஒரு ஆண்டில் 582லிருந்து 954 எலிகள் சுற்றித்திரியும் என்றார் இத்ரிஸ்.

ஆகவே அதிகித்துவரும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட இலாக்காக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். நன்றாக சுத்தத்தை கடைப்பிடிக்கும் உயர்ந்த அடுக்குமாடிகள் மற்றும் உணவங்களில் எலிகள் குடியிருக்கும் போது, சந்தைகள், உணவுச் சந்தைகள் மற்றும் பிற உணவு அங்காடி இடங்களில் எலிகளின் சாம்பிராஜயிம் இருக்காது என்பதில் என்ன உறுதி என்றார் இத்ரிஸ்.

மலேசியாவில் இரண்டுவிதமான எலிகள் இருக்கின்றன. குடியிருப்பு, வாணிபம் மற்றும் தொழிற்துறை பகுதிகளில் இருப்பவை, வீட்டு எலியான ராட்டுஸ் மற்றும் நோர்வே எலியான ராட்டுஸ் நோர்வெகிகுஸ்.

மனித ஆராக்கியத்திற்கு எலிகள் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. பலதரப்பட்ட நோய்களையும் இது ஏற்படுத்துவதாக இத்ரிஸ் கூறினார்.

எலிகளின் சிறுநீர் தாக்கத்ததால் பலருக்கு லெப்டோஸ்பிரோஸிஸ் நோய் ஏற்பட்டுள்ளது. அப்படி இந்நோய் குணப்படுத்தப்படாவிடில், அந்நோய் சிறுநீரக பாதிப்பு, மூளை மற்றும் ஈரல் பாதிப்பும் ஏற்படலாம்.

எலிகள் நோய்களையும் தருகிறது, உணவுகளை அசுத்தப்படுத்துவதோடு, மின்சார கம்பிகளை கடிக்கின்றன, மேலும் பயிர்களையும் நாசப்படுத்துகின்றன.

எலிகளை கட்டுப்படுத்துவதற்கு பூனைகளை வளர்ப்பது நல்லதுதான். ஆனால், சிறப்பான தூய்மையான சூழலுக்கு, பொது மக்களும், உணவுகளை கையாளுபவர்களும் தங்களது பொருப்பற்றப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார் இத்ரிஸ்.
உணவு விற்கப்படும் எல்லா கடைகளிலும் மற்றும் உணவு கிடப்பில் வைக்கப்பட்டிpருக்கும் வர்த்தக இடங்களில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

உணவுகளை தூக்கியெறியும் இடங்களில் எலிகள் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும். ஆகையால் உணவுகளை கண்மூடித்தனமாக தூக்கி எறிவதைவிடுத்து, சுத்தத்திலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும்.

பொதுமக்கள் சுகாதாரம் மற்றும் நமது நன்மைக்காக இந்த எலிகளின் தொல்லை பிரச்சனையை அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டுக்கொள்ளவதாக எஸ்எம். முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.


எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்