அண்மைய காலமாக இந்து ஆலயங்களில் வழிபாடுகள் நடைபெறும்போது கைப்பேசியை உபயோகிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது கவலையைத் தருகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகிறது.
கோயில்களில் அர்ச்சகர் பூஜை செய்யும்போதும், மந்திரம் உச்சரிக்கும்போதும், வரிசையில் இருக்கும் பக்தர்கள் பலரின் கைப்பேசியில் அழைப்புக்கள் வருவது என்பது இப்பொழுது ஒரு புதிய கலாச்சாரமாகிவிட்டது என பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.
வருகின்ற அழைப்புக்கள் அமைதியாக வருவதில்லை அதற்கு மாறாக விரசமான சினிமா பாடல்களின் ரிங் டோனாக வருவதுதான் மற்ற பக்தர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றது என்கின்றார் சுப்பாராவ்.
ஒரு சிலர் அழைப்பு வந்தால் சாமி கும்பிடுவதையும் விட்டு விட்டு சற்று தூரம் சென்று பேசிவிட்டு வருகின்றனர். இறைவினைவிட, கைப்பேசியில் வந்த அழைப்பே இவர்களுக்கு மிக முக்கியமாகிவிட்டது. கோயிலுக்கு வராமல் வீட்டில் இருந்தே கைப்பேசிகளில் வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கலாமே.
வேறு சிலர் இருந்த இடத்திலேயே வரிசையில் நின்றவாறு ஆங்கிலத்தில் “பிறகு கூப்பிடு” என சத்தம் போட்டு சொல்வதும் நின்றுகொண்டிருக்கிற பக்தர்களை மதிக்காதது மட்டுமல்ல, இவர்களுக்கு உண்மையிலேயே இறை பக்தி உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது என்றார் சுப்பாராவ்.
வருகின்ற அழைப்புக்களின் ரிங்டோன், அர்ச்சகர்கள் மந்திரம் ஓதுவதைவிட மிக அதிக சத்தத்துடன் இருப்பதும் இப்பொழுது ஒரு கலாச்சாரமாகிவிட்டது.
இந்த நவீன கலாச்சாரம் ஆலயத்தின் புனிதத்தன்மையை இழிவுபடுத்துகின்ற ஒரு செயலாக மாறிவருகின்றது என்றார் சுப்பாராவ்.
ஆலயங்களில் அதிக அளவு கைப்பேசியைப் பயன்படுத்துவோர் இளைஞர்களாகவே இருக்கின்றனர். கை எடுத்து கும்பிடும்போது, கைப்பேசி உள்ளங்கைகளுக்கு நடுவே இருக்கும் அவல நிலை வெட்கித் தலை குனிய வைக்கும் ஒரு செயலாகும். இப்படியெல்லாமா கடவுள் வழிபாடு செய்வது?
அரை மணி நேரம் ஆலயத்தில் இருக்கும்போது 10 அழைப்புக்கள் வருவதும், அதற்கு ஈடாக அழைப்பதும் நாகரீகமாக செயல் அல்ல.
ஆலயங்களில் கைப்பேசியை பயன்படுத்துவதற்கு ஆலய நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.
அதையும் மீறி பயன்படுத்துவோரின் கைப்பேசியை பறிமுதல் செய்வதையும் நிர்வாகங்கள் ஆலோசிக்க வேண்டும் என என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment