மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் தொடர்பாக மருத்துவ ஆராய்ச்சி கழகம் (IMR) செய்திருந்த மனுவுக்கு, தேசிய உயிரியல் பாதுகாப்பு மன்றம்(NBB), அனுமதி அளித்திருக்கின்றது. மருத்துவ ஆராய்ச்சி கழகம், இந்த ஆண் கொசுக்களால் எவ்வளவு தூரம் பறக்க முடியும், எவ்வளவு காலம் அவற்றால் உயிர் வாழ முடியும் போன்ற பரீட்ச்சார்த்த சோதனைகளை பெந்தோங் மற்றும் ஆலோர் காஜாவில் நடத்தவிருக்கின்றது.
இந்த மரபணு மாற்று தொழில்நுட்பத்தின் நோக்கம் மரபணு மாற்றபட்ட ஆண் கொசுக்களைப் பெண் கொசுக்களுடன் ஜோடி சேர வைப்பதாகும். ஆண் கொசுவின் மரபணு மாற்றப்பட்டிருப்பதால், கொசுக்குஞ்சுகள் வளர்ச்சியடைவதற்கு முன்பதாகவே இறந்துவிடும். இதன் வழி கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி டெங்கி காய்ச்சலைக் குறைக்கலாம் என்ற எதிர்ப்பார்போடு இதைச் செய்கின்றார்கள்.
1. மரபணு தொழில்நுட்பம் அல்லது மாற்றம் பாதகமான விளைவுகளைக் கொண்டு வரலாம். அதன் விளைவுகளைச் சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. மரபணு மாற்றப்பட்ட கொசுக்களின் பாதுகாப்பு குறித்த ஏராளமான சந்தேகங்களுக்கு இன்னும் விடை காணப்படாமலேயே இருக்கிறது.
2. மரபணு மாற்றப்பட்ட கொசுக்களைப் பற்றி மிக குறைந்த அறிவும் அனுபவமே இருப்பதால் அது சுகாதாரத்திற்கும் சுற்றுப்புறத்திற்கும் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் பற்றி சில அறிவியலாளர்கள் அச்சம் கொண்டிருக்கின்றார்கள். சில விஞ்ஞானிகள் தங்கள் அச்சம் குறித்து தேசிய உயிரியல் பாதுகாப்பு மன்றம் மற்றும் இயற்கை வள சுற்றுப்புற அமைச்சிடம் அறிக்கை சமர்பித்திருக்கிறார்கள். விஞ்ஞானிகளிடையே இதன் பாதுகாப்பு பற்றிய சர்ச்சைகள் ஏற்பட்டிருப்பதால், இந்தக் கொசுக்களை வெளியிடுவதில் நாம் இன்னும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
3. இந்த பரீட்ச்சார்த்த சோதனை பல தடவைகள் செய்யப்படவிருப்பதால், அதிக எண்ணிக்கையிலான கொசுக்கள் வெளியில் விடப்படும். இந்தச் சோதனையின் போது நாள் ஒன்றுக்கு 2,000-3,000 கொசுக்கள் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து விடப்படும். அதாவது ஒரு சோதனையின் போது ஏறக்குறைய 4,000லிருந்து 6,000 கொசுக்கள் வெளியே விடப்படும். இதுவே தேர்ந்தெடுக்கபட்ட இரு பகுதிகள் என்றால் 16,000லிருந்து 24,000 மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மலேசிய சுற்றப்புறத்தில் உலா வந்து கொண்டிருக்கும். அப்படி இச்சோதனை தொடரப்பட்டால் இவற்றின் எண்ணிக்கை பன்மடங்காகும்.
4. மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுக்கள் மட்டுமே வெளியே விடப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஆராய்ச்சி கழகம் கொசுக்களை வெளியே விடுவதற்கு முன் ஆண் பெண் கொசுக்களைப் பிரித்தெடுக்க வேண்டும். அதிக எண்ணிக்கை என்பதால், அப்பணியின் போது, மனித தவறுகள் நிகழுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உருவாகும். பெண்கொசுக்களே மனிதர்களைக் கடித்து நோயைப் பரப்புவுதால் இதுவும் அச்சப்படவைக்கும் விஷயமாக இருக்கிறது.
5. செத்துமடியும் படி வடிவமைக்கப்படும் சில கூட்டுப்புழுக்கள் தப்பி உயிர் பிழைக்கலாம். ஆண் பெண் கொசுக்கள் ஜோடி சேரும் போது உற்பத்தியாகும் கூட்டுப்புழு செத்து மடிய வேண்டும். ஆயினும் சொற்ப எண்ணிக்கையிலான கூட்டுப்புழுக்கள் உயிர் தப்பலாம் (ஆய்வுக்கூட சோதனையில் உயிர் தப்பியவை3-4%) இப்படி உயிர்தப்பிப்பவைப் பெண் கொசுக்களாக இருக்கலாம். மரபணு மாற்றப்பட்ட உயிர்தப்பும் கூட்டுப்புழுக்கள் என்பது நமது சுற்றுச்சூழலில் அந்நிய மரபணு உலா வரும் என்று அர்த்தமாகிறது. அவற்றின் பாதிப்புக்கள் பற்றியும் தெரிந்திருக்கவில்லை.
6. மலேசியாவில் டிங்கி காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் ஒரு வழி முறையாக பின்பற்றப்பட்டால், தொடர்ந்தார் போல் பல இலட்சக்கணக்கான கொசுக்கள் வெளியே விடப்பட வேண்டும். கொசுக்கள் தொடர்ந்தார்போல் இனப்பெருக்கம் செய்யக்கூடியது என்பதால், அடிக்கடி இந்தக் கொசுக்களை வெளியே விடவேண்டி வரும். அதுவும் வாராவாரம் இப்படி செய்ய வேண்டும். இந்தத் திட்டத்திற்கு 100 மில்லியனிலிருந்து 1 பில்லியன் வரையிலான மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் பயன்படுத்தப்படுவதற்குச் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது.
7. மரபணு மாற்றப்பட்ட கொசு தொழில்நுட்பம் பிரிட்டனைச் சேர்ந்த ஒக்சிடெக் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்தத் தொழில்நுட்பத்தின் உலகளாவிய உரிமத்தை இந்த ஒக்சிடெக் நிறுவனம் கொண்டுள்ளது. தொடர்ந்தார் போல் இந்தக் கொசுக்கள் விடப்படும் என்றால் இந்த நிறுவனத்திற்குத் தொடர்ச்சியான லாபம் கிடைத்துவரும். அண்மைய காலமாக இந்நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதால், தனது உற்பத்திக்கு அனுமதி பெறுவதில் அது நிறைய நெருக்குதலுக்கு உள்ளாகலாம்.
8. மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் எண்ணிக்கை நீண்ட நாட்களுக்குக் குறைவாகவே இருந்தால், டெங்கி மற்றும் சிக்கன்கூனியா நோய்களைப் பரப்பும் இன்னும் ஒரு வகையான கொசுக்களின் எண்ணிக்கை பெருகக்கூடும். இயற்கையும் இப்படிதான் இயங்குகிறது - ஒரு இனம் குறையும் போது மற்றொரு வகை வளர்ச்சி அடைவது இயற்கையின் நியதியும் ஆகும்.
9. உலக அளவில் மரபணு மாற்றப்பட்ட கொசுக்களைச் சுற்றுச்சூழலில் பரவ செய்வதில் மலேசியா இரண்டாவது நாடாக இருக்கிறது - மலேசியர்களும் மலேசிய சுற்றுச்சூழலும் ஏன் சோதனை எலிகளாக்கப்பட வேண்டும்? 2010ல் கெய்மென் தீவு என்ற இடத்தில் பரீட்ச்சார்த்த சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அங்குள்ள சுற்றுச்சூழல் (சூழியலும் மனிதர்களும்) முற்றிலும் வேறுப்பட்டது. கெய்மென் தீவின் முழுமையான மதிப்பீட்டு சோதனை இன்னும் பொதுவாக விவாதிக்கப்படவில்லை.
10. கொசுக்கள் விடப்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த பரீட்ச்சார்த்த சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கலாம். அனுமதிக்காக உள்ள விதிமுறைகளில் ஒன்று தேசிய உயிரியல் பாதுகாப்பு மன்றம் பொது விவாத மேடை வைத்து, அங்கு வசிப்பவர்களின் அனுமதியைப் பெற்றிருப்பதாகும்.
நன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
No comments:
Post a Comment